வினிதா வாழ்க! போலிஸ் அராஜகம் ஒழிக!!

This entry is part [part not set] of 46 in the series 20030822_Issue

மோகன்


தொடரும் ‘விபச்சாரக் கைதுகள் ‘ தொடரும் சர்க்கஸ். தொடரும் பத்திரிகை செய்திக் குறிப்புகளில் அழகிகள் கைது.. செய்திகள் தின மலத்திலிருந்து, தினக் கறையிலிருந்து, தின வதந்தி என்று எல்லா செய்தித்தாள்களிலும் முகப்புச் செய்திகள். திமுக டிவி, அதிமுக டிவி, கட்சி சாராத டி வி என்று எதிலும் இந்தச் செய்திகள் விதிவிலக்கல்ல.

தடிமாடு ஆண்கள் விபச்சாரக் குற்றத்தில் கைது என்று செய்தி வரும் வரையில் இந்த பரபரப்பும், தொலைக்காட்சிகளில் முக்காடிட்ட பெண்களை ‘நாகரிகமாக ‘ போலிஸ் இழுத்துப் போவதும் தொடரும். யாருக்கும் வெட்கமில்லை.. முக்கியமாக ஏதோ பெரிய குற்றத்தைக் கண்டுபிடித்து விட்டோம் என்று மீசையை முறுக்கிக் கொண்டு ‘விபச்சாரக் கைதுகள் ‘ பண்ணும் போலிசுக்கு வெட்கமில்லை. அந்தக் காட்சியைத் துரத்தித் துரத்திப் படம் பிடிக்கும் போட்டோகிராபர்களுக்கும் வெட்கமில்லை. அந்தச் செய்தியை மாய்ந்து, மாய்ந்து தொலைக் காட்சியில் ஒளிபரப்பும் செய்திப் பொறுப்பாளர்களுக்கும், தொலைக் காட்சி உரிமையாளர்களுக்கும் வெட்கமில்லை. இதைப் பார்த்து உச்சுக் கொட்டும் ஜனங்களுக்கும் வெட்கமில்லை. பெண்களுக்காகக் குரல் கொடுக்கிறோம் என்று குரல் கொடுத்துக் கொண்டே இப்படிப் பெண்கள அவமானப் படுவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கும் பெண்கள் அமைப்புகளுக்கும் , மாதர் சம்மேளனங்களுக்கும், பெண்ணியப் போராளிகளுக்கும் வெட்கமில்லை. வெட்கப் படுவது பாவம் முகத்தை காமிராவிற்குத் தெரியாமல் மறைத்துக் கொண்டு செல்லும் அந்தக் கைதாகிய பெண்கள் தான். பட்டுப் புடவை கட்டிய ‘நாகரிகமான ‘ பெண்களின் பிரசினைக்காகப் போராடுவது தான் பெண் அமைப்புகளின் வழமுறை என்றாகி விட்டதால், இந்தப் பெண்கள் தீண்டத்தகாதவர்களாகி விட்டார்கள். இவர்களுக்காகக் குரல் கொடுப்பது , ஏதோ தவறான ஒழுக்கம் குறித்த பிரசினை ஆகிவிட்டது போலும். காவல் துறைக்கு எவ்வளவோ அவசரமான வேலைகள் உள்ளன. வழிப்பறியும், கொள்ளைகளும் பெருகியுள்ளன. ஏமாற்றும் ஃபைனான்ஸ் கம்பெனிகள் பெருகி வருகின்றன. ஒவ்வொரு பேட்டையும் ரெளடிகள் ராஜ்யமாக மாறி வருகிறது. அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பண்ணும் பொருளாதாரக் குற்றங்கள் ஓய்ந்த பாடில்லை. இந்தக் குற்றங்களைத் தேடிச் செல்ல வேண்டிய காவல் துறை, விபச்சாரக் கைது போன்ற வெட்டிவேலைக்கு அனுப்பப் படுகிறார்கள். அதில் இவர்கள் விளம்பரமும் தேடிக் கொள்கிறார்கள்.

இந்த் முட்டாள் தனமான கேலிக்கூத்து மாதம் ஒன்று என்று வழக்கமாகி விட்டது. இந்தப் பெண்களின் மனித உரிமைகள் பற்றி மனித உரிமைக் கமிஷனும் வாய் திறப்பதில்லை. உலகிலேயே மிகப் பெரிய சிவப்பு விளக்குப் பகுதிகளை மும்பையிலும், கொல்கத்தாவிலும் கொண்டுள்ள பாரத மணித்திரு நாட்டின் சென்னை மாநகரில் மாதந்தோறும் நடந்தேறும் அவல நாடகம் இது. எப்படிப் பட்ட பம்மாத்து இது. முன்னமே நான் எழுதியது போல, மாதுரி, புவனேஸ்வரி, டாக்டர் பிரகாஷ், வினிதா ஆகியவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மும்பையிலும், கல்கத்தா சோனாகாச்சியிலும் சிவப்பு விளக்குப் பிரதேசங்கள் மூடப் படும் வரையில் இந்த செக்ஸ் தொழிலைக் குற்றம் என்று சொல்லிக் கைது செய்வதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு ‘பொது நல வழக்கு ‘ எவரேனும் தொடர முன்வரவேண்டும்.

*

இது பற்றி என்னுடைய முந்தைய குறிப்புகள்

வாழ்க புவனேஸ்வரி!! ஒழிக விஜயகாந்த் !!!
மோகன்

கைது செய்யப்பட்ட விபச்சார குற்றம் சாட்டப்பட்ட பெண்களை விடுதலை செய்யவேண்டும்
மோகன்

மாதுரி, பிரகாஷை உடனே விடுதலை செய்யவேண்டும்
மோகன்

எய்ட்ஸ் நோயைக்கட்டுப்படுத்த விபச்சாரத்தை சட்டப்படியான ஒரு தொழிலாக மாற்றுங்கள்!
மோகன்

Series Navigation

மோகன்

மோகன்