அப்பாவின் காத்திருப்பு…!!!

This entry is part of 47 in the series 20040624_Issue

சாந்தி மனோகரன்


அம்மா பால்…!!!
பழக்கத்தை மாற்றிக்கொள்ளத் தெரியாத
பால்க்காரன்…
பெண்வாசனை இல்லாத வீட்டில்
எந்த அம்மாவை அழைப்பானோ தெரியவில்லை…!

சூரியனோ…சேவலோ அல்ல-இந்த
பால்க்காரனும்…பேப்பர்-காரனும் தான்
எங்களின் விடியற்காரர்கள்…!!

பள்ளிக்கூடம் போகும் தம்பி
பணியிலிருந்து ஓய்வு பெற்ற அப்பா
படித்து முடித்து வேலைக்கு செல்லாதிருந்த நான்…
நாளொன்றுக்கு 23 மணி நேரம்
குப்பையாய்க்கிடக்கப்போகும் செய்தித்தாளுக்காக
சண்டையிட்டுக்கொள்வது வாடிக்கை…!!!

வேலை தேடி வெளியூரில் நான்
மேல் படிப்புக்காக வெளிநாட்டில் தம்பி
யோசித்துப்பார்த்தேன்….
என்னதான் செய்துகொண்டிருப்பார் அப்பா..!!!

தினம் காலை..பேப்பர் காரனும்…அம்மாவை
அழைக்கும் பால்க்காரனும்
செய்தித்தாள் சண்டைகளும்
அவர் நினைவில் வந்து போகலாம்..மற்றபடி…

வீட்டில் ..அன்பு தொலைத்த அறைகள் எல்லாம்
சிறைகளாய் மாறியிருக்கும்..அங்கேதினம்
ஆயிரம் முறை தொலைப்பேசி
சரியாக வைக்கப்பட்டுள்ளதாவென சரி பார்த்து…
எப்போதாவது சிணுங்கும் தொலைப்பேசிக்காக காதுகளும்..
எப்போதோ வரப்போகிற மரணத்திற்காக கண்களும்
எப்போதும் காத்திருக்கும்…!!!

செய்தியில் வாசித்தேன்…!!!
மரணம் தழுவுதலில்..விதவை மனைவியரை
விதவை கணவர்கள் முந்துகிறார்களாம்…
இதிலென்ன ஆச்சரியம்…
மனைவியை இழப்பதுவும் மரணம் தழுவுதலும்
ஆண்களைப்பொருத்தவரை ஒன்றுதானே…

மனைவியை இழந்த பின்னே
கணவன் வாழ்கிறான் என்றால்
உண்மையில் அதுதானே ஆச்சர்யம்…
—-
shanthi_yem@yahoo.com

Series Navigation