காகம்

This entry is part [part not set] of 36 in the series 20060811_Issue

கே. ராமப்ரசாத்


போன ஆடி அமாவாசை அன்று காக்கைக்கு உணவு வைத்தனர் எனது பக்கத்து வீட்டில். அன்று காக்கை(கள்) உணவை உண்ண வர தாமதமாகிவிட்டது. உடனே அவர்கள் அடைந்த பதட்டத்தைக் கண்டு நானும் பதட்டமடைந்தேன் ஏன் இப்படி என்று ?

காக்கைக்கும் நமது பூர்வீக முன்னோர்களுக்கும் உள்ள பிணைப்புக்குப் பல புராண கதைகள் இருக்கலாம். ஆனால், இவ்விதம் பதட்டமடைவதைக் காணும்போது ஏன் வீட்டில் காக்கை வளர்க்கக்கூடாது ? என்று கூட தோன்றியது.

இந்த எண்ணம் தோன்றியவுடன், வேறு ஒரு சம்பவம் எனக்கு நினைவுக்கு வந்தது. ஒரு பறக்க முடியாத காக்கைக் குஞ்சு ஒரு நாள் தவறி சாலையில் விழுந்து கிடந்தது. உடனே, அந்தப் பக்கம் போவோர் வருவோர் எல்லோரையும் ஒருவர் விடாமல் அக்குஞ்சின் தாய் காக்கை தலையில் கொத்தித் தள்ளியது. மேலும், மனிதர்கள் சகவாசம் கிடைத்த காக்கையை மறுபடியும் காக்கைக்கூட்டத்தில் சேர்க்க முடியாதாம் (?!).

சிறுவயதில் பாட்டி வடையைத் திருடிச் செல்லும் காக்கையின் அறிமுகம் எனக்கு அதன் மேல் ஒரு நல்ல அபிப்பிராயத்தை ஏற்ப்படுத்தவில்லை. ஆனால், அவ்விதம் சொல்லப்படும் காக்கையின் வாழ்வு மனிதர்கள் மத்தியில் சர்ச்சைகளுடனான ஒன்றாகவே இருக்கிறது.

அப்பறவை இனம் மனிதர்கள் மத்தியில் வாழ்ந்துகொண்டு தனக்கென்று ஒரு அடையாளத்தைப் பறவை இனத்தின் மத்தில் ஏற்படுத்தி இன்றும் ஒரு சவாலான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறது.

காக்கை குயிலின் முட்டையைக் குஞ்சு பொறிக்கும் முறை ஒரு அற்புதமான ஒன்று – அது உண்மையான ஒன்றாக இருக்கும் பட்சத்தில். மேலும் உணவினை குறிப்பாக மனித இனம் வைக்கும் உணவை உண்ண தனது சகாக்களைக் கூவி அழைக்கும் பாங்கு – அது அவ்விதம் செய்யக் காரணம் பயத்தினால் என்றுகூட சொல்லப்படுவது உண்டு – வேறு வகையில் ஒரு அழகானது. இதனை நம் மக்கள் கூடி வாழ்தல் என்றும் மொழிபெயர்க்கின்றனர்.

இப்பறவை இனம் மட்டும் ஒரு monopoly ஆக, அதாவது போட்டியாளர் என வேறு பறவை இனம் ஏதும் வளரவிடாமல் இன்றும் வாழும் கலை எனக்கு ஒரு வாழ்வியல் பாடமாக எண்ணிக்கொள்வதுண்டு. வெளிநாடுகளில் சீகல் என்ற பறவை கடலோரம் உண்டு. ஆனால், நமக்கு கடலோரத்திலும் காக்கை தான்.

பஞ்ச தந்திர நீதிக் கதைகளில் இப்பறவைக்கு ஒரு தனி அடையாளம் உண்டு. நரி நண்பனின் யோசனைப்படி, இளவரசியின் நகையைத் தன் எதிரி பாம்பின் புற்றில் போட்டு, அதனை அழிக்கும் யுக்தி இன்றும் மனிதர்கள் பயன்படுத்தும் ஒரு பிரபலமான பழிவாங்கும் யுக்தி.

மனித வளம், நிர்வாகவியல் படிப்புக்கு இப்பறவையை ஒரு உதாரண அடையாளமாகக் கொண்டு கற்பிக்கலாம் என்பேன்.

என் பார்வையில் சில நிர்வாகக் குறிப்புகள் காக்கையின் வழியில்.

1. சக மனிதரை நம்பக்கூடாது. ஆனால், அவர்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்க வேண்டும்.

2. சக மனிதரின் துயரத்தை அவருடம் மட்டும் பகிர்ந்து கொள்ளுதல் போதுமானதல்ல. அத்துயரத்தை முடிந்தவரை பலர் அறிய அவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

3. கிடைத்ததைக் கொண்டு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். இது தான் வேண்டும் என்று ஒரு அடம்பிடித்த வாழ்க்கை வாழக் கூடாது.

4.நேரத்துக்கு உறங்குவதும், சீக்கிரமே விழித்துக் கொள்வதும் ஒரு வெற்றி பெற்ற வாழ்க்கை வாழ அடிப்படைத் தேவை.

5. ஒரு கண் இல்லாமல் போனாலும், வேறு வகையில் அந்த ஊனத்தை ஈடுகட்ட பறக்கும் சக்தியைப் பயன்படுத்த வேண்டும்

6. பயன் ஒரு இனத்திடம் மட்டும் என்று நம்பி வாழாமல், எல்லா இனத்தவருடனும் நட்புடன் வாழ்ந்து தனக்குத் தேவையான பயனை அடைந்து, பதிலுக்கு கைமாறு என்றெல்லாம் வாழ்க்கையை வீணடிக்கக் கூடாது.

7. மெளனத்தையும், பேச்சையும் சரியான இடத்தில் பயன்படுத்த வேண்டும்

8. துஷ்ட்டாரைக் கண்டால் தூர விலகு.

9. கிட்டாதாயின் வெட்டன மற.

10. மதியாதார் தலை வாசல் மிதியாதே.

Series Navigation

கே ராமப்ரசாத்

கே ராமப்ரசாத்

காகம்.

This entry is part [part not set] of 55 in the series 20031211_Issue

அருண்பிரசாத்.


முன்பே தெரிந்தது தான்
ஒரு வாழ்நாளின் நீண்ட கோடைகள்.

நீருக்கு அலையும் காகமாய்
நினைவுக்கற்களை இட்டு நிரப்புகிறேன்
மனக்குழியில்.

மெல்ல மேலேறி வருகிறது
இடுக்குகளினூடே உன் பதிவுகள்.

மூர்க்க அலகு கொண்ட
இரு பறவைகளின் இழந்த இறகுகள்
மிதந்தவாறே சொல்லிச் செல்கின்றன
நாம் தொலைந்ததை.

everminnal@yahoo.com

Series Navigation

அருண்பிரசாத்

அருண்பிரசாத்