நண்பனின் காதலி

This entry is part of 38 in the series 20091015_Issue

என்.விநாயக முருகன்


பெண்விடுதலை பற்றி
அதிகம் பேசும் நண்பனொருவன்
தொலைபேசியில் வந்தான்.
தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக
தயங்கியபடி சொன்னான்.
ஆச்சர்யத்துடன் விசாரித்தேன்.
அவளைப்பற்றி வர்ணிக்க ஆரம்பித்தான்.
புதுமைப்பெண் என்றான்.
நிமிர்ந்த நன்னடையாம்.
நேர்கொண்ட பார்வையாம்.
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளாம்.
திமிர்ந்த ஞானச்செருக்கு கொண்டவளென்றான்.
உனக்கேற்ற செம்மை மாதர்தான்
சிரித்தபடி வாழ்த்தினேன்.
அசப்புல பார்க்க
அவள் மாதிரியே இருப்பாளென்று
சினிமா நடிகையொருத்தியின்
பெயரை குறிப்பிட்டான்.
கடைசியில் சொன்னதை
மீண்டும் அழுத்திச் சொன்னான்.

Series Navigation