வட்டங்கள் இறக்கிய கிணறு….

This entry is part [part not set] of 36 in the series 20101017_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்


******************************************

வட்டங்க இறக்கிய கிணறு..
வட்டச் சிற்றலைகளுடன் …

மழைத்துளி உண்ணும்
சாதகப் பட்சியாய் வாய் பிளந்து..

சில படிக்கட்டுகளோடும்..
சில பாழடைந்தும்..
சில குப்பைகளுடனும்..
சில வாழ விரும்பாதவர்களுடனும்..

தோண்டித் தூரெடுத்தால்..
ஊற்றாயும்..
வாழ்வின் சாறாயும்..

சுவரோரமாய்ப் பாசங்களும்..
செங்கல் பெயர்ந்த தடங்களும்..
பசலையும்., தீயின் வடுவுமாய்..
ரகசியங்கள் உறைந்து..

தவளைகளும் ., சில மீன்களும்..
தொலைத்த பொருட்களும்…
தொலைய நினைத்த மனிதர்களும்..

பம்புசெட்டும் .கீரைப் பாத்திகளும்
உயிர் தழுவும் உன்னதக் காற்றும்
உயிர்ப் பயிர்களின் தலையசைப்பும்..

காற்றும் நீரும்.. கலவி
லயமும் சரமுமாய்..
இரைக்க இரக்க..
இறைத்து இரைந்து..

சகடைச் சத்தங்களும்..
வாளியின் முத்தங்களும்..
ஆழ்துளையின் இயந்திர
நாதங்களும்.. சந்தங்களும் சுமந்து..

வலை வீச முடியாது..
கல்லெறியலாம்….
எல்லாம் விழுங்கி
மெல்லலைகளுடன்..
வட்டங்கள் இறக்கிய கிணறு…

Series Navigation

தேனம்மை லெக்ஷ்மணன்

தேனம்மை லெக்ஷ்மணன்