.. இருள் செய் நெருப்பு…

This entry is part [part not set] of 41 in the series 20040729_Issue

கி. சீராளன்


இருள் தன்னை நெருப்பாய்

காட்டத் துணிந்தது.

ஊழித் தீயிலிருந்து

ஒரு துளியை

தீக்குச்சி ஒன்றில்

புதைத்தது.

கும்பகோணம் பள்ளியில்

விழித்தபோது

அக்குச்சி பற்றியெறிய

அறியாமை கொள்ளி

ஆயிரம்.

அடுப்பிற்கு பக்கத்தில்

காய்ந்த கூரைகள்

கூரைவேய்ந்த

வகுப்பறைகள்

திணிக்கப்பட்ட சிறார்கள்

கூண்டில் சிக்கிய

மான்கள்.

அகலமில்லா வழிகள்

பூட்டிய கதவுகள்.

அக்கறையின்மையின்

அவமானச் சின்னங்கள்.

பணம் தின்னும்

பேய்கள்

பிள்ளைக்கறி

வேண்டி நின்றது.

விதிமுறைகள் ஏதுமின்றி /

விதிமுறைகள் ஏமாற்றி

பள்ளிச் சட்டங்கள்

இருள் சூழ் பாதுகாப்பு.

சட்டம் போட்டோரெல்லாம்

திட்டம்போட்டு

பணம் பண்ணும் பேராசையில்

கொழுபற்றியது தீ.

வருமுன் காவாதான்

வாழ்க்கை

எரிமுன் வைத்தூறு போலக்

கெடும் –

வள்ளுவனை

குருட்டுப் பாடமாய்

சொன்ன வாத்திக்கு

செயல் காட்டப்

படர்ந்தது தீ.

போலி முகாம் பூசும்

பட்டறைகளில்

பள்ளிகளின்

திறன் அறியாமல்

கொட்டடி சேர்க்கும்

பெற்றவரின்

மோகத்தில் விழுந்தது தீ.

காலமெல்லாம்

தூங்கிக் கிடந்து

விதிமுறைகள் விலக்கி வைத்து

தொண்ணூறு

பூச்செண்டுகள்

அக்கினி பந்தமாய்

எரிந்தபின்

விழித்திட

ஓர் அதிரடி அரசு.

புற்று நோய் பீடித்த

நிர்வாக எந்திரத்தின் மேல்

பற்றியது தீ.

சட்டச் சடசட

சட்டச் சடசட

பற்றியெறிந்தது தீ

தழல் கோரத்தில்

குஞ்சென்றும் மூப்பென்றும்

உண்டோ!

விட்டில் பூச்சிகளாய்

கருகியது

ரோஜா பதியன்கள்

காணாமல் போனது

நாளைய சரித்திரம்.

பூகோளத்தின் மத்தியில்

ஒரு இருள்பள்ளம்.

உயிர்புகை விண்முட்டிய போது

உலகம் வெட்கி நின்றது.

(punnagaithozhan@yahoo.com)

Series Navigation

கி.சீராளன்

கி.சீராளன்