மனசில் தேரோடுமா ? (உரைவீச்சு)

This entry is part [part not set] of 32 in the series 20050623_Issue

இராம.கி.


(சிவகங்கை மாவட்டம் அரியக்குடியில் இருந்து ஆறாவயல் வழியாகத் தேவகோட்டை போகும் வழியில் கண்டதேவி இருக்கிறது. சிவகங்கை மன்னர் வழிக் கோயில்; நாலு நாட்டாருக்கு அங்கு முதல் மரியாதை என்பது வரலாற்றில் உள்ளது தான். ஆனாலும் சில தலைமுறைகளுக்கு முன்னால் வரை எல்லா மக்களும் தான் அங்கே தேர்வடம் பிடித்தார்கள். இன்றைக்குத் தேர்வடம் பிடிப்பதில் ஒரு சாரார் வரட்டுக் குரவம் (கெளரவம்) காட்டுகிறார்கள்.

நம் குமுகப் பிறழ்ச்சி பலநேரம் நம்மைக் கொதிப்படைய வைக்கிறது. எத்தனையோ பெருமை கொண்ட சிவகங்கைச் சீமையின் மிஞ்சிப் போன அவலங்களுள் இதுவும் ஒன்று.)

‘என்னங்கடா,
‘இன்னார் மகன் ‘னு
படங் காட்டுறீயளா ? ‘

‘அஞ்சு மணிக்கு நாலுவீதி
சுத்திவரும்னு சொல்லிப்புட்டு,
ரெண்டு மணிக்கே அவுக்கவுக்காய்
ஏறிவந்து வடம் புடிப்பா ?

கூடி வந்த எங்க சனம்,
கோயில் தள்ளி நிறுத்திவச்சி,
விறுவிறுன்னு 4 வீதி
சுத்திவர இழுத்துவிட்டு,

தேருநிலை கொள்ளுமுனே,
உப்புக்கொரு சப்பாணியா,
ஓட்டிவந்த இருபத்தாறை
ஒண்ணுகூடித் தொடச்சொல்லி…. ‘

‘ஏண்டா டேய்,
320 பேரு வடம்பிடிக்கிற இடத்துலே,
இருபத்தாறுக்கு மேல்
எங்காளுன்னாக் கொள்ளாதோ ?

நாலுவடத்தில் ஒண்ணுதந்து
நாகரிகம் பார்த்துவச்சா,
கோணப்பயக, உங்களுக்குக்
கொறஞ்சிபோயி விளஞ்சிருமோ ? ‘

தொட்டவடம் படம்புடிச்சு
பட்டம்விடப் போறீகளோ ? ‘

‘இதுக்கு
ரெண்டாயிரம் காவல்,
ஒரு ஆணையன்,
ரெண்டு மூணு வட்டாட்சி,
ஒரு மாவட்டாட்சி,
ஏகப்பட்ட ஊடகம்! ‘

‘போங்கடா, போக்கத்த பயகளா ?
போயிஅந்த உயர்மன்றில்
ஓங்கி அறிக்கை வைய்யுங்க!
அரசினோட அதிகாரம்
அமைதிகாத்த கதைவிடுங்க! ‘

‘அப்புறம்

தமிழினத்துத் தலைவரென,
புரட்சிக்குத் தலைவியென,
தமிழ்க்குடியைத் தாங்கியென,
புரட்சியெழும் புயலெனவே

நாலைஞ்சு பேரிங்கே
நாடெல்லாம் அலையுறாக

அவுகள்லாம் இனிமேலே
சிவகங்கைச் சீமைக்குள்ளே
அடுத்தவாட்டி வரவேண்டாம்;
கட்டளையாச் சொல்லிடுங்க.

வாக்குக்கேட்டு இனிஒருத்தன்
வக்கணையா உள்ளவந்தா,
சேர்த்துவச்சு நாங்களெலாம்….,
செருப்புப் பிஞ்சுரும், ஆமா! ‘

‘டேய், என்னங்கடா பேசிட்டு நிக்கிறீங்க!
தேரோடுற பாதையிலே,
தெளியாத காலத்துலே,
கல்லும், முள்ளும் கிடந்ததனால்,
பள்ளு, பறை நம்ம ஆட்கள்
கையெல்லாம் வேண்டுமெனத்
கூப்பிடாய்ங்க! தேரிழுத்தோம்!

இப்பத்தான், எல்லாமும்
பொருளாதாரம்; தலைகீழாச்சே!
அவனவன் சோலி அவனுக்கு;
எங்கே பார்த்தாலும் வரட்டுக் குரவம்டா!

அதோட,
நாலுவீதியுந்தான் தார்போட்டு
இழைச்சுட்டாய்ங்களே,
அப்புறம் என்ன ?

அவய்ங்க மட்டுமே தொட்டாக் கூடத்
தேர் என்ன, வண்டி கணக்கா ஓடாது ?
முக்கா மணியென்னடா ?
முக்குறதுள்ளே முடிச்சிருவாய்ங்க ? ‘

‘அய்யா, சாமிகளா, போறவழியிலே
சொர்ணமூத்தீசரையும் பெரியநாயகியையும்
நாங்க சாரிச்சதாச் சொல்லுங்க!
நாங்களெலாம் வடந்தொட்டா,

அருள்மிகுந்த அவுகளுக்கு
ஆகிடவே ஆகாதாம்,
கொள்ளாம கூடாம,
கோச்சுக்கவும் செய்வாகளாம்,
மழையினிமே வாராமப்
மந்திரமும் பண்ணுவாகளாம். ‘

‘இப்படியே போனா,
அவுகளும் எங்களுக்கு வேணாம்,
அவுகளை நாங்களும் விலக்கி வச்சுர்றோம் ‘

‘டேய், சாமிகுத்தம்டா,
விலக்கு, கிலக்குன்னு பேசாதே! ‘

‘அடச்சே போங்கடா!
தேரோடுதா(ந்), தேர் ?

முதல்லே
அவனவன் மனசுலே
தேரோடுமான்னு பாருங்கடா ? ‘

poo@giasmd01.vsnl.net.in

Series Navigation

இராம.கி.

இராம.கி.