வெளி….

This entry is part [part not set] of 53 in the series 20040827_Issue

பட்டுக்கோட்டை தமிழ்மதி


காற்றுக்கு இந்தக் கதவுத் திறப்பதில்லை.
தட்டாமல் கதவைத்
தழுவும் பூஞ்சிறகுக்குத் தாழ்த்திறப்பதில்லை

கனத்த உருவம் அருகில் செல்ல
விலகித் திறக்கும் கதவுக்கு
ஒரு
பூவைப்போட்டு பூட்டிவைத்திருப்பது
புரியவில்லை

தாழப்பறக்கும் தட்டானே….
நீ
வந்தவழித் தெரியவில்லை
கதவைத் திறந்து வைக்கிறேன்
தளிர் கையை
ஓடிப் பிடிக்க உனக்கு
தப்பும்வழி தெரியவில்லை.

எந்திரங்களில் வழியும்
எண்ணெய் சேற்றில்சிக்கி
காலெடுக்க
செந்தாமரையாய் நீ
சிறகடிக்க வேண்டாம்
தப்பிவிடு என்கிறேன்.

அடைப்பட்டது தெரியாமல்
அனந்தச் சிறகடிக்கிறாய்.

எட்டாத ஒன்றை
தொட்டது போல் துள்ளுகிறாய்.

வெளியே வெண் பட்டு வெயிலடிக்க
எந்திரக் குளிரடிக்கும் உள்ளே
எதையோ
இழுத்துப் போர்த்திக் கொள்ளப் பார்க்கிறாய்.

குதூகலிக்கிறாய்
என் முன்
பூக்களின் ஞாபகமாய்
புறப்பட்டு வந்திருக்கிறாய்.

உனதிந்த நினைவூட்டலோடு
எனதிந்த தேனீர்வேளை…

நானும்
மாறிவந்த வெளியை
மனசுக்குக் கட்டுகிறாய்.

இந்த
அறையின் அகலம்
அப்புறம் அப்புறம்
நீளமாய் நீள்கிறது
அகலமாய் விரிகிறது.
அகலம் நீளமாக
நீளம் அகலமாக
நீளும் வெளி….நினைவில் என்மண்
நிசமா கனவு ?

காசுக்காக நான்தான்
கட்டுப்பட்டு கிடக்கிறேனிங்கு.
உள்ளுக்குள் அடைபட
உனக்கென்ன ஒப்பந்தமோ ?

வேலைமுடிந்து
வெளியே போனபின்னும்
என்
இதயம் மட்டும் இங்கேயே சுற்றுகிறது
உன்னைப்போல்.

வெளியே
பூக்களோடும் பொழுதுகளோடும்
உரசிப்பார்க்கலாம் தானா கொஞ்சம் ?
வா வெளியே…

வா வெளியே!

/ எப்படி வந்ததோ ? கதவுகளைத் தாண்டி எங்களுக்கும் எந்திரங்களுக்கும் இடையே பறந்திருந்த தட்டான் /
—-
பட்டுக்கோட்டை தமிழ்மதி
tamilmathi@tamilmathi.com

Series Navigationரவி சுப்பிரமணியன் கவிதைகள் >>

பட்டுக்கோட்டை தமிழ்மதி

பட்டுக்கோட்டை தமிழ்மதி

வெளி

This entry is part [part not set] of 25 in the series 20020902_Issue

சுந்தர் பசுபதி


முடிவற்ற விழிப்புணர்வே விடுதலையின் விலையாமென்ற *
மூத்தோரின் வாக்கினை எண்ணும் போழ்தில்
சுதந்திரமென்றெதனைச் சொன்னார் எனும்
கேள்வி முளைக்கும்….

***

வாழுகின்ற வாழ்க்கை நிலை பற்றி பெருமிதம் கொள்ளுகையில்
அதன் நிலையாமயின் நினைவு வந்து சுரீரென்று தைக்கும்
நன்று செய்தாய் நம்பி என பணியிடத்தில் புகழப்படுகையில்
என்னிலும் கூர்மையானோர் நினைவு வரும்
தோற்றப்பொலிவு கண்முண் தெரிகையில் இதனால்
தோற்றோர் பட்டியல் நினைவு வரும்
சுயநலமற்று விட்டு கொடுத்தோமே என இறுமாந்திருக்கையில்
தனைப் பெற்ற தாயவளின் நினைவு வரும்

நாள் முழுக்க வேலை செய்தும் கூலிக்கே அல்லாடும்
ஏழையொருவனின் சாயந்திர நேரத்து சதிராட்டத்தை
விளைவுகளை யோசியாமல் அவன் வீசி வீசி பேசுவதை
மனத்துள் கனம் கொள்ளாது அக் கணத்துக்காய் அவன் வாழ்வதை
சிந்தனைக்குள் குறுகாமல் அவன் குதியாட்டம் போடுவதை
அன்றைய நாளில் அவன் வெற்றியை மனதார ருசிப்பதை
காணுகையில்…………

புலம்பலில் இறங்கும் மனது, பொருமலில் தொடர்ந்து
கேள்வியில் திணறும்

*******************

சுதந்திரமென்றெதனைச் சொன்னார்…. ? ?
பிரச்சினைகளினின்றும் சுதந்திரமா…
சூழல்களின் சுழல்களினின்றும் சுதந்திரமா…
சிந்தனையற்று சும்மா இருக்கும் சுதந்திரமா…

எனில் இதுவே துறவோ… ? ?

* eternal vigilence is the price of liberty

***
sundar23@yahoo.com

Series Navigation

சுந்தர் பசுபதி

சுந்தர் பசுபதி