தொட்டி(ல்) குழந்தை

This entry is part of 44 in the series 20030209_Issue

இரா. சீனிவாசன்,தைவான்


அன்புள்ள அம்மா
ஏனோ
இன்னும் உன்னை
அப்படித்தான்
அழைக்கத் தோன்றுகிறது

கட்டில்லா காதல்
கட்டிலுக்குப் போகும்
முன்னே
கொஞ்சம் யோசித்திருக்கலாம்

மாதம் இரண்டு
ஆனபோதாவது
மயக்கம் தெளுந்திருக்கலாம்

எல்லாம்
போகட்டும்

காமத்தின் சாபத்தில்
கருவாக்கி விட்டவளே

இருண்ட குகைக்குள்
ஈரைந்து மாதங்கள்
இதமாய் என்னை இருத்தி
வைத்தவளே

திடெரென என்னை
இப்படி

இந்திய தேசத்தின்
தெரு மன்னர்களும்
காலபைரவர்களும்
இன்ன பிற இத்யாதிகளும்

கட்டிப் புரளும்
எச்சில் இலைக் குப்பையில்
என்னையுமொரு
எச்சில் இலையாய் வீசிவிட்டாயே

என்னைத்
தொட்டிக் குழந்தையாய்
விட்டதை விட
தொட்டில் குழந்தையாய்
விட்டிருக்கலாம்

இருந்தாலும்
நான் ஆனந்திக்கிறேன்
ஏன் தெரியுமா ?
தாய்ப்பாலை மறுதலித்த
நீ
கள்ளிப்பாலையும் கூட
மறந்து விட்டாயே ?

amrasca@netra.avrdc.org.tw

Series Navigation