விடு என்னை

This entry is part [part not set] of 32 in the series 20050623_Issue

சாரங்கா தயாநந்தன்


என்னை ஒரு
வண்ணத்துப் பூச்சியாய்ப் பறக்கவிடு.
உன் ஆணிகள்
கவனத்துடன் அறையப்படுகின்றன,
என் உயிர்வசிக்கும் பிரதேசம் தவிர்த்து.
இறகினதும் என்னுயிரினதும்
துடிதுடிப்பை
நீ உணர்வதாயில்லை.
என்னிடமும் இருக்கின்றன பூக்கனவுகள்!
சுகந்த மலர்களை முகர்ந்தபடியான
அகன்ற வெளிப் பறத்தல்கள் பற்றி….
கால்களும் இறகுகளும்
சிதைவுறாதபடியான
என் தப்பித்தல் எத்தனங்களை
உன் ஆணிகள் நகைக்கின்றன.
அந்த நகைப்பு
என்னுணர்வுகளை மோதுகிறது
அவை முறிந்திருப்பினும் கூட
முயன்றிருக்கலாமெனும் வெறியூட்டி….
மெளனம் அறையப்பட்ட
சிலுவை தான் நான்.
எனினும் மனதுள் பாடியபடி
பறக்கவே பிறந்தேன்.
மரணம் தழுவமுன்பாக
விடு என்னை
ஆசைதீரப் பறக்க.
nanthasaranga@gmail.com

Series Navigation

சாரங்கா தயாநந்தன்

சாரங்கா தயாநந்தன்