சென்றவாரங்களில்.. (பயங்கரவாதிகள், தமிழ்நாட்டு செத்துப்போன ஜனநாயகக்கலாச்சாரம், இடுக்கி அணைக்குள் கொவில் கோரிக்கை)

This entry is part [part not set] of 49 in the series 20030724_Issue

சின்னக்கருப்பன்


தீவிரவாதிகளா அல்லது பயங்கரவாதிகளா ?

ஜூலை 22ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தி இந்து பத்திரிக்கை, வைஷ்ணோதேவி கோவிலுக்குச் சென்ற ஏழு யாத்ரிகர்கள் (ஒரு குழந்தையும் கொல்லப்பட்டிருக்கிறது) பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதை எழுதியிருக்கும் செய்தியை பாருங்கள்.

இந்த பயங்கரவாதிகளை மிலிடண்ட்ஸ் என்று அழைக்கிறது. தமிழில் இதனை வன்முறையாளர்கள் அல்லது தீவிரவாதிகள் (militants) என்று அழைக்கலாம். அதாவது தங்கள் கோரிக்கையை நிலைநிறுத்த வன்முறையை ஆயுதமாக எடுப்பவர்களை இவ்வாறு அழைக்கிறது.

ஆயுதம் தாங்கிய போர்வீரன் ஒருவனை தாக்குபவனை வன்முறையாளன் என்று அழைக்கலாம். ஆயுதம் தாங்கிய போர்வீரனை தாக்கமால் அஹிம்சை மூலம் போராடுபவனை சத்தியாகிரகி அல்லது அஹிம்சையாளன் என்று அழைக்கலாம்.

ஆயுதம் தாங்காத, கோவிலுக்குச் செல்லும் யாத்ரீகன் ஒருவனை தாக்கி கொல்லும் ஒருவனை எவ்வாறு அழைக்கலாம் ? நான் பயங்கரவாதி அல்லது டெர்ரரிஸ்டு Terrorist என்றுதான் அழைப்பேன். ஆனால், தி இந்து இவர்களை மிலிடண்ட் அல்லது வன்முறையாளன் என்று அழைக்கிறது.

மிலிடண்ட் அல்லது வன்முறையாளன் என்று கூறும்போது அவனுக்கு ஒரு சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடைத்துவிடுகிறது. அஹிம்சை மூலம் தன் எதிர்ப்பை வெளிக்காட்டும் ஒருவனுக்கு இணையாக வன்முறை மூலம் தன் எதிர்ப்பை வெளிக்காட்டும் ஒருவனாக ஆகிவிடுகிறான். ஆனால், இவன் வன்முறையாளன் அல்ல. இவன் ஆயுதம் ஏந்தாத ஒரு யாத்ரீகனை குறிவைத்துக் கொல்லும் கோழை. இவனுக்கு அங்கீகாரம் அளிப்பது அபத்தம் மட்டுமல்ல, அறிவீனம் மட்டுமல்ல, வடிகட்டின ..மும் ஆகும்.

ஆனால், தி இந்து தொடர்ந்து இதனைச் செய்துவருகிறது. பாஜகவுக்கு எதிரானவர்களை உத்தமர்களாகவும் (அது காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்து மாவோயிஸ்டு, காஷ்மீர் பயங்கரவாதிகள் வரை) பாஜக மற்றும் பாஜக ஆதரவு அரசியல் கட்சித்தலைவர்களை வில்லன்களாகவும் விமர்சித்து வருகிறது.

குழந்தைகளையும் ஆயுதம் ஏந்தாத யாத்ரீகர்களையும் கொல்லும் ஒரு கும்பலை பயங்கரவாதிகள் என்று சொல்லாமல், வன்முறையாளர்கள் அல்லது தீவிரவாதிகள் என்று பொய் சொல்லும் தி இந்து பத்திரிக்கையை வாங்காமல் பகிஷ்காரம் செய்யவேண்டும் என்று கோருகிறேன். டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் இது போன்றே இவர்களை மிலிடண்ட்ஸ் என்று அழைக்கிறது. இந்துஸ்தான் டைம்ஸ் இவர்களை டெர்ரரிஸ்டுகள் என்றே அழைக்கிறது.

***

ஏன் தமிழ்நாட்டில் ஜனநாயக் கலாச்சாரம் செத்துப்போனது ?

காரணம் எம்ஜியார்.

எம்ஜியார் தன்னுடைய அரசியலை சினிமாவின் மூலம் நடத்தினார். சினிமாவின் வில்லனுக்கும் அரசியலின் எதிர்கட்சிக்கும் உள்ள வித்தியாசத்தை தொடர்ந்து அழித்துக்கொண்டே இருந்தார். ஒரு கால கட்டத்தில் தனிப்பட்ட முறையில் கருணாநிதியுடன் பேசக்கூடியவராக இருந்தாலும், பகிரங்கமாக இருவரும் சேர்ந்து ஒரு மேடையில் உட்கார முடியாத அளவுக்கு அவரை வில்லனாகவும் தன்னை கதாநாயகனாகவும் பொதுவாழ்வில் காட்டவேண்டிய நிலைக்குக் கொண்டுவந்தார்.

இதுவே இன்றைய ஜனநாயகச் சீரழிவுக்குக் காரணம். அதன் பின்னே வந்த ஜெயலலிதாவும் எம்ஜியார் உருவாக்கிய வில்லன் பிம்பங்களை தொடர்ந்து மக்கள் மனதில் இருத்திக்கொள்ள முனைந்தார். இதனால்தான், முதல்வரும் எதிர்கட்சித் தலைவரும் ஒரே மேடையில் உட்கார முடியாத நிலையும், மக்கள் நலனுக்காக சேர்ந்து பணியாற்ற முடியாத ஒரு நிலையும் ஏற்பட்டது. ஏக வசனத்தில் எதிர்கட்சித்தலைவரை பேசுவதைக் கேட்க ஒரே மக்கள் கூட்டம். காமராஜரும், அண்ணாவும், ராஜாஜியும், பக்தவத்சலமும், கருணாநிதியும் இவ்வாறு எதிர்கட்சித் தலைவருடன் சேர்ந்து காட்சியளிப்பதே கூடாது என்பதுபோல சிந்திக்கக்கூட இல்லை. அதற்கு எம்ஜியாருக்கு முன்பு இருந்த ஒரு ஜனநாயகக் கலாச்சாரமே காரணம்.

நாமோ, இன்று ஒரு மோசமான எம்ஜியார் சினிமாவையே வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

****

ஒரு நூறு நூர்கள் தோன்றினாலும்..

பாகிஸ்தானிலிருந்து பெங்களூருக்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்லும் ஒரு பெண்ணைப் பற்றிய செய்திகள் , பாகிஸ்தான் – இந்தியா நல்லுறவிற்குக் கட்டியம் கூறுவதாக எல்லாப் பத்திரிகைகளும் எழுதிவிட்டன. பரஸ்பர மனித உறவுகள் பாகிஸ்தான்-இந்தியாவின் இடையே எப்போதுமே இருந்து வந்திருக்கின்றன. பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற போதுஎழுந்து நின்று தன்னிச்சையாகக் கரவொலி எழுப்பி அந்த அணிக்குப் பாராட்டுகள் அளித்ததும் சென்னையில் தான் நிகழ்ந்தது. ஆனால் ஒரு புறம் இந்திய மக்களை பாகிஸ்தான் ராணுவமும், ராணுவ ஆட்சியின் ஏவலாளிகளும் கொன்று குவிப்பதன் பின்னணியில் இந்த நிகழ்வுகளுக்கு அர்த்தமில்லை. இரு ஜனநாயக நாடுகளுக்கிடையே தான் சுமுக உறவு மலர முடியும். பாகிஸ்தானில் ஜனநாயகம் மலர்ந்தால் தான் இந்தியா-பாகிஸ்தான் நல்லுறவு சாத்தியம். அதைவிட்டு இது போன்ற தனித்த நிகழ்ச்சிகளுக்கு இல்லாத முக்கியத்துவத்தைக் கற்பிப்பதில் அர்த்தமில்லை.

***

இடுக்கி அணைக்குள் அய்யப்பன் கோவில் கோரிக்கை.

விஷ்வ இந்து பரிஷத் என்னும் அமைப்பு இடுக்கி அணைக்குள் இருந்த ஒரு பழைய அய்யப்பன் கோவிலை மீண்டும் கட்டவேண்டும் என்றும் அங்கு வழிபட அந்தப் பகுதி கிராமத்தினர் விரும்புகிறார்கள் என்றும் கூறுகிறது.

ஆனால் 1974இலேயே அரசாங்கம் அங்கிருக்கும் கோவிலுக்குப் பதிலாக தண்ணீரால் முழுகாத ஒரு இடத்தில் மூன்று ஏக்கர் நிலத்தை அளித்து கோவில் கட்ட கொடுத்திருக்கிறது. இப்போது முன்பு கோவில் இருந்த இடத்திலேயெ விஹெச்பி கோவில் கட்ட முனைந்து அரசாங்க நிலத்தை ஆக்கிரமிக்கிறது.

இது விதண்டாவாதம் என்பதில் வேறு கருத்து இருக்கமுடியாது. அணை போன்ற ஒரு அமைப்பு அந்த இடத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் பயன்படும் விஷயமல்ல. பல லட்சக்கணக்கான மக்களுக்கு இது பயன்தரக்கூடியது. அந்த இடத்தில்தான் நான் கோவில் கட்டுவேன், அந்த இடத்தில்தான் நான் வசிப்பேன், அந்த இடத்தில்தான் நான் விவசாயம் பண்ணுவேன் என்று தண்ணீரால் முழுகக்கூடிய ஒரு கிராமத்தின் மக்கள் கூறுவது இயற்கைதான் என்றாலும், அது ஒப்புக்கொள்ளமுடியாதது. அவர்களுக்கு பாதகமில்லாமல் இன்னொரு இடத்தில் வாழவோ, பிழைக்கவோ அல்லது வழிபடவோ ஒரு இடம் கொடுக்கப்படும்போது லட்சக்கணக்கான மக்களின் நலனை கருத்தில் கொண்டு நகர்வதுதான் நல்லது. இது இடுக்கிக்கும் பொருந்தும், நர்மதா அணைக்கும் பொருந்தும். மக்கள் இடம் பெயர்ப்பு என்பது பல காரணங்களுக்காக நடந்து கொண்டே இருக்கிறது. இயற்கையின் விளையாட்டாக வாழ்பகுதிகள் அழிந்தும் இருக்கின்றன. அழிவு பற்றி முன்னமே தெரிந்து அதிலிருந்து வேறு இடங்களில் வசிக்க நகர்ந்தவர்கள் இஇருக்கிறார்கள். பெரும் தொழிற்சாலைகள் உருவாகும் போது பொது நலன் கருதி இடம் பெயர்பவர்களும் உண்டு . இவர்களுக்கு வேலை வாய்ப்பு, அல்லது மற்ற இடங்களில் வாழும் வசதி செய்து கொடுப்பதும் உண்டு. பொது நலன் கருதி இப்படிப்பட்ட கொடுக்கல் வாங்கல் செய்ய மக்களைத் தயார் படுத்துவதை விட்டு, விஸ்வ இந்து பரிஷத் , மேதா பட்கர் போன்றவர்கள் மக்களை அனாவசியமாய்ப் போராட்டத்தூண்டுவது நல்லதல்ல.

மந்திர் வஹீன் பனேகா போன்ற வாதங்கள் இயற்கையாக இந்திய மக்களுக்கு இருக்கும் விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கை மாற்ற முயல்பவை. ஒரு குறிப்பிட்ட இடத்தை ஆக்கிரமித்து அதில் விவாதத்தை உண்டு பண்ணி அரசியல் ஆதாயம் தேடும் பா ஜ க , விஸ்வ இந்து பரிஷத்துக்கும் இது பொருந்தும். இதனை யார் செய்தாலும், அவர்களை தவறு என்று மக்கள் நலன் விரும்பிகள் சொல்ல முன் வரவேண்டும்.

***

karuppanchinna@yahoo.com

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்