மயான பராமரிப்பாளர்

This entry is part [part not set] of 54 in the series 20090915_Issue

அ.முத்துலிங்கம்


உலகத்தை சுற்றி வரவேண்டும் என்று அவன் திட்டமெல்லாம் போட்டது கிடையாது. தற்செயலாக அது அமைந்தது. அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்கவேண்டுமென்று அவன் சொன்னதும் பயண முகவர்தான் அந்த புத்திமதியை வழங்கினார். அவர் ஓர் ஆப்பிரிக்கர். பார்த்தால் முட்டாள்போல தோற்றமளிப்பார் ஆனால் அதி புத்திசாலி. எப்பொழுதும் வயிற்றின் மேலே பை வைத்த ஒரு நீண்ட அங்கியை அணிந்திருப்பார். அதற்குள் வலது கையையும் இடது கையையும் ஒரே சமயத்தில் நுழைக்கலாம். ‘நீங்கள் உலகம் சுற்றும் டிக்கட் ஒன்று எடுங்கள். அதுதான் மலிவு’ என்றார். வலது கையை வெளியே எடுத்து நீங்கள் வலது பக்கத்தால் உலகை வலம்வரலாம். இடது கையை வெளியே எடுத்து நீங்கள் இடது பக்கத்தாலும் சுற்றி வரலாம். இரண்டும் ஒன்றுதான்’ என்றார்.
இரண்டும் ஒன்றல்ல என்பது அவனுக்கு தெரியும். சிறுவயதில் ’80 நாட்களில் உலகத்தைச் சுற்றி’ என்ற ஆங்கிலப் புத்தகம் அவனுக்கு பாட நூலாக இருந்தது. அதிலே கதாநாயகனாக வரும் ஃபிலியஸ் ஃபொக் என்பவர் 80 நாட்களில் உலகத்தைச் சுற்றி வரப்போவதாக பந்தயம் கட்டுவார். இங்கிலாந்திலிருந்து கிழக்கு நோக்கி இந்தியா, அமெரிக்கா என்று சுற்றி மறுபடியும் இங்கிலாந்துக்கு, அவர் கணக்குப்படி சரியாக 80 நாட்களில், திரும்பி வந்து சேருவார். உண்மையில் அவர் ஒரு நாள் முந்தி, 79 நாட்களில் உலகத்தை சுற்றி முடித்திருப்பார். மேற்கு நோக்கி உலகத்தை சுற்ற புறப்பட்ட மகெல்லன் அவருடைய மொத்த பயண நாள் கணக்கில் ஒரு நாளை கூட்டவேண்டி நேர்ந்தது. சர்வதேச தேதிக்கோட்டை தாண்டும்போது ஏற்படும் குழப்பம்தான் இதற்கெல்லாம் காரணம் என்பது அவனுக்கு தெரியும்.
லொஸ் ஏஞ்சல்ஸிலிருந்து புறப்படும் விமானம் இடையில் நிற்காமல் ஒரேயடியாக பறந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தை அடையும் என்று பயண முகவர் கூறியிருந்தார். அவன் புறப்பட்ட வெள்ளிக்கிழமை மாலை விமான நிலையம் பரபரப்பாக இயங்கியது. தரை தெரியாமல் பனி கொட்டியிருந்தபடியால் நூற்றுக்கணக்கான பனி அகற்றும் மெசின்கள் பெரும் இரைச்சலுடன் வேலைசெய்தன. தங்கும் அறை சிட்னிக்கு போகும் பயணிகளால் நிறைந்திருந்தது. அவர்கள் எல்லோருக்கும் ஒரு கஷ்டம் இருந்தது. லொஸ் ஏஞ்சல்சில் கடும் குளிர் ஆகவே பயணிகள் நீண்ட மேலங்கிகளும், தொப்பிகளும், கையுறைகளுமாகக் காட்சியளித்தனர். இதே பயணிகள் அவுஸ்திரேலியா போய் இறங்கியதும் அங்கே கோடைக்கால வெயில் வாட்டியெடுக்கும். ஆகவே அங்கே அணிவதற்கு மெல்லிய பருத்தி ஆடைகள் தேவைப்படும். இரண்டு கால நிலைகளுக்கும் பொருத்தமான ஆடைகளால் அவர்கள் ஆடைப்பெட்டிகள் நிரம்பி வழிந்தன.
அவனுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்தவருக்கு வயது 30 – 35 இருக்கும். முகம் அப்படிச் சொன்னது ஆனால் அவருடைய உடல் பருமன் சும்மா உட்கார்ந்திருக்கும்போதே அவரை ஆசு ஆசுவென்று மூச்சு விடவைத்தது. மேல்கோட்டு அணிந்திருந்தாலும் அவருடைய சேர்ட் பித்தான்கள் இறுக்கி பூட்டப்பட்டு, இடையில் காணப்பட்ட பிளவில் உள்சதை தெரிந்தது. அவருடைய மேல் கோட்டின் வலது கைவழியாக பாம்பு ஒன்று எட்டிப் பார்த்தது. அப்படி உடம்பில் பச்சை குத்திவைத்திருந்தார். அவர் கையை அசைக்க அசைக்க பாம்பு வெளியே வருவதும் உள்ளே போவதுமாக இருந்தது. அவருக்கு பக்கத்தில் ஐந்து வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை புதிய உடை, புதிய சப்பாத்து, புதிய மேலாடை, புதிய தொப்பி தரித்து உட்கார்ந்திருந்தது. பயிற்சி இல்லாத ஒருத்தர், பொருத்தமில்லாத ரிப்பனையும், நிறம் ஒத்துவராத காலுறையையும் அதற்கு அணிவித்து அலங்காரம் செய்திருந்தாலும் குழந்தையின் அழகு கொஞ்சம்கூடக் குறையவில்லை. சற்று நேரத்துக்கு முன்னர் குழந்தை அழுதிருக்கவேண்டும். கண் துடைத்து பளபளவென்று மின்னியது. குழந்தை அந்த மனிதருடைய கையை விடாமல் இறுக்கிப் பிடித்திருந்தது வினோதமாகப் பட்டது. அவரும் அடிக்கடி குனிந்து குழந்தையிடம் ஏதோ சொன்னார். அது சரியென்று தலையாட்டியது. அவர் தன்னுடைய கன்னத்தை தொட்டுக் காட்ட அந்த இடத்தில் முத்தமிட்டது.
ஏதாவது பேசவேண்டுமே என்பதற்காக ‘நீங்களும் சிட்னிக்கா பயணிக்கிறீர்கள்?’ என்று கேட்டுவைத்தான். என்ன கேள்வி இது? இடையில் ஓர் இடத்திலும் நிற்காமல் நேராகப் பறக்கும் குவாண்டஸ் விமானம் அது. ஒரு சம்பாசணையின் ஆரம்பக் கேள்விதான்.
‘சிட்னி பயணம் எனக்கு பிடிக்கும். நீண்ட தூக்கம் போட வசதியானது’ என்றார் அந்த தொக்கையான மனிதர்.
‘நான் தூங்கப் போவதில்லை. விமானம் சர்வதேச தேதிக்கோட்டை கடக்கும்போது ஒரு முழுநாள் மறைந்துவிடும் என்று சொன்னார்கள். ஆகவே முழித்திருப்பது என்ற தீர்மானத்தில் இருக்கிறேன்’ என்றான்.
‘ஓ, அப்படியா. நான் கிறீன்விச் நகரத்தில் மெரிடியன் கோடு கீறி வைத்திருக்கும் இடத்துக்கு சென்றிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் சரியாக ஒரு மணிக்கு கறுப்பு பந்து ஒன்றை கோபுரத்தின் உச்சியிலிருந்து போடுவார்கள். அதை பார்ப்பதற்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் அங்கே கூடுவார்கள்’ என்றார்.
‘பசிபிக் சமுத்திரத்தில் இரண்டு தீவுகள் பக்கத்து பக்கத்தில் இருக்கின்றனவாம். ஒன்றின் பெயர் சமோவா, மற்றதின் பெயர் ரொங்கோ. அந்த தீவுக¨rள சர்வதேச தேதிக்கோடு பிரிக்கிறது. சமோவாவில் திங்கள் காலை ஆறு மணி என்றால் ரொங்கோவில் செவ்வாய் காலை ஆறுமணி. ஐந்து நிமிட தூரம் மட்டுமே ஆனால் 24 மணிநேர வித்தியாசம். ஒரு விசித்திரம்தான்’ என்றான்.
‘இது எல்லாம் மனித மூளையில் உதித்த கற்பனைதான். கற்பனைக் கோட்டை நாங்கள் எங்கேயும் கீறி வைக்கலாம். இன்னும் ஒரு வாரத்தில் புதுவருடம் பிறக்கிறது, அதை உலகமே கொண்டாடும். புதுவருட நாள்கூட ஒரு கற்பனைதானே’ என்றவர் தன்னுடைய பைகளையும், சிறுமியையும் பார்த்துக் கொள்ளமுடியுமா, தான் பாத்ரூம் போகவேண்டும் என்று அவனைக் கேட்டார். அவன் தாராளமாக என்று சொன்னான். குழந்தை கைகள் இரண்டையும் முன்னே நீட்டி முறுக்கி கோர்த்துவைத்து அவனைப் பார்த்து சிரித்தது. அதனுடைய மணிக்கட்டுகள் மெலிந்து உடைந்து விழுந்துவிடும்போல இருந்தன. அவனுக்கு தன் குழந்தையின் ஞாபகம் வந்தது.

என்ன பேர் அம்மா உனக்கு?
டிலன்.
என்ன படிக்கிறாய்?
முதலாம் வகுப்பு.
இதுதான் உன் முதல் விமானப் பயணமா?
இல்லையே. பறந்திருக்கிறேனே.
அவுஸ்திரேலியாவுக்கு போயிருக்கிறாயா?
இல்லை. இப்போதுதான் அம்மாவிடம் போகிறேன். ஆனால் திரும்பி வரமாட்டன்.’
ஏன்? அப்ப அப்பா?
அவருடைய மயானம் இங்கேதானே இருக்கிறது.

அவனுக்கு திக்கென்றது. சின்னக்குழந்தையிடம் துருவித் துருவிக் கேட்பதற்கும் கூச்சமாகவிருந்தது. குழந்தை தலையை குனிந்து கண்களை மட்டும் உயர்த்தி அவனையே பார்த்தது.
அந்த நேரம் பார்த்து தகப்பன் மூச்சிரைக்க வந்து சேர்ந்தார். அவரைக் கண்டதும் இரண்டு வருடங்களாக பிரிந்திருந்ததுபோல குழந்தை அவரை நோக்கி ஓடிப்போய் கட்டிப்பிடித்தது. அவர் கையிலே அழகான ஒரு குழந்தை பொம்மை இருந்தது. பொன்தலை முடியும், நீலக் கண்களும், குட்டிக் கால்களும். குழந்தை ஆவலுடன் பொம்மையை வாங்கி தன் மடியிலே வைத்துக்கொண்டது.
‘டாடி உங்களுக்கு எப்படித் தெரியும். நான் இந்தப் பொம்மையை வாங்கவேண்டுமென்று கனவு கூட கண்டிருக்கிறேன். என்னுடைய வகுப்பு சிநேகிதிகளிடம் இது இருக்கிறது. முதுகு பட்டனை தட்டிவிட்டால் இது பாடும்.’ ‘தாங்யூ டாடி, தாங்யூ’ என்று எம்பி அவர் கன்னத்தில் குழந்தை முத்தமொன்று பதித்தது.
‘என்ன பெயர் வைப்பாய்?’ என்றார் தகப்பன்.
‘தெரியாது, டாடி. நான் நிறைய யோசிக்கவேண்டும்.’
குழந்தையின் முகத்தில் பூரணமான சந்தோஷம். அது அந்த பொம்மையை தாலாட்டுவதும், அதனுடன் பேசுவதும், அதை தூங்கவைப்பதுமாக விளையாடியது. அவர் குழந்தையிடம் ஏதோ சொல்ல அது பக்கென்று சிரித்தது. இரண்டு கைகளையும் நீட்டி குழந்தையை பரிவுடன் தடவிக் கொடுத்தபடி அவன் பக்கம் திரும்பி ‘இவளுடைய தாயார் அவுஸ்திரேலியாவில் இருக்கிறார். அவரிடம் நான் இவளை ஒப்படைக்கவேண்டும். கோர்ட் உத்திரவு’ என்றார்.
விமானத்தில் பயணிகள் ஏறவேண்டும் என்ற அறிவிப்பு ஒலித்தது. அந்தக் குழந்தை தன் பையையும், பொம்மையையும் தூக்கிக்கொண்டு தகப்பனுடன் புறப்பட்டது. விமானப் பணிப்பெண் அவர்களுக்கு சரியான இருக்கைகளை அடையாளம் காட்டி உதவினாள். மிகப்பெரிய விமானம் அது. எங்கே முடிகிறது என்பதே தெரியவில்லை. அவனுக்கு பக்கத்து இருக்கையில் மூதாட்டி ஒருவருக்கு இடம் கிடைத்தது. மறுபுறத்தில் குழந்தையின் தகப்பன். யன்னல் கரை இருக்கையில் குழந்தை உட்கார்ந்து அடுத்த நிமிடமே பொம்மையின் தலைமயிரை குலைத்து விதவிதமான அலங்காரம் செய்து விளையாடத் தொடங்கியது.
விமானத்தின் ஆரவாரம் அடங்கியதும் அவன் ‘உங்களுக்கு குழந்தையை விட்டு பிரிந்திருப்பது கஷ்டமாக இருக்குமே?’ என்றான்.
‘என்ன செய்வது? கடந்த ஒருவருடமாக குழந்தை என்னிடமே வளர்ந்தது’ என்றார்
‘அதற்கு முன்னர்?’
‘மனைவியும் என்னுடன் இருந்தார். ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம்போல என் மனைவி நடைப்பயிற்சிக்கு புறப்பட்டு போனவர் திரும்பி வரவேயில்லை.’
‘ஏன் அப்படிச் செய்தார்?’
‘அதுதான் இன்றுவரை யாருக்கும் தெரியாது. நாங்கள் பொலீசுக்கு அறிவித்தோம். பகல் முழுக்க அவர் போன ரோட்டிலும், சுற்றியிருக்கும் பார்க்கிலும், காட்டிலும், ஆற்றிலும்கூட தேடினோம்.
‘என்ன கண்டுபிடித்தீர்கள்?’
‘அன்று இரவே எனக்கு காரியம் துலங்கிவிட்டது. என்னுடைய மனைவி மற்றவருக்கு ஆச்சரியம் தருவதற்கென்றே பிறந்தவர். படுக்கையறையில் அவருடைய உடுப்புகளையும், காலணிகளையும் காணவில்லை; பாஸ்போர்ட்டும் மறைந்துவிட்டது. உடனேயே பொலீசாருக்கு தகவல் கொடுத்தேன். ஆனால் உண்மையான அதிர்ச்சிக்கு நான் அடுத்தநாள் மத்தியானம்வரை காத்திருக்கவேண்டியிருந்தது.’
‘என்ன நடந்தது?’
‘வங்கி சேமிப்பில் இருந்த அத்தனை பணத்தையும் அவர் எடுத்துப் போயிருந்தார். 20,000 டொலர்களுக்கு மேலே.’
‘திட்டமிட்டு செய்ததுபோல இருக்கிறதே!’
‘திட்டமிடுவதற்கு என் மனைவியிலும் பார்க்க சிறந்தவர் இந்த உலகத்தில் கிடையாது. விலகுவதற்கு ஆறுமாதம் முன்பே அவர் திட்டமிட்டுவிட்டார். உடைகளையும், நகைகளையும், காலணிகளையும், கைப்பைகளையும் ஒவ்வொன்றாக வெளியேற்றி எங்கேயோ சேகரித்து முன்பே சூட்கேசில் அடைத்து வைத்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை காலை குழந்தையை அலங்கரித்து தயாராக இருக்கும்படி சொல்லிவிட்டுத்தான் நடைப்பயிற்சிக்கு புறப்பட்டார். அவர் திரும்பியதும் அவளை பூங்காவுக்கு கூட்டிப்போவதாக சொல்லியிருந்தார். அது சும்மா எங்களை திசை திருப்புவதற்கு. மகளும் வெளிக்கிட்டு காத்துக்கொண்டு மாலைவரை வாசலில் நின்றாள். மனைவியோ அந்த நேரம் விமானத்தில் அவுஸ்திரேலியாவுக்கு பறந்துகொண்டிருந்தார்.’
‘மிகக் கொடூரமாக இருக்கிறது.’
‘இன்னும் இருக்கிறது. அவரிடம் இருபதுக்கு மேற்பட்ட கடன் அட்டைகள் உண்டு. எல்லாமே என் பெயரில்தான். நான் தான் பணம் கட்டவேண்டும். அவர் போனபிறகும் பில்கள் வந்தபடி இருந்தன. அவற்றுக்கு பணத்தைக் கட்டி அட்டைகளையும் ரத்து செய்தேன். அவர் புது அட்டைகளை உண்டாக்கினார். அவற்றுக்கும் பணம் கட்டினேன். மணவிலக்கு கிடைத்த பிறகுதான் கொஞ்ச நிம்மதி எனக்கு கிடைத்திருக்கிறது.’
‘நீதி மன்றத்தில் முறையிடவில்லையா?’
நீதிமன்றம் எப்பவும் பெண்கள் பக்கம்தானே. உங்களுக்கு தெரியுமா, அவருடைய வழக்கறிஞருக்கும் நான்தான் பணம் கட்டினேன்.’
‘அநியாயமாக இருக்கிறதே! உங்கள் மனைவி வேலைக்கு போவதில்லையா?’
‘என்னிலும் உயர்ந்த படிப்பு அவருக்கு. ஆனால் வேலை செய்யப் பிடிக்காது. புருசனின் வேலை பெண்ணை பராமரிப்பது என்று அவர் நினைக்கிறார்.’
‘எதற்காக வீட்டை விட்டு ஓடினார் என்றாவது கூறினாரா?’
‘நான் சம்பாதிப்பது அவருக்கு போதவில்லை என்று நினைக்கிறேன். மயானங்களை சுத்தமாக வைத்திருக்கும் ஒப்பந்தம் எடுப்பது என் தொழில். 20 பேர் என்னிடம் வேலைசெய்கிறார்கள். 12 மயானங்கள் வைத்திருக்கிறேன். வீட்டுக்கு வரும்போது தினம் என்மேல் பிணவாடை அடிக்கிறது என்று குற்றம் சொல்வார். என் அருகே நிற்கும்போது பல தடவை அவர் மூச்சைப் பிடித்துக்கொண்டு நிற்பதை நான் அவதானித்திருக்கிறேன்.’
‘நீங்கள் பொறுமையானவர்.’
‘அது உண்மைதான். என் வாழ்க்கையிலேயே அதிமகிழ்ச்சியான நாட்களை கடந்த ஒரு வருடத்தில்தான் நான் அனுபவித்திருக்கிறேன். ஓடும் தண்ணீரில் முகம் பார்க்கமுடியாது. இப்போதுதான் எல்லாம் ஓய்ந்து நிம்மதியாக இருக்கிறேன்.’
‘மனைவியிடம் உங்களுக்கு வருத்தம் இல்லையா?’
‘என்ன வருத்தம்? இறப்பில் எல்லா மனிதரும் சமம். அடையாளம் இல்லாத புதைகுழிகள் பலதை நான் பார்த்திருக்கிறேன். அந்தப் புதைகுழிகளை நிரப்பியவர்கள் இறந்தபோது அவர்களுக்கு கூட்டம் இல்லை; பிரார்த்தனை இல்லை; மலர் வளையம் இல்லை. ஒரேயொரு சின்னப் பத்திரம்தான் அவர்கள் இந்தப் பூமியில் தரித்ததற்கான அடையாளம். அவர்கள் புதைகுழிகளை நான் அதே கவனத்துடன் பராமரிக்கிறேன். இறந்துபோனவர்கள் சமம் என்னும்போது இருப்பவர்களும் சமம்தானே. என் மனைவியை நான் இன்னமும் நேசிக்கிறேன் என்றுதான் நினைக்கிறேன்.’
‘நேசிக்கிறீர்களா?’
‘நேசிப்பதற்கு காரணமே தேவையில்லை, நண்பரே.’

விமானம் உயரத்தில் பறந்து சமநிலையை அடைந்துவிட்டிருந்தது. நீண்ட பயணம் என்பதால் மூன்று திரைப்படங்கள் திரையிடப்போவதாக அறிவித்திருந்தார்கள். பாடுவதுபோல இனிமையான குரலில் பேசிய பணிப்பெண்கள் சுறுசுறுப்பாக உணவு பரிமாறினார்கள். என் பக்கத்திலிருந்த மூதாட்டி உணவு வேண்டாம் என்றுவிட்டார். தகப்பனும் மகளும் தங்கள் தெரிவுகளை பணிப்பெண்ணிடம் சொன்னார்கள். உணவு உண்ணும்போதுகூட குழந்தை பொம்மையை விட்டு பிரியவில்லை. தகப்பன் விமானப் பணிப்பெண்ணிடம் தனக்கு வெள்ளை வைன் கொண்டுவரும்படி பணித்தார். பக்கத்தில் இருந்த மகளை போர்வையால் மூடி ‘இனி போதும், படு கண்ணே’ என்றார். நீண்டு வளைந்த கிளாஸில் அவர் ரசித்து வைன் குடிப்பதை அவன் பார்த்தபோது அவருடைய மூக்கு மிகப் பெரிதாகிவிட்டதுபோலத் தோன்றியது. அவனுடைய பக்கம் திரும்பி ‘நீங்கள் திரைப்படத்தை பாருங்கள். நான் தூங்கப்போகிறேன். நாளைக் காலை சந்திப்போம்’ என்று கூறிவிட்டு இருக்கையை பின்னால் சாய்த்து கண்ணை மூடினார்.
ஹடாரி அவன் ஏற்கனவே பார்த்திருந்த திரைப் படம். அதன் ஆரம்ப காட்சிகள் திகைப்பூட்டின. காண்டாமிருகத்தை பலமுறை துரத்தி தோல்வியடைந்து கடைசியில் பிடித்துவிடுகிறார்கள். யானைக்குட்டி ஒன்றை துரத்திக்கொண்டு கதாநாயகி ஓடுகிறாள். திடீரென்று யானைக்குட்டியை விட்டுவிட்டு அவன் முகத்துக்கு கிட்டவாக குனிகிறாள். பிடரியோடு வெட்டிய தலைமுடி. சிறுமி போன்ற தோற்றம். வசீகரமான கண்கள். என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்கிறாள். உணவுத் தட்டில் உருண்டை ரொட்டி, முட்டைப்பொரியல், வேகவைத்த தக்காளி, பச்சைக் காளான், மஞ்சள் நிறமான தோடம்பழச் சாறு இருந்தது. அப்பொழுதுதான் அவனுக்கு நினைப்பு திரும்பியது. விடிந்துவிட்டது. யன்னல் வழியாக மஞ்சள் வெளிச்சம் பாய்ந்து வந்துகொண்டிருந்தது. வெள்ளி இரவு புறப்பட்ட விமானம் ஓர் இரவில் ஞாயிற்றுக்கிழமையை அடைந்துவிட்டது. ஒரு முழு சனிக்கிழமைக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை.
அவனுக்கு உணவில் மனம் செல்லவில்லை. பக்கத்து இருக்கையில் தகப்பன் இரண்டு கைகளையும் பாவித்து உணவை வாய்க்குள் செலுத்திக் கொண்டிருந்தார். சிறுமி ஆழ்ந்த நித்திரையிலிருந்தாள். அவளுடைய திறந்த வாயில் ஒரு மயிர்க்கற்றை விழுந்து கிடந்தது. பொம்மை அவள் நெஞ்சில் உறங்கியது. அவளுடைய உடம்பு மூன்று இடங்களில் தகப்பனை தொட்டுக்கொண்டிருந்தது. ‘உங்கள் மகளின் கண்களில் இன்னும் துயரம் நிரம்பியிருக்கிறது. ஓர் ஐந்து வயதுப் பெண்ணின் கண்களில் நான் இவ்வளவு பாசத்தை கண்டதில்லை’ என்றேன். அவர் குழந்தையின் தலையை அன்புடன் தடவிக் கொடுத்தார். ‘இவள் தாய் இவளை நல்லாக வளர்ப்பாள்.’
‘சர்வதேச தேதிக் கோட்டை விமானம் கடந்தபோது விமான ஓட்டி ஒலிபெருக்கியில் அதை அறிவித்தார். பயணிகள் கைதட்டி ஆரவாரித்தார்கள். சிலர் தங்கள் கைக்கடிகாரங்களை ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றினார்கள்’ என்றார்
‘அப்படியா’ என்றான் அவன்.
‘நீங்கள் அப்போது ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தீர்கள்.’
‘பாருங்கள். ஆவலாகத் திட்டம்போட்டேன், எனக்கு பார்க்க வாய்க்கவில்லை.’
‘நீங்கள் துக்கப்படக்கூடாது. ஓர் அறிஞர் சொன்னார், இன்றைக்கு உலகம் அழியப் போகிறது என்று பயம் கொள்ளாதே. அவுஸ்திரேலியாவில் ஏற்கனவே ‘நாளைக்கு’ நடந்து கொண்டிருக்கிறது என்று. ஆகவே நானும் மகளை நினைத்து கவலைப்படப் போவதில்லை. தினம் சூரியனை நான் பார்க்கும் முன்பு என் மகள் அதை சிட்னியில் பார்த்துவிடுவாள். எந்த சர்வதேச தேதிக் கோட்டினாலும் எங்களை பிரிக்கமுடியாது.’
‘மகளைப் பிரிந்து வாழ்வதற்கு உங்களை தயார் செய்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.’
அவர் உடனே பதில் சொல்லவில்லை. தன் உணவுத் தட்டத்திடம் ஆலோசனை கேட்பதுபோல அதையே உற்றுப் பார்த்தார்.
‘எனக்கு இப்பொழுது வயது 33. யேசுவை சிலுவையில் அறைந்த வயது. என்னுடைய சிலுவை இந்தப் பிரிவுதான். இதை நான் என் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் காவுவேன்.’

ஒரே இடத்தில் இருந்துகொண்டு அனைத்தையும் உண்ணும் எருது என்று ஒரு பழைய பாடல் உண்டு. அது போல இருக்கையில் அமர்ந்தபடி ஓர் அடி நகராமல் 400 பயணிகளும் இரவு உணவு, காலை உணவு, மதிய உணவு என்று சகலதையும் முடித்துக்கொண்டனர். பொம்மை பாடும் பாட்டை திருப்பி திருப்பி குழந்தை கேட்டது. இடைக்கிடை தகப்பன்மேல் பாய்ந்து கைகளைக் குவித்து ஏதோ ரகஸ்யம் பேசியது. விமானம் லயம் மாறி கீழே இறங்கத் தொடங்கியது. இன்னும் சில நிமிடங்களில் தரை தொட்டுவிடும் என்று விமானி அறிவித்தார். வாழ்நாள் முழுக்க அவனை நினைவில் வைக்க விரும்புவதுபோல அவன் கையை இறுக்கிப் பிடித்து விடைகொடுத்தார். எதிர்பாராத விதமாக குழந்தை தகப்பனிடம் மெள்ள ஏதோ சொல்லி சிணுங்க ஆரம்பித்தது. தகப்பன் அதற்கு ஆறுதல் வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தார்.
குடிவரவு, சுங்கம் கடவைகளை தாண்டி அவன் தன் பயணப்பெட்டிகளை தள்ளுவண்டியிலே வைத்து தள்ளிக்கொண்டு போனபோது வரவேற்பாளர்களைச் சந்திக்கும் இடத்தில் மறுபடியும் அவர்களைக் கண்டான். தகப்பனுக்கும் மகளுக்கும் ஆரம்பித்த விவாதம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. மாறாக உச்சநிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. குழந்தை இரண்டு கால்களையும்யும் பரப்பி வைத்து அங்கேயே நெடுநாட்களாக தங்க திட்டமிட்டது போல நின்றது. மயான பராமரிப்பாளர் தன் பெரிய உடம்பை வளைத்து, குனிந்து அவளுடைய மஞ்சள் தலைமுடியுடன் கெஞ்சுவதுபோல பேசினார்.
‘ஹனி, இதுதான் நாங்கள் ஒன்றாயிருக்கும் கடைசி ஐந்து நிமிடம். நான் உனக்கு பொய் சொன்னேன் என்ற நினைப்போடு நீ போகக்கூடாது. அப்படிப் போனால் அதை சரி செய்ய எனக்கு சந்தர்ப்பமே கிட்டாது.’
‘சனிக்கிழமை முழுக்க என்னுடன் இருக்கப்போவதாக சொன்னாய்?’
‘இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை.’
அந்த இரண்டு வார்த்தைகளையும் அப்பொழுதுதான் முதன்முதலாக கேட்பதுபோல குழந்தை குழப்பத்துடன் அவரைப் பார்த்தது.
‘அந்த சனிக்கிழமை உனக்கு கிடைக்காது. அது போய்விட்டது. என்றென்றைக்குமாக.’
‘நீ பொய் சொன்னாய்.’
‘இல்லை. நீ பெரியவளானதும் ஒருநாள் புரிந்துகொள்வாய். இனி அம்மாதான் உனக்கு எல்லாம். அவர் வந்தவுடன் சிரித்துக்கொண்டு போகவேண்டும். சரியா. எங்கே சிரி.’
அந்தக் குழந்தை புறங்கையால் துடைக்க துடைக்க கண்களில் நீர் பெருகிக்கொண்டே வந்தது.
‘டாடி, என்னுடைய பிறந்தநாள் உனக்கு ஞாபகம் இருக்குமா?’
‘இருக்கும் கண்ணே, அதை மறப்பேனா?’
அப்பொழுது தூரத்தில், விளம்பரங்களில் வருவதுபோன்ற அழகான பெண், கூந்தல் பின்னுக்கு எழும்பி எழும்பி விழ, குதிக் காலணியில் டக்டக்கென்று கத்தரிக்கோல் போல நடந்து வந்தாள். மண்புழுவின் நிறத்தில் அவள் சருமம் இருந்தது. நடு வயிற்றை தொடும் நீளமான முத்துமாலை. மெல்லிய சாம்பல் ஆடையின் இரண்டு கழுத்து பித்தான்களையும் திறந்து விட்டிருந்தாள். பார்த்தவுடனேயே அவள்தான் தாயென்று தெரிந்தது. அவள் உடல் அசைவு, இனிய சுபாவத்துடன் ஒத்துப் போகாதது. மயானம் பராமரிக்கும் மனிதருக்கும் இந்தப் பெண்ணுக்கும் ஒருவித பொருத்தமும் இல்லையென்று அவனுக்கு தோன்றியது. இருவரும் ஒரேயொரு சொல் பரிமாறிக் கொண்டார்கள்.
ஹலோ
ஹலோ
குழந்தையின் முதுகில் ஒரு விரலை வைத்து அம்மாவின் முன் தள்ளினார். அந்தக் குழந்தையின் உடம்பு சுருங்கியது. உயரம் சரி பாதியானது. தோள்மூட்டுகள் உயர்ந்து காதுகளை மறைத்தன. மயானம் பராமரிப்பவர் மறுபடியும் ஒருமுறை குழந்தையின் இரண்டு கன்னங்களிலும் கையை வைத்து அள்ளமுயன்றார். முடியவில்லை. சாதாரண முத்தம் ஒன்றைக் குழந்தைக்கு கொடுத்துவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டார்.
ஒரு கையில் பொம்மையையும், மறுகையில் நீளமான கைப்பிடி வைத்த பையையும் பிடித்துக்கொண்டு, அது காலிலும் தரையிலும் இடற, குழந்தை அவசரமாக தாயை பின் தொடர்ந்தது. திடீரென்று நின்று, தானியத்தை கொத்துவதற்கு குருவி தயங்குவதுபோல யோசித்தது. தகப்பனிடம் திரும்பிவந்து பொம்மையை கொடுத்து, ‘நீயே வைத்திரு’ என்று சொன்னது.
‘சரி, நான் பொம்மைக்கு உன் ஞாபகமாக நல்ல பெயர் சூட்டுகிறேன். I will call her Saturday.’ (நான் அவளை சனிக்கிழமை என்று அழைப்பேன்.) வலது கையை தூக்கி அவர் ஆட்டியபோது பாம்பும் ஆடியது. குழந்தை பதில் பேசவில்லை. முகத்தை திருப்பி ஓர் அமெரிக்க குழந்தை ஆம் என்று சொல்வதற்கு எப்படி தலையசைக்குமோ அப்படி அசைத்தது.

END

Series Navigation

அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கம்