பாதையையும் பயணமும்

This entry is part of 36 in the series 20090904_Issue

ரா. கணேஷ்.


பாதையையும் பயணமும்

சதாபிஷேகம் கொண்டாடி முடித்த
மாவிலைத் தோரணம் கட்டியிருந்த
வக்கீல் வீட்டு வரவேற்பறையில்
கட்டுக் கட்டாய்
விவாகரத்து வழக்குகள்
_______________________________

திரை

இரவைக் கடந்து
பத்திரமாய் ஊர் சேர்த்த
பஸ் ஓட்டுனர்கள்
மற்றும் ரயில் ஓட்டுனர்கள்
நான்கரை மணிக்கெல்லாம்
பால் பாக்கெட்டை தவறாமல்
போடும்
எங்கள் வீட்டு பால்காரர்
இவர்கள் முகத்தைப் பார்க்க
ஒரு முறை கூட
மெனக்கிடவில்லையே நான் ?!

______________________________

தாமதங்கள்

இருக்கைக்காக ரயிலில்
இங்கும் அங்கும் கண்களை
அலையவிட்டு காத்திருந்ததில்

எப்பொழுது விடும் மழை
என்று அரைகுறை ஈரத்தில்
ஒதுங்கியிருந்த போது காத்திருந்ததில்

நீள் இரவில்
மருத்துவமனை வெராண்டாவில்
தூக்கம் தொலைத்து விடியலுக்காக காத்திருந்ததில்

வாரந்தோறும் வந்தாலும்
வார இறுதிக்காக காத்திருந்ததில்

தாமதங்கள் தாங்கமுடியாமல்தான்
போகின்றன
_____________________________________

சித்தாள்

அடுக்குமாடி உயர்ந்தது
க்ரஹப்பிரவேசம் நடந்தேறியது
ஹோமப் புகையில்
காணாமல் போன மாயமென்னமோ
சித்தாளும் வாட்ச்மேனும்
தங்கியிருந்த குடிசை மட்டும் தான் !

_____________________________________

– ரா. கணேஷ்.

Series Navigation