கவிக்கட்டு 17 – உன்னத உறவு

This entry is part [part not set] of 41 in the series 20040729_Issue

சத்தி சக்திதாசன்


இரண்டு சக்கரங்கள் தானுனக்கு
இருந்தும் நீ என்னோடு
கொண்ட அந்த உறவு
உன்னதமனதொன்றே !

நீ என்னை அழைத்துச் செல்லும்
இடங்கள் பல ; எமக்குள்ளே
நிலவிய ரகசியங்கள்
எத்தனையோ !

சினிமாப் படங்களை
முதல்நாளே , முதல் காட்சியே
பார்த்து மகிழ்ந்திட நானெண்னும் போது
என்னை அழைத்துச் செல்லும்
எனதினிய துவிச்சக்கர வண்டியே !
எமது உறவு உன்னதமானதே !

வாலிபப் பருவம் அது யாபேருக்கும்
வனப்பானதொன்றே அறியாயோ !

துள்ளித்திரிந்த அந்தப் பருவத்தை
துல்லியமாக்க நீ செய்த சேவை
துவிச்சக்கரவண்டியே என்னையும் உன்னையும்
தழுவிய இன்பக் காலங்கள்

உன்னைப் பிரிந்து
நானிருந்ததில்லை
என்னைப் பிரிந்து
நீயிருந்ததில்லை

நான் என் நெஞ்சினில் சுமந்த
நினவுகளையும் பாரமாய்க் கொண்டு
நீ என்னை உன்னில் தாங்கி
வேண்டிய இடமெல்லாம்
அழைத்துச் சென்றாய்
நமது உறவு உன்னதமானதுவே !

பள்ளிக்கு என்னை அழைத்துச்
செல்வதும் நீதானே !
பிரத்தியேக மாலை நேர வகுப்புகளுக்கு
கொண்டு செல்வதும் நீதானே
மனதைக் கவர்ந்த கன்னியரின் பின்னே
ஊர்வலமாய் ஏந்திச் செல்வதும் நீதானே
துவிச்சக்கர வண்டியே
நமக்கிடையே நிலவிய
நம்பிக்கையும் உன்னதமானதுவே

நண்பர்களுடன் கூட்டமாய்
வீதிவலம் போகும்போது
கம்பீரமாய் என்னை
காவிச்செல்லும் நீ
எனது வாழ்க்கையில்
எடுத்த பங்கு மிகவும்
முக்கியமானதே !

சோகத்தில் நான் கலங்கினாலும்
மகிழ்ச்சியில் நான் குதித்தாலும்
பருவச் செழிப்பினில் ஆடினாலும்
இரவானலும் பகலானாலும்
இருசக்கரங்களில் என்னைத்
தாலாட்டும் உன்னை என்னால்
காலகாலங்கள் மறக்க முடியாதே !

வாழ்க்கையில் முத்திய
வற்றாத அனுபங்களோடு – இன்று
வாஞ்சையாக உன்னை
வருடிக்கொள்கிறேன்
நினைவுகளால்

இன்று
நீ எங்கோ நானறியேன்
என் இளம் நினைவுகளைத்
தொலைத்த இடத்தையும்
நானறியேன்
ஒன்று மட்டும் சொல்வேன்
நமது உறவு என்றுமே
உன்னதமானதுவே !

0000

வித்தியாசமனவர்களே !

சத்தி சக்திதாசன்

விடியாத இரவுகளையே தாங்கி நிற்கும் விசித்திரமான உலகமதில்
வித்தியாசங்களினால் ஒற்றுமை காக்கும் மந்தைக் கூட்டமிது

வெளிச்சமில்லா விளக்கதினிலே விழுந்து மடியத்துடிக்கும் அந்த
வாழ வகையறியா கோழைத்தனமிக்க விட்டில் பூச்சிகளினமிது

படித்துப் படித்து தமது அறிவைப் பெருக்கி பின் அதன் விளவால்
படிந்த அறியாமை எனும் இருட்டினில் தம்மைத் தொலைத்த கூட்டமிது

உழைத்து உழைத்து எடுத்த நன்மையனைத்தையும் வாழ்வின் விரயக்கடலாம்
ஊதாரித்தனத்திற்கு அடகு வைத்து வாழ்ந்து கொண்டே சாகும் கூட்டமிது

வாழ்க்கையிலே நடித்துப் பின் நாடகங்களில் பொய்த்து சேற்றினுள் புதைந்து
வரலாறு எனும் உண்மையை விற்று ஏய்த்துப் பிழைக்கும் கூட்டமிது

விடைகளைக் கேள்விகளாக்கி பொய்களால் மாலை கட்டும் வித்தியாசமானவர்களே !
விதைகளை விற்று நிலத்தை வாங்குவதை இன்றோடு நிறுத்தி விடுங்கள்

0000
sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்