சாலிவாகனனின் கரம் – பண்பாட்டு பன்மையையும் உயிரிவள பன்மையையும் காத்தல்-2

This entry is part [part not set] of 49 in the series 20030724_Issue

அரவிந்தன் நீலகண்டன்


சாலி வாகன மன்னன் குறித்து ஒரு கதை வழங்கப்படுகிறது. அம்மன்னனின் அரசி அவனது சமஸ்கிருத அறிவின்மையைக் கேலி செய்ததால், மிகவும் மன வருத்தமடைந்த அம்மன்னன் தன் அரசவையில் மிகக் குறைந்த காலகட்டத்தில் தன்னை தவறற்ற சமஸ்கிருதத்தில் பேச செய்ய கோரிக்கை விடுத்தான். அரசவை தலைமை பண்டிதர் அது இயலாத காரியமென்றும், அவ்வாறு ஒருவர் அரசனை குறைந்த காலகட்டத்தில் சமஸ்கிருதம் பேச செய்தால் தான் சமஸ்கிருதத்தில் பேசுவதையே நிறுத்திவிடுவதாகவும் சூளுரைத்தார். அங்கு வந்த ஒரு சமஸ்கிருத பண்டிதரால் அச்சூளுரை ஏற்றுக்கொள்ளப் பட்டது. குறைந்த காலகட்டத்தில் மன்னனை தவறற்ற சமஸ்கிருதத்தில் பேச செய்தார் அந்த பண்டிதர். அரசவையின் தலைமை கவிஞர் எவரிடமும் எதுவும் சொல்லாமல் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். காலம் உருண்டோடிற்று. அரசனது சமையலறை பணியாளர்களுக்கு பெரும் பிரச்சனை. சமையலுக்கு வரும் வன விலங்குகள் மிகவும் மெலிந்து காணப்பட்டன. இதற்கான காரணத்தை விசாரிக்கையில், கானகம் நடுவே ஒரு ஆசிரமத்தில் ஒரு முனிவர் மிகவும் அழகிய பாடல்களை பாடுவதாகவும், விலங்குகள் அப்பாடல்களை கேட்டு ஊன் மறந்து அங்கேயே லயித்து இருந்து விடுவதாகவும் எனவே அவை மெலிந்து விட்டதாகவும் கூறப்பட்டது. அத்தகைய முனிவரை காண மன்னன் ஆர்வம் கொண்டு செல்கின்றான். அங்கே விலங்குகள் புடை சூழ ஒரு முனிவர். அவர் எதிரே ஒரு பீடத்தில் நெருப்பு. அவர் அழகிய பிராகிருத கவிதைகளை பாடி பின்னர் அவற்றை நெருப்பில் போடுகிறார். மன்னனால் தாங்க முடியவில்லை. ஓடிச்சென்று அவர் கரத்தை பிடித்து தடுத்து நிறுத்துகிறான். அம்முனிவர் அவனது பழைய அரசவை தலைமை பண்டிதர். இவ்வாறுதான் நமக்கு பிராகிருத இலக்கியத்தின் முதல் பழம் தொகுப்பு கிட்டியதாக கூறப்படுகிறது.இது கர்ண பரம்பரை கதைதான். இதன் வரலாற்று உண்மை கேள்விக்குறிதான். ஆனால்…

‘இந்தியாவை எடுத்துக் கொள்ளுங்கள். மின்னணு ஊடகம் வந்த பின் ஹிந்தி மூலை முடுக்குகளிலெல்லாம் பரவ ஆரம்பித்து விட்டது. ஏனெனில் மக்கள் மிகத் தரமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை காண விரும்புகின்றனர்….மந்தாரிய சைனம் சீனா வெங்கும் பரவுகிறது. எங்கள் தொலைக்காட்சி பின்னலமைப்புகள் எனவே வளமையை கூட்டுவதோடு மட்டுமல்ல (இப்பிரதேசங்களில்) ஒழுங்கினையும் இறுதியாக அமைதியையும் கொணர்கிறது. ‘-ரூபர்ட் மொர்டாக் (ஸ்டார் நெட்வொர்க் அதிபர்)

ஜனவரி 6, 1996 இல் ‘நியூ சயிண்டிஸ்ட் ‘ இதழில் வெளியான ‘ஒரு தாய் மொழியின் மரணம் ‘ எனும் கட்டுரையில் உலக மொழிகளில் மூன்றில் ஒரு பங்கு அழிவினை எதிர்நோக்கியுள்ளதாக கெயில் வைனஸ் குறிப்பிடுகிறார். மொழிகளின் மரணம் என்பது மிக வேகமாக நடைபெறுவது காலனிய தேசங்களில் தான். காலனிய ஆதிக்கத்தின் பொருளாதார தாக்கம் புள்ளிவிவரப்படுத்தப் பட்ட அளவுக்கு கலாச்சார அழிப்பு புள்ளிவிவரப்படுத்தவோ அல்லது விவரிக்கப்படுத்தவோ படவில்லை. காலனிய எஜமானர்களின் பண்பாடுகளையும் அவர்களின் சித்தாந்தங்களையும் காலனி யாதிக்கத்திற்கு உட்படுத்தப்பட்ட தேசங்கள் ஏற்றெடுப்பதென்பது ஏறக்குறைய கேள்விக்குள்ளாக்கப்படாத ஏற்றுக்கொள்ளத் தக்க ஒரு நிகழ்வாகவே உள்ளது. மைக்கேல் க்ராஸ் எனும் மொழியியலாளர் அலாஸ்காவின் 20 மொழிகளில் 2 மொழிகளே இன்னமும் கற்கப்பட்டு ஜீவித்திருப்பதாக கூறுகிறார். பாரதம் போன்ற பன்னெடுங்காலமாக பன்மை பேணும் மரபு கொண்ட ஒரு தேசத்தில் மொழி என்பது தனி இருப்பு அல்ல. சமயம், பண்பாடு, மொழி ஆகிய அனைத்தும் பின்னி பிணைந்ததொரு உயிர்க்கோளமாக அவை ஜீவித்திருப்பதை நாம் நம் நாட்டில் மிகச் சாதாரணமாக காணலாம். இந்த இழைகளில் ஏதாவது ஒன்றை முழுமையாக நீக்க ஒரு சக்தி முயலுமேயானால் அதன் விளைவுகள் அச்சமூகத்தில் மிகக் கடுமையான மானுட சோகமாக வெடித்தெழக்கூடும்.

ஃ திரிபுராவின் ஜாமாத்தியாக்களைப் போல,

ஃ மிஸோரமின் ரியாங்குகளைப் போல,

ஃ காஷ்மீர பண்டிட்களைப் போல,

ஃ பாகிஸ்தானின் சிந்திகளைப் போல,

ஃ இலங்கையின் தமிழர்களைப் போல,

ஃ பங்களாதேஷ் சக்மாக்களைப் போல,

ஃ திபெத்தின் பெளத்தர்களைப் போல…

மேற்கூறிய அனைத்துமே கடுமையான மானுட சோகங்களை உள்ளடக்கிய நிகழ்வுகள். இந்த நூற்றாண்டில் நம் கண் முன்னும் கட்டப்பட்ட வாய்கள் மற்றும் மனச்சாட்சிகளிம் முன்னும் நடைபெறும் இவை அனைத்துமே பல ஒற்றுமைகள் கொண்ட நிகழ்வுகள். இவை அனைத்திலுமே தம் மண் சார்ந்த மரபுகளின் மீது வேரூன்றி காலம் காலமாக வாழ்ந்த மக்கள் அந்த காரணத்துக்காகவே அம்மண்ணிலிருந்து அகதிகளாக வெளியேற்றப் பட்டார்கள். படுகொலை செய்யப்பட்டார்கள்; அவர்கள் குழந்தைகள் குறிவைத்து தாக்கப்பட்டார்கள். பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப் பட்டார்கள்; இக்கொடுமைகளுக்கு பின் பரவுதன்மை கொண்ட ஒரு காலனிய சித்தாந்தம் (இஸ்லாம் அல்லது கிறிஸ்தவம் அல்லது மார்க்சியம்) அல்லது அதனால உருவாக்கப்பட்ட இனவாதம் செயல்பட்டு வந்தது.மேற்கத்திய அறிதல் மூலமே தன் சமுதாயத்தை பார்க்கும் சொந்த உறவின சமுதாய அறிவுஜீவிகளால் அவர்கள் புறக்கணிக்கப் பட்டார்கள். உதாரணமாக காஷ்மீர் பண்டிதர்களை எடுத்துக் கொள்வோம். மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் இவர்கள் அவுரங்கசீப்பால் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட போது பண்பாட்டு பன்மை காப்பிற்காக பஞ்சாப்பினைச் சார்ந்த குரு தேஜ் பகதூர் தன் சிரசினை அளித்து பண்பாட்டு பன்மையினைக் காத்தார்( ‘என் தலைதனை தந்தேன் – தர்மத்தை அல்ல ‘). கடந்த 25 வருடங்களாக இத்தியாகம் நம் ‘மதச்சார்பற்ற ‘ பள்ளி பாடத்திட்டத்தில் கொச்சைப்படுத்தப் பட்டது. இதற்கும் இன்று காஷ்மீரி பண்டிட்களின் கதியற்ற நிலையை மனச்சாட்சியற்று மவுனித்து அவர்களை ‘அகதிகள் ‘ (refugees) என்று கூற கூறாமல் ‘புலம் பெயர்ந்தவர்கள் ‘ (migrants -புலம் பெயரும் விலங்குகள் போல) என கூறும் நமது மதச்சார்பற்ற அறிவுஜீவித்தனத்துக்கும் ஒரு தொடர்பு இருக்கும் என்றே தோன்றுகிறது. வனவாசி வழிபாட்டுரிமைகளை பாதுகாக்கும் தோனிபொலோ ஆகிய வனவாசி ஆன்மிக இயக்கங்கள் நம் தேச வடகிழக்கின் இயற்கை வள இறையியல் வளத்தை காக்க, பெரும் பண ஆற்றல் மிக்க ஆதிக்க சக்திகளை எதிர்த்து போராடுகின்றன. இப்பன்மை பேணும் வனவாசி இயக்கங்களுக்கு எதிராக அவற்றிற்கு உதவும் பாரதிய அமைப்புகளுக்கு எதிராக அவற்றிற்கு கிடைக்கும் அனைத்து உதவிகளையும் தடை செய்யும் எதிர்ப்பியக்க பொய் பிரச்சாரத்தில் ஜிகாதிகளும் கிறிஸ்தவ அடிப்படை அமைப்புகளும் இடதுசாரிகளும் கரமிணைவதை இன்று நாம் காணலாம்.

பண்பாட்டு பன்மை என்பது மொழியியற் பன்மை மற்றும் இறையியற் பன்மை இணைந்தது. இப்பன்மை பேணும் மரபுகளின் இயற்கை குறித்த பார்வையானது ஒற்றை பண்பாட்டு மரபுகளின் இயற்கை குறித்த பார்வையிலிருந்து வேறுபடுகின்றன. எனவே அவை உயிரிபன்மைக்கும் மானுடத்திற்குமான உறவினையும் தீர்மானிக்கின்றன. மொழி வழக்கு பன்மைக்கும் வட்டார உயிரிப்பன்மை பேணல் குறித்த விழிப்புணர்வுக்குமான தொடர்பு குறித்து திரு.தியோடர் பாஸ்கரன் அவர்கள் சில ஆதார கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள். (ஆனால் இக்கட்டுரைத்தொடரின் வாத கதிக்கும் அதன் சித்தாந்த அடிப்படைக்கும் அவருக்கும் எந்த தொடர்போ ஏற்போ இருக்க வேண்டியதில்லை.)

பல தருணங்களில் குறுகிய இனவாதம் மொழித்தனித்துவம் ஆகியவை மிஷினரிகள், மெக்காலேயிஸ்ட்கள் மற்றும் மார்க்ஸிஸ்ட்களால் ‘பன்மை காப்பு ‘ போர்வையில் தூக்கி பிடிக்கப்படுகின்றன. இவை தவிர்க்க இயலா வகையில் இன உணர்வற்ற சமுதாயங்களிடையே இனவாத வெறுப்புணர்வில் முடிவதை காணலாம். அண்மையில் மிஷினரிகள் நிழல் எஜமானர்களாக தோற்றுவித்த திராவிட இன இயக்கங்களும், நேருவிய ஓட்டுவங்கி அரசியல் உருவாக்கிய கன்னட வெறியர்களும் காவேரியின் பெயர் சொல்லி கர்நாடக தமிழர்களுக்கு நரகத்தை உருவாக்கிக் கொண்டிருந்த அதே நேரத்தில் தலைக்காவேரியில் கன்னடர்களும் தமிழர்களும் இணைந்து காவேரியை வழிபட்டதை ‘இந்தியா டுடேயில் ‘ யாரோ ஒரு புகைப்பட நிபுணர் புண்ணியத்தில் காணமுடிந்தது. ‘பகுத்தறிவற்ற மடையர்கள்! ஓடும் நதியை இனவேறுபாடு மறந்து வணங்கும் இன உணர்வற்ற காட்டுமிராண்டி வெங்காயங்கள்! ‘ என்பதெல்லாம் உண்மையாக இருந்தாலும் இருவருக்கும் பொதுவாகவே தம் தெய்வீக அன்னையாக உணரும் அந்த பொதுமை உணர்வின் அடிப்படையில் பிரச்சனை தீர்க்கப்பட்டிருக்க கூடும்.

இஸ்ரேல் தன் ஜீவனை நிச்சயிக்கும் பல பிரச்ச்னைகளுக்கு தீர்வினை மண் சார்ந்த மறைநூலின் துணையோடு பெற்றது. அத்தீர்வுகள் தொழில்நுட்பம் முதல் சமுதாய பிரச்ச்னைகள் வரை. நமக்கு மிகச் செழுமையான மண் சார்ந்த மரபுகள் பல உள்ளன. அவை ஒன்றொடொன்று போட்டியிடுபவை அல்ல, மாறாக ஒன்றோடொன்று உயிர் தொடர்புடையவை. இயைந்து வாழும் வாழவைக்கும் இயல்புடையவை. அதே சமயம் தன்னளவில் பூரணத்துவ அழகுடன் திகழும் உள்ளார்ந்த ஆற்றலுடையவையும் கூட. எனினும் நாம் அவற்றை புறக்கணிக்கிறோம். நதி வழிபாடு எவ்வாறு உற்பத்தி உறவுகளும் இன கூறுகளும் கொண்டு பரிணமித்தது என முதலில் ஒரு மார்க்சிய அறிஞர் எழுதுவார். எனவே அத்தகைய ஒரு குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தி உறவுமுறைகளின் சமுதாய சுரண்டலை நியாயப்படுத்த ஏற்பட்ட ஒரு வழிபாட்டு முறையில், ஒரு பிராம்மண மேட்டுக்குடி சூழ்ச்சியில், நம் சுயமரியாதை உடைய இனம் பங்கேற்கலாமா ? என்பார் மற்றொருவர். ஆக நம்மை நம் மண்ணுடன் இணைக்கும் ஒரு வேரினை திறமையாக வெட்டியாயிற்று. எப்படி ஒரு சமுதாயம் தன்னைத் தானே திறமையுடன் அழித்துக்கொள்ள முடியும் என்பதற்கான சிறந்த உதாரணமாக விளங்குகிறோம் நாம். ‘கங்கையில் புனிதமாய காவேரி ‘ என வைணவ பக்தரால் மிக இயல்பாக ஸ்ரீ ரங்கனை பாடமுடியும். ரோமினும் புனிதமாய வேளாங்கண்ணி என்றோ அல்லது காபாவில் புனிதமாய நாகூர் தர்கா என்ற பாடல்வரிகள் இயல்பாக எழுவதென்பது குதிரைக்கொம்புதான். பரந்தமையும் இறை உணர்வு என்பது பண்பாட்டு பன்மை காப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் பரவுதன்மை கொண்ட சித்தாந்தங்களிலோ பிரமிட் தன்மை கொண்டே இறைமை விளங்குகிறது. சில சமயங்களில் இது ஒரு குறிப்பிட்ட மொழியினை அழித்தொழிப்பதில் மானுட அடிப்படை பண்புகளை கூட விட்டொழித்து செயல்படுகிறது. அல்ஜீரிய சுதேசி மொழிகள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் அராபிய மேன்மை வாதத்திற்காக வன்முறையாக அழிக்கப்படுவதையும், பாகிஸ்தானில் சிந்தி மொழி அழிவுக்கு உட்படுத்தப்படுவதையும் நாம் காணலாம்.

ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழகத்தில் வெடித்து எழுந்த போது ஆங்கிலம் வரவேற்கப்பட்டதை நாம் அறிவோம். ஹிந்தி எதிர்ப்பின் அடியோட்டமாக சமஸ்கிருத வெறுப்பும் இருந்தது. சமஸ்கிருதம் நம் தேசம் முழுவதும் ஒரு பாரத ஒருமை மொழியாக விளங்கிய போதிலும் அதன் விளைவாக எந்த மொழியும் அழியவில்லை. மேட்டுக்குடி மொழியாக சமஸ்கிருதம் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரின் மொழியாகும் போக்கு இன்றியமையாது எழுந்துள்ள போதெல்லாம் அத்தகைய போக்குகளை களைந்து அதே நேரத்தில் சமஸ்கிருதத்தையும் தாய் மொழியையும் வளப்படுத்தும் போக்கே பாரதத்தின் அனைத்து மொழி மரபுகளிலும் உள்ளது. கர்வம் கொண்ட சமஸ்கிருத பண்டிதருக்கு கர்வ பங்கம் செய்து பிராந்திய தாய்மொழி பக்தி இலக்கியத்தை இறைவன் ஏற்றதாக ஏறக்குறைய அனைத்து பாரத மொழிகளிலும் கதைகள் வழங்குவதை காணலாம். இத்தகைய ஆற்றுப்படுத்தல் மூலம் மொழிப்பன்மைக்கு ஊறுபடுத்தாது சமஸ்கிருதமும் பிராந்திய மொழிகளும் பாரதத்தில் வளர்ந்துள்ளன. மாறாக ஆங்கிலம் தன் பரவுதன்மையிலேயே மொழிப்பன்மையை அழிப்பதாக உள்ளது. மார்க் பேகல்ஸ் ஆங்கிலம் பேசப்படும் இடங்களில் 80 முதல் 90 சதவிகித மண் சார்ந்த மொழிகள் அழிக்கப்பட்டு விட்டதாக கூறுகிறார். சமஸ்கிருதம் என்றென்றும் தமிழுக்கு உருவாக்கியிராத, உருவாக்கியிருக்க முடியாத அபாயத்தை ஆங்கிலம் ஏற்படுத்தி யிருப்பதை நாம் இன்று கண்கூடாக காண்கிறோம். ஐனார் ஹாஜன் எனும் மொழியியலாளர் இத்தகைய மொழி அழிவினை தடுக்க ‘மிகக் கவனமாக இசைவிக்கப்பட்ட இருமொழி பயில்தலை ‘ ஒரு தீர்வாக முன்வைக்கிறார். நம் புராணங்களில் சமஸ்கிருதமும் தமிழும் ஈசன் கை டமருவிலிருந்து பிறந்ததாக கூறப்படுகின்றன.

நம் மொழிகள் அனைத்துமே ஈஸ்வர ஸ்வருபம் எனும் சிந்தனை நம் மரபுகளில் உள்ளது. ‘வானவன் காண் வடமொழியும் தெந்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண் ‘ என்பது திருநாவுக்கரசர் திருமொழி. வியாச பாரதத்தை விநாயகர் சமஸ்கிருத மொழியில் தன் தந்தத்தை ஒடித்து எழுதினார் என்கிறது புராணம். அருணகிரி நாதரோ விநாயகர் முற்படு கிரிதனில் ‘முத்தமிழ் அடைவினை ‘ எழுதியதாக கூறுகிறார். மொழிகளினூடேயான சாராம்ச ஒருமையை காணும் இப்பார்வையே பாரத பண்பாட்டில் மொழியியல் பன்மையினை பேணிக்காத்துள்ளது. இந்த ஹிந்துத்வ பார்வையினை நாம் இழந்து விட்டு வெறுமனே அரசு இயந்திரம் சார்ந்து ஆட்சிமொழிகளை திணிக்கையில் பாரதம் போன்ற மொழியியற் பன்மை கொண்ட ஒரு தேசத்தில் மொழி அழிவுகளையும் சுரண்டல்களையுமே ஏற்படுத்தும். தமிழ்நாட்டிலேயே திராவிட இயக்க தமிழ் திணிப்பு, வட்டார தமிழ் வழக்குகளை பெரிதாக அழித்திருக்கிறது. மொழியியற் பன்மைக்கு சிறிதும் குறையாத முக்கியத்துவம் உடையது இறையியற் பன்மை. இன்றைக்கு பல செழுமையான இறையியல் மரபுகள் அந்நிய ஆக்கிரமிப்பு சக்திகளுக்கும் மண் வேரிழந்த அரசு இயந்திரத்துக்கும் எதிராக ஜீவித்திருக்க போராடி வருகின்றன. நம் மரபுகளை, நம்மை காலம் காலமாக ஜீவித்திருக்க வைத்த ஜீவ நதிகளின் ஊற்றுக்கண்களை, நம் திமிர் கலந்த அறியாமையால், அந்நிய மோகத்தால் அழித்து வரும் நம்மை தடுக்க மீண்டும் நீளுமா ஒரு சாலிவாகனனின் கரம் ?

அரவிந்தன் நீலகண்டன்

infidel_hindu@rediffmail.com

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்