முரண்

This entry is part of 28 in the series 20051104_Issue

இளைய அப்துல்லாஹ்


அவளுக்கு ஒரு போர்வை கொடுத்தேன்.
எனது தெருவால் சில நேரம்
நிர்வாணமாய்ப்போவாள்
குத்திட்ட நேர் நோக்கில்
அவளைப்பற்றிய எல்லாவற்றையும்
என்னுள் இறக்கியபடிக்கு
கூந்தல் குண்டிவரை நீண்டிருக்கும்
தூசியும் மண்ணும்தான் அவை வாரி முடித்தவை.
கறுத்த உடல் இன்னும் சரியாத முலைகள்
வெறும் மேலோடு திரிவாள்.
அவள் ஒரு சீமாட்டி என்றும்
திருமணம் முடித்தவளென்றும்
அம்மம்மா சொல்வா
அவளிடம் கேட்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை
‘ஆனால் ஏன் நிர்வாணமாய்த்திரிகிறாய் ? ‘
ஆண்கள் அவளைக்கடந்து செல்கிறார்கள் உணர்வற்று
யோனியின் ஊத்தையும் மணமும் வெறுத்து
அவள் நடக்கிறாள்
அம்மம்மா சொன்னா
‘அவள் கணவன் அவளுக்கு சூனியம் செய்தவன்| ‘
ஆண்குறி பலவீனப்பட்டவன்கள்
சூனியம் செய்பவர்கள்.
அவள் அழகானவளாம்
அவனும் அழகானவனாம்
அவனுக்கு செய்ய இயலாதாம்
அவள் இன்னொருவனுடன் செய்தாளாம்
அவன் சூனியம் செய்தானாம்.

எனது போர்வையை அவள் தூர எறிந்து விட்டாள்.

இளைய அப்துல்லாஹ்
லண்டன்

Series Navigation