விடியும்! நாவல் – (6)

This entry is part [part not set] of 49 in the series 20030724_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


அடுத்த நாள் மாலை அப்பம்மா வீடு வாசல் முற்றம் கூட்டி சாம்பிராணிப் புகை காட்டி வளவை புனிதமாக்கினாள். குளித்து சுவாமி கும்பிட்டு திருநீறு ப+சி தனக்குப் பிடித்தமான பதினாலு முழ நாவல் சேலையுடுத்தி கொய்யகம் சொருகி ஆயத்தமாகினாள். ஜேக்கப் தனது நண்பர் சிறீஸ்கந்தராசாவுடன் வந்து சேர்ந்தார். அப்பம்மாவைத்தான் முதலில் சுகம் விசாரித்தார். வழி தெருவில் கண்டு பழக்கம். நெருங்கிப் பழகியவர் போலப் பேசினார்.

அப்பம்மா விட்டுக் கொடுத்துக் கதைக்க மாட்டாள். துண்டு இரண்டாக விழும் பேச்சு. காசு பணம் இல்லாட்டிலும் எங்கட பிள்ளை தங்கக்கட்டி என்றுதான் பேசுவாள். இது போன்ற சந்தர்ப்பங்களில் அவள் குரல் உச்சத்தில் இருக்கும்.

அப்பா சொல்லிக் கட்டளை. அவர் வந்து கதைச்சு விசயம் ஒப்பேறுகிற வரைக்கும் வாயை வைச்சுக் கொண்டு சும்மாயிரு. எங்கட நல்லது கெட்டதுகள் எங்களோட இருக்கட்டும். நாங்களாக எதையும் கூட்டிச் சொல்லப் போய் பிரச்னை வந்திரக் கூடாது.

அப்பம்மா மனமில்லாமல் வாய்க்கு பிளாஸ்திரி போட்டிருந்தாள். பேத்தியின் சடங்கு சறுக்கினால் தன்னைத்தான் மகன் பிடித்துக் கொள்வான் என்பது அவளுக்குத் தெரிந்த விசயம்.

“என்;ன ஆச்சி பேசாமல் இருக்கிறியள்.”.. .. .. என்று ஜேக்கப் வாயைக் கிண்டினார். அப்பம்மா வெறுமனே சிரித்தாள். சியாமளாவின் தாய் பலகாரத் தட்டை வைத்து விட்டு சுவரோடு ஒதுங்கி நின்றாள். வீட்டில் இருந்த மூன்று கதிரைகளில் அவர்களோடு அப்பாவுமிருந்தார். அவர் இருந்த கதிரைக்கு கால் முறிந்து போயிருந்ததால் இன்னொரு கால் அடித்திருந்தது.

“அம்மா நிக்கிறீங்கள் பாயைப் போட்டு இப்பிடி இருங்கோவன். எங்க பிள்ளைகளைக் காணேல்லை.”

வீட்டுக்குள் காதுகளைத் தீட்டி வைத்துக் கொண்டு பிள்ளைகள் இருந்தார்கள். சியாமளாவும் அவளுக்கு நேர் இளைய தங்கச்சியும் குசினியில் கோப்பி வார்த்துக் கொண்டிருந்தார்கள். சீனி கானுமான்டு பாரக்கா என்று கேட்டாள் தங்கச்சி. கோப்பி நன்றாக இருக்க வேண்டுமென்ற கவலை அவளுக்கு.

சியாமளாவிடம் கோப்பியை வாங்கும் போது எதிர்கால மைத்துனியின் முகத்தை டக்கென்று படம் பிடித்துக் கொண்டார் ஜேக்கப். தம்பியின் தெரிவு அவருக்கு நிறைவை அளித்திருக்க வேண்டும். அப்பம்மாவைப் பார்த்துப் பேசினார்.

“ஆச்சி என் தம்பிக்கு உங்கட பேத்தியைப் பிடிச்சிருக்கு. மனம் பிடிச்ச இடத்தில கல்யாணம் செய்து வைக்கிறதுதான் நியாயம். உங்கட முடிவைக் கேட்டுப் போக வந்தனாங்கள். ”

அப்பம்மா அப்பாவை நிமிர்ந்து பார்த்தாள். அப்பாவுக்கு பேச வராது. கண்கலங்கிப் போவார். வாய் குளறும். அப்படியொரு மென்மைச் சுபாவம். அப்பம்மா தன் வாக்குறுதி மறந்து போனாள்.

எங்கள் எல்லாருக்கும் விருப்பந்தான் என்று தொடங்கியவள் கொஞ்ச நேரம் பொறுத்து நீங்கள் வேதம் என்டுதான் யோசனையாக் கிடக்கு. பின்னுக்கு எதன்டாலும் கஷ்டம் வந்திருமோ என்டு பயமாக் கிடக்கு என்று கூறி தன் தலையாய பயத்தை போட்டு உடைத்தாள்.

“ஏன் ஆச்சி வேதக்காரர் என்றால் மனுசப் பிறவியள் இல்லையோ ? எங்கட அப்பாவின் அப்பா சைவந்தான். மதம் மாறீட்டதால மனுசரின் குணமும் மாறி விடுமோ ? அவையள் ரெண்டு பேரும் குழந்தைப் பிள்ளைகள் இல்லை. குடும்பத்தை எப்படிக் கொண்டு செலுத்துறது என்பதை நாங்க சொல்லிக் குடுக்க வேண்டிய அவசியமில்லை. ரெண்டு மனமும் ஒத்துப் போச்சுது. அது பத்தாதா ?”

“உங்கட இனஞ்சனம் ஒன்டுஞ் சொல்லாதா ? ”

“சொல்லுந்தான். அதுக்காக ஒன்டுஞ் செய்யேலாது. எனக்கு என்ர தம்பியின் விருப்பந்தான் முக்கியம். வாழப் போறது அவன்தானே.”

தன் பக்கம் பலம் கூடியது போன்ற எண்ணத்திற்கு அப்பம்மா இப்போது வந்திருந்தாள்.

பலம் கூடியதால் இயல்பாகவே எழக்;கூடிய நிபந்தனை வைக்கும் குணம் வந்து விட்டது.

“எங்கட பிள்ளையை வேதத்துக்கு மாறச் சொல்லுவீங்களோ ? ”

“அவையள் ரெண்டு பேரும் ஒத்து என்னன்டாலும் செய்யட்டும். வேதமா சைவமா அல்லது ரெண்டும் கலந்ததா என்டுறது முக்கியமில்லை. கடைசி வரைக்கும் இணை பிரியாம மனம் ஒத்து சந்தோசமா வாழுகினமா என்றதுதான் முக்கியம்”

கொஞ்சம் இடம் கொடுத்தால் மடத்தைப் பிடித்துவிடும் குணம் அப்பம்மாவிற்கு உண்டு. டானியலை சைவத்துக்கு மாறச் சொல்லி கேட்டுவிடுவாளோ என்று சியாமளா பயந்தாள். அப்பம்மா கோயில் குளம் என்று கடுமையான ஆசாரம் பார்ப்பவள். இருக்கப்பட்ட அத்தனை விரதங்களையும் ஒரு கை பார்ப்பவள். பிரதோச விரதங்களைக் கூட விடமாட்டாள். ஆனால் சைவத்திற்கு மாற்றுவதற்கான சமயச் சடங்குகள் எதுவும் வழக்கிலிருப்பதாக அவளுக்குத் தெரியாது. எனவே இது தேவையற்ற பயமென உணர்ந்து கலவரம் நீங்கினாள் சியாமளா.

“தம்பி இன்னொரு விசயம்” ;என்று அப்பம்மா இழுத்தாள்.

“கேளுங்க ஆச்சி”

“என்ர மகன் வாய் பேச மாட்டான். வம்புதும்புக்குப் போக மாட்டான். ஒன்டுமில்லாட்டிலும் அயலுக்குள்ள நல்ல மரியாதையைச் சேத்து வைச்சிருக்கிறான். மகளைப் படிப்பிச்சு குணமான பிள்ளையா வளர்த்திருக்கிறான். அது ஒன்டுதான் எங்கட சொத்து. இவவுக்குப் பிறகும் இன்னம் இரண்டு குமர் இருக்கு. உங்களுக்குச் சீதனமாக் குடுக்க எங்களிட்டை இந்த வீடு ஒன்டுதான் இருக்கு”.. என்று அப்பம்மா சொல்லிக் கொண்டிருக்கும் போதே அப்பா தன்னிரக்கத்தில் கண்கலங்கி தலை குனிந்தார்.

அப்பம்மா அளவாகப் பேசினாள். மற்றவர்கள் சொல்லி விட வேண்டும் என்று தவித்தாலும் சொல்ல முடியாமலிருந்த விசயங்களை சுருங்கச் சொல்லி விளங்க வைத்தாள். அப்பாவால் அதையெல்லாம் சொல்லமுடியாது. அப்பம்மா விசயத்தைப் போட்டு உடைத்தது அவருக்கு ஆறுதலை அளித்தது.

ஜேக்கப் சொன்னார்.

“தம்பி நல்ல உத்தியோகம். இப்ப ஓம் என்டாலும் நல்ல சீதனபாதனத்தோட பொம்பிளை தேட முடியும். பின்னால கஷ்டப்படாம இருக்கிறதென்டா சீதனம் வாங்க வேண்டித்தான் இருக்கு. தமையன் என்ட முறையில அது என்ர கடமையும் கூட. ஆனா அவர் உங்க பிள்ளையை விரும்பீற்றார். நீங்க உங்களால செய்ய முடிஞ்சதை செய்யுங்க என்டு சொல்றதுதான் நியாயம். ஆனா!”.. .. .. என்று நிறுத்தினார்.

ஆனால்! ஆபத்தான சொல். கிழவி பயந்து போய் ஜேக்கப்பின் முகத்தைப் பார்த்தாள். ஒரு கணத்தில் ஆயுட் கைதிக்குத் தீர்ப்புச் சொல்கிற நீதிபதியாய் தோற்றினார் அவர். அவள் தொண்டையை விழுங்கிக் கொண்டாள்.

“ஆச்சி உங்கட நிலைமையைத் தெரிஞ்சு கொண்டாப்பிறகு உங்களால் செய்ய முடிஞ்சதைச் செய்யுங்க என்று கூட என்னால் சொல்ல முடியவில்லை. எங்களுக்கும் மனச்சாட்சியிருக்கு. இருக்கிற வீ;ட்டை மகளுக்குக் குடுக்க நினைச்சதே குடுத்த மாதிரிதான். ஒன்டும் கேக்க வேண்டாம் என்று சொல்லித்தான் என்னை அனுப்பியிருக்கிறான் தம்பி. உடுத்த உடுப்போட பிள்ளையை அனுப்பினாப் போதும் என்டு சொல்லச் சொன்னான்.”

அதற்கு மேல் அப்பம்மாவிற்கு கேட்பதற்கு ஒன்றும் இருக்கவில்லை. முட்டிக் கொண்டு வந்த கண்ணீரை கொய்யகத்தால் துடைத்துக் கொண்டாள்.

அக்கம் பக்கத்துக்கு மட்டும் சொல்லி கல்யாணப் பதிவாளர் வந்து எழுத்து முடித்து மோதிரம் மாற்றி தாலிகட்டி பந்தி வைத்து எளிமையாக முடிந்த திருமணம் அது.

ஆக> எங்கள் திருமணத்தைப் பொறுத்தவரையில் மதம் முட்டுக்கட்டையாக இருக்கவில்லை. எல்லோரும் டானியலும் ஜேக்கப்புமாக இருந்துவிட முடியுமா ? தேவசகாயம் அங்கிளில் பிழை சொல்ல முடியாது. அப்பாவைப் போல அவர் வறுமைப்பட்டவரில்லை. கனடாவில் சொந்த வீடு காருடன் சீவிப்பவர். செல்வத்திற்கும் மேரிக்கும் காதலுமில்லை – இதுவரை சந்தித்தது கூட இல்லை. அதனால் மேரியை வேற்று மதக்காரருக்கு பேசி முடித்துக் கொடுக்க வேண்டிய அவசியமும் அவசரமும் அவருக்கில்லை. அவர் சார்ந்த சமூகத்தின் கரிசனைகளை வெளிப்படுத்திய சாதாரண பிரதிநிதி அவர். அவரிடமிருந்து அதிரடியான முடிவுகளை எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்த்துப் போனது எங்கள் பிழை.

செல்வத்திற்கு ஏற்பட்ட அவமானத்திற்கு முழுக்க முழுக்க தங்கள் அவசர புத்தியே காரணம் என்ற முடிவுக்கு வந்தாள் சியாமளா. இந்த சமூகத்தைப் படிக்காமல் அதன் தோரணைகளைப் புரிந்து கொள்ளாமல் சிறுபிள்ளைத்தனமாய் நடந்து கொண்டது நாங்கள்தான். டானியல் எதையுமே பரந்த மனப்பான்மையுடன் பார்ப்பவர். இதையும் அப்படியே பார்த்திருக்கிறார். இப்படியொரு பிரச்னையிருக்கு யோசித்துச் செய்யுங்கள் என்று கவனம் காட்டியிருந்தால் நின்று நிதானித்திருப்பார். தன் கணவனிடம் இது பற்றிக் கொஞ்சமேனும் குறிப்பிடாதது தன் குற்றமே என்று அவளுக்குத் தோன்றியது. நடந்ததெல்லாத்துக்கும் தானே பொறுப்பு என்பது போல் குற்றவாளிக் கூண்டில் ஏறி நின்றாள் அவள்.

“என்ன சியாமளா கனக்கா யோசிக்கிறீங்கள் ? ஒருவரிலும் பிழையில்லை. எல்லாரும் நல்லதைத்தான் நினைச்சீங்க. ஏன் அவர்கூட தன் மகள் தேவையில்லாத பிரச்னைக்குள் மாட்டிவிடக் கூடாதெனத்தான் நினைச்சிருக்கிறார். தகப்பன் என்கிற முறையில் மகளுடைய எதிர்காலத்தைப் பற்றிய முடிவு எடுக்கிறதுக்கு அவருக்கு முழு உரிமையும் இருக்கு. அதை சீர்திருத்தம் என்கிற பெயரில் நிர்ப்பந்தப்படுத்துவது சரியில்லை. இதோடு இந்த விசயத்தை மறந்திருங்க.. .. .. அதுக்காக! ”

அவனை நிமிர்ந்து பார்த்தாள் சியாமளா.

“எனக்கு பொம்பிளை பாக்கிற விசயத்தை மறந்திராதீங்க.”

சியாமளா பல் காட்டாமல் சிரித்தாள்.

“என்னடாப்பா நீயும் கொஞ்சம் சிரியன். ஆமி வந்து வீட்டை ரவுண்டப் பண்ணின மாதிரி முழிக்கிறாய். விர்ரா மச்சான்.”

டானியல் அவனைப் பார்த்தான்> கட்டிலிருந்த நாய் சப்தம் கேட்டு நிமிர்ந்து ஏனோதானோவென பார்த்தது போல. அவனது மனப்புண் ஆற நாளெடுக்கலாம். அவனைச் சோரவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான் செல்வம்.

தனக்கு நேர்ந்த தோல்வியை> தோல்வியில்லை> ஏமாற்றத்தை> ஏமாற்றம் கூட இல்லை> ஒரு சிறிய சறுக்கலை உடனேயே சமாளித்துக் கொள்ள செல்வத்தால் முடிந்திருக்கிறது. சறுக்கி விழுந்தாலும் பெரிய சிராய்ப்பு எதுவும் இல்லாமல் தப்பிக் கொண்டது போலத்தான். ஒருவேளை அந்தப் பெண் மேரியுடன் பேசிப் பழகியிருந்து பின்னர் இப்படியொரு நிலைமை வந்திருந்தால் அது தோல்வியாகவோ ஏமாற்றமாகவோ தோன்றியிருக்கலாம். இது சறுக்கல்தான். இந்த முப்பத்தேழு வருச வாழ்க்கையில் எத்தனை சறுக்கல்களைக் கண்டாச்சு.

தலையில் விழுந்த எச்சத்தை கழுவித் துடைக்கும் வரை அருவருப்புத்தான். இனி இந்த விசயம் தன்னை எந்த விதத்திலும் பாதிக்காத மாதிரி எச்சத்தை கழுவித் துடைத்து விட்டவனாய் சிலிர்த்தான் செல்வம். அந்தச் சிலிர்ப்போடு ஒரு நொடிக்குள் பழைய செல்வமானது போல் ஒரு தெம்பு.

அடுத்தநாள் ஏதோ கதைத்துக் கொண்டிருக்கும் போது “அதுகளுக்குக் கொடுப்பினை இல்லை” என்று சம்பந்தமில்லாமல் இடையில் சொன்னான் டானியல். யாருக்கென்று செல்வம் கேட்கவில்லை. தெரிந்த விசயந்தான். கேட்டிருந்தால் தேவசகாயத்தை ஒரு பிடி பிடித்திருப்பான்.

நாலுநாள் கழித்து அலுவலக பக்ஸ் இலக்கம் மேற்பார்த்து செல்வத்திற்கு ஒரு செய்தி வந்தது. ஊரிலிருந்து சின்னம்மா கனகம் அனுப்பியிருந்தாள். பொதுவாகவே வீட்டிலிருந்து தொலைபேசி அழைப்பு வருவதில்லை. தேவையென்றால் அவன்தான் எடுத்துக் கதைப்பான்.

அந்தத் தொலைநகலில் நாலே நாலு வரிகள்! நாலும் நாலுதான்!

“யுவர் கப்டன் டொனால்ட் கன்சி ஸபீக்கிங்”.. .. .. .. .. ..சீப் பைலட்டின் அறிவித்தல் விமானம் புறப்படப் போவதைச் சொல்ல செல்வம் திடாரென கண் விழித்துப் பார்த்தான்.

உடலை ஒட்டிப் பிடித்த ஏசி குளிரில் இடது கால் விறைத்துப் போயிருந்தது. சப்பாத்தைக் கழட்டி காலை நீட்டி விறைப்பைப் போக்க முயன்றான். கடைசி நேரத்தில் ஏறிய பயணி ஒருவரை பணிப்பெண் வழிகாட்டி அழைத்து வந்ததால் காலை ஒடுக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று.

டானியலும் பிள்ளைகளும் மேரியும் .. .. .. .. கொஞ்சம் கொஞ்சமாய் நெற்றிக்குள்ளிருந்து தேய்ந்து போக அந்த இடத்தை சின்னம்மா பிடித்துக் கொள்ள ஆரம்பித்தாள். அவளது முகம் அழுது அழுது வீங்கித் தெரிந்தது.

செல்வத்தை பயம் கவ்வத் தொடங்கிற்று.

(தொடரும்)

karulsubramaniam@yahoo.com

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்