கால் கொலுசு

This entry is part [part not set] of 55 in the series 20031211_Issue

மாலதி


—————-
கால் கொலுசு
தொலைந்து போயிற்று
குறுவை பணத்தில்
கொலுசு வாங்கித்தர
கல்லிடைக்குறிச்சியில்
அப்பா இல்லை
காரியம் முடிந்தது
போன மாதம்
நான் போகாமலே.

உனக்குப் பிடித்ததெல்லாம்
வாங்கி எனக்குப்
பிடித்ததெல்லாம்
விட்டுவந்த
சந்தைத்தெருவில்
தொலைந்து போயிருக்கலாம்.

வளைக்காரன் வாசலுக்கு
கொண்டுவரும் வளைகள்
ஏன் இத்தனை வடிவாய்
இல்லை என்று
சிவப்பு மணி முத்துவளை
பார்த்து ஒரு நிமிடம்
மலைத்துவிட்டு
உன்னைத் தொடர்ந்த நேரம்
தொலைந்திருக்கலாம்.

ஒண்ணரை பங்கு
இடத்தை அடைத்து
முழங்கை தூக்கி பஸ்
இருக்கையில் நீ என்னை
ஜன்னலோரத்தில்
நெருக்கியபோது
முறுக்கு நறநறத்து கடலை தின்று
நீ காலடியில் தோல் உறித்த
சங்கடத்தில் நான்
குதிகால் ஒருக்களித்தபோது
தொலைந்திருக்கலாம்

சத்திரத்து இருட்டில்
உன் குறட்டை ஒலிக்கு
சலித்துப் புரண்டு
கால் உதைத்தபோது
சிணுங்கிய கிண்கிணி
காலையில் தொலைந்திருக்கலாம்

பஸ் ஸ்டாண்டில்
காபி கிளப்பில் நீ எனக்கு
நெய்த்தோசை மறுத்தபோது
காலில் கொலுசிருப்பு
நினைவில்லை.

கால் ரூபாய் தகராறில்
கடைவீதையில்
கத்தி,சண்டை போட்டு
கசாப்புக் கடை
கொண்டையனிடம்
‘பொண்டாட்டி சரியில்லை,
எல்லாம் இந்தக்
கழிசடையால் ‘
என்றபோது
நிச்சயமாய்
என் காலில் கொலுசில்லை.

ரமிக்காத பயணத்தில்
களைப்போடு இழப்பு
எனக்குப்
பழக்கம் தான் என்றாலும்
இந்தமுறை ரொம்ப
ரொம்பவே வலித்தது
சொன்னேனே! அதைத்தான் என்
கால் கொலுசு
தொலைந்து பொயிற்று.

(வரிக்குதிரை தொகுப்பு1999} (முதல் பதிப்பு பிரதி மிச்சமில்லை)

malti74@yahoo.com

Series Navigation

மாலதி

மாலதி