நலம்

This entry is part [part not set] of 53 in the series 20031127_Issue

பவளமணி பிரகாசம்


வாய்ச்சொல் தேவையில்லை
வார்த்தையில் சாரமில்லை
வாதத்தில் புரிவதில்லை
வேதத்தில் விளக்கவில்லை
மோனத்தில் மூழ்கிடு
“நான் யார் ?” என்றிடு
மனதை மூடிவை
நினைவை நிறுத்திடு
நிச்சலனம் பழகிடு
நித்தியத்தில் கலந்திடு-
உலகின் தொடர்பறுத்து
தனியே தன்னந்தனியே
சுயம் காண விழைந்து
சுற்றம் மறந்து
சொந்தம் துறந்து
புறத்தை தொலைத்து
ஞானம் அடைந்து
விளைந்ததென்ன ?
விளங்கியதென்ன ?
விளக்கியதென்ன ?

உலகில் கலந்து
உயிர்களை நேசித்து
உணர்வுடன் விரைந்து
வலிகள் களைந்து
துயர்கள் துடைத்து
ஓயாது உழைத்து
மனதை திறந்து
நினைவை நிறைத்து
அறிவை வளர்த்து
மகிழ்வாய் சிரித்து
வாழ்வது தவமா ?
பிறவியின் பயனை
அடைவது நிஜமா ?
கடமைகள் தருவது
கைமேல் பலனா ?
“நான்” உள்ளேயா ?
நாடிக் கொண்டாடும்
பரந்த மானிடத்திலா ?
“நான்” மட்டும் உய்வதா ?
“நாம்” என்பதின்பமா ?
சுயமா ? பொதுவா ? நலமெது ?
————————————–
pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்