சிந்திக்க ஒரு நொடி : தமிழ் சினிமாக்களில் பெண் பாத்திரங்களுக்கு வேலையில்லாததால் மொழிபோயிற்று

This entry is part of 46 in the series 20050311_Issue

வாஸந்தி


கதாநாயகிகளுக்குத் தமிழ் தெரியவேண்டியதில்லை

தமிழ் சினிமாக்களில் பெண் பாத்திரங்களுக்கு வேலையில்லாததால் மொழிபோயிற்று

‘தமிழ் மண்ணில் பிறந்து வளர்ந்த சுத்தத் தமிழ் ரத்தம் ஓடும் நடிப்புத் திறன் மிக்க பெண்களா நீங்கள் ? வேண்டாம் உங்களுக்கு இந்த அற்ப ஆசை–.தமிழ் சினிமாவில் கதா நாயகி வேடம் பூணும் ஆசை. ‘

ஏனாம் ?

‘உங்களைப் போட்டால் படம் விக்காது. மார்க்கெட் படுத்துவிடும் பெண்களா ‘.

எப்படிச் சொல்கிறீர்கள் ? எங்களுக்கு அழகில்லையா ?இளமை இல்லையா, அதுவே போதுமே ?

‘போதாது அம்மாடிகளா; தமிழ் பெண்ணுக்கு நிறம் பத்தாது. இப்ப எடுக்கறது கலர் படம் .ப்ளீர்னு ஜொலிக்கும் சிவப்பா இருந்தா. ஹீரோ கன்னத்தைச் சுண்டினா ரத்தம் தெரியணும். ‘

ஐய்யே- அந்தக் கருத்த ஹீரோ சுண்டினாத்தானே ? அவர் மண்ணின் மைந்தர்- ஹீரோயின் மட்டும் வானத்திலேந்து குதிக்கணுமா ?

‘அப்படித்தான் பெண்களா. சும்மா வாதாடிப் புண்ணியமில்லே. ஹீரோ கருப்பா இருந்தா பரவாயில்லே.

ஹீரோயின் கருப்பு கூடாது. அவனவன் கருப்புன்னா கல்யாணம் கட்டிக்கவே யோசிக்கிறான்; மூணுமணிநேர சினிமாவிலேயாவது கண் குளிர ஒரு செவத்த பொண்ணைப் பார்த்து சந்தோஷப் படட்டுமே ? ‘

நிறம் இருந்தா போதுமா சார் ? எங்க திறமையை சோதிச்சுத்தான் பாருங்களேன். பரதம் முறையாகப் பயின்றிருக்கிறோம்.

‘நல்ல கூத்து. காசு குடுத்து கொட்டகைக்கு வந்து குந்தரவன் பரதத்தைப் பாக்கவா வருவான் ? இப்ப எல்லாம் பேரில்லாத க்ரூப் டான்ஸ். அதுக்கு பயிற்சி தேவையே இல்லே. ‘

சரி, பரதம் வேண்டாம். நடிப்பு தேவைதானே ? கலை குழு நாடகங்கள்ளெ நடிச்ச அனுபவம் இருக்கு.

‘சொன்னா கோவிச்சுக்கப் படாது. அந்த நடிப்பெல்லாம் சினிமாவுக்கு பெண்ணுங்க ரோலுக்கு சரிவராது. ‘

நல்ல தமிழ் பேசுவோம், நல்ல உச்சரிப்புடன். எத்தனைக் கடுமையான வசன மானாலும் சுத்தமாப் பேசுவோம்.

‘போச்சுடா! அப்ப நிச்சயமா உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கமுடியாது பெண்களா போய்வாங்க ‘.

இப்ப டிரெண்டு மாறிப்போச்சு. ஆண்களுக்கே வசனம் குறைஞ்சு போச்சு.சும்மா பொம்மைகணக்கா வந்துட்டுப் போற ஹீரோயினுக்கு எதுக்கும்மா வசனம் ? கொஞ்சிப் பேசி காதல் சீன்லெ தலைக்காட்ட

நீங்க எதுக்கு மெனக்கடணும் ? அதுக்கும் டப்பிங் ஆர்டிஸ்ட் இருக்காங்க. இப்ப தமிழ் ஹீரோயின்களுக்கு வேலை ரொம்ப சுளுவு. தமிழே தெரியவேண்டியதில்லே! ‘

வெள்ளைத் தோல் வேணும்னு, தமிழ் தெரியாதவங்களை போடறதுனாலெதானே கதாநாயகிகளை

பொம்மைகளாக்கிட்டாங்க ?

‘ சும்மா ஆராய்ச்சியிலே இறங்கி என் நேரத்தை வீணாக்காதீங்க. பொம்மையோ ஊமையோ, அவங்களைப் போட்டா இளசுகளுக்குப் பிடிக்குது, படம் ஓடுது. இப்பல்லாம் படத்துக்குப் படம் முரட்டு

ஹீரோக்கள் தான். அதுக்குக் கான்ட்ராஸ்டா ஸாப்டா ஒரு அழகு பொண்ணு ஹீரோயினா இருந்தா எடுபடும். இரண்டு காரக்டரும் ஸ்ட்ராங்கா போச்சு, படம் ஊத்திக்கும்! ‘

இது ஒரு கற்பனை உறையாடல்தான்.ஆனால் இன்றைய தமிழ் சினிமாவின் யதார்த்தம்.தொன்னைக்கு நெய் ஆதாரமா நெய்க்கு தொன்னை ஆதாரமா என்கிற கேள்வியின் அபத்த மயக்கம் கோடம்பாக்கத்தை

பீடித்திருக்கும் அவலம்.தமிழ் சினிமாக் கதைக்குப் பெண் கதாப்பாத்திரம் பல்வேறு காரணங்களுக்காக உபரியாகிப் போய்விட்டது. கோடம்பாக்கம் ஒரு மாச்சோ உலகம். ஆண் மேலாதிக்கம், நிலப் பிரபுத்துவ மரபுகள்,பெண் அடிமைத்தனம், ஜாதிப் பெருமை ஆகிய பதிவுகள் இன்னும் மிக அழுத்தமாக உள்ள சமூகத்திற்கு ஆணின் மேலாண்மையை மையமாக வைத்து பின்னப்பட்ட கதைகளை ஏற்பதில் சிக்கல் இருக்காது.தனிப்பட்ட குணாம்சத்தை காண்பிக்காத பெண் கதாப்பாத்திரங்களும் ஆண் ஆதிக்கக் கலாச்சாரத்துக்குப் பொருந்துபவர்கள்.ஆனால் பெண்ணின் சிவந்த நிறமே தமிழனுக்கு அழகின் அளவுகோல் என்பதால், கதாநாயகி சிவப்பாக இருக்கவேண்டும். நிறம் தானே வேண்டும் இதோ தருகிறோம் என்று படத் தாரிப்பாளர்கள் அணிவகுக்க ஆரம்பித்தார்கள் .வடக்கிலிருந்து இறக்குமதி துவங்கிற்று. தமிழ் கதா நாயகர்கள் பச்சைத்தமிழர்கள் . தமிழ் மரக்குடி பெருமைகளைப் பேசுபவர்கள்.மண்ணுடன் பொருந்தும் உருத்தாத நிறம் உள்ளவர்கள்.ஆனால் கதா நாயகியோ சுண்டியிழுக்கும் வெளுப்பு. பச்சை,பழுப்பு, கரு நீலக் கண்கள். செம்பட்டை முடி. மாநிற தமிழ் பெண்கள் நிறைந்த க்ரூப் டான்ஸில் பளீரென்று அன்னியமாகத் தெரிபவர்கள்.அந்த உருவத்துக்குத் தகுந்த மாதிரி பேச்சு.[அவர்களுக்குக் குரல் கொடுக்கும் தமிழ் பெண்கள்கூட நுனி நாக்குத் தமிழ் பேசுகிறார்கள் நிர்பந்திக்கப் பட்டவர்கள் போல. அந்தத் தமிழ் ஒரு வைரஸ். தொலைக்காட்சி தொகுப்பாளினிகளிலிருந்து கல்லூரி மாணவிகள் வரை தொற்றிக்கொண்ட நோய்.] அவர்களைத் தமிழ் ஆடியன்ஸ் கை கொட்டி வரவேற்கிறது.கேரளத்தில் மண்ணுக்குப் பொருந்தாத முகங்கள் கொண்ட, மொழியை சுத்தமாகப் பேசத் தெரியாத கதாநாயகிகளை மக்கள் நிராகரித்துவிடுவார்கள். வெள்ளைத்தோல் மோகம் கொண்ட தமிழர்களுக்கு அத்தகைய சின்னத்தனம் கிடையாது. வெளிமாநிலத்தவர் தமிழ் படங்களில் நடிப்பதில் எனக்கு எந்த ஆட்ஷேபமும் இல்லை. ஆரம்ப நாட்களில் இருந்து தமிழ் படங்களில் கொடிகட்டி பறந்த கதாநாயகிகள் தெலுங்கர்கள், மலையாளிகள்,கன்னடியர்கள். ஆனால் அவர்கள் தமிழ் கற்று தங்கள் குரலில் பேசினார்கள்.தொழிலுக்கும் தமிழ் மொழிக்கும் அவர்கள் தந்த மரியாதை அது. இன்றைய முன்னணிக் கதாநாயகிகளை ஒரு வரி ஒழுங்காகத் தமிழ் பேசச் சொல்லுங்கள் ? பேசவராது. ஏனென்றால் கற்க வேண்டிய ‘அவசியமில்லை. ‘அதனால் சிரத்தை இல்லை. அதனாலேயே, அலுங்காத வலுவில்லாத பாத்திரங்கள். இது ஒரு மாய ஏமாற்று வேலை. பிற மாநிலத்திலிருந்து வரும் மம்முட்டியும் ‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு ‘ என்று சுத்தமாக உச்சரிக்கக் கற்ற பிரகாஷ் ராஜும்

தமிழில் பேச முயலும்போது, கதாநாயகிகளுக்கு அது ஏன் வலியுறுத்தப்படுவதில்லை ? வெறும் பொம்மை ரோலுக்கு ஏன் மெனக்கிடவேண்டும் ? அது சரி. தேசிய அளவில் சிறந்த நடிகை விருதுக்கும்

தமிழ் நாடு மெனக்கிடுவதில்லை. மொழியே பேசத் தெரியாதவர்களுக்கு எப்படி வரும் தேசிய விருது ?

தமிழ் சினிமாக்களுக்கு ஆங்கிலத் தலைப்பு வைத்தால் தமிழுக்கு ஆபத்து என்று அலறுபவர்கள்-

தும்பை விட்டு வால் பிடிப்பவர்கள்.

—-

vaasanthi@hathway.com

Series Navigation