பெரியபுராணம் – 66 – 31. அப்பூதி அடிகள் நாயனார் புராணம்

This entry is part [part not set] of 33 in the series 20051125_Issue

பா சத்தியமோகன்


1782.

அப்பூதி அடிகள்

பெருங்கூத்து இயற்ற வல்ல தம்பிரானுக்கு அன்பர்

பொருந்திய புகழினை உடையவர்

எல்லையிலாத தவத்தின் மிக்கவர்

சிவனாரால் ஆட் கொள்ளப்பட்ட திருநாவுக்கரசு நாயனாரின்

பாதங்களையே சார்பாக அடைந்தவர்.

திருநாவுக்கரசு நாயனாரை அறியா முன்பே

காணத்தக்க காதல் மிக்க உள்ளம் கலந்த அன்புடையவராய் உள்ளார்.

1783.

களவு பொய் காமம் கோபம் முதலிய குற்றம் ஒழித்தவர்

வளமை மிகு இல்லற வாழ்க்கையில் நின்றவர்

வீட்டில் உள்ள அளவுக்கருவிகள், துலாக்கோல் கருவிகள்,

மைந்தர், மக்கள், பசுக்கள், எருமைகள் மற்றும் உள்ள எல்லாமும்

திருநாவுக்கரசின் திருப்பெயர் சூட்டி அழைக்கும்

அந்த ஒழுக்க நெறியில் நின்றவர்.

1784.

திருவடிவத்தைக் காணாதவர் எனினும்

நிலைத்த சிறப்புடைய வாக்கின் வேந்தர் நாவுக்கரசின்

திருத்தொண்டின் திறமும் இறைவர் வைத்த திருவருளும் கேட்டு

அவரது திருப்பெயரால் திருமடங்கள், தண்ணீர்ப்பந்தல்கள் முதலான

முடிவிலாத அறங்கள் செய்து அந்நியதியில் வாழும் நாளில்-

1785.

மலையரசனின் மகளான இளம் பிடி போன்ற உமையுடன்

அணைகின்ற சிவபெருமானின் திருப்பழனம் எனும் தலம் பதிந்து

திருப்பணி செய்து கொண்டிருந்த திருநாவுக்கரசர்

ஒன்றுபட்ட காதலால் மற்ற தலங்களும் வணங்கும்ம் விருப்புடன்

திங்களூர் பக்கமாய் வருவாராகினார்.

1786.

அளவற்ற மக்கள் சென்று கொண்டிருந்த நல்ல வழியினது கரையில்

அருளுடைய பெரியோர்களின் உள்ளத்தைப்போல

குளிர்ந்த அருள் தன்மையுடன்

வேனிலின் வெம்மையைப் போக்கும்

குளமும் நீரையுடைய தடமும் போல

குளிர்மை நீங்காது முழுதும் தங்கும் பரப்பைக் கொண்டு

வளம் வாய்ந்த நிழலைத் தரும் தண்ணீர்ப்பந்தலை வந்தடைந்தார்.

(குளம்-இயற்கையாய் நீரோடு உள்ளது

தடம்- அவ்வப்போது நீர் இறைக்கும் பொய்கை)

1787.

அங்கு வந்த வாகீசர் குளிர்ந்து மென்மையாக வீசும் இளங்காற்றுடைய

குளிர் பந்தலுடன் அமுதமாம் தண்ணீரும் பார்த்து அருளினார்

தம் சிந்தையில் வியப்பு கொள்ள வருவார்

திருநாவுக்கரசு எனும் பெயர்

அழகுற எழுந்தியிருந்ததை எப்புறமும் கண்டார்.

1788.

இந்தப் பந்தலுக்கு இப்பெயரிட்டு இங்கு அமைத்தவர் யார்

என்று வினவிய திருநாவுக்கரசருக்கு

அந்தப் பந்தல் பற்றி அறிந்தவர் ஒருவர்

ஆண்ட அரசு எனும் பெயரால் சொல்வதற்கரிய சிறப்புடைய

அப்பூதி அடிகள் என்பவர் செய்து அமைத்தார்

தவறு எதுவும் இல்லாமல் இவ்விதமாய்

சாலை, குளம், சோலையும் எங்கு உள்ளன என்றார்.

1789.

என்று அவர்கள் சொல்ல

திருநாவுக்கரசர் அதைக் கேட்டு

இதற்கு என்ன கருத்து என்று தமக்குள் வினவி

நின்றவரை நோக்கி அவர் எவ்வூர் ? என வினவப்

பொருந்திய பூநூல் அணிந்த மார்பர் கூறினார்

“அவரும் இந்தப் பழைய பகுதியினர்தான்

வீட்டிற்கு இப்பொழுதுதான் சென்றார்

வீடும் வெகு தொலைவில் இல்லை

மிக அருகில்தான் உள்ளது..”

1790.

அங்கிருந்து அகன்று முனிவரான நாவுக்கரசர் போய்

அப்பூதி அடிகளார் தங்குகின்ற இல்லத்தின் முன்

கடைவாயிலை அடைந்தார்.

வீட்டுள் இருந்த திங்களூர் வேதியரான அப்பூதியடிகள்

மனையின் உள்ளிருந்து முன்வாயிலுக்கு வந்தடைந்தார்

தம் சிவபெருமானின் அடியவர் ஒருவர் வந்துள்ளார் எனக்கேட்டு.

1791.

விரைவாய் வந்து வாகீசர் திருவடிகள் பணிவதற்கு முன்பே

அந்தணராகிய அப்பூதி அடிகளார்

“முடிவிலாத தவத்தை நான் முன்னம் செய்திருந்தேன் போலும்

கருணை மொழிகின்ற வடிவுடையீர்

என் மனையில் வந்தருளினீர்” என்றார்.

1792.

ஒப்பிலாத பெரிய மேருமலையை வில்லாக உடைய

சிவபெருமானைத் திருப்பழனம் எனும் தலத்தில் இறைஞ்சி

வருகின்றோம் வரும் வழியின் கரையில் நீவீர் வைத்த

அமைந்த சிறப்புடைய நிழல் பொருந்திய

தண்ணீர்ப் பந்தலைக் கண்டோம்

அத்தன்மையால் செய்கின்ற அறங்கள் பிறவும் கேட்டோம்

இங்கு வந்து சேர்ந்தோம் என்று புகன்றவர் மேலும் கேட்டார்

1793.

“கங்கை அணிந்த சடைமுடியாரின் அடியார்களுக்காக

நீவீர் வைத்த முடிவிலாத பெருமை கொண்ட தண்ணீர்ப்பந்தலில்

உம் பெயர் எழுதாமல்

வேறொரு பெயர் எழுத வேண்டிய காரணம் என்ன ? கூறுக!” என

மொழிந்தார் மொழிக்குற்றமில்லாத வாக்கு மன்னவர்.

1794.

அங்கே நின்ற அப்பூதி அடிகள்

நாவுக்கரசர் உரைத்ததைக் கேட்டு

உள்ளத்தின் நிலை அழித்த சிந்தையரானார்

“நல்லவற்றை நீவீர் அருளிச் செய்யவில்லை

நாணமில்லாத சமண சண்டாளர்களுடன்

சேர்ந்த மன்னன் செய்த சூழ்ச்சி எல்லாம் வென்று

திருத்தொண்டின் உறைப்பினால்

துணையாகக் கொண்டு வென்றவரது திருப்பெயரையா

வேறொரு பெயர் என்றீர்கள்” என சினமாகி

1795.

“நம்மை உடையவரான சிவபெருமானின் திருவடிக்கீழ்

நயந்து செய்யும் திருத்தொண்டாலே

இப்பிறவியிலேயே நாம் பிழைக்க முடியும் என

என்னைப் போன்றவரும் தெளியுமாறு

செம்மை மேற்கொண்ட திருநாவுக்கரசரின்

திருப்பெயரை நான் எழுத

கொடிய மொழியை யான் கேட்குமாறு கூறினீர்!” எனக்கூறி –

1796.

“பொங்குகின்ற கடலில் கல்லையே மிதவையாகக் கொண்டு

கரையேறிய அவர் பெருமை

சிவபெருமானது புவனத்தில் அறியாதவர் யார் உளர் ?

மங்கலமான திருக்கோலத்துடன் நின்று இப்படி உரைத்தீர்!

நீவீர் எங்கு உள்ளவர் ? நீவீர் யார் ? சொல்க” என இயம்பினார்.

1797.

திருவுடைய மறையவரான அப்பூதி அடிகள் அவ்வாறு உரைக்க

திருநாவுக்கரசர் அவர் பெருமை அறிந்து

உரை செய்தார்:-

மற்ற சமயத் துறையினின்று ஏறும் பொருட்டு

பெரும் சூலை நோய் அருளப்பட்டு

இறைவனால் ஆட்கொள்ளல் அடைந்து உய்ந்த தெளிவு கொண்ட

உணர்வில்லாத சிறுமையினை உடையேன் யான் என்றார்.

1798.

இவ்வாறு திருநாவுக்கரசர் உரைத்ததும்

அப்பூதி அடிகள் உண்மை அறிந்து

கைமலர்கள் தாமே தலை மீது குவியுமாறும்

கண்களிலிருந்து அருவி பொழிந்து வழியுமாறும் உரை குழறினார்

உடம்பெல்லாம் உரோமம் புளகம் அடைந்தது

தரையின் மீது வீழ்ந்து அவரது

திருவடித் தாமரைகளைத் தலையில் அணிந்தார்.

1799.

அவ்வாறு வீழ்ந்து திருவடி பூண்ட அப்பூதி அடிகளை

திருநாவுக்கரசரும் எதிர் வணங்கி அவரை எடுத்து அருளினார்

அரிய வேதியரான அப்பூதியார்

வறியவர் தேடிய பெருநிதியம் பெற்றது போல்

உளம் முழுதும் பெரு மகிழ்ச்சி கூர்ந்து

முன்னின்று கூத்தாடினார்

மிக்க விருப்புடன் அவரை சூழ்ந்து ஓடினார் பாடினார்.

1800.

பெரு மகிழ்ச்சி மூண்டது அதனால் என்ன செய்கிறோம் என்பதறியாமல்

இல்லத்துக்குள் விரைந்து எய்தி

மனைவியார்க்கும் மக்களுக்கும்

வீட்டில் உள்ள சுற்றத்தார்க்கும்

இறைவன் ஆண்ட திருநாவுக்கரசு எழுந்தருளிய

செய்தி உரைத்து ஆர்வமுற

அப்பெரும் சுற்றத்தினர் யாவரையும் அழைத்துக் கொண்டு

வெளியில் வந்து புறப்பட்டார்.

1801.

மனைவியுடன் மக்களுடன் சகல சுற்றத்தினருடன்

அனைவரையும் உடன் கொண்டு ஆராத காதலுடன்

தலைவரான நாவுக்கரசரை எழுந்தருளச் செய்து

அவரது திருவடிகளை விளக்கும்

மலர்கள் இட்ட புனித நீரைத்

தங்கள் தலை மீது தெளித்துக் கொண்டு

அதனை உள்ளேயும் நிறைக்கப் பருகினார்.

1802.

தக்க இருக்கையில் அமரச் செய்து

பூசனைகள் விரும்பிச் செய்து

வாசம் உடைய திருநீற்றுக் காப்பு நிறைந்த

திருநீற்று மடக்கை அவர்முன் ஏந்தி

மனம் தழைத்து ஓங்க

தேசம் உய்வதற்காக அவதாரம் செய்தவரை

திருவமுது செய்விக்க நேசமுடன் விண்ணப்பித்தனர்

அவரும் அதற்கு சம்மதித்தார்.

1803.

தவத்தில் பெரிய நாவுக்கரசர் இசைந்தபோது

தன் மனைவியாரை நோக்கி

நம்மிடம் பொருந்திய பேறு நம்மிடம் இருந்தவாறுதான் என்னே!என்று

கருமையுடைய திருக்கண்டம் உடைய சிவபெருமான் அருளால்

இது வந்தது என்று போற்றி

நாம் உய்வோம்! என்று தமக்குள் மகிழ்ந்து கொண்டு

திரு அமுது அமைக்கத் தொடங்கினார்.

1804.

தூய்மையான நல்ல கறிவகைகள் ஆறு சுவைகளும் பொருந்துமாறு சமைத்து

இனிதான அமுதம் ஆக்கி அமுது செய்தருள

தங்கள் மைந்தருள் மூத்த திருநாவுக்கரசைப் பார்த்து

வாழையின் நல்ல குருத்து கொண்டுவா

என்று விரைவுபடுத்தி அனுப்பிவிட்டார்.

1805.

நல்ல தாயும் தந்தையும் ஏவிட

நான் இப்பணி செய்யும் பேறு பெற்றேன் என்று

மிக விரைந்து தோட்டத்துள் புகுந்து

பெரிய வாழையின் செழித்த குருத்தை அரியும் பொழுது

ஒளியுடைய பாம்பு ஒன்று

துன்புற்று மயங்கி விழும்படி அவனது உள்ளங்கையில் தீண்டிற்று.

1806.

கையினில் தீண்டி அக்கையையே சுற்றிக் கொண்டு

கண்களில் தீ வீசுகின்ற

நச்சுப் பை உடைய அந்தப் பாம்பை உதறி வீழ்த்திவிட்டு

நான் விழுவதற்கு முன்

வேகமாகச் சென்று கொய்த இக்குருத்தைச்

சென்று கொடுப்பேன் என்று தீர்மானித்து ஓடி வந்தான்.

1807.

பொருந்திய விஷத்தை விட வேகமாய் ஓடிய

அவனது வேகத்தை வருத்தம் முந்த

செழிப்புடைய இல்லத்தில் புகுந்தபோது

பாம்பு தீண்டியதை அருந்தவரான நாவுக்கரசர்

அமுது செய்வதற்கு இடையூறாகச் சொல்லமாட்டேன்

என்று எண்ணிக் கொண்டே சென்றான்.

( திருவருளால் தொடரும் )
—-
pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்