மெல்ல விழுங்கும் மாஃபியாக்கள் (சென்ற வாரத் தொடர்ச்சி)

This entry is part [part not set] of 42 in the series 20040930_Issue

நரேந்திரன்


Ciudad del Este.

தென்னெமரிக்க அமேசான் காடுகளின் நடுவே, பிரேசிலுக்கும், அர்ஜெண்டினாவிற்கும் மத்தியில் நசுங்கிக் கிடக்கும் பராகுவே நாட்டின் பரானா (Parana) நதிக்கரையில் அமைந்திருக்கின்ற, வெளியுலகம் எளிதில் நுழைய இயலாத இச்சிறுநகரமே இன்றைக்கு மாஃபியாக்களின் சொர்க்க பூமியாகக் கருதப்படுகிறது. இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இந்நகரத்தில் போதை மருந்து கடத்துபவர்கள், போதை மருந்திற்கு அடிமையானவர்கள், கொலைகாரர்கள், விபசாரிகள், புரட்சிக்காரர்கள், குண்டர்கள், மோசடிப் பேர்வழிகள், திருடர்கள், நயவஞ்சகர்கள், தீவிரவாதிகள், கொள்ளையர்கள்….என சட்டத்திற்குப் புறம்பானவர்களே அதிகம். ஜோசப் மென்கில் (Josef Mengele) போன்ற நாஜிக்களிலிருந்து, எகிப்திய தீவிராவதி முகமது மொக்லிஸ் (El Said Hassan Ali Mohamed Mukhlis) வரையிலான பல்வேறு நிழலான ஆசாமிகள் ஒளிந்து கொள்ள சியுடாட் நகரத்தையே தேர்ந்தெடுத்தார்கள் என்றால் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு மாதமும் மூன்று டன்களுக்கும் அதிகமான கோகைன் (cocaine) போதை மருந்து சியுடாட் நகரம் வழியாக அமெரிக்க, கனேடிய, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் மற்றும் தென்னாப்பிரிக்காவிற்க்குக் கடத்தப்படுகிறது. போதை மருந்துடன், சகலவிதமான ஆயுதங்கள் மட்டுமல்லாது மருத்துவ ட்ரான்ஸ்ப்ளாண்டுக்குத் தேவையான மனித உறுப்புகளைக் கூட சல்லிசாக வாங்கலாம் சியுடாட்டில். சரியான விலை கொடுத்தால் உங்களின் அடையாளத்தையே மாற்றிக் கொடுப்பதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள் அங்கே.

இன்றைக்கு சியுடாட் ஒரு மிகப் பெரிய கறுப்புச் சந்தை மட்டுமல்லாமல், உலகின் மூன்றாது மிகப் பெரும் பணப் பரிவர்த்தனை நடக்கும் இடம் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஹாங்காங் மற்றும் அமெரிக்காவின் மயாமிக்கு அடுத்தபடியாக சியுடாட்டில்தான் பெரும் பணம் கை மாறுகிறது. ஒவ்வொரு நாளும். போலித் தயாரிப்புப் பொருள்கள், உலகின் எல்லா நாட்டுக் கள்ளப்பணம், போலி பாஸ்போர்ட்கள், திருட்டு வீடியோக்கள், சாஃப்ட்வேர், கார்கள், ஹவாலா என எந்தத் தடங்கலும் இன்றி ஜெகஜோதியாக நடக்கும் இத்தொழில்களில்களின் வாயிலாக, ஒவ்வொரு வருடமும் சுமார் 12 பில்லியன் டாலர்களிலிருந்து 14 பில்லியன் டாலர்கள் வரை புழங்குவதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். பராகுவே நாட்டின் மொத்த GDP வெறும் ஒன்பது பில்லியன் டாலர்கள் மட்டுமே என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

பராகுவே இப்படி என்றால், பசிபிக் பெருங்கடலின் மத்தியில், பறவையிட்ட எச்சம் போன்ற தோற்றத்திலிருக்கும் ‘ந்யூ ‘ நாட்டின் செயல்பாடு (Republic of Niue) இன்னொரு விதமானது. ந்யூ என்ற பெயரில் ஒரு நாடு இருப்பதே நம்மில் பலருக்கு வியப்பான செய்தியாக இருக்கலாம். நியூசிலாந்து நாட்டின் பாதுகாப்பில், அந் நாட்டிற்கு தென்மேற்கே ஏறக்குறைய இரண்டாயிரத்து ஐநூறு மைலுக்கப்பால் இருக்கும் ஒரு சிறிய தீவுதான் ந்யூ.

ந்யூ நாட்டின் மொத்த மக்கள் தொகை 1800. பிரிட்டிஷ் காமென்வெல்த்தில் ஒரு அங்கமான ந்யூவில் பெயரளவுக்கு ஒரு அரசாங்கம் இருக்கிறது. அழகான கடற்கரைகளோ, டூரிஸ்டுகளோ அல்லது வேறு வகையான வருமானமோ இல்லாமல் உலகை விட்டுத் தள்ளி இருந்த ந்யூ, மாஃபியாக்களை காந்தமென கவர்ந்திழுத்ததில் ஒன்றும் ஆச்சரியமில்லை. முதலில் ஜப்பானிய மாஃபியா அங்கு போய் டெலிஃபோன் செக்ஸ் சேவையை ஆரம்பித்தார்கள். பணம் வந்து கொட்ட, டெக்னாலிஜி உதவியுடன் இண்டர்நெட் சூதாட்டம் ஆரம்பமானது. உலகின் ஏதோ ஒரு பாகத்தில் கம்ப்யூட்டர் திரையின் முன்னே அமர்ந்திருந்து சூதாடும் அநாமதேயங்களுக்கு நாமம் சாத்துவதின் மூலம் பணமழை பொழிய ஆரம்பித்தது. ந்யூ அரசாங்கத்திற்கும் அதில் கொஞ்சம் பங்கு போக, அவர்கள் கண்களை மூடிக்கொண்டார்கள்.

1800 பேர் சாப்பிட்டாக வேண்டுமே! வேறே வழி ?

அதையெல்லாம் விட ந்யூ அரசாங்கத்திற்கு வருமானம் வருவது ‘நாம்கே வாஸ்தே ‘ கம்பெனிகளிலிருந்து. ஆயிரம் டாலர் இருந்தால் யார் வேண்டுமானாலும் ந்யூவில் கம்பெனி ஆரம்பிக்கலாம். என்ன பெயர் வேண்டுமானாலும் – Ltd., Inc., GmbH, SA, NV… – வைத்துக் கொள்ளலாம். உலகின் பல நாடுகளிலும் தங்கள் கம்பெனி வியாபாரம் செய்வது போலக் காட்டிக் கொள்ளலாம். உண்மையிலேயே அப்படி எதுவும் இல்லாவிட்டாலும் கூட. எத்தனை முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்ற கணக்கு தேவையில்லை. உள்நாட்டு வரி எதுவும் செலுத்த வேண்டியதில்லை. எந்த நாட்டுடன் எவ்வளவு வியாபாரம் செய்கிறார்கள், எத்தனை லாபம் வந்தது என்ற எதையும் அவர்கள் ந்யூ அரசாங்கத்திற்குத் தெரிவிக்க வேண்டியதில்லை.

இரண்டே இரண்டு விஷயங்களைத் தவிர. மேற்படி கம்பெனிகள் ந்யூ குடிமக்களுடன் எந்த வியாபாரத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது. ந்யூவில் எந்த சொத்துக்களையும் அவர்கள் வாங்கக் கூடாது (என்னே ஒரு எச்சரிக்கை உணர்ச்சி!). ஒரே ஒரு அலுவலகம் மட்டுமே திறந்து கொள்ளலாம்.

1994-இல் தொடங்கி, இம்மாதிரியான பல நூற்றுக் கணக்கான IBC (International Business Corporations) களுக்கு லைசன்ஸ் அளித்திருக்கிறது ந்யூ அரசாங்கம். மாஃபியாக்களுக்கு கொண்டாட்டமாகிப் போய்விட அத்தனை பேரும் ஆளுக்கொரு கம்பெனி திறந்தார்க்ள் ந்யூவில். அத்தனையும் நிழலான வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. பல வகைகளில் கொள்ளை அடித்த ‘கறுப்புப் பணம் ‘ ந்யூவில் முதலீடு செய்யப்படுவது போலக் காட்டப்பட்டு ‘வெள்ளை ‘யாக்கப்பட்டது.

****

மேற்கத்திய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து, தங்களின் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பின் தங்கிய நாடுகளில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் உண்டு. அதே சமயம்,அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா போன்ற வளர்ந்த நாடுகளுக்குள் சட்டபூர்வமாக நுழைவது என்பது அனைவராலும் இயலாத காரியம். என்ன செய்தாகிலும் அல்லது சட்ட விரோதமாகவாவது குடியேறும் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக இந்தியா, சீனா போன்ற மக்கள் நெருக்கம் மிக்க நாடுகளிலிருந்து குடியேறுபவர்கள் தொகைதான் அதிகம்.

பணம் கிடைக்கும் எந்த தொழிலும் மாஃபியாக்களின் பார்வையிலிருந்து தப்புவதில்லை. போதை மருந்து கடத்தலை விட அதிக லாபம் கிடைக்கும் ஒரு தொழில், வளர்ந்த நாடுகளுக்குள் ஆட்களை சட்ட விரோதமாகக் குடியேற்றம் செய்வதுதான் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வெகு காலமாகவில்லை. ஆட்களைக் கொண்டு செல்லும் போது மாட்டிக் கொண்டாலும், போதை மருந்து கடத்துவதை விடவும் மிகக் குறைந்த தண்டனைதான் கிடைக்கும். லாபமோ மல்ட்டி பில்லியன் டாலர்களில். சட்ட விரோதக் குடியேற்றங்களுக்கு உதவி செய்வதன் மூலம், 1990-களின் கடைசியில், 7 பில்லியன் டாலர்கள் புரளுவதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். 2005 அல்லது 2010-ஆம் வருடத்தில் இந்தத் தொகை இரண்டு மடங்காகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய நான்கு மில்லியன் பேர்கள் இம்மாதிரியாகக் கடத்தப்படுகிறார்கள் என்கிறது International Organization for Migration. 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் தொழில் முறை ஆள்கடத்திகளால் அல்லது மாஃபியாக்களால் கடத்தி வரப்படுகிறார்கள் என்கிறது அமெரிக்காவின் Immigration and Naturalization Services. சட்டவிரோதமாகக் குடியேற விரும்பும் நாடுகளில் முதலாவதாக வருவது அமெரிக்கா. அதற்கடுத்தபடியாக கனடா. ஒரு INS தகவலின்படி, எந்த நேரத்திலும் பல மில்லியன் மக்கள் staging post எனப்படும் ஏதாவது ஒரு நாட்டில் தற்காலிகமாகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லையைக் கடப்பதற்குச் சரியான நேரத்தை எதிர் நோக்கியபடி என்கிறது. எந்த ஒரு நேரத்திலும் சீன மாஃபியாக்களின் மேற்பார்வையில், மாஸ்கோவில் மட்டும் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் இவ்வாறு காத்திருக்கிறார்கள், ரஷ்ய மாஃபியாக்களின் ஆதரவுடன்.

சட்ட விரோதக் குடியேறிகள் தங்கள் சென்றடைய வேண்டிய நாடுகளை அடைவதற்குள் படும்பாடு சொல்லி மாளாது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற பாகுபாடில்லாமல் ஆடு, மாடுகளைப் போல ஏதாவது ஒரு கப்பலின் கீழ்த்தளத்தில், கண்டெய்னர்களில் அடைக்கப்பட்டு, மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுகிறார்கள். கடினமான பயணத்தைத் தாங்காமல் வழியிலேயே இறந்து போகிறவர்கள் அதிகம். தாங்கள் செல்ல வேண்டிய நாட்டிற்கு சென்ற பிறகு, பயணத்திற்குத் தேவையான பணத்தைக் கொடுக்க இயலாதவர்கள் மாஃபியாக்களின் அடிமைகளைப் போல நடத்தப்படுகின்றனர். கடனை அடைக்கும் வரை sweat shopகளிலும், விபச்சார விடுதிகளிலும் அவல வாழ்க்கை வாழ்கிறார்கள்.

மல்ட்டி நேஷனல் கார்ப்பொரேஷன்களைப் போல இயங்கும் மாஃபியாக்களைக் கட்டுப்படுத்த இயலாமல் பெரும்பாலான நாடுகள் தவிக்கின்றன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாஃபியாக்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு சங்கிலித் தொடர்களைப் போலச் செயல்படுகிறார்கள்.

உதாரணமாக, ஆசிய கிரிமினல்கள் ஹெராயினை கனடாவிற்குள் இறக்குமதி செய்கிறார்கள். கைமாறி இத்தாலிய கிரிமினல்களின் கைகளுக்குப் போகும் ஹெராயின் பேக்கரி ட்ரக்குகளில் நியூயார்க்கிற்கு கொண்டுவரப்படுகிறது. இத்தாலியர்கள் ஹெராயினை போர்ட்டோ-ரிக்கோவைச் சேர்ந்த கிரிமினல்களிடம் ஒப்படைக்கப்பட்டு நியூயார்க்கின் தெருக்களில் விற்கப்படுகிறது. இந்த உதாரணம் ஆயுதங்களும், மற்ற அழிவுச் சாதனங்களுக்கும் பொருந்தும். மாஃபியாக்களிடமிருந்து தீவிரவாதிகளுக்கு அல்லது சர்வாதிகாரிகளுக்கு என்பதைத் தவிர வேறு வித்தியாசம் ஒன்றுமில்லை.

****

நன்றி : The Merger by Jefferey Robinson

narenthiranps@yahoo.com

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்

மெல்ல விழுங்கும் மாஃபியாக்கள்

This entry is part [part not set] of 39 in the series 20040923_Issue

நரேந்திரன்.


சமீபத்தில் படித்தவற்றில் Jeffery Robinson என்பவர் எழுதிய The Merger என்னைக் கவர்ந்த ஒன்று. கொஞ்சம் information overdose அதிகம் இருந்தாலும், இண்டர்நேஷனல் மாஃபியாக்களைப் பற்றியும், அவர்கள் இயங்கும் விதம் பற்றியும் மிகக் கவனமாக அதேசமயம் சுவாரசியம் குறையாமல் எழுதப்பட்ட புத்தகம் இது. புத்தகம் எழுத அமெரிக்க எழுத்தாளர்கள் எடுத்துக் கொள்ளும் சிரத்தையும், உழைப்பும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. The Merger-லும் அந்த உழைப்பு தெரிகிறது.

குளோபல் எகானமி பற்றி ஆதரவு/எதிர்ப்பு அணிகள் தங்களுக்குள் மல்லுக்கட்டி, பல்லுடைத்து வரும் வேளையில், சத்தமில்லாமல் குளோபல் எகானமி சித்தாந்தத்தை இண்டர்நேஷனல் மாஃபியா தள்ளிக் கொண்டு போய்விட்டது என்கிறார் ஜெஃப்ரி. அவரின் கூற்றுப்படி, மாஃபியாக்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு செய்யும் சித்துவேலைகளால் பாதிக்கப்படாத இடமே இந்தப் பூவுலகில் இல்லை எனும்படிக்கு அங்கிங்கெனாதபடி எங்கும் மாஃபியா மயம். மூன்றாம் உலகநாடுகள் சிலவற்றின் அரசாங்கங்களை ஆக்க அல்லது அழிக்கும் வல்லமை பொருந்தியவையாக மாறிவிட்டன மாஃபியாக்கள் இன்றைக்கு என அறிகையில் ‘இது எங்கு போய் முடியுமோ ? ‘ என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. தென்னமெரிக்க நாடுகளின் பல அரசுகள் மாஃபியாகளை எதிர்த்து ஒன்றுமே செய்ய இயலானவையாக இருக்கின்றன அல்லது மாஃபியாக்களாலேயே ஆளப்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

மனிதர்கள், குதிரைகளை விட வேகமாக ஒடும் இயந்திரங்களைச் செய்வதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகின. இரயில் வண்டிகளை விட வேகமாக ஓடும் இயந்திரங்களைக் கண்டுபிடிக்க நூறு வருடங்களுக்கும் குறைவான வருடங்களே ஆகியது. அங்கிருந்து, சப்தத்தை விட வேகமாக நகரும் கருவிகளைக் கண்டுபிடிக்க இருபது அல்லது முப்பது வருடங்களே பிடித்தது எனலாம்.

இன்றைக்கு சாட்டிலைட்டுகளும், ஃபாக்ஸ், செல்ஃபோன், இண்டர்நெட் இணைப்புகள், இ-மெயில் போன்றவை நமது குரலையும், படங்களையும், நமது சிந்தனைகளையும், பணத்தையும் இன்னும் பலவற்றையும் ஒரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அனுப்பி வைக்க ஒரு சில நொடிகளே போதுமானதாக இருக்கிறது. உலகம் ஒரு சிறிய கம்ப்யூட்டர் மானிட்டருக்குள் அடங்கி, மனிதர்களால் உருவாக்கப் பட்ட செயற்கை உலக எல்லைகளைக் காணாமற் போகச் செய்து விட்டது டெக்னாலஜி. இந்த நூற்றாண்டு முடிவதற்குள் ஒரு நாட்டின் எல்லை என்பது கேலிக்குரியதாக மாறிப் போகலாம். சென்று போன வரலாற்றைப் பற்றிச் சொல்வதற்காகவோ அல்லது வெறும் அடையாளக் குறியீடாகவோ உலக எல்லைகள் மாறிவிடும் சாத்தியம் அதிகம். இண்டர் நேஷனல் கிரிமினல்கள் எனப்படும் transnational organized criminal-களினால் அந்த எல்லைகள் ஏற்கனவே தகர்க்கப்பட்டு விட்டது என்பதற்குப் பலமான பல ஆதாரங்களை எடுத்து வைக்கிறார் ஜெஃப்ரி.

ஜப்பனிய யகூசா, சீன ட்ரையாட்ஸ், வலிமைவாய்ந்த தென்னமெரிக்க டிரக் கார்டெல்கள், இத்தாலிய மாஃபியாக்கள், ரஷ்ய, நைஜீரிய மாஃபியாக்கள், ஹிஸ்புல்லா தீவிரவாதிகள்…. என அவர்களின் உலகம் பல்கிப் பரந்து வளர்ந்திருக்கிறது.

உலகில் கோகைன் எனப்படும் போதைப் பொருள் ஏற்றுமதி செய்யுவதில் இரண்டாவது இடத்தில் இருக்கின்றன இலத்தீன் அமெரிக்க நாடுகள். இது கொலம்பியா நாட்டின் மொத்த GDPயில் 8 சதவீதம். ஏறக்குறைய ஐந்து இலட்சம் பேர் இந்த போதை மருந்து தயாரித்துக் கடத்தும் வேலையில் இருக்கிறார்கள்.

மிகவும் அச்சமளிக்கும் ஒரு விஷயம், மாஃபியாக்களுக்கும் தீவிரவாதிகளுக்குமான தொடர்பு. ஆந்த்ராக்ஸிலிருந்து அணுகுண்டு வரை எல்லா ஆயுதங்களும் சர்வ சாதாரணமாக மாஃபியாக்களினால் விற்கப்படுகிறது. 911க்கு பிறகு கிரேக்க கிரிமினல்கள் ஏறக்குறைய ஐந்து டன் கதிர்வீச்சுள்ள ஸிர்க்கோனியத்தை (zirconium) கடத்தி வந்து நியூர்க்கில் வைத்திருந்ததைக் கண்டுபிடித்தார்கள். ஸிர்க்கோனியம் அணுகுண்டு தயாரிக்கும் ரியாக்டர்களுக்குத் தேவையானதொரு வேதிப்பொருள். அதனுடன் சேர்ந்து புளூட்டோனியமும் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனார்கள் அமெரிக்கர்கள்.

மாஃபியாக்களின் பணபலத்தைக் கண்டு நடுங்காத உலக நாடுகளே இல்லை. 1995-இல் ஜப்பானின் டோக்கியோ நகரத்து ரயில் சப்-வேயில் நடந்த விஷவாயுத் தாக்குதல் உங்களுக்கு நினைவிருக்கலாம். அவும்-ஸ்ஷின்ரிகோ (Aum-Shinrikyo) என்ற அமைப்பு நடத்திய அந்தத் தாக்குதலில் பனிரெண்டு பேருக்கும் மேலாக மரித்துப் போனார்கள். மேலும் ஐந்தாயிரம் பேருக்கு விஷ வாயுவினால் பாதிக்கப் பட்டார்கள். பிற்பாடு நடத்திய விசாரனையில் அந்த அமைப்பிற்குச் சொந்தமான ஏறக்குறைய ஒரு பில்லியல் டாலர்கள் ரகசிய ஸ்விஸ் வங்கிக் கணக்கில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இன்னும் ஏராளமான தங்கக் கட்டிகள், பணம், சொத்துக்கள் அவர்களுக்கு இருந்தது. டோக்கியோவில் மிகப்பெரிய கெமிக்கல் ஃபாக்டரி இருந்ததுவும், ஆஸ்திரேலியாவில் இருந்த அவர்களின் பண்ணையில் ஆடுகளுக்கு விஷவாயு செலுத்தி சோதனை செய்ததும் தெரியவந்தது. அதைவிட பெரிய ஆச்சரியம், டோக்கியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் சொந்தக்காரர்களாக அவர்கள் இருந்ததுதான்.

சோவியத் யூனியன் சிதறிய பிறகு, வேலை இல்லாமல், வருமானமில்லாமல் வாடிய ரஷ்யர்கள்தான் இன்றைய சூப்பர் மாஃபியாக்கள். இன்றைக்கு ரஷ்யா ஒரு முழுமையான மாஃபியா நாடு. அங்கு அரசாங்கம் நடப்பது பெயரளவிற்குதான். 40 சதவீதத்திற்கும் மேலான தனியார் தொழிற்சாலைகளூம், 60 சதவீத அரசாங்கத் தொழிற்சாலைகளும், 90 சதவீத வங்கிகளும் மாஃபியாவின் கையில் இருக்கின்றன. கறுப்புச் சந்தையில் அவர்கள் சம்பாதிக்கும் பணம் ஏறக்குறைய 18 பில்லியன் டாலர்கள். வருடா வருடம் அது கூடிக் கொண்டே போகிறது.அவர்களின்றி ஒரு அணுவும் அசையாது அங்கே. குவிந்து கிடக்கும் அணு விஞ்ஞானிகளையும், கணிப்பொறி நிபுணர்களையும், கே.ஜி.பியின் மிச்ச மீதங்களையும் உலகம் அச்சத்துடனும், கவலையுடனும் பார்த்துக் கொண்டிருக்கிறது.

****

அமெரிக்காவில் ஒவ்வொரு நாற்பந்தைந்து செகண்டிற்கும் ஒரு அடையாளத் திருட்டு நடக்கிறது என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. அடையாளத் திருட்டு என்பது எந்தவிதமாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்களின் சோஷியல் செக்யூரிட்டி எண்ணாக இருக்கலாம் அல்லது வங்கிக் கணக்கு பற்றிய விவரங்களாக இருக்கலாம் அல்லது உங்களின் பாஸ்போர்ட் போன்றவையாகக் கூட இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அடையாளத் திருட்டின் முக்கிய நோக்கம் முறையற்ற வகையில் பணம் சம்பாதிப்பது.

சில மாஃபியா ஸ்டைல் சுருட்டல்கள் மிக ஆச்சரியமானவை. ஜெஃப்ரியின் ஆய்வின்படி, மாஃபியா தொடர்புள்ள, அமெரிக்காவில் புதிதாகக் குடியேறிய ஒவ்வொரு பிறநாட்டவரும் ஒவ்வொரு விதமான மோசடிகளில் ஈடுபடுகிறார்கள். உதாரணத்திற்கு கிரெடிட் கார்டு மோசடி எப்படி நடக்கிறது என்பதைப் பார்ப்போம்,

கோவிந்தா அமெரிக்காவில் வசிப்பவர். நல்ல உத்தியோகத்திலிருப்பவர். எதையும் அளந்து செலவு செய்யும் ஆசாமி. மாதா மாதம் கிரெடிட் கார்ட் பில்லைத் தவறாமல் கட்டுகிற அவரின் மேல் நம்பிக்கை கொண்டு $20,000 டாலர் வரை வாங்கும் சக்தியுள்ள ஒரு கிரெடிட் அட்டையை அவருக்கு அளித்திருக்கிறது அவரின் வங்கி. அப்படியாகப் பட்ட கோவிந்தா ஒருநாள் மதுக்கடைக்குப் போகிறார். மனைவியின் பிறந்த நாளைக் கொண்டாட ஒயின் வாங்கப் போகிறார் என்று வைத்துக் கொள்வோமே.

தேவையான ஒயின் பாட்டில்களை வாங்கிக் கொண்டு, கவுண்டரில் இருக்கும் வியட்நாமியனிடம் தன்னுடைய கிரெடிட் கார்டைத் தருகிறார். வியட்நாமியன் கிரெடிட் கார்ட் ரீடரின் மேல் அதை உரசுகிறான். ஏதோ சத்தம் கேட்டு அந்தப் பக்கம் திரும்பும் ஒரு நொடியில், திருவாளர் கோவிந்தாவின் கிரெடிட் கார் மீண்டுமொருமுறை உரசப்படுகிறது. இப்போது உரசியது கவுண்டரின் கீழ் வைக்கப்பட்டிருக்கும் மற்றொரு கார்ட் ரீடரில். இதையறியாத நமது கோவிந்தா ரசீதில் கையெழுத்திட்டு விட்டு வீட்டுக்குப் போய், டின்னர் சாப்பிட்டு உறங்கப் போவதற்குள் நெற்றி நிறைய நாமத்தை பட்டையாகக் குழப்பி சாத்தியிருப்பார்கள். அடுத்த மாதம் பில் வரும் வரை அல்லது வேறொரு இடத்தில் கிரெடிட் கார்டைக் கொடுத்து பேந்தப் பேந்த விழிக்கும் வரை கோவிந்தாவின் கிரெடிட் கார்ட் உண்மையிலேயே கோவிந்தா ஆனதை அறிய வாய்ப்பில்லை.

இதற்கிடையில், அவரின் கிரெடிட் கார்ட் தகவல்கள் ஹாங்காங்கிற்கு இ-மெயில் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டிருக்கும். அங்கிருந்து, மேற்கூறிய அதே வழியில் சேகரிக்கப்பட்ட பல நூறு கிரெடிட் கார்டுகளின் தகவல்களுடன் சேர்ந்து மலேஷியாவிற்கு அனுப்பி வைக்கப்படும். மீண்டும் இ-மெயில் மூலமாக.

அடுத்த இருபத்து நான்கு மணிநேரத்திற்குள்ளாக, புத்தம் புதிய கிரெடிட் கார்ட்கள் – நமது கோவிந்தாவின் கார்டுடன் சேர்த்து – மிக நூதனமான முறையில் இத்தாலிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும். பத்து பாக்கெட்கள் கொண்ட ஒரு சிகரெட் பெட்டியின் (carton) கண்ணாடித்தாள் மிகக் கவனத்துடன் கிழிக்கப்பட்டு, அதிலிருந்து ஒரு சிகரெட் பெட்டி மட்டும் வெளியே எடுக்கப்பட்டு, உள்ளிருப்பவை வெளியே கொட்டப்படுகிறது. காலியான சிகரெட் பெட்டிக்குள் கிரெடிட் கார்டுகள் அடுக்கப்பட்டு, கார்ட்டன் அலுங்காமல் மீண்டும் சீல் செய்யப்படுகிறது. அன்றைய பிற்பகலில், கோலாலம்பூர் சுபாங் இண்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் இருக்கும் டியூட்டி ஃப்ரீ கடையில் விஸ்கி பாட்டில் ஒன்றை வாங்குகிறார் ஒரு ஆசாமி. ஒரு ப்ளாஸ்டிக் கவரில் வைத்துத்தரப்படும் விஸ்கி பாட்டிலுடன் மேற்கூறிய சிகரெட் பாக்கெட்டும் வைக்கப்படுகிறது. அடுத்த ஃபிளைட்டில் இத்தாலிக்கும் போகும் அந்த ஆசாமி, இத்தாலிய கஸ்டம்சைக் கடந்து அந்த டூயூட்டி ஃப்ரீ கவரைக் கைவீசி எடுத்துக் கொண்டு போகிறார்.

அவ்வாறு எடுத்து வரப்பட்ட கிரெடிட் கார்டுகள் ரஷ்ய மாஃபியாக்களுக்கு சகாய விலையில் விற்கப்படுகிறது. பாரிஸ், ரோம் போன்ற நாடுகளில் அந்தக் கார்டுகள் உபயோகிக்கப்பட்டு நகைகளும், வாட்ச்சுகளும், கைப்பைகளும் இன்ன பிற விலையுயர்ந்த சாமான்களும் ரஷ்யாவின் உயர்தர மால்களுக்கும், டிபார்மெண்டல் ஸ்டோர்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இப்படித் திருடப்பட்ட கிரெடிட் கார்டுகளைத் தேடி, தண்டைனை வாங்கிக் கொடுப்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதால் பெரும்பாலான – விசா, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், மாஸ்டர் கார்ட் – போன்றவை அதிகம் மெனக்கடுவதில்லை. கோவிந்தாவிற்கு வேறொரு புதிய எண்ணில் இன்னொரு கார்டை அனுப்பி வைத்துவிட்டு, வராக்கடனில் எழுதி அப்படியே மறந்து போகிறார்கள். மாஃபியாக்களின் துணிச்சலுக்கு இதுவும் ஒரு காரணம்.

எதிர்வரும் காலம் உலகிற்கு மிகவும் சோதனையானது.

நேரம் கிடைக்கையில் மேலும் இதுபற்றி எழுதுகிறேன்.

—-

narenthiranps@yahoo.com

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்