வெவ்வேறு சிறகுகள்…

This entry is part [part not set] of 48 in the series 20101227_Issue

ஸ்ரீஜா வெங்கடேஷ்



காலை அனைவரையும் அலுவலகம் , கல்லூரிகளுக்கு அனுப்பிவிட்டு டிவியைப்போட்டாள் நித்யா. வழக்கமான மாமியார் , மருமகள் தகராறு , அந்தரங்கமான விஷயங்களை காமிராவின் முன் அரங்கேற்றுதல் என்று திருப்பித்திருப்பி அதே அசிங்கங்கள்தான்.வெறுப்போடு டிவியை அணைத்தவள் மணி பார்த்தாள் , “அடேயப்பா பதினொண்ணு ஆச்சே!ஏன் இன்னும் வேலை செய்ய வள்ளி வரல?” என்று தன்னைதானே கேட்டுக் கொண்டாள்.அத்தனை பாத்திரங்களையும் தேய்த்து , வீடு பெருக்கி ,துடைத்து எப்படிச் செய்யச் முடியுமிவ்வளவு வேலையையும்? பெருமூச்சு விட்டாள். “சரி பார்ப்போம் , பதினொண்ணரை வரை வரலன்னா நாமே செஞ்சுக்க வேண்டியது தான்.” என்ற தீர்மானத்துக்கு வந்தவள் வீட்டைச் சீர் செய்ய முயன்றாள்.

நித்யாவின் கணவன் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மிக உயர்ந்த பதவியில் இருப்பவன்.அடிக்கடி வெளி நாடுகளுக்கெல்லாம் சென்று வருபவன் . அவர்களுக்கு ஒரே ஒரு மகன் தான் , அவனும் சென்னையிலேயே மிகச்சிறந்த பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருக்கிறான். பிராஜக்ட் , அது இது என சுற்றி விட்டு இரவு பதினோரு மணிக்குத்தான் வருவான்.மிக நன்றாகப் படிக்கும் மகன் , எவ்வளவு செலவு செய்தாலும் கேள்வியே கேட்காத கணவன் என்று மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் நித்யாவின் வாழ்க்கையில் குறை என்பதே இருக்கக்கூடாது. ஆனால் நிஜம் நித்யா ஒருத்திக்குத் தான் தெரியும். எத்தனையோ இரவுகள் அலுவலகப் பார்ட்டி என்று சொல்லி மூக்கு மூட்டக் குடித்துவிட்டு வருவான் அவள் கணவன் , அதாவது பரவாயில்லை வரும்போதே “கார்ல இருக்கற மேடம் , திருவான்மியூர் போகணும்னு சொன்னாங்க அவங்களக் கொண்டு விட்டுடு பழனி” என்று டிரைவருக்கு உத்தரவு கொடுத்துக் கொண்டேதான் நுழைவான்.நித்யவுக்கு உடம்பெல்லாம் பற்றியெரியும் , “யார் அது ? ” என்று கேட்டால் ஒரு நாள் “ஜஸ்ட் ஃப்ரண்டு டார்லிங்” என்பான் , சில நாள் “உனக்கென்ன அதைப் பத்தி , நாகரீகம் தெரியாத காட்டு மிராண்டி ஜென்மம் “என்று கோபப் படுவான். அதையும் மீறிப் பேசினால் சமயத்தில் கை நீட்டி அடிக்கும் பழக்கமும் உண்டு.

இதையெல்லாம் வைத்து நித்யாவை படிப்பறிவில்லாதவள் , கட்டுப்பெட்டி ,எதற்கும் இலாயக்கற்றவள் என்ற முடிவுக்கு நீங்கள் வரக்கூடும் . ஆனால் அது சரியல்ல. M.A ஆங்கில இலக்கியம் முதல் வகுப்பில் தேறியிருக்கிறாள், தவிர கணினியும் கற்றவள். அவளின் கல்லூரி நாட்களில் கவிதைப் போட்டியில் பரிசு வாங்கிருக்கிறாள். அது மட்டுமா கல்லூரியின் கலாசார அமைப்பின் (cultural club) செயலாளராக இருந்தவள் அவள்.அப்போது யாராவது அவளுடைய வாழ்க்கை இப்படியாகப் போகிறது என்று சொல்லியிருந்தால் கண்டிப்பாக சிரித்திருப்பாள் . ஏனெனில் அந்த அளவு பெண்ணுரிமை பற்றி பட்டி மன்றங்களில் விவாதித்தவள்.ஆனால் இப்போதுதான் புரிகிறது கல்லூரியில் வாழ்ந்த கனவு வாழ்க்கை வேறு , நிஜம் வேறு என்று. கல்யாணமான புதிதில் அவனுடையப் குடிப்பழக்கம் தெரிந்த உடன் பொங்கியெழுந்தாள். எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் திருந்தாததால் அப்பாவின் வீட்டிற்குப் போனாள்.அங்கே தான் வாழ்க்கை தன் கோர முகத்தை அவளுக்குக் காட்டியது. “மாப்பிள்ளை வந்து கூப்பிட்டால் உடனே நீ கிளம்புவது தானம்மா நல்லது ” என்று அம்மாவும் அப்பாவும் மாறி மாறி தூபம் போட்டனர்.”இந்தக் காலத்துல தண்ணி அடிக்காதவன் யாரு? மாப்பிள்ள பெரிய வேலையில இருக்காரு , மேலும் மேலும் உயரணும்னு நெனெக்கிறாரு அதனால பார்ட்டின்னா பாஸ் குடிக்கும் போது அவரும் குடிச்சுதானே ஆகணும் , அவர் பெரிய வேலைக்குப் போய் சம்பாதிச்சு யாருக்குக் குடுக்கப்போறாரு? உனக்குத்தானே? கொஞ்சம் நீ அட்ஜஸ்ட் பண்ணி தான் போகணும்” என்று உபதேசம் செய்தார்கள். கொஞ்ச நாளில் நித்யாவுக்கே தான் செய்தது சரியா? தவறா? என்ற குழப்பம் வந்து விட்டது. அதற்கேற்றாற் போல் அவனும் திரும்பிப் பார்க்காமல் இருக்கவே அம்மாவின் முணுமுணுப்பு அதிகமாயிற்று. ஏற்கனவே அம்மாவுக்கும் அண்ணிக்கும் ஆகவில்லை , இதில் இவள் வேறு நடுவில் இருந்ததால் பிரச்சனைகள் அதிகமாயின.இதன் நடுவில் இவளின் கர்ப்பம் உறுதிப்பட்டது. இது தான் சாக்கென்று அம்மாவும் அப்பாவும் நித்யாவை மாப்பிள்ளையின் வீட்டுல் கொண்டு விட்டு , அவள் சிறு பெண் என்றும் தெரியாமல் செய்த தவறை மன்னிக்கும் படியும் வேண்டினர். எல்லாமே கனவில் நடப்பது போல் இருந்தது அவளுக்கு. அவளாகத் திரும்பி வந்ததனால் அவன் அலட்சியம் அதிகமானது. நாட்கள் செல்லச் செல்ல அதுவே பழக்கமாகிப் போனது அவளுக்கு.

ஆண் குழந்தை பிறந்து சில வருடங்கள் ஒழுங்காக இருந்தான் , பிறகு பழைய குருடி கதவைதிறடி என்ற கதையாக குடிக்க ஆரம்பித்தான். இப்போது புதிதாக பெண்கள் சகவாசம் வேறு சேர்ந்து கொண்டது. அப்படியென்றால் மூன்றாந்தர விலை மாதர்களைத் தேடி அவன் செல்லவில்லை , பதிலாக அலுவலகத்தில் வேலை செய்யும் சில பெண்களோடு சுற்ற ஆரம்பித்தான்.அவர்கள் இவன் அழகிலும் , சிரிக்கச் சிரிக்கப் பேசும் சாமர்த்தியத்திலும் மயங்கி அவன் பின்னால் சென்றனர். நித்யா தாங்க முடியாமல் ஒருமுறை கேட்டதற்கு “we like each others company! so What’s wrong in spending time together? சும்மா ஹோட்டல் சினிமான்னு தானே போறேன் பெரிய தப்பு எதுவும் பண்ணலையே , அதுவும் தவிர உனக்குக் குறையேதும் வெக்கலியே “என்றான் கண்ணைச் சிமிட்டியபடி . “அப்போ அதே மதிரி நானும் ஒருத்தனோட சுத்துனா சும்மா இருப்பீங்.களா?” என்று வெடித்தாள் , அவன் கொஞ்சம் கூட நிதானம் இழக்காமல் “இப்போ நீ என்ன சொல்லா வரே? உன்னால அப்படி சுத்த முடியலயேன்னு கொபப்படுறியா? அப்படி நீ விரும்பினா no problem தாராளமா எவன் கூட வேணாலும் போயேன் ” என்றான் சிரிப்பு மாறாமல். அழுது தீர்ப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் அவளால்?”நான் அப்படி சுத்தமாட்டேங்கற தைரியத்துல தானே அவரு சொல்றாரு , நெஜமாவே எவங்கூடயாவது போனாலென்ன?” என்று பைத்தியக்காரத்தனமாக யோசித்தாள்.அந்த எண்ண ஓட்டத்தைக்கண்டு அவளே பயந்து விட்டாள். அம்மா , அப்பாவின் சண்டையை மிரள விழித்தபடி பார்துக் கொண்டிருந்த ஐந்து வயது மகனுடனே தன் வாழ்வை ஐக்கியப் படுத்திக் கொண்டாள். தாய் வீட்டிற்கு அவள் அதிகம் போவதில்லை , அவர்களும் அப்படியேதான் இருந்தார்கள். எங்கேயாவது மீண்டும் நித்யா அவர்கள் வீட்டிற்கு வந்து பாரமாகத் தங்கி விடுவாளோ என்ற பயம் காரணமாக இருக்கலாம்.

காலம் என்ன அப்படியே நிற்கவா செய்யும்? அதன் வேகத்தில் அது நடைபோட்டுக் கொண்டிருந்தது.மகனும் பெரிய பையனாகத் தொடங்கிய பிறகு இவளை விட்டு மெல்ல விலகலானான்.அவனுடைய ஆர்வங்கள் அம்மாவைத் தாண்டி வெளியுலகத்தில் விரிவடந்தன. அவன் படிப்பு , அமெரிக்கா செல்லும் கனவு என்னும் லட்சியங்களை நோக்கி அவன் திரும்பினான். அம்மாவின் தனிமைக்கும் , கண்ணீருக்கும் அவனுக்கு நேரம் இல்லாமல் போனது. சில சமயங்களில் “எனக்கு ஒரு பெண் குழந்தை இருந்தால் ஒருவேளை அது என் மனதைப் புரிந்து கொண்டிருக்குமோ?” என்று நினைப்பதுண்டு ஆனால் அதெல்லாம் சில காலம் முன்பு இப்போதெல்லாம் நித்யா எதுவும் நினைப்பதே இல்லை. யாரோடும் பேசிப் பழக விரும்புவதும் இல்லை. வேலைக்காரி வள்ளி ஒருத்தி தான் அவள் தொழி , அவளிடமும் கணவன் பற்றி மூச்சுக் கூட விட்டதில்லை நித்யா , பின்னே அவனுடைய மதிப்பும் , கௌரவமும் போய் விடுமே? ஆனால் வள்ளி எல்லாம் சொல்வாள். அவள் கணவன் குடித்து விட்டு வந்து அவளை அடிப்பது பற்றி , வீட்டுச் செலவுக்குக் காசு கொடுக்காமல் இருப்பது பற்றி , பசங்களைப் படிக்க விடாமல் இரவு எட்டு மணிக்கே லைட்டை அணைக்கச் சொல்லுவது பற்றி இப்படி எல்லாவற்றையும் நித்யாவோடு பகிர்ந்து கொள்வாள். அதெல்லாம் நித்யாவுக்கு மறைமுக ஆறுதலாயிருக்கும்.

“இன்னிக்கு என்ன ஆச்சு வள்ளிக்கு? இன்னும் காணோம் , உடம்பு சரியில்லையோ? அப்படியிருந்தால் கூட ஃபோன் செய்து சொல்லுவாளே ” என்று கவலைப் பட்டவாறே சமையலறையை நோக்கி நடந்தவளை அழைப்புமணி கூப்பிட்டது. கதவைத் திறந்தவள் எதிரில் வள்ளிதான் தலையில் பெரிய கட்டோடு நின்று கொண்டிருந்தாள். பதறிப் போன நித்யா “வள்ளி என்ன ஆச்சு ? என்ன தலயில இவ்ளோ பெரிய கட்டு?”என்ற கேள்விக்கு. “எல்லாம் நிதானம சொல்றேன் , மொதல்ல எனக்கு ஒரு டம்ளர் டீ குடுக்கா தல நோவுது” என்ற பதிலளித்தவள் , நித்யாவின் பின்னாலே சமையலறைக்கு வந்து சுவரில் சரிந்து உட்கார்ந்து கொண்டாள்.டீ உள்ளே போகப்போக தெம்பு வந்ததாகத் தோன்றியது.நிமிர்ந்து உட்கார்ந்தவள்,”அந்தக் கட்டேல போறவன் அதான் என் புருசன்னு ஒத்தன் கீறானே அவன் கட்டயால அட்ச்சிட்டான்.”என்றவள் நித்யாவின் மௌனத்தைப்பர்த்து மேலும் தொடர்ந்தாள் ” நேத்து நைட்லர்ந்து அது ஊட்டுக்கே வரல , எங்கனா ரோட்ல உயுந்து கெடக்கும் , காலீல தானே வரும்னு நெனச்சி விட்டுடேன் , அந்தக் கஸ்மாலம் காலீல ஒரு பொம்பளையோட சோடி போட்டுகினு வருது , விடுவனா நானு அந்தப் பொம்பளைய புடிச்சு வலிச்சேன் பாரு அது அன்னண்ட போயி உயுந்துது , அதப் பாத்துட்டு அந்த மானங்கெட்ட நாயி கட்டையால அடிச்சான். அதுவுமில்லம இனிமேட்டு அந்த முண்ட இங்கே தான் இருப்பா , ஒனக்கு இஷ்டம்னா இரு இல்லன்னா போய்க்கினே இருன்னான் அந்தப்பாவி.எனக்கு மான ரோசம் இல்லே?சர்த்தான் போடான்னு பசங்களைக் இட்டுகினு ஊட்டை விட்டு வந்துட்டேன் ” என்று நீண்ட பிரசங்கத்தை முடித்தாள் .தபிரமிது நின்ற நித்யா “வீட்டை விட்டு வந்துட்டியே இனிமே என்ன செய்வே?” என்று அவளைக் கேட்பது போல் தன்னையே கேட்டுக் கொண்டாள். “நான் ஒன்ன மாரி படிக்கலியே கண்டி மனசுல தகிரியம் இருக்குதுக்கா , பூக்கார லட்சுமியண்ட சொல்லி வெச்சுருக்கேன் நாளைக்கே எனக்கு அது குடியிருக்க எடம் பாத்துக் குடுத்திடும் , கூட நாலு வீட்ல வேல செஞ்சாவது எம்பசங்களுக்கு கஞ்சி ஊத்துவேன் , மானங்கெட்ட ஆளோட வாழறதுக்கு நாலு வீட்ல கஸ்டப் படுறது எவ்வளவோ மேல் “என்றாள்.

வாயடைத்துப் போய்விட்டாள் நித்யா. எவ்வளவு பெரிய முடிவு?எத்தனை சுலபமாக எடுத்து விட்டாள்? வியந்து கொண்டிருந்தவளை வள்ளியின் குரல் உசுப்பியது ” அக்கா ஊட்டுக்கு அட்வான்சு குடுக்கணும் , இன்னும் சில சாமான் செட்டெல்லாம் வாங்கணும் , ஒன்ன தான் நம்பியிருக்கேன் , நம்ப ஐயாதான் உங்கிட்ட கணக்கே கேக்கறதில்லையே , தங்கமான ஐயாவாச்சே ஒரு ரெண்டாயிர ரூவா குடுக்கா , அடுத்த மாச சம்பளத்துலருந்து ஐநூறு , ஐநூறா புடிச்சிக்க ” வள்ளி பேசிக்கொண்டேயிருக்க பெருமூச்சு விட்டபடி பணம் எடுக்கச் சென்றாள் நித்யா.

Series Navigation

ஸ்ரீஜா வெங்கடேஷ்

ஸ்ரீஜா வெங்கடேஷ்