விடியும்!(நாவல் – 29))

This entry is part [part not set] of 49 in the series 20040101_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


செல்வத்திற்கு பார்க்கப் பயம் – பார்க்கவும் வேண்டும் – பார்க்க விரும்பாதது கண்ணில் பட்டுவிடுமோவென்ற தயக்கம். ஜீப்பை விட்டு இறங்காமல் வளவிற்குள் பார்த்தான். மற்றவர்கள் இறங்கிப் போய், பார்ப்பதற்கு முட்டிக்கொண்டு நின்ற அயல்அட்டைச் சனத்தோடு கலந்து விட்டிருந்தார்கள். சம்சுதீனும் நிமலராஜனும் கிணற்றடிக்கு வெகு சமீபமாக நின்று பார்ப்பது சன ஊசாட்டத்திலும் தெரிந்தது. மூர்த்தி கிட்டப் போகாமல் யாரிடத்திலோ ஏதோ கேட்டுக் கொண்டிருந்தான்.

செல்வத்திற்கு முற்றிலுமாக பயமென்றில்லை – பார்த்தால் நாலு நாளைக்கு அந்த நினைவாகவே இருக்கும். கிணற்றில் விழுத்தியதால் முகம் சிதைந்து கோரமாயிருக்கலாம். கால்கை உடைந்து போயிருக்கும். உடல் முழுக்க உண்டான இரத்தக்காயங்கள் காய்ந்து கறுத்துப்போயிருக்கும். இரவு முழுக்க கிணற்றிலேயே கிடந்ததால் உடல் ஊதிப்போயிருக்கும்.

நேற்று இருட்டும்வரை அந்தக் குடும்பத்தின் குலவிளக்காய் ஆடியோடித் திரிந்த கன்னிகழியாத பிஞ்சை கடித்துக் குதறிப் போட்டிருக்கும் அந்த அலங்கோலத்தை அவனால் கண்கொண்டு பார்க்க முடியாது. கனடாவிற்குப் போகாமல் இருந்திருந்தால் ஒருவேளை நாளொரு கொலையும் பொழுதொரு கற்பழிப்புமாக கேட்டும் பார்த்தும் பழகிப் போயிருக்கும்.

அவன், அவர்கள் பார்த்துவிட்டு வந்து சொல்லப்போகும் விபரங்களைக் கேட்க ஆர்வமில்லாதவனாயிருந்தான். அப்படியே இருக்கப் பிடிக்காமல் எதிரே அறுவடையும் சூடடிப்பும் முடிந்து காய்ந்து கிடந்த வயல்வெளியில் இறங்கினான். வயலின் நடுவே பென்னம் பெரிய ஒற்றைப் புளியமரம். சுற்றி வட்டமான சூடடிப்பு நிலம். அண்மையில் சூடடித்து முடிந்ததற்குச் சாட்சியாக நெற்பதர்களும் வைக்கோலும் இன்னமும் அந்த நிலம் முழுக்க இறைந்து கிடந்தன. மாரி போகம் முடிந்து அடுத்த விதைப்பு வரை மாடுகளின் மேய்ச்சல் நிலமாகிவிட்ட அந்த வயலின் வரப்பினூடே நடந்தான்.

ஒன்றுக்கு முடுக்காத போதும் புளியமரத்தின் மறைப்பில் ஓன்றுக்கு இருக்க முயற்சி செய்தான். கட்டியாய் முற்றிப் பழுத்த புளியம்பழங்கள் எட்டிப் பறிக்கும் உயரத்தில் என்னைப்பிடி உன்னைப்பிடியெனத் தொங்கின. பறித்துச் சுவைக்க மனமில்லை.

தயக்கத்தையும் மீறி, பரிதாபத்துக்குரிய அந்தச் சீவன்களைப் பார்க்க வேண்டுமென்ற துடிப்பும் ஆறுதலுக்கு ஒரு வார்த்தை சொல்ல வேண்டுமென்ற விருப்பும் மனம் முழுக்க விரவி நின்றது. ஆறுதல் சொல்லி அதைக் கேட்கும் நிலையில் அவர்கள் இருக்கப் போவதில்லை. முதலில் ஊற்றெடுத்துப் பெருகும் அழுகையை அவர்கள் அழுது முடிக்க வேண்டும். அடிநெஞ்சிலிருந்து அடுத்தடுத்துக் கிளம்புகிற பெருமூச்சுகளை விட்டுத் தீர்க்க வேண்டும். அதுவரை எந்த ஆறுதலும் அவர்களிடம் செல்லாது.

சம்சுதீன் சொன்னதைக் கேட்டதிலிருந்து அவனுக்கே நெஞ்செல்லாம் விறைத்துக் கொண்டு வருகிறது. பெத்ததுகளுக்கு எப்படியிருக்கும்! செவ்வந்தியை விட நாலைந்து வயசு குறைய இருப்பாளா அந்தப்பிள்ளை ? இரண்டு பேருக்கும் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது, அவள் பட்டினம் இவள் கிராமம் என்பதைத் தவிர.

தங்கச்சியைப் போலவே இவளுக்கும் பெற்றாரின் கரிசனையும் பரிவும் பெருமளவில் இருந்திருக்கும். மூத்த பிள்ளை புலிக்குப் போய்விட்டதால் இவளையாவது செம்மையாக வளர்த்து ஒருவன் கையில் பாதுகாப்பாகக் கொடுத்து விடும் படபடப்பு நிச்சயமாக இருந்திருக்கும். அதனால் கரிசனையும் பரிவும் சற்றுக் கடுமையானதாக மாறியிருக்கும். மகளது வயசுப் பிரளிகளுக்கு இடம் கொடாமல் விழிப்பாய் இருந்திருப்பார்கள். அதில் ஒரு அங்கமாக சின்ன விசயத்திற்கெல்லாம் தாய் எரிந்து விழுந்திருப்பாள். மூத்தவளின் ஓட்டத்தை அடிக்கடி நினைவூட்டி எச்சரித்திருப்பாள்.

அவள் கொண்டோடியப் போல நீயும் புலீற்றை போகப் போறியேடி, காலை நறுக்கிப் போடுவன் நறுக்கி என்று பயம் காட்டியிருப்பாள். இப்படியெல்லாம் ஆக்கினை செய்வதற்கு தாய்க்கு முகாந்திரமுண்டு. எனினும் அவள் வெளிக்காட்டும் போலியான கோபங்கள் எப்பொழுதுமா இருக்கப் போகிறது! தன்னை மறந்து தூங்கும் மகளது பிஞ்சு முகத்தை பார்க்கும் போதெல்லாம், கடவுளே ஒரு வில்லங்கமும் இல்லாமல் இதை எப்படித்தான் ஒப்பேற்றப் போகிறேனோ என்று பெருமூச்சு விடுவது ஒவ்வொரு இரவுகளிலும் நிகழ்ந்திருக்கும். வாழ்க்கையில் வேறு எந்தவிதப் பிராக்குக்கும் இடம் கொடாமல் முழுக் கவனத்தையும் மகள் பக்கமே திருப்பியிருப்பாள்.

அம்மா என்னதான் ஆக்கினை செய்தாலும் தாயன்பின் நெகிழ்வை மகள் அறிந்து வைத்திருந்திருப்பாள். தாயின் மடிச்சூட்டில் தலை பதித்துப் படுத்திருக்கும் சுகத்தை அவள் இழக்க விரும்புவாளா! தன் தலையில் குடியிருக்கும் ஈரையும் பேனையும் அம்மாவைத் தவிர வேறு யாரால் அத்தனை பக்குவமாக வாரி எடுத்துவிட முடியும்! இராயிருட்டியில் பாயில் ஊர வரும் பூச்சிபூரான்களைக் காரணம் காட்டி தாயின் பாயில் ஒட்டிக் கொண்ட கொஞ்சத்தில் தன் உதைகளால் அவளைத் தள்ளிவிட்டு பாயை முழுதுமாக ஆக்கிரமித்துக் கொள்ளும் சுதந்திரம் வேறு யாரிடம் செல்லும்!

நிலத்தில் கிளை விட்டு மொத்தமாய் நீண்டிருந்த புளியமரத்து வேரில் செல்வம் குந்தினான்.

“அண்ணா இந்தா பறக்குது, அந்தா அலுமாரிக்குப் பின்னால ஒளிக்குது அடி அண்ணா ‘ .. .. .. இறக்கையை சடாரென சிலுப்பிக் கொண்டு பறந்த பறவையாய் தன் பின்னால் செவ்வந்தி ஒளிந்து கொண்டது இப்போது மனதில் வந்தது.

“குத்துக்கல்லாட்டம் நிக்காம அடியண்ணா”

“என்னத்தையடி அடிக்கிறது ?”

“கக்களாத்தி”

கக்களாத்தி என்று அவள் சொன்னது கரப்பத்தான் என்றும் நாமகரணம் கொண்ட கரப்பான் பூச்சியை. கனடாவில் டானியல் வீட்டிலும் இது போலவே நடந்தது. ஒரு மழை நாளாக இருக்க வேண்டும் – நெருப்பில் மிதித்தது போல் சமையற்கட்டை விட்டு வெளியே பாய்ந்து ஓடினாள் சியாமளா. என்னென்று கேட்டால் கரப்பான் பூச்சியாம். எங்கிருந்தோ பறந்து வந்து குக்கரில் இருக்கை பண்ணி தன் இரட்டை மீசையை அங்குமிங்கும் ஆட்டி அவளைப் பார்த்ததாம். அதுக்கு ஏன் இப்படிப் பறக்கிறீர் என்று சினத்தோடு கேட்டான் டானியல்.

கதைச்சுக் கொண்டு நிக்காம அதை அடியுங்கோ முதலில என்று கத்தினாள் சியாமளா. பட்டினி கிடக்க தயாராயில்லாததால் அடிக்க முயற்சித்தான் டானியல். அவனை ஏமாற்றிவிட்டு அது விறாந்தைக்கு வருகை தந்தது.

அவர் அடிக்க மாட்டார் நீங்க அடியுங்கோ என்று ஒற்றை றப்பர் சிலிப்பரை எடுத்துக் கொடுத்தாள் செல்வத்திடம். அடித்துக் கொல்லவோ மனசில்லை. சியாமளாவின் பயத்தையும் மதிக்க வேண்டும். மரணப் பத்திரம் வழங்கும் வரை அவள் குசினிக்குள் போக மாட்டாள். அன்றைக்கென்று பார்த்து அவனும் அங்கே சாப்பிட வந்திருக்கிறான்.

மெதுவாகக் கிட்டப் போய் அவள் பாராதபோது சாமர்த்தியமாக கரப்பான் பூச்சியின் இரண்டு மீசையில் ஒன்றைப் பிடித்துக்கொண்டு வெளியே ஓடினான். தலையைச் சுற்றி ஓடித்தப்பு என்று எறிந்து விட்டான். அது பின்ஜன்னலால் வந்து மீண்டும் வீட்டுக்குள் நுழைந்ததை அவன் கண்டது வேறு விசயம். அங்கே வெள்ளையால் மூடி உயிர் அடங்கிக் கிடக்கும் அந்தக் கசங்கிய உடலுக்குச் சொந்தக்காரி கூட இதே மாதிரி கரப்பான் பூச்சிக்கெல்லாம் பதறி ஓடுகிற பயங் கொண்டவளாகத்தான் இருந்திருப்பாள்.

யாரும் கவனியாத வேளையில் வீட்டுத் தோட்டத்தில் நுழைகிற ஆட்டுக்குட்டி அங்கு நன்னி இங்கு நன்னி எல்லாத்திலும் வாய் வைத்தாற் போல் அவனும் எங்கெங்கோ போய் வந்தான். என்ன நினைத்தானோ, எழுந்து விறுக்கென நடந்தான்.

சாரனிலும் வேட்டித்துண்டுகளிலும் கிணற்றடியைச் சுற்றி நின்ற கிராமத்துச் சனங்கள் தெருவில் நிற்கும் ஜீப் வண்டி நிமித்தமாய் செல்வத்திற்கு குழைந்து மரியாதை காட்டி வழிவிட்டார்கள். வாய்க்காலில் தோய்த்துப் பழுப்பாகிப் போன வெள்ளை வேட்டியால் மூடியிருந்ததை வயற்காட்டின் கனத்த இலையான்கள் சூசூவென ஓசையெழுப்பி வட்டமிட்டன. ஒரு கிழவர் மட்டையால் விசுக்கிக் கொண்டிருந்தார்.

பின்னல் நைய்ந்து போன கதிரைகளில் இருந்து பொலிசார் எழுதிக் கொண்டிருந்தார்கள். நோட்புக்கில் நாலைந்து பக்கங்கள் நிரம்பியிருந்தன. பக்கத்தில் கறுத்தக்கோட் அணிந்த மரண விசாரணை அதிகாரி. செல்வத்தைக் கண்ட மாத்திரத்தே என்ட ராசாத்தி என்னை விட்டுட்டுப் போயிற்றியேடா நான் இனி என்ன செய்வேன் என்று புலம்பினான் தகப்பன்.

விசயம் கேள்விப்பட்டு அக்கம்பக்கத்து மனிதர் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்த போதெல்லாம் அவன் அப்படித்தான் குரல் வைத்தான். வருடக்கணக்கில் பாதுகாத்து வளர்த்த செடி பூத்துக் குலுங்குகிற வேளை பார்த்து வெங்காயத்தாளை இலேசாக இழுத்தெடுக்கிற மாதிரி பிடுங்கிப் போட்டுவிட்டார்கள். இந்தக் கணத்தில் அவனிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் வெட்கம் துக்கம் பார்க்கப் போகிறதா என்ன! மூக்கைச் சீறி சாறனில் துடைத்தான். கட்டின பெஞ்சாதி, பெற்றபிள்ளை கண் முன்னாலேயே கற்பழிக்கப்படும் சீரழிவுக் காட்சிகளை மிக செயற்கைத்தனமாக நிறையவே காட்டும் தமிழ்ச்சினிமாக்களை பார்த்து அருவருப்பு அடைந்திருக்கிறான் செல்வம். இங்கே நிசமாக இவனது வாழ்க்கையில் நடந்திருக்கிறது.

மாட்டுக்கொட்டிலில் கட்டிலிருந்த பசுமாடு .. ம்மா என்றது. அதற்கு புண்ணாக்குத் தண்ணி காட்டவோ, வைக்கோல் பிரித்துப் போடவோ, மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடவோ நாதியில்லை. ராத்திரி நடந்த நாடகத்தின் கோரம் அந்த வாயில்லாச் சீவனுக்கு விளங்குமா! ஏதோ ஒரு தாங்க முடியாத சோகம் அங்கே கவிந்திருப்பதை அது புரிந்து கொண்டிருக்கும்.

செல்வம் சுற்றி ஒருமுறை பார்த்தான். நாலைந்து வயசுள்ள நல்லாய்க் காய்க்கிற தென்னைகள், குளிக்கிற கிணற்றுநீர் வீணாகாமலிருக்க ஒழுங்காக வாய்க்கால் வெட்டி பள்ளமாகக் கிண்டி வைத்த கப்பல் கதலி வாழைகள், முற்றிய காய்களை கண் படாமலிருக்க மறைப்பு கட்டித் தொங்கவிட்டிருக்கும் புடலைப் பந்தல், பக்கம் பக்கமாய் நிமிர்ந்து நிற்கும் நெட்டை மனிதர்கள் போல உயர்ந்த கமுகுகள், தெருவுக்கும் சேர்த்து நிழல் கொடுக்கும் வேலியோர வேப்பை – இனி நாட்டுவதற்கு இடமில்லாதபடி வளவு முழுக்க பச்சைதான்.

இத்தனைக்கும் ஒரு இலைகளில் கூட அசைவில்லை. மனிதரின் சோகம் மரங்களிலும் தொற்றிக் கொண்டதோ! சூரியன் மட்டும் இலைகளினிடையே இடம் தேடிப் பிடித்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“என்ர பிள்ளையில வெய்யில் படுகுது” என்று கண் கசக்கினாள் தாய்.

பொலிசார் என்ன சொல்வார்களோ என்ற பயத்தில் சனம் சும்மா நின்றது.

“என்ர பிள்ளையில வெய்யில் அடிக்குது” அவள் சகிக்க முடியாமல் மீண்டும் கத்தினாள். தகப்பன் குலுங்கிக் குலுங்கி அழுது எழும்ப முயற்சித்தான். அதற்கிடையில் நாலு பேர் கைத்தாங்கலாய் நிழலுக்கு அரக்கினார்கள். மூடியிருந்த முகச்சீலை கொஞ்சம் விலகிற்று.

நடு உச்சி எடுத்த தலை கோழி கிளறிய ஈரநிலமாய் தோன்றிற்று. கீற்றுகளாய் பிரிந்து கிடந்த கூந்தலில் இன்னும் ஈரம் வடிந்தது. மூக்கால் ரத்தம் ஓடி காய்ந்து போயிருந்த இடத்தில் ஈ மொய்த்தது. கழுத்தில் நகம் விறாண்டிய காயங்கள் பள்ளமாய்த் தெரிந்தன. சற்று மணக்கவும் செய்தது. ராத்திரி அனுபவித்த கோர விளையாட்டின் பயங்கரச் சாயல் இன்னும் முகத்தில் அழியாமலிருந்தது.

“ஐயோ என்ர ஐயோ வெள்ளனையோட எழுப்பி விடப்பு இங்கிலிஸ் பாடமாக்க வேனும் என்டு சொல்லிப் போட்டுப் படுக்கப் போனியே ராசாத்தி உன்னை இந்தக் கோலத்திலயா நான் பாக்க வேனும். எங்களை விட்டுட்டுப் போக எப்படியனை மனம் வந்துது”

பிள்ளையின் முகம் தெரிந்ததும் அவன் நெற்றியிலடித்து ஓலமிட்டான். சம்சுதீன் சொன்னது சரிதான். அந்தாள் மிரித்தால் புல்லுக்கூட சாகாதுதான். அப்படியொரு சாதுவான தோற்றம். நெஞ்செலும்பு தெரியும் நோஞ்சான். தானும் தன்பாடுமாயிருந்த மனுசன். தாய் அழுது முடித்து விட்டவள் போலவே தோன்றினாள். இனி வடிப்பதற்கு அவளிடம் கண்ணீர் இல்லை போலும். பெயர் விலாசம் வயசு தொழில் அடங்கிய சம்பிரதாயக் கேள்விகள் முடிந்து விட்டிருந்தன. என்ன நடந்தது என்ற வாய்மறுமொழியும் எடுத்தாயிற்று – எல்லாம் சிங்களத்தில். போல்பொயின்ற் பேனையால் காது கிண்டிக் கொண்டு பொலிஸ் தகப்பனிடம் கேட்டான்.

“தக்கொத் அந்துர கண்ட புழுவன்த ? கண்டால் ஆட்களை அடையாளம் காட்ட முடியுமா ?”

கண்ணெதிரே கற்பழித்தவர்களை அடையாளம் தெரியாமல் போகுமா ? அந்த முகங்களை மறக்கத்தான் முடியுமா ? தகப்பன் சங்கடத்தோடு நிமிர்ந்தான். மறுமொழி சொல்லாமல் பொலிசையே பார்த்தான். பிள்ளை செத்துப் போன ஆத்திரம். பெஞ்சாதி கெட்டுப் போன ஆவேசம். எல்லாம் அவனிடம் இருக்கிறது. மிரித்த புல்லு சாகாவிட்டாலும் அவனும் உணர்வுகள் உள்ள மனுசன்தான்.

தகப்பன் “என்ட அம்மாச்சி” என்று பழைய பல்லவியை பதிலாகப் பாடினான்.

என்ன அர்த்தம்! இப்ப நடந்ததே சாகும்வரைக்கும் போதும். அடையாளம் காட்டப் போய் இதற்கு மேலும் நடக்க வேண்டுமா ? அடையாளம் காட்டினாலும் என்ன நடந்து விடப் போகிறது ? எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று சடைந்து விடுவார்கள். பாதிக்கப்பட்டவன் குடும்பம் மேலும் பாதிக்கப்படுவதுதான் மிச்சம். ஆமிக்கெதிராக வாக்குமூலம் கொடுத்தால் இன்னொரு ஆமிக்கூட்டம் பிறிதொரு இரவில் வரும். வீட்டில் மிஞ்சியிருக்கிற சீவன்களையும் துடைத்துவிட்டுப் பொகும்.

“அஹன்ட பென்னன்ட புழுவந்த ? .. .. .. இன்னமும் காதில் விட்ட பேனையை எடுக்காமலே கேட்டான் பொலிஸ். கேள்வி கொஞ்சம் ஆத்திரமாகவும் வந்தது.

“அந்த இருட்டுக்குள்ள நான் என்னத்தைக் கண்டன்” .. நிலத்தில் அறைந்து ஒப்பாரி வைத்தான் தகப்பன்.

ஒரு நிதர்சனமான வழக்கின் உண்மை தன் கண்ணெதிரே செத்துக் கொண்டிருப்பதை செல்வம் கைகட்டி பார்த்துக் கொண்டு நின்றான். இனி வழக்கேது சாட்சியேது ஆயிரத்தோடு ஆயிரத்தொன்றாக இதுவும் மாறுவதற்கு அத்திவாரம் அங்கேயே இட்டாயிற்று. அவனே சொல்ல முன் வராத போது பக்கத்து வீட்டுக்காரனா வரப் போகிறான் ? அடுத்தது தாய்.

“ஒயாட்ட பென்னன்ட புழுவந்த ? உன்னால் காட்ட முடியுமா ?”

அப்போதுதான் அந்தத் தாயின் முகத்தை செல்வம் சரியாகப் பார்த்தான். அவளுக்கு வயசு நாற்பதிருக்கலாம். கிராமத்துக் கறுப்புத்தான். அந்த அலங்கோல நிலையிலும் என்ன என்று உடனே மட்டுக்கட்ட முடியாத ஏதோ ஒரு ஈர்ப்பு அவளிடம் இருந்தது. கடும் உழைப்பு நிமித்தம் கட்டுக் குலையாத உடல்வாகு. தெருவால் ரோந்து போகும் ஆமிக்காரர்கள் கொஞ்ச நாட்களாகவே கண் வைத்திருக்கக்கூடும்.

நாள் முழுக்க அழுததால் வீங்கிப் போயிருந்தது முகம். தனக்கு நேர்ந்து விட்ட அவலத்தையெண்ணி அழுவாளா ? அம்மா அம்மாவென்று காலைச்சுற்றிக் கொண்டு நின்ற பிஞ்சிற்கு நேர்ந்த கொடூரத்தைப் பார்த்து அழுவாளா ? மிரித்த புல்லுச் சாகாத புருசனை நினைப்பாளா, அல்லது புலிக்குப் போனதால் குடும்பத்திற்குப் பயனில்லாமல் போய்விட்ட மூத்தவளை நினைப்பாளா ?

“உன்னால அடையாளம் காட்ட ஏலுமா ? .. .. .. என்று மரண விசாரணை அதிகாரி கேட்டார். இதுதான் கடைசித் தடவை போல அழுத்தம் கொடுத்தார். வீட்டுக்குப் போகிற அவசரம் அவருக்கு. அவள் அழவில்லை. முகத்தைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்தாள்.

“ஏலும்!”

புருசன் அவளது தோளில் கை வைத்து அவசரமாகத் தடுக்கப் போனான்.

“நீங்க சும்மாயிருங்க. என்ர பிள்ளையைக் கொன்டவங்களை நான் காட்டத்தான் போறன். எங்களையும் கொல்லட்டும். நான் பயப்பிட மாட்டன்.”

அவளது முகத்தில் தெரிந்த ஆவேசம் அவனுக்குப் புதிது. பின்விளைவைப் பற்றி கொஞ்சமும் சிந்திக்காத ஆவேசம். புருசன் ஒரு பாவமுமறியாத இருட்டின் மீது பழியைப் போட்டுத் தப்பிக் கொண்டான். அவள் அதற்கு ஆயத்தமில்லை.

கரப்பத்தான் பூச்சியைக் கண்டதும் பயந்து ஓடி ஊரைக் கூட்டுகிற பெண் அல்ல இவள்!

karulsubramaniam@yahoo.com

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்