This entry is part [part not set] of 30 in the series 20090423_Issue
ஒளியவன்
மழைத் துளி மேலே பட்டதாய் உணர்ந்தான். மயக்கம் தெளிந்து மெல்ல கண்விழித்தான். சுற்றிலும் யாரும் இல்லை… யார் தண்ணீர் ஊற்றியது என்று குழம்பிக் கொண்டே, தனது முகத்தை துடைத்தான் மாயன். அது தண்ணீரல்ல, காகையின் எச்சம் எண்பதை உணர்ந்தான். மெல்ல மெல்ல கை ஊன்றி எழுந்தான்.
பசிக்கொடுமை தாங்காது வயிறு புறமுதுகிட்டு ஓடியது, புறமுதுகையே தொட்டுவிட்டது. செங்கல் சூளையில் நிற்பது போன்ற வெப்பம் அவன் உடலெங்கும் பிய்த்தது. சற்றே நினைவுகூர்ந்தான், எதற்கு மயங்கினோம்? மேலே சூரியனை ஏறிட்டுப் பார்த்ததும் மயங்கிவிட்டோம் என்பதை உணர்ந்தான்.
அவன் நாக்கு மேல்வாயில் ஒட்டிக் கொண்டது. அப்படியே தொடர்ந்து நடந்தான். அவனது சரும வெடிப்பு தரையில் தண்ணீரின்றி வந்த வெடிப்புகள் போலவே இருந்தன. தண்ணீர் தண்ணீர் என்று முணங்கிக் கொண்டே நடந்தான். இரண்டு மணி நேரம் நடந்தான். வரும் வழியில் ஓய்வெடுக்க ஒரு மரத்தில் கூட இலைகளே இன்றி இருந்தது. ஒரு சில மரமும் கருகிய நிலையில் நின்று கொண்டிருந்தது. அதற்கு மேல் அடியெடுத்து வைக்க முடியாது விழுந்தான் மாயன். அவனை அங்கிருந்த மூன்று பேர் தூக்கிக் கொண்டு போய் அருகிலிருந்த வீட்டுத் திண்ணையில் கிடத்தினார்கள்.
“ஏய் இங்க வா புள்ள, இந்தா ஒரு ஆளு உசுரு போறாப்புல இருக்கு, கொஞ்சம் அத எடுத்துட்டுவா” என்றான் கூட்டத்திலிருந்த ஒருவன். “நீ பாட்டுக்கு போற வர்றவனையெல்லாம் இழுத்துட்டு வந்துகிட்டு இருக்க, குடுக்குறதுக்கு நான் எங்க போறது. ஊரே தண்ணி இல்லாம செத்துகிட்டு கெடக்கு…” என்று கூறிக் கோப்பை நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்தாள். அருகில் வந்ததும் அலறிக் கத்தினாள்… “அப்பா, அப்பா” என்று அலறினாள்.
“ஏய் இந்தா புள்ள, இது ஒ அப்பனா? நல்லா பாத்து சொல்லுடி” என்றான் அவள் கணவன் ராசு. “என்னத்த சொல்லுவேன், இப்படி வந்து கெடக்காகளே, நான் என்னத்த சொல்லுவேன். இருக்குறத குடிச்சுட்டு அவுகளாவது நிம்மதியா இருக்கட்டும்னுதானே வீட்ட விட்டு ஓடியாந்தேன், இப்படி ஒடிஞ்சு போயி கெடக்காகளே, நான் என்ன பண்ணுவேன்” என்று புலம்பிக் கொண்டே இருந்தாள். அவள் கையிலிருந்த கோப்பையை வாங்கி அவர் வாயில் தண்ணீர் ஊற்றினான் ராசு. மாயனுக்கு மெல்ல மெல்ல மயக்கம் தெளிஞ்சுது.
இலைகளைனூடே பாயும் கதிர் போல வரண்டு போன இமைகளினூடே பொறுமையாய் பார்த்தான் மாயன். அவனுக்கு எங்கிருக்கிறோம் என்ற பிரக்ஞை இல்லாமலிருந்தது. உற்றுப் பார்த்தான், அது அவள் மகள் இந்திரா போல தெரிந்தது. “இந்திரா இந்திரா” என்று முணங்கினான். அவள் மாயனை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு அழுதாள், “அம்மா எங்கப்பா, அம்மா எங்க” என்றாள்.
புற்றுக்குள் மறைந்திருக்கும் பாம்பு வெளி வருவதைப் போல கொஞ்சம் கொஞ்சமாய் நினைவு வந்தது மாயனுக்கு. “உன் அம்மா பட்டினியா இருக்கா, ஏதாச்சும் கெடைக்குமானுதான் நான் இம்புட்டு தூரம் நடந்தாந்தேன். நான் வூட்டுக்குப் போகணும் வூட்டுக்குப் போகணும்” என்று சொல்லிக் கொண்டே மேலெழுந்தான்.
“இருப்பா, எலிக்கறி இருக்கு சாப்பிட்டுட்டு, அம்மாக்கு ஒரு எலிக்கறி கொண்டு போப்பா. இந்த பிளாஸ்டிக் பையில் ஒரு டம்ளர் தண்ணி இருக்கு, இதையும் கொண்டு போப்பா” என்று குரல் கரகரத்துக் கூறினாள் இந்திரா. மாயன் அதையெல்லாம் பொருட்படுத்தாம “அஞ்சல, அஞ்சல” என்று அவர் மனைவியின் பெயரை உரக்கக் கூவினார்….
தான் இவ்வளவு நேரம் கனவு கண்டதை உணர்ந்த மாயன் மெல்ல எழுந்து அமர்ந்து கொண்டு சன்னல் வழியே பின்னால் இருந்த தோப்பை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். அஞ்சலை அவனருகே வந்து “தண்ணிய குடிச்சுட்டு தூங்குங்க, நாளைக்கு வெடிய காலையில தோப்ப அந்த கூல்டிங்க்ஸ் காரனுக்கு முடிச்சுக் கொடுக்கப் போகணும்ல” என்றாள்.
தண்ணீர் ஒரு செம்பு நிறைய குடித்துவிட்டு, கட்டிலில் சாய்ந்து கொண்டே மெதுவாய் அஞ்சலையிடம் சொன்னான், “நாம, நம்ம தோப்பை விக்க வேணாம், அது இருக்கட்டும்…” என்று கூறிக் கொண்டே கண் மூடினான்.
This entry is part [part not set] of 45 in the series 20040916_Issue
அலர்மேல் மங்கை
ஹாலில் நுழைந்த போது, தோப்புக் குத்தகைக்கார சாயபு, தாத்தாவின் காலருகே அமர்ந்திருந்தார்.
தாத்தா அருகே நாற்காலி கிடந்தாலும் சாயபு ஒரு நாளும் அதில் அமர்ந்ததில்லை. எப்போதும் தாத்தாவின் காலடியில்,
கீழேதான் அமருவார்.
சீதாவைக் கண்டவுடன் புன்னகையுடன்
‘சுகமாருக்கீங்களாம்மா ? ‘ என்றார். எத்தனை நாட்களாகி விட்டது சாயபுவைப் பார்த்து! அவளுக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து அவரைப்
பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள். அவளுக்குத்தான் காலமும், பருவமும் கடந்ததே தவிர, அவர் அப்படியேதான் இருந்தார். அவருக்கு வயதே ஆகாதோ என்னவோ! சாயபு ஆறடி உயரம், நல்ல பருமன். தியாகராஜ பாகவதர் முடியமைப்பு. ஆனால் உருவத்துக்குப் பொருந்தாத குழந்தை முகம். அந்தக் களையான கரிய முகத்தில், பல் வரிசை பளீரென்றிருந்தது. சிரிப்பில் அதீத கவர்ச்சி.
தாத்தாவின் முகம் இறுகியது. சீதா தாத்தா அருகே கிடந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.
‘என்ன விஷயம் சாயபு ? மாம்பழம் கொண்டாந்தீங்களா ? ‘
சாயபு சிறிது நேரம் ஒன்றும் கூறாமல் தலையைக் குனிந்தவாறே அமர்ந்திருந்தார். சீதா தாத்தாவைப் பார்த்தாள். தாத்தா கண்கள் மூடியிருந்தன. பக்க வாதம் வந்து மீண்டதில் இருந்து தாத்தாவின் முகத்தில் களைப்பும், வயதும் அதிகமாகத் தெரிந்தது. சீதா தாத்தா அருகே சாய்ந்து தாத்தாவின் கரங்களைத் தொட்டாள். அவருடைய கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. லேசாகப் பயமெழ,
‘தாத்தா… ‘ என்றாள். தாத்தா, உடன் கண்களைத் திறந்து, ‘என்ன ? ‘ என்பது போலப் பார்த்தார். பக்க வாதம் வந்தது முதல் பேசுவது குறைந்திருந்தது.
‘ஒண்ணுமில்ல..சும்மாத்தான் கூப்பிட்டேன். ‘
‘என்ன பயந்திட்டியா ? ‘ தாத்தா சிரித்தார்.
சீதா ஒன்றும் கூறாமல் அமர்ந்திருந்தாள். தாத்தா சாயபுவைப் பார்த்து விட்டு, சீதாவைப் பார்த்தார்.
‘பக்க வாதம் வந்ததே, அப்படியே போயிருந்தால் நல்லா இருந்திருக்கும்.. ‘ தாத்தா நடுங்கும் குரலில் பேசினார். சாயபு திடுக்கிட்டவராகத் தலை நிமிர்ந்தார். சீதாவுக்கு அழுகை வந்தது. எங்கே எதுவும் பேச வாயெடுத்தால் அழுகை வந்து விடுமோ என்று பயந்தவளாகப் பேசாமல் இருந்தாள்.
‘என்னய்யா இப்படிப் பேசுறீக ? நல்லால்லை இந்தப் பேச்சு.. ‘ என்றார் சாயபு. சீதாவைத் திரும்பிப் பார்த்த அவர் கண்களில் கோடாகக் கண்ணீர்!
‘என்ன சாயபு ? தாத்தா முன்னால போய் அழுதுகிட்டு ? கண்ணைத் துடைங்க முதலில்.. ‘ என்றாள் கண்டிப்பாக. சாயபு கண்களைத் துடைத்துக் கொண்டார். தோளில் கிடந்த துண்டை எடுத்து முகத்தையும் துடைத்துக் கொண்டார்.
‘என்ன சாயபு ? என்ன ஆச்சு ? ‘ என்றாள்.
‘ பாப்பா, என்னத்தச் சொல்ல ? உங்கப்பா தோப்பைக் கிரயத்துக்குப் பேசிக்கிட்டிருக்காஹ… ‘ சாயபுக்கு மீண்டும் கண்கள் கலங்கியது. சீதாவுக்குக் தூக்கி வாரிப் போட்டது. தோப்பை விற்பதா ? சாயபுக்குக் கிறுக்குப் பிடித்து விட்டதா ?
‘ என்ன சாயபு சொல்றீங்க ? யார் சொன்னது தோப்பை விற்கிறதா ? ‘
அவள் திருமணமாகிப் போன இந்த ஆறு மாதங்களில் என்னென்ன நடக்கிறது ? தாத்தா பக்க வாதத்தில் இருந்து மீண்டு வந்த சில நாட்களில் தோப்பை விற்கும் பேச்சை எடுப்பது யார் ? பாட்டி சாயபுக்கு மோர் கொண்டு வந்தாள். சாயபு மோரைக் குடிக்கும் வரை மெளனமாக இருந்தாள். ஆனால் உள்ளே சூறாவளி அடித்துக் கொண்டிருந்தது. சாயபு மோரைக் குடித்து விட்டு மீண்டும் துண்டால் வாயைத் துடைத்துக் கொண்டார்.
தாத்தவிடமிருந்து ஒரு ஹூங்காரம் வெளிப்பட்டது. மனதில் சுறு சுறுவென்று கோபமும், ஆத்திரமும் புகைய, பாட்டியைப் பார்த்தாள்.
‘இதெல்லாம் என்ன பாட்டி ? இப்ப எதுக்குத் தோப்பை விற்கணும் ? ‘
பாட்டி அவளருகே இருந்த இன்னொரு நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். பாட்டிக்கும் மனது வலித்திருக்க வேண்டும். ஆனால் அவள் மகன் செய்யும் எந்த ஏற்பாடும் உலகின் தலை சிறந்த ஏற்பாடு என்று நம்பினாள்.
‘பின்ன என்ன செய்ய ? இப்பவே ஊரெல்லாம் பேச்சாப் போச்சு. தாத்தாவுக்குப் பின்ன மகன் சொத்தையெல்லாம் எப்படிக் கவனிக்கப் போறான்னு ? அப்ப தாத்தா இருக்கும் போதே விக்கறதுதானே நல்லது ? ‘ பாட்டிக்கும் கண்கள் கலங்கியது. சீதாவுக்குத் தந்தை மீது கோபம் வந்தது.
‘பாப்பா, நீங்களாவது அப்பாகிட்ட சொல்லுங்க, விற்க வேண்டாம்னு. இருபது வருஷமா நான்தான குத்தகைக்காரனா இருக்கேன் ? இதுவரை ஏதாவது பொல்லாப்பு உண்டா ? இப்ப அய்யாவுக்கு உடம்பு முடியலைன்னாலும் என்ன ? நான் தோப்பைப் பாத்துக்கிட மாட்டனா ? இது என்ன அனியாயமா இருக்கு ? என்னிக்குச் சின்ன அய்யா தோப்புப் பக்கம் வந்திருக்காரு ? ‘ என்றார் சாயபு.
‘அதான சாயபு ? அவன் தான் தோப்பைக் கண்டானா ? வயலைக் கண்டானா ? ஒரு நாள், ஒரு பொழுது அந்தப் பக்கம் எட்டிப் பாத்திருக்கானா ? அப்புறம் அவனால அதையெல்லாம் எப்படிக் கட்டி மேய்க்க முடியும் ? ‘ என்றாள் பாட்டி. சீதாவுக்கு அழுகை குமுறிக் கொண்டு வந்தது. அவள் மகனால் சொத்தைக் கண்காணிக்க முடியாதாம். அதனால், தாத்தா உயிராகாக் கட்டிக் காத்த தோப்பை விற்பதில் தவறில்லையாமே ?
தோப்பென்றால் சாதாரணத் தோப்பா அது ? பனிரெண்டு ஏக்கர் நிலத்தில், மாவும், பலாவும், சப்போட்டாவும், எலுமிச்சையும், பம்ப்ளிமாசும், கொய்யாவும், பூக்களில் செண்பகப் பூவும், மல்லிகையும், தாழம்பூவும் பூத்துக் குலுங்கும் சோலையல்லவா ? அப்பாவுக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா ?
மல்கோவா, ஜெஹாங்கீர், அல்போன்சா, பங்கனப்பள்ளி என்று எங்கிருந்தெல்லாமோ மாங்கன்றுகளை தாத்தா கொண்டு வந்து வைத்து எல்லாம் மரங்களாகிக் காய்த்துக் குலுங்கி, பழங்களாக அத்தனை மார்க்கெட்டுகளுக்கும் போனதை அப்பா மறந்து விட்டாரா ? அந்தந்த காலங்களில் வீடெல்லாம் மாம்பழமும், பலாப்பழமும், எலுமிச்சையும், கொய்யாவுமாக காலெல்லாம் மிதி பட்டதை அப்பாவால் எப்படி மறக்க முடியும் ? தாழம் பூவும், செண்பகப் பூவும் அவளுடைய தலையில் பின்னல்களாக மாறியதை அம்மாவால்தான் எப்படி மறக்க முடியும் ? இப்போது தாத்தாவுக்கு இதையெல்லாம் கவனிக்க முடியாமல் போனதால், விற்க வேண்டும் என்று முடிவெடுப்பது எந்த விதத்தில் நியாயம் ? யார் கேட்பது இந்த அனியாயத்தை ? அவள் திருமணமாகிப் போனதுதான் தவறோ ? அவள் இந்த வீட்டிலேயே இருந்திருந்தால் தாத்தாவுக்கும் பக்க வாதம் வந்திருக்காதோ ? அவளறியாமலேயே, ஒரு பெரிய கேவல் வெளிப்பட்டது. சாயபு தலையைக் குனிந்து கொண்டார். தாத்தா அவள் கையைப் பிடித்தார்.
‘இப்ப ஏன் அழறே ? கல்யாணமாகி ஆறு மாசம் கழிச்சு இப்பதான் வந்திருக்க. சந்தோஷமா இருந்துட்டுப் போ.. ‘ என்றார். குரல் நடுங்கியபடிதான் வந்தது. பாட்டிக்கும் கண்கள் பொங்கிக் கொண்டிருந்தன. ஆனால் அவளுக்கு மகனிடம் தைர்யமாகப் பேச முடியாது.
‘எப்படி தாத்தா ? அப்பா போய் கவனிக்க என்ன இருக்கு ? சாயபுதான் குத்தகை எடுத்து இருக்காரே ? அது பாட்டுக்கு அப்படியே இருக்க வேண்டியதுதானே ? ‘
தாத்தா சிரித்தார்.
சாயபுவிடம், ‘பாத்தியா, சாயபு. உம்மேல எவ்வளவு நம்பிக்கை ? ‘ என்று கூறி விட்டுச் சிறிது நேரம் மெளனமாக இருந்தார். பின்,
‘இருந்தாலும் சரிப்பட்டு வராது. அடிக்கடி போகணும். எவ்வளவோ விஷயமிருக்கு, ‘ என்றார் சீதாவிடம்.
சாயபு தாத்தா அருகே இன்னும் நகர்ந்து அமர்ந்து கொண்டார்.
‘அய்யா, ஒரு காரியஸ்தனைப் போட்டுக்குங்க, அதுக்காக உங்க பூமியை விக்கறதா ? ‘ என்றார் இரைஞ்சும் குரலில்.
‘அதெல்லாம் சரிப்படாதுன்னு நூறு தடவ உங்ககிட்ட சொல்லியாச்சு, சாயபு. திருப்பித் திருப்பி என்ன பேசிக்கிட்டு ? ‘
அப்பாவின் குரல் ஒலித்தது. டென்னிஸ் உடையுடன் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார். மட்டையை சுவற்றில் மாட்டி விட்டு, ஒரு நாற்காலியில் அமர்ந்து ஷூக்களைக் கழற்றத் துவங்கினார். சீதாவுக்கு அப்பாவின் மேம்போக்குத் தனமான பேச்சு எரிச்சலூட்டியது. இவரால் எப்படி இவ்வாறு பேச முடிகிறது ? இவருக்கு என்ன, அவர் வாசிக்கும் கணக்கிலடங்காப் புத்தகங்களும், மாலையில் விளையாடப் போகும் டென்னிஸ் மட்டும்தானா வாழ்க்கை ? அவருடைய தினப்படி சொகுசு நடவடிக்கைகளுக்குத் தடையாயிருக்கும் எதுவும் இப்படி விலை பேசப் பட வேண்டியதுதானா ? அதன் பின்னே இருக்கும் தாத்தாவின் உழைப்பும், தோப்பின் மீது தாத்தாவுக்கு இருந்த பிடிப்பிற்கும் எதுதான் விலையாக முடியும் ? யார் என்ன விலை தந்தாலும்தான் அது, எதற்கு ஈடாகி விட முடியும் ? கோபமும், ஆத்திரமும் சுழன்று வந்தது. சாயபுவைப் பார்த்தாள். அவர் அப்பாவையே பார்த்தாவாறு அமர்ந்திருந்தார். அந்தக் கண்களில் தெரிந்த கலக்கம் அவளை ஏதோ செய்தது. அப்பா ஷூக்களைக் கழற்றி விட்டு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்தார்.
பாட்டி சாயபுவைச் சமாதானப் படுத்தக் கூறிய அதே நியாயத்தையே, அப்பாவும் கூறினார். சாயபு ஒன்றும் பேசத் தோன்றாமல் அமர்ந்திருந்தார். ஆனால் என்னென்னவோ பேச வேண்டும் என்று நினைப்பது அவர் முகத்தில் தெரிந்தது. தாத்தாதான் முன் கோபக்காரர். ஆனால் அவரிடம் பேசுவது யாருக்குமே எளிமையாக இருந்தது. அப்பாவின் பேச்சு மென்மையானதுதான். குரலில் ஏற்றமோ, இறக்கமோ இல்லாத பேச்சு. ஆனாலும் அப்பாவின் மேதாவித்தனம், அவர் முன் வரும் எவரையும் பேச விடாமல் வாயடைத்து விடும். நான் சொல்வதுதான் சரி, ஏனெனில், நான் உங்கள் எல்லோரையும் விட புத்திசாலியானவன், இருந்தாலும் என் பெருந்தன்மையால்தான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் என்ற ஒளி வட்டம் அவரைச் சுற்றி இருந்து கொண்டே இருந்தது. அதனால்தான் பாட்டி கூட அப்பாவிடம் பேச பயப்படுகிறாள். சீதாவுக்கு அப்பாவின் அந்த ஆணவத்தின் மீது கோபம் எழுந்தது. அந்த ஆணவத்தை வீழ்த்த வேண்டும் என்று ஆத்திரம் எழுந்தது.
‘அதுக்காக விற்கிறது எப்படி நியாயம் ? ஒரு காரியஸ்தரைப் போட்டுப் பாருங்க. இல்ல, நீங்களே போய்ப் பார்க்க வேண்டியதுதான். தெரியாது, தெரியாதுன்னு எத்தனை நாள் இருக்க முடியும் ? தெரிஞ்சுக்க வேண்டியதுதான். ‘ என்றாள் சீதா படபடப்புடன். அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது. அப்பாவிடம் இப்படியெல்லாம் பேசியதில்லை அவள். அப்பா திகைப்புடன் அவள் பக்கம் திரும்பினார். அவரும் இதை எதிர்பார்க்கவில்லை என்று தெரிந்தது. அவர் முகம் சிவந்தது. மேதாவிகள், அறிவு ஜீவிகள் ஆத்திரத்தை வெளிப்படையாகக் காட்டினால் சாமான்யமாகி விடுவார்கள் என்பதால், அப்பா அதே மென்மையான குரலில் ஆங்கிலத்தில்,
‘ நீ இனி இது போன்ற விஷயங்களில் தலையிடுவது அவசியமற்றது. படித்த பெண் போல அல்லாமல் ஒரு பட்டிக்காட்டுப் பெண் போல பேசிக் கொண்டிருக்கிறாய். இது ஒரு நிலம்தான். அதன் மீது இவ்வளவு சென்டிமென்டல் உணர்வுகள் இருப்பது முட்டாள்தனம். ‘ என்றார். தாத்தா கண்களைத் திறந்து அப்பா பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார். சாயபுவுக்கும், பாட்டிக்கும் அப்பா பேசுவது புரியவில்லை. அவருடைய குரலில் உன்னுடைய தலையீட்டை நான் விரும்பவில்லை என்ற தொனி தெரிந்தது. இந்த விஷயத்தில், அப்பா இஷ்டம் போல் நடக்க முடியாது என்று அவருக்குப் புரிய வைக்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. அவள் பதில் சொல்லுமுன், அப்பா எழுந்து விட்டார்.
‘சாயபு, என்னால வேற எதுவும் பண்ண முடியாது. நீங்கள் இது விஷயமா இனி பேச வேண்டாம், ‘ என்றார். சாயபுவின் உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன. ஒரு பெரிய அழுகை அவரிடமிருந்து வெடித்து விடுமோ என்று சீதாவுக்குப் பயமாக இருந்தது. அப்பா மாடியேறிச் சென்று விட்டார். சாயபு, தாத்தா பக்கம் திரும்பி,
‘அய்யா, என்ன செய்யட்டும் சொல்லுங்க ? நான் தலயெடுத்ததே இந்த பூமியாலதான ? ‘ என்றார். கண்களில் மீண்டும் கண்ணீர் வடிந்தது. தாத்தாவின் முகத்தில் இது போன்றதொரு துக்கத்தை அவள் கண்டதே இல்லை. சாயபுவின் தலை மீது தாத்தா கையை வைத்தவாறே,
‘இதென்ன இப்படி அழுதுகிட்டு சின்னப் பிள்ள கணக்கா ? என்னுடைய சொந்த பூமியை விக்கப் போறேன், நானே கல்லாட்டம் இருக்கேன். உனக்கென்ன ? இது இல்லாட்டா இன்னொரு நிலம்..பூமிக்கா பஞ்சம், சொல்லு ? உன்னோட பொழப்புக்கு ஆண்டவன் குறை வெக்க மாட்டான், சாயபு, வருத்தப் படாதே, ‘ என்றார். கண்களில் கண்ணீர் வடிந்த வண்ணம் இருந்தது. பாட்டி கடைசியாக,
‘வேண்டாம், சாயபு. வாழற வீட்டில இப்படி வருத்தப் படக் கூடாது. போதும், ‘ என்றாள். சாயபு கண்களைத் துண்டால் துடைத்துக் கொண்டார். அன்று சாயபு விடை பெற்றுக் கொண்டு போன பின், அவரை மீண்டும் அவள் சந்திக்கவே இல்லை. தோப்பு, அப்பா இஷ்டப்படி நல்ல விலைக்கு விற்கப் பட்டது.
தோப்பை விற்ற அடுத்த வருடமே தாத்தாவின் மரணமும் நிகழ்ந்தது. தோப்பை விற்றதால்தான், தாத்தாவின் மரணம் அவ்வளவு துரிதமாக நடந்தது என்று சீதா நம்பினாள். அப்பாவை அவளால் மன்னிக்க முடியாமல் போனது. ஆனாலும் அப்பா, தான் எடுத்த முடிவு, ரெம்பச் சரியானதுதான் என்பது போல் வளைய வந்தது அவளுக்கு எரிச்சலைத்தான் தந்தது. அவளுடைய சகோதரர்கள், இதனால் ரெம்பப் பாதிக்கப் பட்டதாகத் தெரியவில்லை. பின் தனக்கு மட்டும் ஏன் இந்த பாதிப்பு என்று அடிக்கடி நினைத்துக் கொண்டாள். தோப்பின் மீது இருந்த பிடிப்பு, தாத்தாவால் வந்தது. அதைப் பற்றிக் கோடிக் கதைகள் கூறி இருக்கிறார். மாம்பழக் காலங்களிலும், பலாப் பழக் காலங்களிலும், தாத்தாவின் தோப்புக் கதைகள் வெளிவரும். மாம்பழத்தையும், பலாப் பழத்தையும் லாவகமாக நறுக்கிக் கொண்டே, தன்னுடைய தந்தை ஆறு பாகங்களாகப் பிரித்திருந்த தோப்பை, தான் எப்படி தன் மற்றச் சகோதரர்களிடம் இருந்து சிறிது, சிறிதாக வாங்கினார் என்பதையும், தாத்தாவின் ஒரு தம்பி முத்தையாத் தாத்தா, எப்படி மற்றவர்களை விட அதிக விலை கேட்டார் என்பதையும் மாம்பழங்களை நறுக்கி முடிக்கும் வரைக் கூறுவார். அருகில் இருக்கும் பாட்டி,
‘கொஞ்ச, நஞ்ச அனியாயமாவா கேட்டாக உங்க தம்பியா பிள்ள ? அவுகளோட பங்கை எப்படி வாங்கினீங்கன்னு சொல்லுங்க.. ‘ என்பாள்.
தாத்தா நறுக்கிய மாம்பழத் துண்டுகளைப் பாத்திரத்தில் கொட்டியவாறே, ஒரு பழத் துண்டை வாயில் போட்டுக் கொள்வார்.
‘செல்லம்மா, ஞாபகம் இருக்கா ? இந்தப் பங்கனப் பள்ளியை வாங்கப் போய்ட்டுத் திரும்ப வரும் போதுதான எனக்கு ஆக்ஸிடண்ட் ஆச்சு ? ‘ என்பார். தாத்தா அவருடைய இளமைக் காலங்களில் கார்கள் மீது தீராத மோகம் கொண்டிருந்தார். கண் மண் தெரியாத வேகங்களில் காரை ஓட்டி அதிக விபத்துகளைச் சந்தித்தவர். பாட்டிக்கு மிகப் பலமான மாங்கல்ய பாக்கியம்.
தாத்தா கேட்டவுடன், பாட்டிக்கு இருபதோ, முப்பதோ வருடங்களுக்கு முன், தாத்தா முரட்டுத்தனமாக ஒட்டி, விபத்தில் மாட்டிய அந்தத் தினமும், அவளுடைய அன்றைய பரிதவிப்பும் நினைவில் வந்து விடும். அந்தப் பழைய விபத்தைப் பற்றிச் சிறிது நேரம் புலம்பி விட்டுப் பின் தாத்தா, தன் சகோதரர்களிடம் இருந்து தோப்பின் மற்றப் பங்குகளை எப்படி வாங்கினார் என்பதைக் கூற வாய்ப்புத் தருவாள். தோப்பை வாங்குவதற்காகப் பாட்டி தாத்தாவிடம் கழற்றித் தந்த வைர அட்டிகையைப் பற்றிப் பேசும் போதெல்லாம், பாட்டியின் பெருமூச்சு வெளிப்படும். ஆனால் பாட்டியின் வைர அட்டிகை, தோப்பிலிருந்து வரும் எந்த மல்கோவாவுக்கும், அல்போன்ஸாவுக்கும் ஈடாகுமா என்ன ? தாத்தாவுக்குத் தோப்பின் மீது இருந்த அதீத பற்றுதல் வெறும் நிலத்தின் மீது மனிதனுக்கு ஏற்படும் பற்றுதல் அல்ல. அதில் இருந்த ஒவ்வொரு செடியையும், மரத்தையும் தாத்தா மிகவும் நேசித்தார். தோப்பில் முைளைத்தும், செழித்தும் வளர்ந்திருந்த எல்லாச் செடி கொடியோடும் அவருக்கு, கண்ணுக்குத் தெரியாத நரம்புகளின் வாயிலாக உணர்வுத் தொடர்பு இருந்தது. தன் மற்ற சகோதரர்களிடம் இருந்து தோப்பின் மற்ற பங்குகளை வாங்கி விட்டாலும், வருடம் தோறும் சீஸன்களில், பழங்கள் அவர்கள் வீட்டுக்குப் போய்க் கொண்டுதான் இருந்தது. திருச்சியிலும், சென்னையிலும் உள்ள உறவினர்களுக்கு மட்டுமல்லாமல், தெருவில் குடி இருந்த அத்தனை பேர் வீட்டுக்கும் மாம்பழம் சென்றது. இன்னாருக்கு இன்ன பழம் என்று ரக வாரியாகப் பிரித்து அனுப்புவதில் தாத்தாவுக்குக் குஷி. சிறிதும், பெரிதுமான ஓலைக் கூடைகளில், மாம்பழங்கள் மேல் வைக்கோலை நிரப்பி, உறவினர்களுக்கு
அனுப்பப் பட்ட மாம்பழங்களுடன் தாத்தாவின் ‘என் தோப்பு மாம்பழம் ‘ என்ற பெருமிதமும் இலவச இணைப்பாகப் போனது. தாத்தாவின் ஆன்மாவுடன் இணைந்து விட்ட ஒன்றாக இருந்தது. அதனால்தான், தோப்பு விற்கப்பட்டது, தாத்தாவின் ஆன்மாவுக்கு ஒவ்வாததாக இருந்தது.
அதன் பின் கடைகளிலும், மார்க்கெட்டுகளிலும் வாங்கப் படும் மாம்பழங்களை, சீதா அறவே வெறுத்தாள். எந்த மாம்பழமும் தோப்பு மாம்பழத்துக்கு இணையாகாது என்று தோன்றி விட்டது. அதை விட, மாம்பழங்களை உண்ணாமல் இருப்பதுதான், தாத்தாவுக்குச் செய்யும் கடமை என்று கூடத் தோன்றியது. வட இந்தியாவில் வசித்த போது, தோழி தன் தோட்டத்து மாம்பழம் என்று கொண்டு தந்த போது, தாத்தாவின் நினைவு எழும்ப, தோழி தந்த பழங்களைக் குப்பையில் வீசத்தான் தோன்றியது. அதன் பின் அமெரிக்கா குடி வந்த பின்பும், கோடைக் காலங்களில், தென் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மாம்பழங்களைக் கேலி செய்யத்தான் செய்தாள். ஒவ்வொரு முறையும் கணவன் மாம்பழங்களை வாங்க முயற்சித்த போது அதைத் தடை செய்து உண்ண விடாமல் செய்வதே பெரும் பாடாக இருந்தது.
‘போயும் போயும் இந்தப் பழத்தைப் போயா வாங்கப் போறிங்க ? பழத்தைப் பார்த்தாலே பரிதாபமா இருக்கே ? ‘ என்பாள். அதன் பின், சிறு வயதில் தோப்பில் இருந்து வந்த விதம் விதமான மாம்பழங்களை உண்ட கதைகளும், அதன் பின்னே இருந்த கதைகளும் விரியும்.
‘இதெல்லாம் ஒரு பழமா ? உங்களுக்கு எங்க தோப்பு மாம்பழம் சாப்பிடக் குடுத்து வைக்கல. இந்த மாங்கொட்டையைதான், மாம்பழம்னு நெனச்சுட்டுச் சாப்பிடணும்னு இருக்கு. ‘ என்பாள். அப்புறம் இத்தனை விமர்சனங்களுக்கு நடுவே, மாம்பழம் சாப்பிடும் ஆசை அவள் கணவனுக்கு வீழ்ந்து விட்டது.
சில இந்தியக் கடைகளில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப் பட்ட பழங்கள் வந்த பின்னும், இந்தியர்கள் காணாததைக் கண்டது போல அவற்றை வாங்கிய போதும் சீதாவுக்குச் சிரிப்புதான் வந்தது. அவர்களெல்லால் சிறு வயதில் மாம்பழமே சாப்பிட்டிருக்க மாட்டார்கள் என்று தீவிரமாக நம்பினாள். பின், எல்லாருக்குமா சிறு வயதில் தோப்பு மாம்பழங்களை உன்ணும் அதிர்ஷ்டம் இருந்து விடுகிறது ?
பதினைந்து வருடங்கள் மாம்பழமே உண்ணாமல் வாழ்ந்தாகி விட்டது. பத்து வயது மகனுக்கும் மாம்பழத்தின் வாசனையே படாமலும் வளர்த்தாகி விட்டது. அவனுக்குப் பேசவும், புரியவும் துவங்கிய நாள் முதல், ஊரில் இருந்த மாந்தோப்பைப் பற்றியும், அதில் விளைந்த மாம்பழங்களையும் உண்ட காலத்தையும், தாத்தாவுக்குத் தோப்பின் மீது இருந்த பற்றையும், தோப்பை விற்ற மறு வருடமே தாத்தா இறந்த சோகத்தையும் கரைத்துப் புகட்டியும் ஆகி விட்டது. பத்து வயது முடிந்த பின் ஒரு நாள் கடைக்குப் போன நேரமாக, மாம்பழங்களுக்கு அருகில் சென்று நின்ற மகனின் அருகில் சென்றாள் சீதா. ஒரு மாம்பழத்தை எடுத்து முகர்ந்தவனாக ஏதோ தீவிர யோசனையுடன், அவளைப் பார்த்து,
‘ஏம்மா ? நீ மாம்பழம் சாப்பிட்டு எவ்வளவு வருஷம் இருக்கும் ? ‘ என்றான்.
‘பதினைந்து வருஷம் இருக்குண்டா கண்ணா. ஏன் கேக்கறே ? ‘ என்றாள்.
அவன் முகத்தில் லேசான புன்னகை தவழ்ந்தது.
‘உனக்கு உன் அப்பாவைப் பழி வாங்கியது போறும்னு தோணலையா ? பாவம், பூட்டத் தாத்தாவும் உன்னைப் பார்த்திட்டிருந்தார்னா, நீ இத்தனை வருஷம் மாம்பழம் சாப்பிடாம இருக்கறதுக்கு, வருத்தப் பட மட்டாரா ? அவருக்கு ரெம்பவும் புடிச்ச பழத்த நீ இப்படி வெறுக்கரயேன்னு அவருக்கு ரெம்ப வருத்தமா இருக்கும்னு உனக்குத் தோணலையா ? ‘
அவன் மாம்பழத்தைக் கையில் வைத்திருந்த விதமும், மாம்பழத்தை முகர்ந்த விதமும் அவளுக்குத் தாத்தாவை நினைவு படுத்தியது. அவளும் ஒரு மாம்பழத்தை எடுத்து, ஏக்கத்துடன் முகர்ந்த்தாள். பழத்தின் வாசம் தோப்பில் இருந்து வரும் அல்ப்ஹோன்சாவை நினைவு படுத்துவதாக இருந்தது.