பயங்கரவாதம்

This entry is part [part not set] of 37 in the series 20020310_Issue

பொன் முத்துக்குமார்


இது

காலில் குத்திய முள்ளை எடுக்க
கத்தி கொண்டதால்
நேர்ந்த விபரீதம்.
கண்ணில் விழுந்த தூசியை
அமிலமூற்றி அகற்ற முயன்றதால்
விளைந்த பயங்கரம்.

முதுகு அரிக்குதென்று சொரிய
முள்வேலியையா தேர்ந்தெடுப்பது ?
விரல்நீண்ட நகங்களை நறுக்க
உடைவாளையா உறுவுவது ?
தீபமேற்ற தீப்பெட்டி தந்தால்
தீப்பந்தத்தையா கொளுத்துவது ?

கழுத்தில் சூடத்தந்த மாலையை
நாரற வீசிப்போட்டு
காலடியில் மிதித்துவிட்டு
முட்களோடு கற்களேந்தி
முகம்முழுதும் கவுச்சியோடு ஏன்
நரரத்தம் தேடி அலைகிறீர்கள் ?
கொளுத்திப் பொசுக்கிக்
கரிக்கட்டையாக்குவதில் ஏன்
ஏற்றம் காணவிழைகிறீர்கள் ?
ஆத்தலோ காத்தலோ வேண்டி
அழித்தல் அவதாரம் ஏன் எடுக்கிறீர்கள் ?
அறுவடை செய்ய அழைத்தால்
ஏன் கையில்
அரிவாளோடு வருகிறீர்கள் ?

ஆயுதமேந்தியோருக்கோர்
அன்பு எச்சரிக்கை.
ஓங்கின உங்கள் கரங்கள்
யிலக்கு தாக்குமுன்
உங்கள் கைகளில் உள்ளதை
உற்றுப்பாருங்கள் ஒருநிமிடம்.
எய்யப்படப்போகும் அம்பல்ல அது;
திருப்பித்தாக்கும் பூமராங்.
வெறும் தீப்பந்தமல்ல அது !
உங்கள் தலையில் நீங்களே
வைத்துக்கொள்ளப் போகும்
அக்னிக்குஞ்சு.
எறியப்படப்போகும் வெறும்
கல் மட்டுமல்ல அது.
ஒரு தலைமுறைக்கனவுகளுக்கு
நீங்கள் எழுப்பிக்கொண்டிருக்கும்
கல்லறை செங்கல்.

Series Navigation

பொன் முத்துக்குமார்

பொன் முத்துக்குமார்