விடியும்! நாவல் – (12)

This entry is part [part not set] of 41 in the series 20030904_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


பொன்னுத்துரை மாமா அப்பாவுக்கு இரண்டாந் தாரம் கட்டிக் கொடுக்க செருப்புத் தேயத் திரிந்த போது அவனுக்கு பதினாலு வயசு. அம்மா பூவும் பொட்டுமாக ஏழே ஏழு நாள் வைரஸ் காய்ச்சலில் எல்லாரையும் கதறியடிக்க விட்டு போய்ச் சேர்ந்து விட்டாள். நம்ப முடியவில்லை. ஒரு நிமிசம் காலாறாமல் வளவிற்குள் குறுக்கும் நெடுக்குமாக ஓடியோடி அலுவல் பார்க்கும் அம்மா ஒரேயடியாய் ஓய்ந்து போய் மீளாத உறக்கத்தில் இருந்ததை அவனால் நம்பவே முடியவில்லை.

அம்மா இல்லாமல் இனி எப்படி ?

அம்மா ஒரு நாளும் வருத்தம் என்று படுத்ததில்லை. ஓரே ஒரு முறை குதிக்காலில் கறல் பிடித்த தகரம் வெட்டி ஈரம் பட விட்டதால் காயம் பழுத்து சீழ் பிடித்துவிட்டது. குத்துவலி தாங்க முடியவில்லை. காய்ச்சலும் காயத் தொடங்கி நெறியும் போட்டு விட்டது. அதற்குப் பிறகுதான் அம்மா ஆஸ்பத்திரிக்கு போக ஒப்புக் கொண்டாள். பின்னர் ஏரிஎஸ் ஊசி அடித்து சுகமாகித் திரும்பி வர பத்துப் பதினைந்து நாள் சென்றது.

அப்பாவின் உடம்புக்கு ஒன்றென்றால் அம்மா உறங்க மாட்டாள். காய்ச்சல் தடிமன் எல்லாம் அவளின் கைய்ச்சல் கசாயத்திற்கு சொல்வழி கேட்கும். சின்னதாக தடிமன் கட்டினாலும் பெரிசாக இருமிக் கொண்டு திரிவார் அப்பா. பக்கத்திலிருந்து அம்மா நெஞ்சு பிடித்து விட வேனும். கோப்பி பருக்க வேனும். கால்கை பிடித்து விரல்களில் நெட்டி முறித்து விட வேனும். சின்னக் குழந்தை போல அருக்காணி காட்டிக் கொண்டேயிருப்பார். குளிர் குலைப்பனோடு காய்ச்சல் வந்ததோ தொலைந்தது. தலையிலிருந்து கால் வரை கம்பளியை இழுத்துப் போர்த்துக் கொண்டு ம்.. .. ம்.. .. என்று அனுங்கிக் கொண்டிருப்பார். பக்கத்திலிருந்து அவரது சுகவீனத்தைப் பற்றியே கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். அப்படியொரு செல்லம் பொழிவு.

அம்மாவுக்கு காய்ச்சல் விடாத போது அப்பா ஆடிப் போனார். அடுப்புப் பற்ற வைத்து இரண்டு நாளாச்சு. ராணிக்கு அப்போது பத்து வயசு. கண்ணைக் கசக்கிக் கசக்கி அம்மாவுக்கு வெண்காயம் உரிச்சுக் கொடுக்கத் தெரியும். சின்னச் சின்ன தொட்டாட்டு வேலைகள் தெரியும். வேறொன்றும் தெரியாது. பொன்னுத்தங்கமும் அவதிப்படுத்தியதில்லை. குமராகட்டும் தானாகத் தெரிந்து கொள்வாள் என்பாள்.

காய்ச்சல் விடுவதும் வருவதுமாக இருந்தது. மார்க்கண்டு வைத்தியரின் தேனில் கலந்த தூளுக்கும் இஞ்சியில் கரைத்த குளுசைக்கும் கேளாமல் நாலு நாளாய்க் காய்ந்தது. அம்மாவே கொஞ்சம் யோசிக்கத் தொடங்கிவிட்டாள். அப்பாவுக்கு ஒன்றும் ஓடவில்லை. பொன்னுத்துரை மாமாவிடந்தான் ஓடினார். ஆஸ்பத்திரிக்கு ஏற்றினார்கள். ஆஸ்பத்திரியில் கண்கடை தெரியாத பேச்சு விழுந்தது.

‘ஊர் முழுக்க விசக்காய்ச்சல் பரவிக் கிடக்கு. படிச்ச உங்களுக்கு மூளையில்லையா ? நாலு நாளா என்ன செய்தனீங்க ?

ஏழாம் நாள் பின்னேரம் அம்மாவை வெறும் உடலாக கொண்டு வந்து கிடத்தினார்கள். தலைமாட்டில் ஏற்றி வைத்த குத்துவிளக்கு வெளிச்சத்தில் அம்மாவைப் பார்க்க சும்மா படுத்திருந்தது போலவே இருந்தது. குழந்தைப்பிள்ளை போல அப்பா தேம்பித் தேம்பி அழுதார். தன்னுடைய கவனக்குறைவால் ஆலமரம் சாய்ஞ்சு போச்சே என்று அலறினார். எட்டுவீடு வரை பட்டினி கிடந்தார்.

காலை எட்டு மணிக்கு அலுவலகம் போய் மாலை நாலரைக்கு வருவது மட்டுந்தான் அவரது தொழில். மாசம் முடிய சம்பளத்தை பொத்தியபடி அம்மாவிடம் கொடுத்து விட்டாரானால் அவரது பொறுப்பு முடிந்தது. அவளையே சுற்றி சுற்றி வருவார். கூப்பிட்ட குரலுக்கு பக்கத்தில் நிற்பார். கிழித்த கோட்டைத் தாண்டியதில்லை. மீன்காரன் வந்து கத்தினாலும் சரி தபால்காரன் வந்து மணி அடித்தாலும் சரி பொலிஸ்காரன் வந்து கதவைத் தட்டினாலும் சரி அவருக்கு எல்லாத்துக்கும் அம்மாதான்.

தங்கம் ஆரோ கதவைத் தட்டுறாங்கள் பாரம்மா என்றுதான் சொல்வார். அதை சோம்பேறித்தனம் என்று சொல்லத் தோன்றாது செல்வத்திற்கு. அவருக்கு அம்மாதான் எல்லாத்திலும் உசத்தி. அப்பாவுக்கும் அம்மாதான் அம்மா.

முப்பத்தொன்று மட்டும் இனஞ்சனம் பக்கமிருந்து பார்த்துக் கொண்டது. அம்மா போனபின் வீடு வீடாக இல்லை. தீPர்த்தமாடி ஓய்ந்த தீர்த்தக்கரை போல எல்லாம் உறைந்து போன ஒடுக்கம். பொன்னுத்துரை மாமா ஒரு வேலைக்கார மனுசியைக் கூட்டி வந்தார். மனுசி காலை ஆறு மணிக்கு வந்து வீட்டு வேலை பார்த்து விட்டு மாலை ஆறு மணிக்குப் போய் விடும். அப்பா பெயருக்கு வேலைக்குப் போவார், வருவார். செல்வம் தலை இழுத்தும் இழுக்காமலும் சட்டைக்குப் பொத்தான் இல்லாமலும் பள்ளிக்குப் போய் வந்தான். ராணிக்கு பேன் பார்க்க எண்ணை வைத்து தலை பின்னிக் கட்டிவிட அம்மா இல்லை. எல்லாமே சாவி கொடுத்து ஓடவிட்ட ஓட்டம். நின்றதும் மீண்டும் ஓட வைக்க பொன்னுத்துரை மாமா வரவேனும்.

ஒன்றரை வருசம் இப்படியே அரக்கியது. நாளாந்தப் பிரச்னைகளினால் அம்மாவைப் பற்றிய பெருமூச்சு சற்றுக் குறைந்தாலும் அப்பா சிரிப்பதை மறந்து போனவர் போலவே திரிந்தார். பொன்னுத்துரை மாமா அடிக்கடி வந்து போவார். மச்சானில் அவருக்கு ஆத்திரமும் வரும். ஆனால் மனம் புண்பட எதுவும் சொல்லமாட்டார். தங்கச்சியில் அவருக்கு இருந்த உசிர் மச்சானில் அப்படியே பதிந்துவிட்டது. அந்த அன்பிற்கு அப்பா எல்லா விதத்திலும் தகுதியானவர்.

தங்கச்சியின் குடும்பம் இருந்த இரையென்ன இப்ப ஆடி அடங்கிப் போய் கிடக்கிற கிடையென்ன என்று மாமா கலங்கிப் போவார். இந்தக் குடும்பத்தை எப்படித் தூக்கி நிறுத்துவது என்ற ஒரே சிந்தனைதான் அவருக்கு.

அப்போதுதான் கனகம் என்கிற கனகம்மா தட்டுப்பட்டாள். கூட்டுறவு அலுவலகத்தில் எழுதுநர் வேலை. முட்டுப்பட்ட குடும்பம். கல்யாணச் சந்தையில் காளைகளின் விலைக்கு அவர்களால் முடியவில்லை. மூன்று வருடமாக மாப்பிள்ளைக்கு வலை போட்டும் நெத்தலி கூட அகப்படவில்லை. வயசும் ஏறிக்கொண்டிருந்தது.

பொன்னுத்துரை மாமாவுக்கு குடும்பம் நல்ல பழக்கம். சாடை மாடையாக வாய் வைச்சுப் பார்த்தார். நாங்க முட்டுப் பட்டாப் போல ரெண்டாந் தாரமா பிள்ளையைக் கட்டிக் குடுக்கிற அளவுக்கு தாழ்ந்து போகேல்லை என்று முகத்துக்கு நேரே சொல்லிப் போட்டார்கள். கூட்டுறவு காரியாலயத்திற்கு போனார் மாமா. கனகத்தை நேராகக் கண்டு கதைத்தார்.

‘என்ர தங்கச்சியின் குடும்பம் நிர்க்கதியா நிக்குதம்மா. மச்சானுக்கு நாற்பத்திரண்டு வயசு. இன்னம் குழந்தைப்பிள்ளை மாதிரி. குணத்தில கோடாஸ்வரன். தங்கச்சி செத்துப் போனது கூட இப்ப பெரிசாத் தெரியேல்லை. அந்த மனுசன் தனிச்சுப்; போனதைப் பார்க்க பார்க்க நெஞ்செல்லாம் வேகுது. உன்னைச் சின்னனிலிருந்தே எனக்கு நல்லாத் தெரியும். இந்தக் குடும்பத்தை விழுந்திராமல் பிடிச்சு நிமித்தி விட உன்னால் முடியும். உன்னட்டைக் கேக்;கிறதைத் தவிர எனக்கு வேற வழி தெரியேல்லை மகளே. ‘

பொன்னுத்துரை மாமா கண்ணீர் விட்டது கனகத்திற்குத் தாளவில்லை. மெளனம் சம்மதமாக வந்தது. தனக்கும் வயசு ஏறிக் கொண்டிருக்கிறது. சீதனம் கொடுக்க வழியுமில்லை. இதனால் தாய் தகப்பனுக்கு தொடர்ந்த கவலை. தான் சம்மதம் சொன்னதற்கு இவையெல்லாம் காரணமா அல்லது செல்லத்துரை குடும்பத்தில் உண்டான இரக்கமா என்று கனகத்திற்கு தெளிவாகவில்லை. கனகத்தின் தெண்டுதலில் தாய்தகப்பன் வழிக்கு வந்தனர்.

செல்லத்துரை முதலில் மாமாவிடம் மாட்டேன் என்றார். மாமா கட்டாயப்படுத்தினார். அந்தக் கட்டாயத்தில் ஊடாடியிருந்த அன்புக்கு செல்லத்துரை அடி பணிந்தார். ஒன்று மட்டும் சொன்னார்.

‘பிள்ளைகளிட்டை ஒரு சொல் கேட்டுடுங்க ‘

கேட்டதும் ராணி பல் முப்பத்திரண்டையும் காட்டினாள். செல்வமோ முகம் நீட்டினான்.

அம்மா இருந்த இடத்தில இன்னொரு பொம்பிளையா ? அவனுக்கு ஜீரணமாகவில்லை.

உயர்ந்த இடத்திலிருந்த அப்பா இப்போது பொம்பிளை ஆசை பிடித்த சராசரி மனுசனாகத் தெரிந்தார். செல்வம் முகம் நீட்டியதுக்கு இன்னொரு முக்கியமான காரணமும் உண்டு. செல்லம்மா ஆச்சிக்கு அம்மாவுடன் நல்ல ஒட்டு. அம்மாவின் அந்திமக் காரியங்களில் வீட்டோடு இருந்து காரியங்கள் பார்த்தவள். பிறத்திப் பொம்பிளை வந்தால் தகப்பனையும் பிள்ளைகளையும் பிரிச்சுப் போடுவாள், நீ ஓம் படாதே மேனே என்று இரகசியமாக சொல்லியிருந்தாள். அவள் வைத்த வத்தி நன்றாகவே வேலை செய்தது.

பொன்னுத்துரை மாமா விடுகிற மாதிரியில்லை.

‘நீ சின்னப்பிள்ளை. உன்னை விடவும் உன்ரை அப்பா சின்னப்பிள்ளை. எப்படியிருந்த மனுசன் இப்ப எப்படியிருக்கென்டு பார். தங்கச்சியை யோசிச்சுப் பார். அவளை வளர்த்து ஒரு நல்லவன் கையில பிடிச்சுக் குடுக்க வேனும். ‘

‘அவருக்கு விருப்பமென்டா கட்டட்டும். எனக்கென்ன ? ‘

‘அப்படிச் சொல்லாதே செல்வம். அப்பாவுக்கு பொம்பிளை ஆரென்டே தெரியாது. நாந்தான் ஒரே பிடியா நின்டு ஓம்பட வைச்சனான். உங்கட விருப்பம் இல்லாம கட்ட மாட்டாராம். நீங்க எல்லாரும் முந்தி மாதிரி சிரிச்சுக் கலகலவென்டு இருக்க வேனும். என்ர இரத்த உருத்துகளுக்கு நான் அநியாயம் செய்வனா ? என்ர பேச்சைக் கேளப்பு ‘

குடும்பத்துக்கு வேலியே மாமாதான். மாமாவுக்காக விட்டுக் கொடுக்க முடிவு செய்தான் செல்வம். ஆனாலும் அவனது கருத்தில் மாற்றமில்லை. ஆரென்றாலும் அம்மாவுக்கு நிகராகாது.

இந்த இருபத்தினாலு வருசத்தில் சின்னம்மா அதையெல்லாம் பொய்ப்பித்து அம்மாவுக்கு அம்மாவாய் அப்பாவுக்கு அப்பாவாய் வாழ்ந்து காட்டியதை அவன் நிமிர்ந்து பார்த்தான். அம்மாவின் இடத்தை அப்பழுக்கில்லாமல் பிடிக்க சின்னம்மாவால் எப்படி முடிந்தது!

துளசிச் செடியடியில் கோப்பி மண்டியை ஊற்றப் போனான் செல்வம். சின்னம்மா புனிதமாகக் கருதுகிற துளசியின் பவுத்திரம் கெட்டுவிடும் என்பதால் வாழைப்பாத்திக்குள் ஊற்றிவிட்டு குசினிக்குள் ஏறினான்.

‘அந்தப் பிள்ளையை உடுப்பு மாத்தச் சொல்லன் தம்பி. இங்க வசதியில்லை. வசந்தியிர வீட்டில தங்கச் சொல்லுவம் ‘

‘ஓம் சின்னம்மா ‘

செவ்வந்தி, வசந்தியின் மதிலுக்கு மேலால் விசயம் சொன்னாள். செல்லத்துரை கூடப் போக சுந்தரம் கூனிக்குறுகி அங்கு போனான்.

‘அப்பாக்கு இப்ப எப்படி சின்னம்மா ? ‘

‘இப்ப கொஞ்சம் பரவாயில்லை. வந்த அலுப்புக்கு நீ கொஞ்சம் சரி தம்பி. சாமி அறைக்குள்ள பாய் விரிச்சு விடுறன். ‘

அவன் சாரத்தை மாற்றிக் கொண்டு பாயில் மல்லாந்து விழுந்தான். கூரை வளையில் ஓடிய மாட்டு எலியொன்று மூலை விட்டத்தில் தொங்கிய ஒட்டறையையும் இழுத்துக் கொண்டு போயிற்று. சுவாமி விளக்கடியைப் பார்த்தான். நூல் கழட்டாமலே காய்ந்து போன அர்ச்சனைக் கட்டுகள் தம்பிக்காக அம்மா கடவுளிடம் வைத்த விண்ணப்பங்களை கண்முன் கொண்டு வந்தன.

கவலை அவனைக் கட்டிப் பிடித்தது. மனம் சின்னம்மாவையே வலம் வந்தது. வந்ததிலிருந்து தம்பியைப் பற்றி சின்னம்மா இன்னமும் ஒரு வார்த்தை கதைக்கவில்லை. அப்பாவும் கதைக்கவில்லை. பக்கத்தில் இருக்கும் தங்கச்சி புருசன்மாரும் வந்து இன்னும் பார்க்கவில்லை. கரைச்சல் குடுக்காதீங்க வந்த பிள்ளை கொஞ்சம் ஆறட்டும் என்று சின்னம்மா சொல்லியிருப்பா. சின்னம்மா என்கிற சூரியனைச் சுற்றிச் சுற்றி வருகிற சின்னக்கிரகங்கள் மாதிரி மற்றவர்கள்.

முழு வளவையுமே தம்பியின் சோகம் போர்த்தியிருந்தது போல ஒரு மூட்டம். அந்தச் சோகத்தைப் போக்குவது எப்படி ? சின்னம்மாவை பழைய சின்னம்மாவாய் பார்ப்பது எப்படி ?

சின்னம்மா கட்டி வந்த புதிதில் அவன் ஒட்டாமலே நடந்தான். நேருக்கு நேர் முகம் பார்க்க மாட்டான். கதை கேட்டால் எங்கேயோ பார்த்துக் கொண்டு மொட்டையாகப் பதில் சொல்வான். அம்மா என்ற உறவுமுறை சேர்த்துச் சொல்ல மனம் வராது. அது தன்னைப் பெற்ற அம்மாவுக்கு மட்டுமே உரியது என்ற முரட்டு வைராக்கியம். ஒன்றரை வருசம் மொட்டைப் பதில்களோடு காலம் கழித்தான்.

வசந்தி பிறந்தாள். சின்னம்மாவைக் கவனிக்க சின்னம்மாவின் அம்மா வந்திருந்தாள்.

வசந்திக்கு மொட்டை அடித்து தொட்டிலில் போட்ட அன்று செல்வத்திற்கு கண்வருத்தம் வந்தது. பரியாரியார் மருந்தும் கொடுத்து கண்ணுக்கு தாய்ப்பால் விடச் சொல்லியிருந்தார்.

கண்ணுக்குப் பால் விட சின்னம்மா பல முறை கூப்பிட்டும் செல்வம் காது கேளாதவன் போல் மறைந்து கொண்டான். இரவு அவன் நித்திரையாகும் வரை காத்திருந்தாள். படுத்தால் அடித்துப் போட்டவன் மாதிரி கிடப்பான் செல்வம். நித்திரை வேளை பார்த்து அவனை மெதுவாக மடியில் கிடத்தினாள். கண்களைத் திறந்து நேராக தாய்ப்பால் சொரிந்து விட்;டாள். பால் பீறிட்ட வீச்சில் அவனுக்கு முழிப்பு வந்தது. அவன் வளர்ந்த பையன். கண்கள் கூசின, மனமும் தான். மூன்று நாட்கள் தொடர்ந்து விட்டாள். சிவப்பு எடுபட்டு கண்கள் வழமைக்கு வந்தன.

பச்சைப் பிள்ளைக்கு பால் கொடுக்கும் அதே வாஞ்சைக்கு எள்ளளவும் குறைவற்ற அம்மாவின் அன்பினை அப்போதுகளில் அவன் கண்டான். அடுத்து வந்த நாட்களில் அவன் தன்னையறியாமலே சின்னம்மா என்று கூப்பிடத் தொடங்கினான். வாய் பழகுமட்டும் கூச்சமாக இருந்தது. செல்வத்தின் ஒன்றரை வருட முரடு தாய்ப்பாலோடு பணிந்து போயிற்று.

அடுத்த தங்கச்சி செவ்வந்தி பிறந்தாள். சின்னம்மாவின் அம்மா வழமை போல வந்தாலும் அவளால் ஓடியாட முடியவில்லை. இருந்த இரையில் காரியம் பார்த்தாள். அவளின் கண்காணிப்பில் செல்வம் ஓடித் திரிவான். அம்மியில் சரக்கு அரைச்சுக் கொடுப்பான். வேது வார்க்க குளைகள் சேகரிப்பான். வேப்பையும் நொச்சியும் கைக்குள் இருந்தன. முத்தாமணக்கு, ஆடாதோடை, வாதமடக்கி, குளைகளை இலேசில் தேடிவிட முடியாது. அலை அலையென்று அலைந்து ஒன்று விடாமல் கொண்டு வந்து சேர்ப்பான். தோய வார்க்க தானே நீர் சுட வைத்து கலந்து தருவான். நீங்க கொஞ்சம் படுங்க சின்னம்மா என்று கூறி தங்கச்சியை மடியில் வைத்து ஓராட்டுவான்.

தம்பி பிறந்த போது சின்னம்மாவிற்கு அவனே எல்லாமாக இருந்தான். முந்தி புறணி கதைத்த செல்லம்மா ஆச்சி ஒருநாள் செல்வத்திடம் சொன்னாள்.

‘தாயைத் தின்னியென்டாலும் நீங்கள் புண்ணியம் செய்த பிறவியளடா. உன்ர சின்னம்மா தங்கமான பிறவி. பொன்னுத்தங்கமே மறுபிறவி எடுத்து வந்தது மாதிரியிருக்கு. நீ இப்ப வளந்திற்றாய். இந்தப் பிறவியை அவளின்ர குஞ்சுகளை பிற்காலத்தில கண்கலங்காம பார்த்துக் கொள்ள வேண்டியது உன்ரை கடமை, மறந்திராதை ‘

அவன் மறக்கவில்லை.

அப்பவும் சரி இப்பவும் சரி. அவனும் அப்பாவின் பிள்ளைதான். அப்பா தானுண்டு தன் வேலையுண்டு தன் குடும்பமுண்டு என்று இருப்பவர். இரக்கம் நிறைய. அது போல பயமும் நிறைய. நாள் தவறாமல் பேப்பர் வாசிப்பார். நேரந் தவறாமல் வெறிட்டாஸ் பிபிசி கேட்பார். இதற்கு மேல் அவர் எதிலும் கலந்ததில்லை. எல்லாத்துக்கும் அடிப்படை அவரது பயந்த சுபாவம் என்றே அவனுக்குத் தோன்றும். பொன்னுத்துரை மாமாவோடு மட்டுந்தான் மனம் விட்டு அரசியல் கதைப்பார். நிறைந்த வாசிப்பும் சிந்தனையும் அவரிடம் இருந்தன. தன் நியாயங்களை தெளிவாகச் சொல்வார். அப்பாவுக்கு இப்படிக்கூட விவாதிக்க முடியுமா என்று வியப்பான் செல்வம். ஆனால் வெளியில் யாரோடும் கதைக்க மாட்டார். நாட்டு நிலைமை சரியல்லை என்பார் மிகுந்த ஜாக்கிரதை உணர்வுடன்.

செல்வம் கிட்டத்தட்ட அவரது போட்டோ கொப்பி. தகப்பனைப் போல பிள்ளையென்பது சின்னம்மாவுக்குத் தெரியும். தெரிந்திருந்தும் உடனே வரும்படி கூப்பிட்டிருக்கிறாள். பொன்னுத்துரை மாமா இருக்கிறார். தங்கச்சிமாரின் புருசன்மார் இருக்கினம். அப்படியிருந்தும் சின்னம்மா ஏன் என்னைக் கூப்பிட்டாள் ? என்னால் முடியும் என்ற நம்பிக்கையா ?

என்னால் முடியுமா ?

குழம்பிக் குழம்பி கண் அயர்ந்து போனான் செல்வம்.

karulsubramaniam@yahoo.com

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்