வெண் புறா

This entry is part [part not set] of 49 in the series 20030724_Issue

ராமலக்ஷ்மி


இரு துருவங்களாக
பாகிஸ்தானும் பாரதமும்!
பாலமாக நீ வந்தாய்
நூர் பாத்திமா!
இத் துருவங்களை
இணைக்கத்தான்
இரு துளைகளை
இறைவன் வைத்தானோ
இத்தனை சின்ன உன்
இதயத்திலே!
மறுபடியும் துளிர்க்கிறது நட்பு,
லாகூருக்கும் டெல்லிக்கும் பேருந்து-
சின்னத் தேவதையே உன்னைச்
சிணுங்காமல் ஏற்றிக் கொண்டு!
பெங்களூரே பரபரப்பானது,
பிஞ்சே உன்
பஞ்சுப் பாதங்கள் பட்ட போது.
‘நூர் நூர் ‘ என
உன்னைப் பார்க்கத்தான்
எத்தனை நூறு பேர்-
கை நிறைய பூங்கொத்துக்களும்
வாய் நிறைய வாழ்த்துக்களும்
நெஞ்சு நிறைய பிரார்த்தனைகளுமாய்-
குழந்தைகளும் பெரியவரும்
வரிசை வரிசையாய்-
நினைத்தாலே பெருமிதம்!
‘அந்நிய நாட்டுக் குழந்தை ‘ என
அந்நியப் படுத்தாமல்
அத்தனை செலவையும்-ஏற்று
கொண்டார் ஒரு சிலர்.
அது
ஆனந்தம் என்றால்
நல்லிணக்கத்துடன்
அதை ஏற்று,
பாச மகளின்
மருத்துவதுக்காகக்
கொண்டு வந்த
பெருந்தொகையை
நேசத்துடன்
இந்தியக் குழந்தைகளுக்காக
இந்திய மருத்துவரிடம்
தந்தாரே உன் தந்தை-
அது
பேரானந்தம்!
தேறிடுவாய் நீ
சீக்கிரம்
தேவதையே பாத்திமா!
உன்
சிங்காரச் சிரிப்பினிலே
சிலிர்த்துக் கிளம்பிப்
பறந்திடுமே
சமாதான வெண்புறா!
**
ramalakshmi_rajan@yahoo.co.in

Series Navigation

ராமலக்ஷ்மி

ராமலக்ஷ்மி