சமத்துவம்

This entry is part of 37 in the series 20020310_Issue

பவளமணி பிரகாசம்


அன்றே சொன்னார் ஒளவை
நன்றாய் உணர்ந்தோர் உண்மை:
சாதி இரண்டொழிய வேறில்லை-
இனத்தின் ஒரு பாதி ஆண்கள்,
இனிய மறு பாதி பெண்கள்:
உலகின் ஒளியாய் இரு கண்கள்.
கண்கள் இரண்டு ஆயினும்
பார்வை என்றும் ஒன்றே,
ஆணும், பெண்ணும் இரண்டாயினும்
ஒன்றாய் பார்த்தல் நன்றே.
கல்வி ஞானத்திலே, நிதானத்திலே,
மதியூகத்திலே, ஊக்கத்திலே,
தெளிவான நோக்கினிலே,
திடமான மன உறுதியிலே,
சீரான தராசின் தட்டுகளாய்
இரு பாலாரும் இருந்திடவே,
ஏற்ற தாழ்வின்றி வாழ்ந்திடவே,
வண்டியில் பூட்டிய காளைகளாய்,
உருளும் இரு சக்கரங்களாய்,
நீளும் தண்டவாளங்களாய்
சரி நிகர் சமானமாய்
கை கோர்த்து நடக்கவே
மலரும் புதிய யுகமுமே,
உயரும் மனித இனமுமே.

Series Navigation