கர்த்தரிடம் நோவா செய்துகொண்ட விண்ணப்பம்

This entry is part [part not set] of 33 in the series 20051125_Issue

சுகுமாரன்


@

‘ ‘வானத்தின் கீழே ஜீவசுவாசமுள்ள சகல மாம்சஜந்துக்களையும் அழிக்க
நான் பூமியின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணுவேன்;பூமியிலுள்ள
யாவும் மாண்டுபோம். ‘ ‘

– ஆதியாகமம்: அதிகாரம் 6 – வசனம் 17

முதலாம் அதிகாரம்

@

இராப்பகல் ஓயாத நாற்பதுநாள் மழைக்கு
ஏழு நாள் முன்பு
கர்த்தரிடம் நோவா விண்ணப்பித்துக்கொண்டது
பின்வருமாறு:

கர்த்தரே,
உமது கட்டளைப்படி
எல்லாம் செய்தாயிற்று

கொப்பேர் மரத்தால் பேழை உண்டாக்கினேன்
நீளம் முந்நூறு முழம்
அகலம் ஐம்பது முழம்
உயரம் முப்பது முழம்

உமது கட்டளைப்படியே
பேழைக்குள் அறைகளை உண்டுபண்ணினேன்
உள்ளும் புறம்புமாகக் கீல் பூசினேன்
மேல் தட்டுக்கு ஒரு முழம் தாழ்த்தி
ஜன்னலை உண்டுபண்ணினேன்
கதவை அதன் பக்கத்தில் வைத்தேன்
கீழ் அறைகளையும்
இரண்டாம் மூன்றாம் தட்டுகளின் அறைகளையும் பண்ணினேன்

உம்மோடு செய்த
உடன்படிக்கைப்படியே
மாம்சமான ஜீவன்களில்
வகை ஒன்றுக்கு ஆண்பெண் ஒவ்வொரு ஜோடாய்ப்
பேழைக்குள் சேர்த்தேன்.

ஆகாயத்துப் பறவைகள்
ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடு
சுத்தமான மிருகங்கள்
ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடு
சுத்தமல்லாத மிருகங்கள்
ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடு
ஊரும் பிராணிகள்
ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடு
நீந்தும் மச்சங்கள்
ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடு

உமது ஆணைப்படியே
நானும் என் மனைவியும்
என் குமாரரும் குமாரரின் மனைவிகளும்
பேழைக்குள் பிரவேசிக்கச் சித்தமாக இருக்கிறோம்

வகை ஒன்றுக்கு ஒரு ஜோடென்பதில்
உமது வகைக்கு இணையைச் சொல்ல
மறந்தீர் என்பதால்
நீர் கட்டளையிடாத ஒன்றையும்
பேழைக்குள் சேர்த்திருக்கிறேன் கர்த்தரே,
மாம்சமான ஜீவனாக
உமக்கும் ஒரு ஸ்திரீ ரூபம்.

@
இரண்டாம் அதிகாரம்
@

ஜலம் பெருவெள்ளமாகி
பூமியின்மேல் மிகவும் பெருகிற்று
ஜலத்தின்மேல் இன்னும் மிதந்துகொண்டிருக்கிறது
பேழை.

@

சு கு மா ர ன்

n_sukumaran@rediffmail.com

Series Navigation

சுகுமாரன்

சுகுமாரன்