யதார்த்தவாதியான ஒரு கர்ம வீரர்

This entry is part [part not set] of 49 in the series 20030724_Issue

சுந்தர ராமசாமி


இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னால் என் இளம் பருவத்தில் மற்ற பள்ளித்தோழர்களுடன் சேர்ந்து, ‘காமராஜ நாடாருக்கு ஜே!’ என்று நானும் கத்தியது நன்றாக நினைவிருக்கிறது. அந்தக் காலத்தில் அவர் அப்படித்தான் அழைக்கப்பட்டு வந்தார். அப்போது அவருடைய பெயரில் எந்த மாற்றமும் செய்ய வேண்டுமென்ற எண்ணம் எவருக்கும் இருக்கவில்லை. அவருடைய ஜாதி வால் அவரது ஜாதி புத்தியைக் காட்டுவதாக எவருமே எடுத்துக் கொண்டது இல்லை. அவரது புகழ் தன்னிறைவு பெற ஒரு பட்டத்தை அவருக்கு அளிக்க வேண்டுமென்ற எண்ணமும் எவர் மனத்திலும் தோன்றியது இல்லை. தமிழ்ச் சமூகத்தில் அன்று அவர் பெற்றிருந்த கெளரவமும் எல்லோருக்கும் நிறைவாகவே இருந்தது. இவற்றின் பொருள் சமூகச் சேவை புரிகிறவனின் நம்பிக்கையும், அந்த நம்பிக்கை சார்ந்த செயல்பாடும்தான் முக்கியம் என்று அன்றைய மக்கள் நம்பினார்கள் என்பதுதான். மெய்யான நம்பிக்கைகள் அல்ல, போட விரும்பும் வேஜங்கள் சார்ந்த அடையாளங்கள்தான் முக்கியம் என்று மக்களை நம்பவைக்கும் கீழ்நிலைப் பிரசாரம் அப்போது அரசியல் நாகரிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை. காமராஜரைப் போன்ற லட்சியவாதிகளும் கர்மவீரர்களும் அரசியல் களத்தின் சூழலைத் தீர்மானித்து வந்த காலம் அது. சொல்லுக்கும் செயலுக்குமான உறவின் ஜீவப்பிணைப்பு முற்றாக உலர்ந்துபோயிராத காலம்.

தேர்தல் களத்தில் மித மிஞ்சிய வாக்களிப்புகள், உண்மையைவிட அலங்காரப் பேச்சுக்கு அரசியல் களத்தில் முக்கியத்துவம், பண்டைத் தமிழ் வாழ்க்கையின் பெருமைகளை எவ்விதச் சரித்திர ஆதாரமும் இல்லாமல் மிகைப்படுத்தி மக்களின் உணர்ச்சியைக் கிளறிவிடுதல் போன்ற தந்திரங்கள்தாம் தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பவை என்ற சூத்திரம் பெரியாரைவிட்டுப் பிரிந்து வந்த திராவிட அரசியல்வாதிகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. இந்தத் தந்திரங்களினால் பெற்ற பதவிகள், அதிகாரங்கள், ஊழல்கள் ஆகியவற்றின் பெரும் அறுவடைகள் காலப்போக்கில் தமிழ்ச் சமூகத்தில் எண்ணற்ற விஜவேர்களைப் பரப்பி வருகிறது.

காமராஜரின் வீழ்ச்சி நவீனத் தமிழ் அரசியலில் நிகழ்ந்த மிகக் கொடுமையான சம்பவம் ஆகும். லட்சியவாதத்தை நடைமுறைத் தந்திரம் முறியடித்த துன்பியல் நாடகம் அது. அரசியலில் காமராஜர் ஒரு புனிதர் அல்லர். அரசியல் களத்தில் புனிதர்கள் எவருமே நிலைக்கவும் முடியாது. ஒரு வெகுளியாக அவர் இருந்திருந்தால் இந்திய அரசியலில் அவரால் தலைமைப் பதவிக்கு ஒருநாளும் வந்திருக்க முடியாது. உயர்குடிப் பெருமை கொண்டவர்கள், உயர் ஜாதியினர், மெத்தப் படித்தவர்கள், ஆங்கில விற்பன்னர்கள் போன்றவர்களே அரசியல் தலைமைக்கு வரச் சாத்தியமாக இருந்த காலம் அது. காமராஜர் ஒரு கீழ்நிலைத் தொண்டனாக அரசியலில் புகுந்த காலத்தில் கடைசி வரையிலும் ஒரு தொண்டனாக இருந்து கழிவதே தன் விதி என எண்ணியிருந்தால் அதைச் சரியான யதார்த்தப் பார்வை என்றுதான் எவரும் எடைபோட்டிருக்க முடியும்.

காமராஜருக்கு முறையான கல்வி இல்லை. சென்னைக் காமராஜர் மன்றத்தில் கையெழுத்து மாதிரிக்காக வைத்திருக்கும் அவரது தமிழ்க் கடிதத்தில் மோசமான எழுத்துப் பிழைகள் உள்ளன. அவர், தாழ்ந்த ஜாதியாகக் கருதப்பட்ட மிகக் கேவலமாக ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர். இளமையில் குறைந்த வருமானத்திற்குக் கடுமையான உடலுழைப்பில் ஈடுபடவேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டவர். அவரது தோற்றம் காரணமாகவே பெரிதும் உயர்ஜாதியினரின் தலைமைகொண்ட ஒரு கட்சியில் மிகுந்த புறக்கணிப்புக்கும் அவமானத்திற்கும் அவர் ஆட்பட்டிருக்கக்கூடும். இந்திய விடுதலை எனும் சுடர் தளர்ச்சியின்றி எரிந்த இதயத்தால் மட்டுமே தாங்கிக்கொள்ளக்கூடிய புறக்கணிப்பை அவர் தொடர்ந்து எதிர்கொண்டிருக்கக்கூடும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

மக்கள் மீது அளவிற்கு அதிகமான நம்பிக்கை கொண்டிருந்தவர் அவர். யதார்த்தவாதியான அவருடைய இந்த நம்பிக்கை, அவரது பார்வையில் இருந்த ஒரு முரண்பாடு என்றுகூடச் சொல்லலாம். மக்களுக்கு நல்லது செய்தால் அவர்கள் அதைச் சரிவரப் புரிந்துகொள்வார்கள் என்றும் அதை நினைவில்கொண்டு அக்கட்சியை ஆதரிப்பார்கள் என்றும், செய்த நல்ல காரியங்களை வெளிச்சம் போட்டு விளம்பரப்படுத்த வேண்டியதில்லை என்றும் அவர் நம்பினார். மக்களின் பிரித்தறியும் திறனிலும் உள்வாங்கிக் கொள்ளும் சக்தியிலும் இன்றைய அரசியல் வாதியிடம் காணக்கிடைக்காத நம்பிக்கை அவரிடம் இருந்தது.

சகலகட்சிகளும் மக்களைப் பொது மேடைகளில் பொய்யாகத் தூக்கிப் பேசுவதை நீண்ட காலமாகவே கேட்டு வருகிறோம். மக்கள் மீது கொண்ட உள்ளார்ந்த நம்பிக்கையைத்தான் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள் என்று இன்றைய அரசியலின் அரிச்சுவடியை அறிந்தவர்கள் கூட நம்பமாட்டார்கள். காமராஜர் உண்மையாகவே மக்கள் மீது நம்பிக்கை வைத்திருந்ததால் அவர்களைத் தூக்கிப் பேச வேண்டிய அவசியம் அவருக்கு இல்லாமல் போயிற்று. திராவிட முன்னேற்றக் கழகத்தினரின் அரசியல் சாமர்த்தியங்களோடு காமராஜரின் அரசியல் அணுகுமுறையில் இருந்த நேர்மையை இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் ஒப்பிட்டுப் பாக்கலாம்.

காமராஜரை ஒரு காங்கிரஸ்காரர் என்று மட்டும் சொல்லி முடித்துவிட முடியாது. காங்கிரஸ்காரர்களின் பொதுக்குணம் என்பது அவரது ஆதார சுருதி என்றாலும் அந்தப் பொதுக் குணத்தில் அழுத்தம் பெறாத பல கூறுகளும் அவரிடம் வலிமையாக இருந்தன. அந்தக் கூறுகளை ஓரளவு காந்தீய ஆளுமையுடன் இணைத்துப் பார்க்க முடியும். ஆனால் காந்தீயத் தத்துவங்களில் அழுந்தும் தன்மையில்லாத குணமொன்றும் அவரிடம் இருந்தது. உதாரணமாக மதச்சிந்தனைகளில் கவனம் கொள்ளாத, கடவுள் வழிபாட்டில் அக்கறை காட்டாத வேற்றுமை முக்கியமானது. சோஜலிசச் சிந்தனைதான் அவருடைய அடிப்படைப் பார்வையாக இருந்தது என்றும் கூறலாம். பிறப்பு வளர்ப்பில் பெற்ற, இயற்கை அறிவு வழியாகக் கற்றுக்கொண்ட அனுபவச் சாரத்தினால், பிரச்னைகளின் ஜீவத்துடிப்பைத் தத்துவத்தளத்திற்கு ஏற்றிச் சிக்கல்படுத்தாமல், ‘ஊனக்கண்’ கொண்டு பார்த்தே புரிந்துகொள்ளவும் தீர்வு காணவும் அவரால் முடிந்திருந்தது.

அவர் ஆட்சியில் அமர நேர்ந்தபோது ஒரு சில பிரச்சினைகளில் அவரது கவனம் தொய்வு காட்டாமல் வலுவாக இருந்தது. மின்சாரத்தின் பயன்களைக் குக்கிராமங்களிலுள்ள மக்கள்வரைப் பெற வழிவகை செய்தல், கல்வியைச் சகல கிராம மக்களுக்கும் ஊட்டுதல், வயிற்றுக்கு உணவில்லை என்ற காரணத்தால் ஏழைக் குழந்தைகளின் கல்வி தடைபடும் அவலத்தை அவர்களுக்கு இலவச உணவளித்துத் தடுத்தல், பயிர்கள் செழுமைப்பட்டு விளைச்சல் அதிகரிக்க வழிவகை செய்தல் போன்றவையாகும் அவை. இந்த அடிப்படைப் பிரச்னைகளுக்கு ஓரளவு தீர்வு கண்டிருந்தாலே கலாச்சாரப் பிரச்னைகள் உள்ளிட்ட பல பொருளாதாரத் தாழ்வுகளுக்கு விடைகாண மக்களின் வலுவான ஆதரவைப் பெற்றிருக்க முடியும். அவர்கள் ஆதரவுடன் பல நல்ல காரியங்களை நிறைவேற்றிருக்கவும் முடியும்.

ராஜாஜி கோஜ்டியினரின் குறுக்கீடினால் பதவியில் அமரவே காமராஜருக்கு வெகுகாலம் பிந்திவிட்டது. பெரியார் அவரது அரசியல் பார்வைக்கேற்பக் காமராஜரை ஆதரித்தது புரிந்துகொள்ளக்கூடியது. அதே நேரத்தில் ராஜாஜியின் ஆதரவைப் பெறுவதற்காகத் தி.மு.கழகம் அவருக்கு உயிரூட்டிக் காமராஜரின் கைகளைப் பலவீனப்படுத்திற்று. அரசியல் களத்தில் எந்தக் கட்சியினர் ராஜாஜியை மிகக்கடுமையாக விமர்சித்தனரோ அவர்களே பிற்போக்குவாதியான அவரைத் தேர்தலில் பிராமணர்களின் வாக்கைப் பெறுவதற்காக ஆதரித்தனர். தன்னலமற்ற ஒரு சோஜலிஸச் சிந்தனையாளரான காமராஜை அரசியலில் இருந்தே ஒழித்துக்கட்ட திட்டங்கள் தீட்டினார்கள். ஒரு ஜாதித் தலைவராகத் தேய்ந்துபோயிருந்த ராஜாஜியை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் தூக்கிப்போட்டுக்கொள்ளலாம் என்பதையும், காமராஜரின் தோல்வியை நிகழ்த்தாத வரையிலும் தம் கட்சியின் ஆட்சியை உறுதிப்படுத்த முடியாது என்பதையும் தி.மு.கழகத்தினர் அறிந்திருந்தார்கள்.

தேர்தலில் காமராஜரை விழத்தட்டுவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. அன்று தி.மு.கழகத்தினர் காமராஜருக்கு எதிராகத் தேர்தல் மேடைகளில் செய்த பொய்ப் பிரச்சாரங்கள் தமிழக அரசியலில் கேவலமான தந்திரங்களை வெற்றிக்கான வழிமுறை ஆக்கிற்று. காமராஜரின் தோல்வி தமிழ்ப் பண்பாட்டைத் தூக்கிப் பிடித்துக்கொண்டிருந்த தி.மு.கவினருக்கு அவர்களை அம்பலப்படுத்திய பெரும் தோல்வியாகும்.

தேர்தல் என்பது ஜாதிக் கணக்குகளை அடிப்படையாகக் கொள்ளவேண்டிய ஒரு சூதாட்டமாக இந்தியா சுதந்திரம் பெற்ற நாட்களிலிருந்து உருவாகி வருகிறது. இந்தியாவின் முன்னேற்றத்திற்கு மிகப் பெரிய தடையாக அமைந்தது தங்கள் வெற்றியை மட்டுமே முன்னிறுத்தி அரசியல் கட்சியினர் ஜாதி வேறுபாட்டைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டதன் மூலம் அதன் இருப்பை உறுதிப்படுத்தியதாகும். இந்த இழிவான சூத்திரத்தைக் காமராஜரும் ஏற்றுக்கொள்ளும் நிர்ப்பந்தம் நேர்ந்தது மிகப் பெரிய கொடுமையாகும்.

காமராஜரைப் போன்ற தலைவரொருவர் தேர்தல் களத்தில் தோல்வி கண்டால் மக்களை அணுகி மீண்டும் தன் கட்சியின் இடத்தை உறுதிப்படுத்திக்கொள்ளும் காரியத்தையே செய்திருக்க வேண்டும். அதற்கு மாறாகத் தன் ஜாதியினரின் வாக்கை நம்பி அவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் நின்று தேர்தலில் வெற்றி பெற்றதே உண்மையில் அவர் தன் அரசியல் தோல்வியை ஒப்புக் கொண்டதாகும்.

பட்டம் பெறாதவர்களும் ஆங்கிலம் அறியாதவர்களும் உயர் ஜாதியில் பிறக்காதவர்களும் ஆட்சிக்கு வந்தால் அரசு நிலை குலைந்துபோய்விடும் எனப் பழமைவாதிகள் வெளிப்படுத்தி வந்த அச்சத்தை இந்திய அளவிலும், குறிப்பாகத் தமிழகத்திலும் உடைத்தெறிந்தவர் காமராஜர். தங்கள் சாதாரணப் பின்னணியை எண்ணி, வெட்கி, கூசிக் குறுகி, தாழ்வு மனப்பான்மையால் பதவியில் ஏறத் தைரியம் இன்றித் தவித்துக்கொண்டிருந்த பலருக்கும் நம்பிக்கை அளித்தவர் அவர். இந்திய ஜனநாயகத்தில் சாதாரண மனிதனுக்குரிய பங்கை உறுதிப்படுத்தியவர் அவர்.

காலச்சுவடு இதழ் 42

சுந்தர ராமசாமி

Series Navigation

சுந்தர ராமசாமி

சுந்தர ராமசாமி