அமரத்துவம் அடைந்த இரு வாழ்வுகள்

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue

அரவிந்தன் நீலகண்டன்


அண்மையில் காலமான பாண்டுரங்க சாஸ்திரி அதவலே மற்றும் கேவல ராம மல்கானி ஆகியோரது இழப்புகள் பாரதிய சமுதாயத்திற்கு ஈடு செய்யமுடியாதவை. இருவருமே 80 வயது தாண்டியவர்கள். இருவருமே முழுமையான வாழ்க்கை வாழ்நதவர்கள். சேவைக்கு தங்களை அர்ப்பணித்தவர்கள்.

1920 இல் மகாராஷ்ட்ர அந்தண குடும்பத்தில் பிறந்த பாண்டுரங்க சாஸ்திரி அதவலே, சிறுவயதிலேயே ஹிந்து தர்ம சாஸ்திரங்களில் புலமை பெற்று விளங்கினார். நவீன சமுதாயத்தின் சீர்திருத்த தேவைகளுக்கான ஆற்றலையும் வழிகாட்டலையும் பகவத் கீதையிலிருந்து பெறலாம் என்பதே அவர் நம்பிக்கையாயிற்று. 1957 இல் அவர் ஸ்வாத்யாய எனும் சமூக சேவை அமைப்பினை தொடக்கினார். 10,000 க்கும் மேற்பட்ட வனவாசி கிராமங்களில் இவ்வமைப்பு செய்து வரும் சேவை பணி மகத்தானது. 1997 இல் மகாத்மா காந்தி அமைதி மையத்தின் ராஜிவ் வோரா இவ்வமைப்பின் சேவைகளை கண்டு வியந்து கூறினார், ‘ மகாத்மாவுக்கு பின் ஆன்மிகத்தை சமுதாய புனர்நிர்மாண பணிக்கு இத்தனை சிறப்பாக யாரும் பயன்படுத்தவில்லை. ‘

ராஜ்காட் , ஜாம்நகர் ஆகிய இடங்களில் ஸ்வாத்யாய அமைப்பினரின் நீர் சேகரிப்பு திட்டங்கள் பெரும்பலனை அளித்துள்ளன. பல இடங்களில் ஸ்வாத்யாய அமைப்பினர் மதமாற்றங்களால் பிளவுபட்ட வனவாசி சமுதாயங்களை மீண்டும் இணைத்துள்ளனர். இன்று வடகிழக்கில் பல வனவாசி சுயபண்பாட்டு இயக்கங்கள் ஸ்வாத்யாய வினை தன் இலட்சிய அமைப்பாக கொண்டுள்ளன. டெல்லியைச் சார்ந்த முன்னேறும் சமுதாய ஆராய்ச்சி மையத்தை (Centre for the study of developing societies) சார்ந்த ஆய்வாளரான ஸ்ரீவஸ்தவா கூறுகிறார், ‘ஸ்வாத்யாய ஒரு இயக்கம் மட்டுமல்ல ஒரு உருவகமும் கூட. அது சமுதாய சீர்கேடுகளை முதலாக்கி ஒர் குறிப்பிட்ட நம்பிக்கையை சமுதாய சேவையுடன் திணிக்க முயல்வதல்ல.மாறாக மாற்றத்தையும் சமுதாய முன்னேற்றத்தையும் சமுதாய மதிப்பீடுகள் சார்ந்தே உருவாக்குகிறது. ‘ ரோமில் நடைபெற்ற ஐக்கியநாடுகள் ஆய்வரங்கு 1986 இல் ஸ்வாத்யாய வினை ‘சமூக முன்னேற்றத்திற்கான இயக்க செயல்பாட்டிற்கு மிகச்சிறந்த உதாரணம் ‘ என அறிவித்தது.

‘தாதாஜி ‘ அதவலேயின் சேவையின் பயனாக கடைநிலைவாழ் மக்களுள் 20,000,000 பேர் பயனடைந்துள்ளனர். வெளிநாட்டு நன்கொடைகள் ஏதுமின்றி இந்தியரின் கரங்களாலும் நன்கொடைகளாலும் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு ‘தாதாஜி ‘ நம் நாட்டிற்கு அளித்திருக்கும் பெரும் நன்கொடை. தேசத்தின் மீதும் தேச மக்களின் மீதும் முடிவிலா அன்பு அவர்களுக்கு சேவை செய்ய ஆன்ம பலம் அளிக்கும் பகவத் கீதை ஆகியவையே காலமான பாண்டுரங்க சாஸ்திரி அதவலே, மண்ணில் நல்ல வண்ணம் நம் வாழ்வை வாழ நமக்கு காட்டும் பெரும் பொக்கிஷங்கள்

திரு.மல்கானி அவர்கள் பிரிவினையால் சிந்திலிருந்து அகதியாக வந்தவர். ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தில் இளம்வயது முதலே ஈடுபட்டவர். அவர் தீனதயாள் ஆய்வு மையத்தின் இதழான ‘மந்தன் ‘ பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றியபோது பல முக்கிய விவாதங்களை தொடக்கி வைத்தார். அத்துடன் ஒரு விவாதத்தின் அனைத்து பக்கங்களையும் முழுமையாக வெளிக்கொணர்வதில் அவர் எடுத்துக்கொண்ட சிரத்தை அபரிமிதமானது. நானாஜி தேஷ்முக், மெளலானா வாகியூதீன் கான், இ.எம்.எஸ் நம்பூதிரி பாட், குல்தீப் நய்யார், ஐ.கே. குஜ்ரால் ஆகியவர்களது கருத்துக்களை ஒரே விவாதமேடையில் கொண்டுவந்தவர் அவர். ஹிந்துத்வத்தினை தன் வாழ்வின் தத்துவமாக கொண்டவர் அவர். அவர் மந்தன் பத்திரிகையில் ஆசிரியராக இருக்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்று அவரது நேர்மையினை காட்டும். ‘அக்டோபர் புரட்சி – உலக கலாச்சாரத்தின் மீது அதன் தாக்கம் ‘ (இக்கட்டுரையாளனை பொறுத்தவரை அது கலகம்தான் புரட்சி அல்ல) குறித்து ஆய்வரங்கம் ஒன்றை நடத்தி அதில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளையும் விவாதங்களையும் மூன்று இதழ்களாக தீனதயாள் ஆய்வு மையம் வெளியிட்டது. இதில் பங்கு பெறவும், கட்டுரைகள் வாசிக்கவும் அழைக்கப்பட்டவர்களில் ஒருவர் ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட். அவருக்கு அவ்வாய்வரங்கில் வாசிக்கப்படும் பிற கட்டுரைகளின் பிரதியும் அனுப்பிவைக்கப்பட்டது. அதில் மல்கானியின் கட்டுரையும் ஒன்று. ஈ.எம்.எஸ்ஸால் பங்கு பெறமுடியவில்லை. பங்கு பெற்ற மற்ற ‘தோழர்கள் ‘ A.B.பர்தன், சுமத்ரா பானர்ஜி ஆகியோர். இது 1988 இல். எனினும் ஈ.எம்.எஸ், ‘அக்டோபர் புரட்சியும், இந்திய கம்யூனிஸ்ட்களும் ‘ எனும் ஆய்வுக்கட்டுரையை அனுப்பினார். மேலும் மல்கானிக்கு பதிலளிக்கும் வகையில் ‘மல்கானியை மறுத்து: ஒரு மறுப்புக்கட்டுரை ‘ என மற்றொரு கட்டுரையையும் அனுப்பினார். இரண்டுமே முழுமையாக வெளியிடப்பட்டன. பொதுவாக எதிர்ப்பு கட்டுரைகளை இன்றைய இதழ்கள் வெளியிடுவதில் காட்டும் குறுகிய சித்தாந்தம் சார்ந்த வெறியினை மல்கானியால் முழுமையாக ஒதுக்கி எறிய முடிந்தது. மேலும் சிந்துபிரதேசத்தின் சூஃபி மரபுகளில் மிகவும் புலமை உடையவர் மல்கானி. பாகிஸ்தானிய அடக்குமுறையில் பாதிப்படைந்த சிந்து சூஃபி அறிஞரான ஷா போன்றவர்களுக்கு என்றுமே ஆதரவுக்கரம் நீட்டியவர் மல்கானி. பல இஸ்லாமிய அறிஞர்கள் அவரது இஸ்லாமிய இறையியல் புலமையை கண்டு ஆச்சரியமடைந்துள்ளனர். ஹிந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக மல்கானி அவர்கள் உருவாக்கிய திட்ட கட்டுரையை குறித்து அஷ்கரலி இீஞ்சினியர், ‘மிகுந்த சமச்சீர் தன்மையுடன் ஒற்றுமைக்கான அடித்தளத்தை அமைப்பதாக உள்ளது ‘ என குறிப்பிட்டார். ஹிந்து தேசியவாதியும் சிந்தனையாளருமான சீதாராம் கோயல் மல்கானியின் இந்த ஹிந்து-முஸ்லீம் உரையாடலில் பெருமளவு நம்பிக்கை கொள்ளவில்லை. வெளிப்படையாகவே விமர்சிக்கவும் செய்தார். (அடியேனுக்கும் பெருமளவு நம்பிக்கை இல்லை). ஆயினும் மல்கானி அவர்கள் தன் பாதையில் தெளிவாகவே இருந்தார்.ஒரு முழுமையான ஹிந்துத்வ வாழ்க்கை வாழ்ந்த இம்மாமனிதரின் வாழ்க்கை அனைத்து பாரதியர்களுக்கும் கலங்கரை விளக்கமாக ஒளி அளிப்பது.

==========

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்