3 கவிதைகள்

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue

விக்ரமாதித்தன் நம்பி


===============

ஒரு சொல்
விக்ரமாதித்யன் நம்பி

கிலுகிலுப்பை சப்தம்
கேட்டது
நரசிம்மமாய்ப் பிளந்து வெளிவர வேண்டும்
மரப்பாச்சிப்பொம்மை வைத்து
விளையாடிய
நினைவிருக்கிறதா
நடைவண்டி
பிடித்து
நடந்த நாள்கள் ?
பேசும்
மைனா என்று நக்கையுரித்தது
நீயா உன் சிநேகிதிதனா
ஆற்றுப்படுகைகளில்
பூத்த தாழம்பூக்களில்
ஒரு நாகம்

‘கோணவாய்நாயக்கர் ‘
கூடவே
வருகிறாரே
அம்மா
தலையணைத்து ஊட்டிய
அமிர்தப்பால் சிந்தவில்லை
தெரிதாவும் பூக்கோவும்
தெம்மாடிகள்
எனக்கு
தீரவாச நதி
பலநாள் நனைத்திருக்கிறது
என் குஞ்சானை

*தி.ஜானகிராமனின் ‘மலர்மஞ்சம் ‘ நாவலில் ஒரு முக்கியமான கதாபாத்திரம்.

*****************************************************************************

சுடலைமாடன் வரை

—விக்ரமாதித்யன் நம்பி

சுடலைமாடன்
துடிகொண்டு வந்து நின்றான்
நான்
சுடலைமாடன்
தெரியுமா என்றான்

அதற்
கென்ன
சிரித்துக்கொண்டே கேட்டேன்
அவன்
அப்படியே போய்விட்டான்

சங்கிலிபூதத்தான்
ஒரு நாள்
வழிமறித்து நின்று
ஞாபகம் இருக்கிறதா
என்னை என்று கேட்டான்

வேலைக்குப் போகவில்லையா
இன்றும்
என்றுதான் விசாரித்தேன்
பதில் பேசாமல்
போய்விட்டான்

கருப்பசாமி
ஒருமுறை
துள்ளத்துடிக்க வந்து
சங்கை பிடித்து
உன்னை
கொன்றால் என்ன
என்று கோபித்தான்

ஒரு
சுக்கும் இல்லை என்றதும்
காற்றோடுகாற்றாய் கரைந்துபோனான்

முனீஸ்வரன்
ஒருசமயம்
எதிரில்
வந்து
சொந்தம் கொண்டாடிப் பேசினான்

காபியா டாயா
என்று கேட்டு
வாங்கிக் கொடுத்து
இந்தப் பக்கம் வரும்போது
வந்துபோகச் சொன்னேன்

காத்தவராயன்
ஒரு தடவை
வீடுதேடி வந்து
கள்குடிக்க
கூப்பிட்டான்

ஆரியமாலா
சத்தம் போடுவாள்
போய் வா
ராசா என்று
கழன்று
கொண்டேன்

இப்படி
வந்து
கொண்டேயிருக்கிறார்கள் யாராவது

வரவேற்று
வழியனுப்பி
வைத்துக் கொண்டேயிருக்கிறேன் நானும்

****************************************************************

இல்லாதவன்

(ஒரு நவீன செய்யுள்)

—-விக்ரமாதித்யன் நம்பி

இல்லாதவன்
என்ன
சொன்னாலும் தப்பாகும்

இல்லாதவன்
என்ன செய்தாலும்
குற்றமாகும்

இல்லாதவனை
பொல்லாதவனாக்குவது
சுலபம்

இல்லாதவனாய்
இருப்பதே
பொல்லாதவனாக்கிவிடும்

இல்லாதவனுக்கு
போகமுமில்லை
புண்யமுமில்லை

இல்லாதவனுக்கு
அகம் புறம்
எதுவுமேயில்லை

இல்லாதவனுக்கு
இருப்புமில்லை
அமைப்புமில்லை

இல்லாதவன்
இருப்பதே
பூமிக்குப் பாரம்

இல்லாதவனுக்கு
பெற்றதாயே
விரோதி

இல்லாதவனுக்கு
இஷ்டநாயகியே
சத்ரு

இல்லாதவன்
தறுதலையாவது
தவிர்க்கமுடியாதது

இல்லாதவன்
பொறுக்கியாய்ப் போவதே
விதிக்கப்பட்டது

இல்லாதவன் அந்தரங்கம்
எல்லோருக்கும்
வெளியரங்கம்

இல்லாதவன் கேவலம்
எல்லோருக்கும்
பரிகாசம்

இல்லாதவன் மனசில்
பொல்லாத
மிருகங்கள்

இல்லாதவன் வாழ்க்கை
எல்லோருக்குமே
நல்லபடிப்பினை

இல்லாதவனை விமர்சிப்பது
எல்லோருக்குமே
எளிது

இல்லாதவன்
இறந்துபோனால்
எல்லோருக்குமே நிம்மதி.

******************************************************

Series Navigation

விக்ரமாதித்தன் நம்பி

விக்ரமாதித்தன் நம்பி