புத்த களமா ? யுத்த களமா ?

This entry is part of 47 in the series 20040304_Issue

சி. ஜெயபாரதன், கனடா


ஆயிரம் ஆயிரம்
புற்றிலிருந்து கிளம்பிய
எரிமலைத்தீ நாகங்கள் கக்கிய
கனல் குழம்பைத் திரட்டி
காலச் சிற்பி கோளத்தை உருட்டினான்!
ஆங்காரி, ஓங்காரி
அன்னை
பளிங்குக் கோள்களை அண்டத்தில் வீசி
அம்மானை ஆடினாள்!
தூங்கும் பிள்ளையைக் கிள்ளி விட்டு
சும்மா
தொட்டிலை ஆட்டினாள்!
கொட்டியது குழவியைக் கருந்தேளா ?
அன்றி
சட்டிக்குள் வெடித்தது
அணுகுண்டா ?
துள்ளிப் புரண்டது பூமகள் மேனி!

இடிந்து சடசட வென
வீழ்ந்தன
கூந்தலில் தொங்கும் குருவிக் கூடுகள்!
இற்றுவிழும் பூமகளின் குவியிடை
சற்று குலுங்கியது!
புற்றுகளில் தூங்கும்
ஆயிரம் ஆயிரம் ஆயுட் பிறவிகள்
சிறைக்குள் சிக்கி
பாயிரம் பாடி
பூரண விடுதலை பெற்றன!
சிறகொடிந்த ஈசல்கள் எத்தனை ?
சிரமுறிந்த எறும்புகள் எத்தனை ?
கால்முறிந்த
கரையான்கள் எத்தனை ?
தரை தொட்ட வீடுகளே
சமாதி கட்டின!

தெருவில்
தீச்சட்டி எடுத்தாடினாள் தேவி!
தணல் சட்டி யுள்ளே
மணலைப் புரட்டிக்
கடலை வறுத்தாள் காளி யாத்தா!
தாழிச் சட்டி எண்ணையில்
கடுகு, உளுந்து, மல்லி தானியத்தை
தாளிப்பு செய்தாள்!
நரக மானதா நகரம் ?
பிரளயக் கூத்தினைத் துவக்க
முதல் வகுப்பில்
பரமன் பயிற்சி பெறுகிறானா ?
தடுமாறி
தப்புத் தாளங்களில்
தவறிய பாதங்களில்
ஆதிசக்தி
பரதக் கலையை
அரங்கேற்றுகிறாளா ?

வைரமும், பொன்னும் வாங்க முடியாத
விலை மதிப்பற்ற உயிரினங்கள்
முரசாட்டத்தில்
சின்னா பின்னமாகி
மலிவாக
ஏலமிடப் பட்டன!
கர்வ மாந்தருக்குப் பாடம் கற்பிக்கும்,
தர்ம விதியா இது ?
அன்றி
சர்வ மாந்தரைச் சமாதியில் தள்ளும்
மர்மச் சதியா இது ?
உன் வயிற்றில் உதித்த மதலைகள்
நசுங்கி
உதிரம் கொட்டிய போது,
உன் மார்பில் பாலாறு ஓடியது!
காளான்கள்
ஓலமிட்டுக் கதறும் போது
காதை மூடி, ஓடும்
பாதைகளை அடைத்தாய்!
மாட மாளிகைகள் மண்ணைக் கவ்வி,
கூட கோபுரங்கள்
குட்டிக்கர்ணம் அடித்த போது,
சன்னதியில் கல்லாய் நீ
புன்னகை செய்து கொண்டிருந்தாய்!

அசுரக் குடல்களை மிதித்து மிதித்துப்
பழகிப் போன
பரமனின் பாதங்கள்
மனிதச் சடலங்கள் மீது
அனுதினம்
சடுகுடு ஆடின!
உடுக்கை அடித்து தாண்டவம் ஆடும்
காலக் கூத்தன்
ஞாலத்தைக் குலுக்கிக் குலுக்கி
எதை நிரூபிக்கிறான் ?
நிலையாமை என்னும் புரியாத விதியை
மனித இனத்துக்கு
மீண்டும் மீண்டும்
நினைவூட்டு கிறானா ?
பிரபஞ்ச யுகமுடிவைப் பிரதிபலிக்கும்
பிரளயக் கூத்தின்
மாதிரிக்
கரக ஆட்டமா இது ?
இறந்தபின் உடல்களைப் புதைப்பது
மனித இயல்பு!
உயிருடன் புதைப்பது
தெய்வ மரபா ?

பூங்காவை ஒரு நடனத்தில்
இடுகாடாக்கிய
ஆங்காரி அன்னையே!
உயிரினத்தை
ஏனிந்தப் புவியில் மட்டும் படைக்கிறாய் ?
படைத்தபின்
ஏனிந்த
மானிடத்தை மட்டும்
மிதித்து மிதித்துப் புதைக்கிறாய் ?
காடேறிக் கருமாதி யாகும் ஆத்மாக்கள்
சூடேறிப்
பாடும் கீதம் இது:
புத்த களத்தை
யுத்த களமாக்கியது போதும் தாயே!
ஓயட்டும் உன்
மாயத் திருவிளையாடல்கள்!
ஒன்று நிலநடுக்கத்தை நிறுத்திவை!
இன்றேல்
கோடி கோடியாய் குஞ்சு பொரிக்கும்
செக்கு யந்திரங்களைக்
கோடரியால்
சுக்கு நூறாக்கு!

****
jayabar@bmts.com

Series Navigation