காலத்தின் தழும்புகள்

This entry is part of 37 in the series 20071025_Issue

கே.பாலமுருகன்அன்று நான் நிர்வானமாகப்
படுத்துக் கிடந்தேன்!

அப்பா விரட்டி விரட்டி
என்னைப் பாதி உருவாக்கியிருக்கிறார்
என்ற உண்மையை கால் முட்டியிலிருந்த
காயங்கள் ஞாபகப்படுத்தியன!

அம்மா சூடு போட்டு
என்னை வளர்த்திருக்கிறார்
என்ற உண்மையை தோல் பட்டையில்
தெரியும் நெருப்புக் காயங்கள் ஞாபகப்படுத்தின!

சாரதா அக்காள் நிதானமிழந்த தருணத்திலெல்லாம்
என்னை மிக நேர்த்தியாக வளர்த்திருக்கிறாள்
என்ற உண்மையை முதுகில் உணரப்படும்
நகங்களின் கீரல் தழும்புகள் ஞாபகப்படுத்தின!

முனியாண்டி அண்ணன் ஓய்வான சமயங்களிலெல்லாம்
என்னை உருவாக்கியிருக்கிறான்
என்ற உண்மையைத் தொடையில் மழுங்கிப் போய்விட்ட
கத்திக் கீரல்கள் ஞாபகப்படுத்தின!

அன்று நான் நிர்வானமாகத்தான்
படுத்துக் கிடந்தேன்!
என்னை வளர்த்தவர்களையெல்லாம்
என்னுடைய நிர்வாணம்
காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்ததையும்
மறந்த நிலையிலான நிர்வாணம்!


கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

Series Navigation