வெண்ணிலவே சொல்லிடுவாய்!

This entry is part [part not set] of 37 in the series 20030619_Issue

ஜோதிர்லதா கிரிஜா


தெய்வத்திரு நாட்டினிலே வெண்ணிலாவே _ இன்று
பொய்மலிந்து போனதேனோ வெண்ணிலாவே
கையை நீட்டி, கடமையாற்ற, காசுகேட்கும் மோசக்
கயவர்கள் நிறைந்ததேனோ வெண்ணிலாவே!

வெள்ளையர் வெளியேறி விட்டால் வெண்ணிலாவே – நாளை
தொல்லைதீரும் என்றிருந்தோம் வென்ணிலாவே
வெள்ளையரே மேலோவென்று வென்ணிலாவே – உள்ளூர்க்
கொள்ளையர் நமை எண்ண வைத்தார் வெண்ணிலாவே!

தேனும் பாலும் ஓடவேண்டாம் வெண்ணிலாவே – ஆனால்
ஊனும் உடையும் வேண்டுமன்றோ வெண்ணிலாவே
வானுயர்ந்த மாளிகைகள் வந்த போதும் – அருகே
காணும் குடில்கள் ஒழிவதெப்போ வெண்ணிலாவே ?

சாதிகள் இரண்டே என்று வெண்ணலாவே – அன்றே
நீதி சொல்லிச் சென்று விட்டார் வெண்ணிலாவே
தீதிதென் றுணர்ந்தபோதும் சாதியின் பேரால் – நாங்கள்
மோதி சுட்டிச் சாவதேனோ வெண்ணிலாவே ?

தாயின் கூறே பெண்களென்று வெண்ணிலாவே – பெரியொர்
மாய்ந்து மாய்ந்து எழுதிவைத்தும் வெண்ணிலாவே
ஆய்ந்திதனை அறிந்திடாமல் பெண்கள்தம்மை – இன்று
பேய்கள் சீண்டும் கொடுமை என்னே வெண்ணிலாவே!

கொடுமைகளையும் கெடுதிகளையும் வெண்ணிலாவே – இன்று
கடுமையாகச் சாடி நீக்க வெண்ணிலாவே
அடிகள் காந்தி மீண்டும் வந்து வெண்ணிலாவே – நம்மைப்
படியவைத்துப் பண் படுத்தும் நாளும் எந்நாளோ !

jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா