பெரியாரியம் – தத்துவத்தை அடையாளப்படுத்துதலும், நடைபெற வேண்டிய விவாதமும் – ஆய்விற்கான முன் வரைவுகள் – 4

This entry is part of 19 in the series 20011125_Issue

ராஜன் குறை


18. தமிழும், தமிழ் நாடும், தமிழ் மக்களும் இப்படிப் பிரிந்து கிடக்கிற காரணத்தினால்தான் ஒற்றுமைக்குப் பாடுபடும் நாங்கள் திராவிட நாடு என்றும், திராவிட மக்கள் என்றும், திராவிடக் கலாசாரம் என்றும் எடுத்துக் காட்டி புத்துணர்ச்சி ஏற்படுத்தப் பாடுபட்டு வருகிறோம். ‘தமிழ் ‘ என்பதும், ‘தமிழர் கழகம் ‘ என்பதும் மொழிப் போராட்டத்திற்குதான் பயன்படுமேயொழிய இனப்போராட்டத்திற்கோ, கலாசாரப் போராட்டத்திற்கோ சிறிதும் பயன்படாது. சரி, ஆரியர்கள் முதலில் தம் கலாசாரத்தைப் புகுத்திதான் நம்மை வெற்றிக்கொண்டார்கள்; நம் கலாசாரத்தைத் தடுத்துதான் நம்மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார்கள். நாமும் நம் கலாசாரத்தை மறந்து ஆரிய கலாசாரத்தை ஏற்றுக் கொண்டதால் தான் அவர்களுக்குக் கீழான மக்களாக — அவர்களுடைய வைப்பாட்டி மக்களாக, சூத்திரர்களாக, பஞ்சமர்களாக ஆக்கப்பட்டோம் எனவே, அக்கலாசாரத்திலிருந்து விடுபடவேண்டுமென்றால், மொழிப்போராட்டம் ஒன்றினால் மட்டும் வெற்றி பெற்றுவிட முடியாது. கலாசாரத்தின் பேரால்– இனத்தின் பேரால் போராட்டம் நடத்த வேண்டும். அதில் வெற்றிபெற வேண்டும். அப்போதுதான் நாம் விடுதலை பெற்றவர்ளாவோம்.

மொழிப்போராட்டம், கலாச்சார போராட்டத்தின் ஒரு பகுதிதானேயொழிய முழுப் போராட்டமாகவே ஆகிவிடாது. சட்டம், சாஸ்திரம், சமுதாயம், சம்பிரதாயப் பழக்கவழக்கங்கள், புராணங்கள், இதிகாசங்கள் இவை எல்லாவற்றிலுமே நம் இழிவு நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே, இவை எல்லாவற்றிலிருந்துமே நம் இழிவு நீக்கமடைந்தாக வேண்டும். மொழியால் மேம்பாடும் வெற்றியும் பெற்றுவிடுவதாலேயே நமது இழிவும், இழிவுக்கு ஆதாரமான கலாச்சாரமும் ஒழிந்துவிடமாட்டா; மேலும், இந்த இழிவால் அவதிப்படுபவர்கள் தமிழ்மொழி பேசுகிறவர்கள்– தமிழர்கள் என்பவர்கள் மாத்திரமல்லாமல்— சென்னை மாகாணத்தில் மட்டுமில்லாமல் இந்தியாவின் மற்ற மாகாணங்களிலும், அதாவது, வேறு பல மொழிகள் பேசும் மக்கள் உள்ள வங்காளம், பீகார், பம்பாய், மகாராஷ்டிரம் முதலிய மாகாணங்களிலும் இருக்கிறார்கள். அங்குள்ள தாழ்த்தப்பட்ட தோழர்களும் தம்மைத் திராவிடர்கள் என்றுதான் கூறிக்கொள்கிறார்கள். உண்மையில் அவர்களும் திராவிடர்கள் தாம்.

(சென்னை ராபின்சன் பார்க்கில், 24-1-1950-ல் சொற்பொழிவு, ‘விடுதலை ‘ ’27-1-50)

19. நிற்க, இந்த பிரிவினை அமைப்பு ஏற்பாட்டில் எனக்கிருக்கும் சகிக்க முடியாத குறை என்ன இருக்கிறது என்றால், நாட்டினுடையவும், மொழியினுடையவும், இனத்தினுடையவும் பெயர் அடியோடு மறைக்கப்பட்டுப் போய்விடுகிறதே என்கிற குறைபாட்டு ஆத்திரந்தான் ‘ நம் நாட்டுக்கு, சமுதாயத்திற்கு, இனத்திற்கு திராவிடம் என்று இருந்த பெயர், அது தமிழல்ல என்பதனாலும், நமக்கு அது ஒரு பொதுக் குறிப்புச் சொல்லும், ஆரிய எதிர்ப்பு உணர்ச்சிச் சொல்லுமாக இருக்கிறதே என்று வலியுறுத்தி வந்தேன், அதை ஆந்திர, கர்நாடக, கேரள நாட்டு மக்களல்லாமல் தமிழ் மக்களில் சிலரும் எதிர்த்தார்கள். பின்னவர்கள் என்ன எண்ணங்கொண்டு எதிர்த்தாலும், அவர்களுக்கு மற்ற மூன்று நாட்டார் ஆதரவு இருந்ததால் அதை வலியுறுத்துவதில் எனக்குச் சிறிது சங்கடம் இருந்தது. அவர்கள் மூவரும் ஒழிந்த பிறகு அவர்களையும் சேர்த்துக் குறிப்பிடத்தக்க ஒரு சொல் நமக்குத் தேவையில்லை என்றாலும், ‘திராவிடன் ‘ என்ற சொல்லை விட்டு விட்டுத் ‘தமிழன் ‘ என்று சொல்லியாவது தமிழ் இனத்தைப் பிரிக்கலாமென்றால், அது வெற்றிகரமாக முடிவதற்கு இல்லாமல் பார்ப்பான் (ஆரியன்) வந்து, ‘நானும் தமிழன்தான் ‘ என்று கூறிக்கொண்டு உள்ளே புகுந்துவிடுகிறான்.

(விடுதலை ‘அறிக்கை ‘ 11-10-1955)

20. திராவிட நாடு எது ? இதற்கு முன் — 1956க்கு முன் இருந்த சென்னை மாகாணத்தை நான் ‘திராவிட நாடு ‘ என்று சொன்னேன். அப்பொழுது மலையாளம், கன்னடம், ஆந்திரம் பிரிந்திருக்கவில்லை. வெள்ளையன் இந்த நாட்டை விட்டுப் போய்விட்ட பிறகு, வடநாட்டானும், இந்த நாட்டுப் பார்ப்பானும் சேர்ந்து கொண்டு இனிமேல் நமக்கு ஆபத்து என்று கருதி, நான்கு பிரிவுகளாக வெட்டி விட்டார்கள். இப்பொழுது நம்மோடு ஒட்டிக் கொண்டிருந்த கள்ளிக்கோட்டை மங்களூர் மாவட்டங்களும் மலையாளம், கன்னட நாடுகளுடன் சேரப்போகின்றன. இப்பொழுது நம்முடன் மலையாள, கன்னட நாடுகளின் சம்பந்தமில்லாமல் தனித்தமிழ் நாடாக ஆகிவிட்டோம். ஆகவே இதை இப்பொழுது ‘தமிழ்நாடு ‘ என்று சொல்லலாம். முன்பு அவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று சொன்னோம். ஆனால், அவர்கள் பிரிந்து தனியாகப் போவதிலேயே கவனத்தை செலுத்திப் பிரிந்து போய்விட்டார்கள். நாம் நிபந்தனையற்ற அடிமைகளாய் உள்ளோம்.

(திருவண்ணாமலையில், 19-8-1956ல் சொற்பொழிவு– ‘விடுதலை ‘ 29-8-1956)

21. நாம் இந்த நாட்டில் உரிமை உடைய மக்களாய் இருந்தும், சமுதாயத்தில் இழிந்தவர்களாகவும் பொருளாதாரத்தில் தாழ்த்தப்பட்டவர்களாகவும் இருந்து வருகிறோம். இதை மாற்ற வேண்டிய முயற்சிகள் பல நடந்தும், நம் நிலையிலே சிறிதும் மாற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. காரணம் என்னவென்று யோசித்தோம், முன்னேற்றம் அடைந்துள்ள நாட்டாரைப் பார்த்தோம். அதன்படி ஒரு நாட்டு மக்களோ அல்லது சமுதாயமோ முன்னேற வேண்டுமானால் அந்த மக்களுக்கு அல்லது அந்த சமுதாயத்தவருக்குப் பொது உணர்ச்சியையும் ஒற்றுமை மனப்பான்மையையும் உண்டாக்கக்கூடிய இலட்சியச் சொல் அல்லது குறிச்சொல் ஒன்று தேவை என்பது விளங்கியது, அதே சமயத்தில் நம் நிலையைச் சிந்தித்துப் பார்த்தபோது ‘இந்து ‘ ‘இந்தியா ‘ என்று நமக்குப் புரியாத சொற்களை— நமக்குச் சம்பந்தமில்லாத மொழிகளைச் சொல்லிக்கொண்டு வந்தோமே தவிர, உண்மையான ஒற்றுமை ஏற்படத்தக்க முறையைக் கையாள வேண்டுமே என்ற சிந்தனை நம் தலைவர்களுக்குள் ஏற்படவே இல்லை.

(லால்குடியில், 23-5-1944ல் சொற்பொழிவு ‘குடிஅரசு ‘ 3-6-1944)

22. தமிழர் என்பது மொழிப்பெயர் திராவிடர் என்பது இனப்பெயர். தமிழ் பேசும் மக்கள் யாவரும் தமிழர் என்று தலைப்பில் கூட முடியும். ஆனால், தமிழ் பேசும் அத்தனை பேரும் திராவிடர் ஆகிவிடமுடியாது, இனத்தால் திராவிடனான ஒருவன் எந்தச் சமயத்தை சார்ந்தவனாயிருந்தாலும், எந்த மொழி பேசுபவனாயிருந்தாலும் அவன் திராவிடர் என்ற தலைப்பில் தான் சேருவான். ஆகையால், திராவிட மொழி தமிழ் என்ற காரணத்திற்காக, தமிழ் பேசும் திராவிடன் அல்லாத ஒருவன் — மொழி காரணமாக மட்டுமே தன்னைத் திராவிடன் என்று கூறிக்கொள்ள முடியாது. ‘தமிழர் ‘ என்றால் பார்ப்பானும் தன்னைத் தமிழன் என்று கூறிக்கொண்டு நம்முடன் கலந்து கொண்டு மேலும் நம்மைக் கெடுக்கப் பார்ப்பான். திராவிடர் என்றால் எந்தப் பார்ப்பானும் தன்னைத் திராவிடன் என்று கூறிக்கொண்டு நம்முடன் சேர முற்படமாட்டான். அப்படி முன்வந்தாலும் அவனுடைய ஆசார அனுஷ்டானங்களையும், பேத உணர்ச்சியையும் விட்டுத் திராவிடப் பண்பை ஒப்புக்கொண்டு, அதன்படி நடந்தாலொழிய நாம் அவனைத் திராவிடன் என்று ஒப்புக் கொள்ள மாட்டோம்.

(நூல் : ‘மொழியாராய்ச்சி ‘ வள்ளுவர் பதிப்பகம், பவானி–1948)


3. தாழ்த்தப்பட்டவர்களை இயக்கமாக்குவதிலும், போராடச் செய்வதிலும் போதிய முளைப்புக் காட்டவில்லை:

பெரியார் மீது வைக்கப்படும் விமர்சனங்களில் ஓரளவு நியாயமானது இதுவே எனத் தோன்றுகிறது. குறைந்தபட்சம் 1954க்குப் பிறகாவது அவர் தாழ்த்தப்பட்டவர் எழுச்சியில் கவனத்தைக் குவித்திருக்கலாமே என்று தோன்றுவது இயல்பு. ஆனால் இதிலும் அவரது அக்காலத்தில் நடவடிக்கைகளை முழுமையாக ஆய்வுசெய்துவிட்டுத்தான் எதையும் கூற முடியும். இருந்த போதும் ஒன்றைத் தெளிவாகக் காண முடிகிறது பார்ப்பன கருத்தியல் மேலாதிக்கம் அவர் விரும்பிய அளவு 1973 வரை தகர்க்கப்படவில்லை. என்பது (இன்றைய நிலைகுறித்து யோசிப்பது வாசகர் பொறுப்பு) எனவே பிரதான எதிரியை அவர் இறுதிவரை வெல்லவில்லை தாழ்த்தப்பட்டவரிடம் பேசும்போது அவர் உங்களை கொடுமைப்படுத்தும் பிற மேல்ஜாதியினர் என்றுதான் கூறுகிறார். தான் அத்தகையதொரு மேல்சாதியினன் என்பதையும், தனது இயக்கம் பெரும்பான்மை அத்தகைய மேல்சாதியினர் இயக்கம் என்பதையும் உணர்ந்திருப்பதற்கான தடயங்கள் அவர் பேச்சில் உள்ளன. வேளாளர், செட்டியார், முதலியார் எனப் பெயர் சொல்லித்தாக்காததைத் தவிர வேறு எந்த சமரசமும் அவர் செய்துக்கொள்ளாததுடன், உண்மை நிலைகளைத் திரித்துக் கூறுவது போன்றவற்றைச் செய்ததாக காணமுடியவில்லை. இன்றும் SC — BC ஒற்றுமைக் குறித்து பேசப்பட்டாலும் நடப்புலகில் அதற்கான அடிப்படைகளை உருவாக்குவது எப்படி என்பது சிக்கலான கேள்வியாகவே இருக்கும்போது பெரியாரிடம் மட்டும் ரொம்பவும் அதிகமாக எதிர்ப்பார்ப்பதற்கில்லை எப்போதுமே தாழ்த்தப்பட்டவர்களுக்கான பிரச்சாரம் அவரது பிரச்சாரத்தின் இன்றியமையாத பகுதியாக இருந்துவந்தது என்பதை மட்டும் இங்கு மீண்டும் சுட்டிக்காட்ட முடியும்.


23. நாங்கள் ஆதித்திராவிடர்களைப் பற்றி பேசும்போது, பார்ப்பனர்கள் மனவருத்தம் அடைவதில் அர்த்தம் உண்டு. ஆனால், பார்ப்பனரல்லாதார் மனவருத்தமடைவதில் சிறிதும் அர்த்தமில்லை. அது வெறும் முட்டாள்தனம், மானமற்ற தன்மையுமே ஆகும் ஏனெனில், தமது சமூகத்தில் பார்ப்பனர் என்கின்ற கூட்டத்தாராகிய 100க்கு 3 வீதமுள்ள ஜனத்தொகை நீங்கி, மற்ற ஜனங்களுக்கு இந்த நாட்டில் சூத்திரன் (அடிமை), ஆதிதிராவிடன் என்கின்ற பட்டமில்லாமல் வேறு எந்தப்பட்டத்தோடாவது யாராவது இருக்க முடியுமா ? இருக்கின்றார்களா ? என்று கருதியும், அனுபவத்தையும் கொண்டு பாருங்கள் ‘ சூத்திரன் என்கின்ற ‘காலத்தில் ‘ நீங்கள் பதியப்பட்டிருப்பதில் உங்களுக்குச் சிறிதளவாவது மானம் இருந்தால், பறையன் என்கிற பட்டம் போகவேண்டுமென்பதில் கடுகளவாவது வருத்தமிருக்குமா ?

பறையன் பட்டம் போகாமல், உங்களுடைய சூத்திரப்பட்டம் போய்விடும் ‘ என்று கருதுகின்றீர்களேயானால், நீங்கள் வடிகட்டின முட்டாள்களேயாவீர்கள்.

(நாகையில், 3-10-1931ல் சொற்பொழிவு — ‘குடியரசு ‘ 11-10-1931)

24. நம் நாட்டில் திராவிட மக்களுக்குள்ளாகவே திராவிடர் ஆதித் திராவிடர் என்கின்ற ஒரு பிரிவு இருக்கிறது என்பதோடு ஆதித்திராவிட சமூகம் மிகப்பெரிய எண்ணிக்கை கொண்ட சமூகமாக இருந்து வருகிறது. திராவிட நாட்டில் எப்படி வெளியிலிருந்து வந்த ஆரியர்களுக்குத் திராவிட மக்கள் தீண்டப்படாதவர்களாயிருக்கிறார்களோ, அப்படி திராவிடர்களுக்கு ஆதித் திராவிடர்கள் அதைவிட மேம்பட்ட தீண்டப்படாதவர்களாயிருக்கிறார்கள். இந்நிலைமை திராவிட சமுதாயத்திற்கே ஒரு பெரும் மானக்கேடான நிலைமையாகும் என்பதோடும், திராவிடர்களை ஆரியர்கள் தீண்டப்படாத மக்களேன்று வகுத்திருப்பதையும் நடத்துவதையும் அரண் செய்கிறது. ஆகையால் ஆதித்திராவிடர் என்கின்ற பெயரே மாற்றப்பட்டு, இருவரும் திராவிடர்கள் அல்லது தமிழர்கள் என்கின்ற பெயராலேயே வழங்கப்பட வேண்டுமென்பதும் திராவிடர்களுக்கு ஆதித்திராவிடருக்கும் சமுதாயத் துறையிலுள்ள எல்லா வித்தியாசங்களும், பேதங்களும் ஒழிந்து ஒரே சமூகமாக ஆகவேண்டும் என்பதும் எனது ஆசை.

(திருவாரூரில், 24, 258-1940ல் ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் தலைமைச் சொற்பொழிவு — குடியரசு)

25. தவிர, இங்கு செய்யும் பிரசாரத்தை பார்ப்பனர்களுக்கும், அல்லாதவர்களுக்கும் போய்ச் செய்யட்டும் என்று அவர் சொல்லுகின்றனர். பார்ப்பனர்கள் நமது பிரசாரத்தினால் புத்தி திருந்தி விடுவார்கள் என்பது சுத்தப் பைத்தியக்காரத்தனமாகும். அவர்கள் தெரியாதவர்களாயிருந்தால் நியாயம் சொல்லலாம். நன்றாய்த் தெரிந்தே, எங்கு தங்கள் ஆதிக்கமும் சோம்பேறிப் பிழைப்பும் போய் விடுகின்றனவோ என்று சுயநலங்கருதி, குரங்குப் பிடிவாதமாய் இருப்பவர்களை நாம் எந்த பிரச்சாரத்தால் எப்படி மாற்றக்கூடும் ? பார்ப்பனரல்லாதவர்களோ– முக்கால்வாசிப்பேர் – பார்ப்பனர்களைப் பின்பற்றுபவர்களாகவும், பாப்பானுக்குத் தாசிமகனாய் இருந்தாலும் சரி, பறையனுக்கு மேலே இருந்தால் போதும்– என்று முட்டாள்தனமாய் கருதிக்கொண்டு இருக்கிறவர்கள் என்றாலும், நம்மால் கூடியதைச் செய்துதான் வருகிறோம், எதற்கும் உங்கள் முயற்சியும், சுயமரியாதை உணர்ச்சியும் இல்லாவிட்டால் ஒரு காரியமும் நடவாது.

(சென்னை நேப்பியர் பார்க்கில், 22-10-1929ல் சொற்பொழிவு ‘குடி அரசு ‘ — 27-10-1929)

26. தாழ்த்தப்பட்ட மக்கள் விஷயமாய் என்னுடைய அபிப்ராயம் நீங்கள் தெரிந்ததேயாகும். தாழ்த்தப்பட்ட மக்களை அவர்களுக்கு, மற்றவர்கள் இழைத்துவரும் கொடுமையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்பதை உண்மையான கருத்துடன் பார்த்தால் அது புரட்சி வேலையேயாகும். ஏனெனில், தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை பெரிய அஸ்திவாரத்தின் மீதே கட்டப்பட்டிருக்கின்றது. எப்படி என்றால், தாழ்த்தப்பட்ட மக்கள் கீழ்ச்சாதி மக்கள், தீண்டப்படாதவர்கள் என்பவர்கள் எல்லாம் பிறவியிலேயே கீழ்மைத் தன்மை அடைந்தவர்கள் என்றும்; அவர்கள் கடவுளாலேயே அந்தப்படி பிறப்புவிக்கப்பட்டவர்கள் என்றும்; அதற்கு மதங்களும், மத சாஸ்திரங்களுமே ஆதாரங்கள் என்றும்; கடவுள் செயலையோ, மதவிதிகளையோ யாரும் மாற்றக்கூடாதென்றும்; அவை மாற்றுதலுக்குக் கட்டுப்பட்டவையல்ல என்றும் சொல்லப்படக்கூடிய ஒரு பலமான அஸ்திவாரத்தின் மீது கட்டப்பட்டிருக்கிறது.

(சீர்காழியில், 10-7-1935ல் சொற்பொழிவு – ‘குடி அரசு ‘ 28-7-1935)


பெரியாரும், எதிர்க்கலாச்சாரமும்:-

அரசியல் கிளர்ச்சிகளை மக்கள் தயாராக உள்ள அளவு நடத்தவேண்டும் என்று கருதிய பெரியார், மக்கள் ஏற்றுக்கொண்ட கருத்துக்களை மிகக் கடுமையாகத் தாக்கியே பிரசாரம் செய்கிறார். ‘கடவுள் என்பது பித்தலாட்டம் ‘ ‘கடவுளை நம்புபவன் முட்டாள் ‘ ‘அன்பே சிவம், சிவமே வெங்காயம் ‘ என்றெல்லாம் தொடங்கி ஏராளமான விஷயங்களில் அன்று பிரபலமாகும் சிந்தனையோட்டத்திற்கு எதிராக நின்று குரல் கொடுத்தும், இந்திய மரபு, கலாசாரம் போன்றவற்றை காட்டுமிராண்டித்தனம், முட்டாள்தனம் என்று இழித்துரைத்தும், விநாயகர் சிலை உடைத்தும், இராமர் படம் எரித்தும் இயக்கம் நடத்திய அவரை மக்களுக்கு வால் பிடிப்பவர் என்றெல்லாம் சொல்வதற்குமுன் எச்சரிக்கையுணர்வுடன் சிந்திக்க வேண்டும். இதிலெல்லாம் ஒரு கவர்ச்சி உண்டாகும், பரபரப்பூட்டி புகழ் பெறலாம் என்றால் இது அரசியல் புகழ்பெற மிகக் கடினமான வழியென்பதையும், இல்லாவிட்டல் எல்லோருமே இதைச் செய்யலாமே என்றும் சிந்தித்துப் பார்க்கவேண்டும். என்றுமே கலகபூர்வமாக பேசுபவர்களும், நடப்பவர்களும் தங்கள் சுய அகந்தையின் பொருட்டும். அதிகப் புகழ் பெறவுமே அவ்விதம் நடந்து கொள்கிறார்கள் என்றே ஆதிக்கம் சார்ந்த சக்திகள் வர்ணித்துக் கொண்டு வந்துள்ளன. இன்றைய நிலையில் மீட்புவாதம், மத புனர் நிர்ணயிப்புவாதம், ஏகாதிபத்திய, முதலாளீய மனிதாபிமானவாதம், நுகர்பொருள் கலாசாரம், உயர் தொழில் நுட்ப ஆதிக்கம், நலசாதீயம், ஆணாதிக்கம், பழைய புதிய தீண்டாமை வடிவங்கள், ஆதிக்கப் போட்டியில் உருவாக்கப்படும் சொல்லாடல்கள் ஆகிய அனைத்தையும் சமாளிக்க எதிர் கலாச்சார நடவடிக்கைகள் எதிர்நோக்கியிருக்கவேண்டிய நிலையில் பெரியாரிடமிருந்த இதற்கான கூறுகளைக் கவனமாகப் பரிசீலிக்கவேண்டியுள்ளது. நிலை பெற்றிருந்த நம்பிக்கைகள், மதிப்பீடுகள் போன்றவற்றை அவர் கடுமையாக மறுத்துப்பேசியதை பட்டியலிட்டால் அது நீண்டுகொண்டே போகும். வெகுஜன சொல்லாடல் களத்தில் அவருடைய பல உச்சரிப்புகளுக்கு முன்னோடிகள் யாருமிருந்தார்களென்றும் தோன்றவில்லை. (தமிழைப் பொறுத்தவரையில்) சிலவற்றைப் பார்ப்போம்.

நிலவிய பேச்சு X பெரியார் கூற்று

மனிதப் பிறவி உயர்வானது X மனிதப் பிறவி மிருகங்களைவிட இழிவானது.

பகுத்தறிவு மனிதனின் உயர்குணம் X பகுத்தறிவு மனிதனின் பலவீனம் அல்லது இழிகுணம். (அதாவது மனிதனை மிருகங்களிடமிருந்து வேறுபடுத்தும் அறிவிப் பண்புகள் என்ற அர்த்தத்தில்.)

பாவ, புண்ணியங்களுண்டு X பாவ, புண்ணியங்களில்லை.

மனித வாழ்க்கை இலட்சியமுள்ளது X மனித வாழ்க்கை இலட்சியமற்றது.

ஆன்மா, மறுபிறவி உண்டு X ஆன்மா கிடையாத மனித உடல் பொருண்மைத் தன்மையுடையதே.

மனிதனுக்குக் கட்டுப்பாடுகள் தேவை X மனிதனுக்குக் கட்டுப்பாடுகள் தேவையில்லை.

அந்நியராட்சி இழிவு X அந்நியராட்சி இழிவில்லை. இந்திய பார்ப்பனக் கலாசாரமே இழிவு.

தொழிற்சங்கம் தொழிலாளர் (தொழிலாளர் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற X தொழிற்சங்கம் பிரச்சினையை கூலிப் வழி வகுப்பது பிரச்சினையாக மாற்றக்கூடியது தொழிற்சங்கத் தலைமை துரோகத்தனமாவதற்கு வாய்ப்புகள்

அதிகம்.

கற்பு உயர் ஒழுக்கம் X கற்பு தேவைக்கேற்றபடி, சமூகங்களால் உருவாகிக் கொள்ளப்படுவது பெண்ணுக்கு கற்பை நிர்பந்திப்பது மோசடி.

பிள்ளை பெற்று வளர்ப்பது வாழ்வின் இன்றியமையாத பகுதி X பிள்ளை பெற்று வளர்ப்பது அவசியமில்லை

(பெண் விடுதலைக்கு எதிரானது)

இவை மேலோட்டமாகக் கொடுக்கப்படுபவை. பல விஷயங்களில் அவர் கூற்றுகள் இடத்திற்கிடம் முரண்பட்டிருக்கும் அவருடைய பேச்சுக்களை ஆழமாக வாசிப்பதின் மூலம் பொதுவாக அவரிடம் வெளிப்படும் எதிர்கலாசாரத் தொனியை வெளிக்கொணரலாம். அவ்வாறு செய்வது இக்கட்டுரையை மிகவும் நீண்டதாக்கிவிடும் என்பதுடன், அது வாசகர்களுடன் இணைத்து செய்யும் கூட்டுச் செயல்பாடாக மாறுவதே பொருத்தம்.

இக்கட்டுரையில் கூறப்பட்டதை விட அவருடைய மேற்கொள்கள் அதிகம் உணர்த்தமுடியும். ‘பூணூல் போடுவதை சட்டப்படி குற்றமானதாக்க வேண்டும் ‘ ‘நாற்றுநடும் பாப்பாத்தியை கண்டதுண்டா ‘ போன்றவற்றில் கலாச்சாரப் புரட்சிக்கான, அடித்தளத்தையும், ‘திருமணத்தை சட்ட விரோதமானதாக்க வேண்டும் ‘ என்பதில் தீவிர கலகக் குரலையும் அடையாளம் காணுவதாயிருந்தால். பெண்கள், தாழ்த்தப்பட்டோர் பற்றிய அவர் கருத்துக்களின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட வேண்டியிருப்பதல்ல.


27. உலகில் கற்பு, காதல் என்பன போன்ற வார்த்தைகள் எப்படி பெண்மக்களை அடிமைப்படுத்தி அடக்கி ஆளவென்று ஏற்படுத்திப் பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ, அதுபோலவேதான் ஒழுக்கம் என்னும் வார்த்தையும் எளியோரையும், பாமர மக்களையும் ஏமாற்றி மற்றவர்கள் வாழ பயன்படுத்திவரும் ஒரு சூழ்ச்சி ஆயுதமேயல்லாமல், அதில் உண்மையோ, சத்தோ ஒன்றுமே கிடையாது. கற்பு, காதல், சத்தியம், நீதி, ஒழுக்கம், என்பனவெல்லாம் ஒரே தாயின் பிள்ளைகள் அதாவது குழந்தைகளை பயமுறுத்த பெரியவர்கள் ‘பூச்சாண்டி ‘ ‘பூச்சாண்டி ‘ என்பதுபோல இவை எளியோரையும் பாமர மக்களையு, வலுத்தவர்களும், தந்திரக்காரர்களும் ஏமாற்றச் செய்து ஒரு பெரும் சூழ்ச்சியாகும்.

எப்படி குழந்தைப் பருவம் உள்ளவரை பூச்சாண்டிக்கு மக்கள் பயப்பட வேண்டியிருக்கிறதோ, அது போலவே தான் அறிவும், சக்தியும் மக்களுக்கு ஏற்படும்வரை மேற்கண்ட ஒழுக்க முதலிய பூச்சாண்டிகளுக்கு அவர்கள் பயப்பட்டுத் தீரவேண்டியிருக்கிறது.

28. உண்மையிலேயே ஒழுக்க ஈனம் என்பது ஒன்று உண்டென்றும், அது திருட்டு, பொய், ஏமாற்றம் போன்றதாகிய என்றும் சொல்வதனால் அந்தக் குணங்கள் பெரிதும் நிலையாய் குடிகொண்டிருக்கும் இடங்கள், அரசர்கள், குருமார்கள், வியாபாரிகள், வக்கீல்கள், தேசீயவாதிகள் போன்ற கூட்டத்தார்களிடமே ஆகும்.

(மேற்கோள் 2728 பக்கம் 15 17, பகுத்தறிவு மலர். 3,இதழ் 9, ஜனவரி 1,1938)

29. மாறன்: இன்னொரு கேள்வி. இப்போ காலத்திலே ஒழுக்கம் குறைஞ்சு வருது, அப்படின்னு எல்லோரும் சொல்றாங்க. அரசாங்கத்தின் தண்டனைக்குப் பயமிருக்கணும்; அல்லது ஒருவிதமான ஆண்டவன் நம்பிக்கையிருந்து பயப்படணும். இந்த ரெண்டும் இல்லாமப் போயிட்டதே இப்போ. இந்த ஒழுக்கம் நல்லா இருக்கிறதுக்கு என்ன வழி ?

பெரியார்: மன்னிக்கணும், அய்யா. இதை ஒன்றும் கட்டுப்படுத்த முடியாது, இனிமேல் எந்தக்காரணம் சொல்லியும் மக்களைக் கட்டுப்படுத்தவே முடியாது. ஒரு மட்டம் தாராளமாக போயி, மறுபடியும் அவங்க ஏதாவது இதுக்கு என்ன பண்றதுன்னு திரும்பினா உண்டே தவிர, இப்ப ஒழுக்கமா, நாணயமா, நேர்மையா மனுசன் யாராவது சிந்திக்க இப்ப வாய்ப்பு இல்லை எல்லோருக்குந்தான். அரசியலில் ஒழுக்கமா இருக்க முடியலே. எவனாயிருந்தாலும் மதத்திற்குக் கூட, காட்டிக்க முடியுதே தவிர, தத்துவப்படி நடக்க எவனாலும் முடியலே. ஒழுக்கம் ‘னு இன்னொருத்தனுக்கு சொல்றமே தவிர, அந்த வாய்ப்புக் கிடைச்சா நாமும் அந்தத்தவறு பண்ணத் தயாராயிருக்கோம். அனுபவத்திலே சொல்றேன். நான் அப்படி இருக்கும்போது சும்மா ஒழுக்கம்னு சொல்லி இன்னொருத்தனை ஏமாத்தறதிலே என்ன இலாபம் சொல்லுங்க.

மாறன் : சமுதாய நலவாழ்வுக்கு.

பெரியார் : என்ன நல்வாழ்வு ? சமுதாயத்துக்கு என்ன நல்வாழ்வு வரும் ‘ ? நீங்க பணக்காரன் ‘ நான் ஏழை. இவங்களுக்கு நல்வாழ்வு எங்கே வரும் ? இதையெல்லாம் காப்பாத்துறதா இருந்தா அதைத்தான் ஒழுக்கம்னு நினைக்கிறோம். உங்ககிட்டே பணம் திருடக்கூடாது நான், நீங்க வியாபாரி, என்னை மோசம் பண்ணி பணம் சேர்த்துடலாம்னு நினைக்கிறீங்க. அப்ப எப்படி ஒழுக்கம் வரும் ?

(5-1-1970ல் திருச்சி வானொலி ஒலிபரப்பு)

30. ஒரு பூச்சியின் செய்கைக்கு பாவம், புண்ணியம் உண்டானால்தான் ஒரு மனிதனின் செய்கைக்குப் பாவம், புண்ணியம் உண்டாக்க முடியும். மனிதனுக்குள்ள பகுத்தறிவு என்பது கடவுளால் ஒரு தனிப்பட்ட காரியத்துக்காகக் கொடுக்கப்பட்டது என்றால், ஒரு யானைக்குள்ள தும்பிக்கை, ஒரு நாரைக்குள்ள நீண்ட மூக்கு, ஒரு முள்ளம்பன்றிக்குள்ள செதில் முட்கள், தேளுக்குள்ள கொடுக்கும் பாம்புக்குள்ள விஷம் போன்றவைகளெல்லாம் கடவுளால் தனிப்பட்ட காரியங்களுக்காகக் கொடுக்கப்பட்டவை என்றுதானே சொல்ல வேண்டும் ? ஆதலால், ஒரு யானைக்குத் தும்பிக்கை விசேஷ உறுப்பாகவும், நீண்ட அவயவமாகவும் இருப்பதுபோலவே, மனிதனுக்கு பகுத்தறிவுக்குள்ள நரம்புக்கூட்டும் மூளையின் பரிணாம அதாவது அதிக சிந்தனா சக்திக்குள்ள உறுப்புகள் என்பவை விசேஷ உறுப்பாகவோ விசேஷ சக்தியாகவோ இருக்கின்றதென்பதேயல்லாமல், அதற்குமாத்திரம் ஒரு தனி விசேஷத்துவம் இல்லையென்பதே எனது அபிப்ராயம்.

31. இதுபோன்ற எத்தனையோ ‘கெட்ட ‘ குணங்கள் மனித ஜீவன் தனது பகுத்தறிவின் பயனாகவே உடையதாயிருக்கிறது. ஆகையால் பகுத்தறிவின் ‘மேன்மையால் ‘ மனித ஜீவன் சிறந்தது என்று எப்படிச் சொல்லிக் கொள்ள முடியும் என்பதே நமது கேள்வியாகும். மேலும் மேற்கண்ட காரணங்களாலும் மற்றும் பல காரணங்களாலும் மனித ஜீவன்களில் பெரும்பான்மையானவை, மற்ற ஜீவராசிகளை விட இழிவுத்தன்மை உடையவை என்பதும் நமது அபிப்பிராயம் ஆகும். சாதியின் பேரால் உயர்வு—தாழ்வு, மதத்தின் பேரால் வேற்றுமை உணர்ச்சி, தேசத்தின் பேரால் குரோதத்தன்மை முதலான இழி குணங்கள் மனிதனிடமே அதிகமாகக் காண்கிறோம். மற்றும் கடவுளின் பேரால் மேல் — கீழ் நிலை முதலாகிய அயோக்கிய தன்மைகள் மனித ஜீவனிடம் உண்டு. பகுத்தறிவின் காரணமாக மனித ஜீவன் உயர்ந்தது என்று சொல்ல வேண்டுமானால் மேற்கண்ட கெட்ட—தீய — இழிவான, அயோக்கியதனமான குணங்கள் என்பவைகள் எல்லாம் மனிதனிடம் இல்லாமல் இருக்க வேண்டும். அப்பொழுது தான் மற்ற ‘பகுத்தறிவில்லா ‘ ஜீவராசிகளை விட மனித ஜீவன் மூளை விசேஷம் முதலிய அவயவத்தை நன்மைக்காக பிரயோகித்துக்கொண்ட ஜீவன் என்று சொல்லப்படும். அதில்லாத நிலையில், எவ்விதத்திலும் மனித ஜீவன் மற்ற ஜீவ பிராணிகளைவிட உயர்ந்ததல்ல என்பதோடு —- பலவிதத்திலும் தாழ்ந்தது என்று சொல்ல வேண்டும்.

(30,31 ‘குடிஅரசு ‘ கட்டுரை — 3-9-1933)

32. தந்திரத்திலும் வஞ்சகத்திலும் மக்களின் அறியாமையினாலும், ஆட்சி செய்யும் அரசாங்கத்தை விட, துப்பாக்கியாலும் பீரங்கியாலும் ஆட்சி செய்யும் அரசாங்கம் மேலானது.

( பகுத்தறிவு—மலர்—4 இதழ் 3 – 1938 ஜ்ஊலை 1 இதழின் உள் அட்டையில் ஈ.வெ.ரா. மேற்கோள்)

33. நம் கடவுள் — சாதி காப்பாற்றும் கடவுள்

நம் மதம் — சாதி காப்பாற்றும் மதம்

நம் அரசாங்கம் — சாதி காப்பாற்றும் அரசாங்கம்

நம் இலக்கியம் — சாதி காப்பாற்றும் இலக்கியம்

நம் மொழி — சாதி காப்பாற்றும் மொழி

[நூல் : ‘சாதி ஒழிப்பு ‘ – 1961 – சென்னையில், 16-9-1961ல் சொற்பொழ்வு]

34. ஏனெனில், சமுதாய சீர்திருத்தம் என்றால் ஏதோ இங்கும், அங்கும் ஆடிப்போன, சுவண்டு போன, இடிந்துபோன பாகங்களைச், சுரண்டி, கூறுகுத்தி, மண்ணைக் குழைத்துச் சந்துபொந்துகளை அடைத்துப் பூசி மெழுகுவது என்றுதான் அநேகர் கருதி இருக்கின்றார்கள்.

ஆனால், நம்மை பொறுத்தவரை, நாம் அம்மாதிரித் துறையில் உழைக்கும் ஒரு சமுதாய சீர்திருத்தக்காரனல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம். மற்றபடி நாம் யார் என்றால் என்ன காரணத்தினால் மக்கள் சமுதாயம் ஏன் சீர்திருத்தப்படவேண்டிய நிலைக்கு வந்தது என்பதை உணர்ந்து, உணர்ந்தபடி மறுபடி அந்நிலை ஏற்படாமல் இருப்பதற்கு நம்மால் இயன்றதை செய்யும் முறையில், அடியோடு பேர்த்து அஸ்திவாரத்தையே புதுப்பிப்பது என்கின்றதான தொண்டை மேற்கொண்டிருக்கிறபடியால், சமுதாய சீர்திருத்தம் என்பதைப் பற்றி மற்ற மக்கள் அநேகர் நினைத்திருந்ததற்கு நாம் மாறுபட்ட கொள்கையையும், திட்டத்தையும், செய்கையையும், உடையவராய்க் காணப்படவேண்டிய நிலைமையில் இருக்கின்றோம்.

இதனாலேயேதான், பலவற்றில் உலகமக்கள் உண்டு என்பதை இல்லையென்றும்; சரியென்பதைத் தப்பு என்றும்; தேவையென்பதைத் தேவையில்லையென்றும்; கெட்டது என்பதை நல்லது என்றும்; நல்லது என்பதை கெட்டது என்றும்; காப்பாற்றப்படவேண்டும் என்பதை ஒழிக்க வேண்டும் என்றும்; மற்றும் பலவாறாக மாறுபட்ட அபிப்பிராயங்களைக் கூறுவோராக, செய்வோராகக் காணப்படவேண்டிய நிலையில் இருக்கின்றோம். ஆனால் நம் போன்ற இப்படிப்பட்டவர்கள் உலகில் நல்லப்பெயர் சம்பாதிப்பதும், மதிக்கப்படுவதும் பழிக்கப்படாமல்– குற்றம்சொல்லப்படாமல் இருப்பதும் அருமை என்பது மாத்திரம் நமக்கு நன்றாய்த் தெரியும்.

35 என்னைப் பொறுத்தவரை நான் கூறுவேனாகில், மனிதப்பிறவியானது ஒரு இலட்சியமற்ற பிறவி என்றே கூறுவேன். மனிதன் பிறக்கிறான், பற்பல எண்ணங்களை எண்ணுகிறான்; பலவகைகளை இச்சிக்கிறான்; எவ்வளவோ காரியங்களில் விருப்பம் கொண்டு அவைகளை நிறைவேற்ற முற்படுகிறான். ஒரு சிலவற்றில் ஆசை நிறைவேறுகிறது; மற்றவைகளில் ஏமாற்றம் அடைகிறான்; இறுதியில் செத்துப்போகிறான். மனிதன் பிறந்தது முதல் செத்துப்போகும் வரை இடையில் நடைபெறுபவைகள் எல்லாம் அவனின் சுற்றுசார்பு, பழக்க வழக்கம் இவைகளைப்பொறுத்து நடக்கின்றன. எனவே, மனித வாழ்வு இலட்சிய மற்ற வாழ்வு என்பது என் கருத்து. இதை அநேக அறிஞர்களும் ஒப்புக்கொண்டிருப்பதை பார்க்கிறேன். மேலும், இக்கருத்து யாராலும் மறுக்கமுடியாததாகும்.

பிறப்பும், இறப்பும் இயற்கையே. மனிதன் ஏன் பிறக்கிறான் என்று யாராவது கூற முடியுமா ? பிறந்து எதற்காக வாழ்கிறான், எதற்காக இறந்து போகிறான்– என்று யார் கூற முடியும் ? இதைக்கேட்டால் ‘அது கடவுள் செயல்; கடவுள் பிறப்பிக்கிறார்; காப்பாற்றுகிறார்; சாகடிக்கிறார் ‘ என்றுதான் கூறமுடியுமேதவிர, வேறு சரியான காரணம் கூற முடியுமா ? அவன் எந்த குறிப்பிட்ட இலட்சியத்தின் மீது பிள்ளைவேண்டுமென்று பிள்ளையைப் பெறுகிறான் என்றால் — எதற்காக பிள்ளைவேண்டும் என்பதை கூற முடியுமா ? அவன் எந்த குறிப்பிட்ட இலட்சியத்தின் மீது தனக்கு பிள்ளை வேண்டுமென்று முயற்சிக்கிறான் என்று அவனைக் கேட்டால் கூட தெரியாது.

(திருச்சி, பெரியார் ஆசிரியப் பயிற்சி பள்ளியில், 17-3-1956ல் சொற்பொழிவு– ‘விடுதலை ‘ 21-3-1956 )

36. பெண்கள் விடுதலை பெறுவதற்கு இப்போது ஆண்களைவிடப் பெண்களே பெரிதும் தடையாயிருக்கிறார்கள். ஏனெனில், இன்னமும் பெண்களுக்கு தாங்கள் முழு விடுதலைக்குரியவர்கள் என்கின்ற எண்ணமே தோன்றவில்லை. தங்களுடைய இயற்கைத் தத்துவங்களின் தன்மையையே தாங்கள் ஆண்களுக்கு அடிமையாகக் கடவுள் படைத்திருப்பதன் அறிகுறிகளாய்க் கருதிக்கொண்டிருக்கிறார்கள். எப்படியெனில், பெண் இல்லாமல் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம்; ஆனால் ஆண் இல்லாமல் பெண் வாழமுடியாதென்று ஒவ்வொரு பெண்ணும் கருதிக்கொண்டிருக்கிறாள். அப்படி அவர்கள் கருதுவதற்கு என்ன காரணம் என்று பார்ப்போமானால், பெண்களுக்குப் பிள்ளைகள் பெறும் தொல்லை ஒன்று இருப்பதால், தாங்கள் ஆண்கள் இல்லாமலேயே வாழ முடியும் என்பதை ருசுப்படுத்திக்கொள்ள முடியாதவர்களாயிருக்கிறார்கள். ஆண்களுக்கு அந்த தொந்திரவு இல்லாததால், தாங்கள் பெண்கள் இல்லாமல் வாழமுடியும் என்று சொல்ல இடமுள்ளவர்களாயிருக்கின்றார்கள். அன்றியும், அப்பிள்ளைபெறும் தொல்லையால் தங்களுக்குப் பிறர் உதவி வேண்டியிருப்பதால்–அங்கு ஆண்கள் ஆதிக்கம் ஏற்பட இடமுண்டாகிவிடுகின்றது. எனவே, உண்மையான பெண்கள் விடுதலைக்குப் பிள்ளை எனும் தொல்லை அடியோடு ஒழிந்து போக வேண்டும். அது ஒழியாமல் சம்பளம் கொடுத்துப் புருஷனை நியமித்துக் கொள்வதாயிருந்தாலும் பெண்கள் பொதுவாக உண்மை விடுதலை அடைந்துவிட முடியாது என்றே சொல்லுவோம்.

இம்மாதிரி இதுவரை வேறு யாரும் சொன்னதாகக் காணப்படாவிட்டாலும்—நாம் இதைச் சொல்லுவது பெரிதும் முட்டாள்தனம் என்பதாகப் பொதுமக்கள் கருதுவார்கள் என்று இருந்தாலும் —இந்த மார்க்கத்தைத் தவிர—வேறு எந்த வகையிலும் அவர்களுக்கு விடுதலை இல்லை என்கின்ற முடிவு நமக்குக் கல்லுப் போன்ற உறுதியுடையதாக இருக்கின்றது. சிலர் இதை இயற்கைக்கு விரோதம் என்றும் சொல்லலாம்.

உலகத்தில் மற்றெல்லாத் தாவரங்கள், ஜீவப் பிராணிகள் முதலியவை இயற்கை வாழ்வு நடத்தும்போது—மானிட வாழ்க்கையில் மாத்திரம் இயற்கைக்கு விரோதமாகவே, அதாவது பெரும்பாலும் செயற்கைத் தன்மையாகவே வாழ்வு நடத்தி வருகின்ற போது, இந்த விஷயத்தில் இயற்கைக்கு விரோதமாய் நடைபெறுவதில் ஒன்றும் முழுகிப் போய்விடாது.

தவிர, ‘பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்திவிட்டால் உலகம் விருத்தியாகாது; மானிட வர்க்கம் விருத்தியாகாது ‘ என்று தர்ம நியாயம் பேசச் சிலர் வருவார்கள். உலகம் விருத்தியாகாவிட்டால் பெண்களுக்கு என்ன நஷ்டம் ? மானிட வர்க்கம் பெருகாவிட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடும் ? அல்லது இந்த தர்ம நியாயம் பேசுபவர்களுத்தான் என்ன நஷ்டம் உண்டாகி விடும் ? என்பது நமக்குப் புரியவில்லை. இதுவரை பெருகி வந்த மானிட வர்க்கத்தால் மானிட வர்க்கத்திற்கு ஏற்பட்ட நன்மைதான் என்ன என்பதும் நமக்குப் புரியவில்லை.

( ‘குடிஅரசு ‘ தலையங்கம் 12-8-1928)


இறுதியில் சில வார்த்தைகள் :

1. இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள மேற்கோள்கள் 27,28 & 32 தவிர அனைத்தும் திரு.ஆனைமுத்து அவர்களைப் பதிப்பாசிரியராகக்கொண்டு ‘சிந்தனையாளர் கழகம், திருச்சிராப்பள்ளி, வெளியிட்ட ‘பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் ‘ என்ற நூலின் மூன்று தொகுப்புகளில் இருந்து எடுக்கப்பட்டவையே. அதுமட்டுமின்றி அவை கூற்றிடத்திலிருந்து (Context) பிய்த்தெடுக்கப்பட்டுள்ளன என்பதும் கவனிக்கப்படவேண்டும். முன்னமே சொன்னபடி எதையும் வழிந்து நிரூபிப்பது இதன் நோக்கமன்று. ஆர்வமுள்ள தோழர்கள் அத்தொகுப்புகளை ஆழமாகப் படிக்க வேண்டும். மேற்கோள்கள் இருக்கும் பக்க எண்களும் தரப்படவில்லை, முழுத் தொகுப்பையுமே படிப்பதுதான் பொருத்தம்.

2. இக்கட்டுரையின் முன்அநுமானங்களை ஏற்றுக்கொண்டாலும், கொள்ளாவிட்டாலும் தமிழகத்தில் அறிவார்த்தமாகவும், சமூக ரீதியாகவும் செயல்படுபவர்கள் பெரியாருக்கு உரிய கவனத்தை அளிக்காமலிருந்தால் அது குருட்டுத்தனமென்பதையும், மாற்றத்துக்காக செயல் படுபவர்கள் பொதுக் கருத்தியலில் அவர் ஏற்படுத்திய உடைப்பை பயன்படுத்திக் கொள்ளாமலிருப்பது கைகளை வெட்டிக்கொண்டு வேலைசெய்வதென்பதையும் துணிச்சலாகக் கூறலாம் என்றே தோன்றுகிறது.


Series Navigation