இன்னும் கொஞ்சம்

This entry is part [part not set] of 20 in the series 20011118_Issue

பசுபதி


வியப்பூட்டும் அறிவுச் சக்தி ,
. . வியாபார வெற்றி யுக்தி
வியர்வையின்றி கிட்டா என்றே
. . மேல்நாடு கூறும் புத்தி !
‘ஜயமுண்டு ‘ ஜபமே செய்து
. . பயமின்றி இன்னும் கொஞ்சம்
உயர்வானில் பறக்க வேண்டும்,
. . உழைப்பென்னும் சிறகை வீசி !

தொன்மையிலும் சொன்னம் உண்டு
. . தொலைநாட்டில் கழிவும் உண்டு !
அந்நியத்துத் தண்ணீர்ப் பாலை
. . அருந்திடுவோம் அன்னம் போல !
கந்தலான கருத்தை ஓட்டிக்
. . காற்றடிக்க இன்னும் கொஞ்சம்
சன்னல்கள் திறக்க வேண்டும் ,
. . சாரலிலே புதுமை வீச !

தாய்மொழியில் கல்வி ஊட்டத்
. . தடைஇருப்பின் உடைக்க வேண்டும் !
ஆய்வுகளின் தாக்கம் ஓங்க
. . ஆழமாக உழுதல் வேண்டும் !
சாய்வற்ற நீதி என்றே
. . சரித்திரம் படைக்க வேண்டும் !
பாய்ச்சலிலே இன்னும் கொஞ்சம்
. . பெளருஷத்தைக் காட்ட வேண்டும் !

Series Navigation

பசுபதி

பசுபதி

இன்னும் கொஞ்சம்

This entry is part [part not set] of 20 in the series 20011111_Issue

அனந்த் (அனந்தநாராயணன்)


உழவன்:
இன்னும் கொஞ்சம் நிலமிருந்தால்
இயந்திரம் வாங்கி உழுதெனது
சின்னக் குடிலைப் பெரிதாக்கிச்
சிறப்பாய் வாழ்ந்து மகிழ்ந்திடுவேன்

வணிகன்:
இன்னும் கொஞ்சம் பணமிருந்தால்
இரண்டை நாலாய்ப் பெருக்கிஒரு
மன்னன் போல இவ்வுலகம்
மதித்திட நானும் வாழ்ந்திடுவேன்

ஊழியன்:
இன்னும் கொஞ்சம் படிப்பிருந்தால்
ஈனத் தொழிலிதை விட்டு விட்டு
என்மனம் போலொரு வேலையிலே
இனிதாய் அமர்ந்து சுகம் பெறுவேன்

ஞானி:
இன்னும் கொஞ்சம் அறிவிருந்தால்
ஈசன் உனைஎன் னுளம்நிறுத்தி
என்னை நானே அறிந்துகொண்டு
எதையும் விரும்பா நிலைபெறுவேன்

Series Navigation

அனந்த் (அனந்தநாராயணன்)

அனந்த் (அனந்தநாராயணன்)