எல்லா சொகமும் இழக்கலாச்சு

This entry is part [part not set] of 41 in the series 20030904_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


பரிசம் போட்ட மச்சானாலே
பட்டண வாழ்க்கை நேந்ததாலே
கரிசல் காட்ட மறக்கலாச்சு
காணி நெலத்தை தொறக்கலாச்சு

‘மாடுங்கண்ணும் வரவேளை
மஞ்சதண்ணி சுத்தற வேளை ‘
நாடறிஞ்ச எசப்பாட்டை
நாம்படிச்சு நாளுமாச்சு

புழுதிமண்ணை வாரிவந்து
பொடைவை துணியை நனைச்சுகட்டி
பத்ரகோட்டையன் கூத்தப்பார்த்து
பரிதவித்த சொகமும்போச்சு

அய்யனாறு குதிரை பக்கம்
அரசமர நிழலொதுங்கி
ஆடுபுலி ஆட்டமின்னு
ஆர்ப்பரிச்ச பவுசுபோச்சு

கம்மங்களியை துண்ணுபுட்டு
கம்மாவிலே அந்திவரை
பொம்மனாட்டி ஒழைச்சிகண்ட
பொறவி சுகம் போயிறுச்சு

ஆடிமாச செடலண்ணிக்கு
அஞ்சாறு பொண்டுக ளோட
கொள்ளவுட்ட புளியம்பழத்தைக்
கொண்டு வந்த நாளும்போச்சு

தமிழ்படிச்ச எம்மாமன்
தாலிகட்ட வேண்டாமுண்ணு
இங்கிலீசைப் புடிச்சதாலே
எல்லா சொகமும் இழக்கலாச்சு

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா