நரேந்திரன்
Ciudad del Este.
தென்னெமரிக்க அமேசான் காடுகளின் நடுவே, பிரேசிலுக்கும், அர்ஜெண்டினாவிற்கும் மத்தியில் நசுங்கிக் கிடக்கும் பராகுவே நாட்டின் பரானா (Parana) நதிக்கரையில் அமைந்திருக்கின்ற, வெளியுலகம் எளிதில் நுழைய இயலாத இச்சிறுநகரமே இன்றைக்கு மாஃபியாக்களின் சொர்க்க பூமியாகக் கருதப்படுகிறது. இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இந்நகரத்தில் போதை மருந்து கடத்துபவர்கள், போதை மருந்திற்கு அடிமையானவர்கள், கொலைகாரர்கள், விபசாரிகள், புரட்சிக்காரர்கள், குண்டர்கள், மோசடிப் பேர்வழிகள், திருடர்கள், நயவஞ்சகர்கள், தீவிரவாதிகள், கொள்ளையர்கள்….என சட்டத்திற்குப் புறம்பானவர்களே அதிகம். ஜோசப் மென்கில் (Josef Mengele) போன்ற நாஜிக்களிலிருந்து, எகிப்திய தீவிராவதி முகமது மொக்லிஸ் (El Said Hassan Ali Mohamed Mukhlis) வரையிலான பல்வேறு நிழலான ஆசாமிகள் ஒளிந்து கொள்ள சியுடாட் நகரத்தையே தேர்ந்தெடுத்தார்கள் என்றால் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு மாதமும் மூன்று டன்களுக்கும் அதிகமான கோகைன் (cocaine) போதை மருந்து சியுடாட் நகரம் வழியாக அமெரிக்க, கனேடிய, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் மற்றும் தென்னாப்பிரிக்காவிற்க்குக் கடத்தப்படுகிறது. போதை மருந்துடன், சகலவிதமான ஆயுதங்கள் மட்டுமல்லாது மருத்துவ ட்ரான்ஸ்ப்ளாண்டுக்குத் தேவையான மனித உறுப்புகளைக் கூட சல்லிசாக வாங்கலாம் சியுடாட்டில். சரியான விலை கொடுத்தால் உங்களின் அடையாளத்தையே மாற்றிக் கொடுப்பதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள் அங்கே.
இன்றைக்கு சியுடாட் ஒரு மிகப் பெரிய கறுப்புச் சந்தை மட்டுமல்லாமல், உலகின் மூன்றாது மிகப் பெரும் பணப் பரிவர்த்தனை நடக்கும் இடம் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஹாங்காங் மற்றும் அமெரிக்காவின் மயாமிக்கு அடுத்தபடியாக சியுடாட்டில்தான் பெரும் பணம் கை மாறுகிறது. ஒவ்வொரு நாளும். போலித் தயாரிப்புப் பொருள்கள், உலகின் எல்லா நாட்டுக் கள்ளப்பணம், போலி பாஸ்போர்ட்கள், திருட்டு வீடியோக்கள், சாஃப்ட்வேர், கார்கள், ஹவாலா என எந்தத் தடங்கலும் இன்றி ஜெகஜோதியாக நடக்கும் இத்தொழில்களில்களின் வாயிலாக, ஒவ்வொரு வருடமும் சுமார் 12 பில்லியன் டாலர்களிலிருந்து 14 பில்லியன் டாலர்கள் வரை புழங்குவதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். பராகுவே நாட்டின் மொத்த GDP வெறும் ஒன்பது பில்லியன் டாலர்கள் மட்டுமே என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
பராகுவே இப்படி என்றால், பசிபிக் பெருங்கடலின் மத்தியில், பறவையிட்ட எச்சம் போன்ற தோற்றத்திலிருக்கும் ‘ந்யூ ‘ நாட்டின் செயல்பாடு (Republic of Niue) இன்னொரு விதமானது. ந்யூ என்ற பெயரில் ஒரு நாடு இருப்பதே நம்மில் பலருக்கு வியப்பான செய்தியாக இருக்கலாம். நியூசிலாந்து நாட்டின் பாதுகாப்பில், அந் நாட்டிற்கு தென்மேற்கே ஏறக்குறைய இரண்டாயிரத்து ஐநூறு மைலுக்கப்பால் இருக்கும் ஒரு சிறிய தீவுதான் ந்யூ.
ந்யூ நாட்டின் மொத்த மக்கள் தொகை 1800. பிரிட்டிஷ் காமென்வெல்த்தில் ஒரு அங்கமான ந்யூவில் பெயரளவுக்கு ஒரு அரசாங்கம் இருக்கிறது. அழகான கடற்கரைகளோ, டூரிஸ்டுகளோ அல்லது வேறு வகையான வருமானமோ இல்லாமல் உலகை விட்டுத் தள்ளி இருந்த ந்யூ, மாஃபியாக்களை காந்தமென கவர்ந்திழுத்ததில் ஒன்றும் ஆச்சரியமில்லை. முதலில் ஜப்பானிய மாஃபியா அங்கு போய் டெலிஃபோன் செக்ஸ் சேவையை ஆரம்பித்தார்கள். பணம் வந்து கொட்ட, டெக்னாலிஜி உதவியுடன் இண்டர்நெட் சூதாட்டம் ஆரம்பமானது. உலகின் ஏதோ ஒரு பாகத்தில் கம்ப்யூட்டர் திரையின் முன்னே அமர்ந்திருந்து சூதாடும் அநாமதேயங்களுக்கு நாமம் சாத்துவதின் மூலம் பணமழை பொழிய ஆரம்பித்தது. ந்யூ அரசாங்கத்திற்கும் அதில் கொஞ்சம் பங்கு போக, அவர்கள் கண்களை மூடிக்கொண்டார்கள்.
1800 பேர் சாப்பிட்டாக வேண்டுமே! வேறே வழி ?
அதையெல்லாம் விட ந்யூ அரசாங்கத்திற்கு வருமானம் வருவது ‘நாம்கே வாஸ்தே ‘ கம்பெனிகளிலிருந்து. ஆயிரம் டாலர் இருந்தால் யார் வேண்டுமானாலும் ந்யூவில் கம்பெனி ஆரம்பிக்கலாம். என்ன பெயர் வேண்டுமானாலும் – Ltd., Inc., GmbH, SA, NV… – வைத்துக் கொள்ளலாம். உலகின் பல நாடுகளிலும் தங்கள் கம்பெனி வியாபாரம் செய்வது போலக் காட்டிக் கொள்ளலாம். உண்மையிலேயே அப்படி எதுவும் இல்லாவிட்டாலும் கூட. எத்தனை முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்ற கணக்கு தேவையில்லை. உள்நாட்டு வரி எதுவும் செலுத்த வேண்டியதில்லை. எந்த நாட்டுடன் எவ்வளவு வியாபாரம் செய்கிறார்கள், எத்தனை லாபம் வந்தது என்ற எதையும் அவர்கள் ந்யூ அரசாங்கத்திற்குத் தெரிவிக்க வேண்டியதில்லை.
இரண்டே இரண்டு விஷயங்களைத் தவிர. மேற்படி கம்பெனிகள் ந்யூ குடிமக்களுடன் எந்த வியாபாரத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது. ந்யூவில் எந்த சொத்துக்களையும் அவர்கள் வாங்கக் கூடாது (என்னே ஒரு எச்சரிக்கை உணர்ச்சி!). ஒரே ஒரு அலுவலகம் மட்டுமே திறந்து கொள்ளலாம்.
1994-இல் தொடங்கி, இம்மாதிரியான பல நூற்றுக் கணக்கான IBC (International Business Corporations) களுக்கு லைசன்ஸ் அளித்திருக்கிறது ந்யூ அரசாங்கம். மாஃபியாக்களுக்கு கொண்டாட்டமாகிப் போய்விட அத்தனை பேரும் ஆளுக்கொரு கம்பெனி திறந்தார்க்ள் ந்யூவில். அத்தனையும் நிழலான வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. பல வகைகளில் கொள்ளை அடித்த ‘கறுப்புப் பணம் ‘ ந்யூவில் முதலீடு செய்யப்படுவது போலக் காட்டப்பட்டு ‘வெள்ளை ‘யாக்கப்பட்டது.
****
மேற்கத்திய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து, தங்களின் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பின் தங்கிய நாடுகளில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் உண்டு. அதே சமயம்,அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா போன்ற வளர்ந்த நாடுகளுக்குள் சட்டபூர்வமாக நுழைவது என்பது அனைவராலும் இயலாத காரியம். என்ன செய்தாகிலும் அல்லது சட்ட விரோதமாகவாவது குடியேறும் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக இந்தியா, சீனா போன்ற மக்கள் நெருக்கம் மிக்க நாடுகளிலிருந்து குடியேறுபவர்கள் தொகைதான் அதிகம்.
பணம் கிடைக்கும் எந்த தொழிலும் மாஃபியாக்களின் பார்வையிலிருந்து தப்புவதில்லை. போதை மருந்து கடத்தலை விட அதிக லாபம் கிடைக்கும் ஒரு தொழில், வளர்ந்த நாடுகளுக்குள் ஆட்களை சட்ட விரோதமாகக் குடியேற்றம் செய்வதுதான் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வெகு காலமாகவில்லை. ஆட்களைக் கொண்டு செல்லும் போது மாட்டிக் கொண்டாலும், போதை மருந்து கடத்துவதை விடவும் மிகக் குறைந்த தண்டனைதான் கிடைக்கும். லாபமோ மல்ட்டி பில்லியன் டாலர்களில். சட்ட விரோதக் குடியேற்றங்களுக்கு உதவி செய்வதன் மூலம், 1990-களின் கடைசியில், 7 பில்லியன் டாலர்கள் புரளுவதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். 2005 அல்லது 2010-ஆம் வருடத்தில் இந்தத் தொகை இரண்டு மடங்காகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய நான்கு மில்லியன் பேர்கள் இம்மாதிரியாகக் கடத்தப்படுகிறார்கள் என்கிறது International Organization for Migration. 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் தொழில் முறை ஆள்கடத்திகளால் அல்லது மாஃபியாக்களால் கடத்தி வரப்படுகிறார்கள் என்கிறது அமெரிக்காவின் Immigration and Naturalization Services. சட்டவிரோதமாகக் குடியேற விரும்பும் நாடுகளில் முதலாவதாக வருவது அமெரிக்கா. அதற்கடுத்தபடியாக கனடா. ஒரு INS தகவலின்படி, எந்த நேரத்திலும் பல மில்லியன் மக்கள் staging post எனப்படும் ஏதாவது ஒரு நாட்டில் தற்காலிகமாகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லையைக் கடப்பதற்குச் சரியான நேரத்தை எதிர் நோக்கியபடி என்கிறது. எந்த ஒரு நேரத்திலும் சீன மாஃபியாக்களின் மேற்பார்வையில், மாஸ்கோவில் மட்டும் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் இவ்வாறு காத்திருக்கிறார்கள், ரஷ்ய மாஃபியாக்களின் ஆதரவுடன்.
சட்ட விரோதக் குடியேறிகள் தங்கள் சென்றடைய வேண்டிய நாடுகளை அடைவதற்குள் படும்பாடு சொல்லி மாளாது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற பாகுபாடில்லாமல் ஆடு, மாடுகளைப் போல ஏதாவது ஒரு கப்பலின் கீழ்த்தளத்தில், கண்டெய்னர்களில் அடைக்கப்பட்டு, மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுகிறார்கள். கடினமான பயணத்தைத் தாங்காமல் வழியிலேயே இறந்து போகிறவர்கள் அதிகம். தாங்கள் செல்ல வேண்டிய நாட்டிற்கு சென்ற பிறகு, பயணத்திற்குத் தேவையான பணத்தைக் கொடுக்க இயலாதவர்கள் மாஃபியாக்களின் அடிமைகளைப் போல நடத்தப்படுகின்றனர். கடனை அடைக்கும் வரை sweat shopகளிலும், விபச்சார விடுதிகளிலும் அவல வாழ்க்கை வாழ்கிறார்கள்.
மல்ட்டி நேஷனல் கார்ப்பொரேஷன்களைப் போல இயங்கும் மாஃபியாக்களைக் கட்டுப்படுத்த இயலாமல் பெரும்பாலான நாடுகள் தவிக்கின்றன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாஃபியாக்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு சங்கிலித் தொடர்களைப் போலச் செயல்படுகிறார்கள்.
உதாரணமாக, ஆசிய கிரிமினல்கள் ஹெராயினை கனடாவிற்குள் இறக்குமதி செய்கிறார்கள். கைமாறி இத்தாலிய கிரிமினல்களின் கைகளுக்குப் போகும் ஹெராயின் பேக்கரி ட்ரக்குகளில் நியூயார்க்கிற்கு கொண்டுவரப்படுகிறது. இத்தாலியர்கள் ஹெராயினை போர்ட்டோ-ரிக்கோவைச் சேர்ந்த கிரிமினல்களிடம் ஒப்படைக்கப்பட்டு நியூயார்க்கின் தெருக்களில் விற்கப்படுகிறது. இந்த உதாரணம் ஆயுதங்களும், மற்ற அழிவுச் சாதனங்களுக்கும் பொருந்தும். மாஃபியாக்களிடமிருந்து தீவிரவாதிகளுக்கு அல்லது சர்வாதிகாரிகளுக்கு என்பதைத் தவிர வேறு வித்தியாசம் ஒன்றுமில்லை.
****
நன்றி : The Merger by Jefferey Robinson
narenthiranps@yahoo.com
- கடிதம் செப்டம்பர் 30 ,2004 : Forrest Gump – சிப்பிக்குள் முத்து…. பற்றி கமல்
- முப்பதாண்டு கால முயற்சி
- பதுங்கியிருக்கும் பாளையப்பட்டு…:
- தார்மீகமிழந்த சாமர்த்தியங்கள்
- மெய்மையின் மயக்கம்-19
- Submission – ஒரு குறும்படம், மற்றொரு ஃபட்வா
- புத்தகம் : ஹா ஜின் எழுதிய ‘காத்திருப்பு ‘ : அதிகாரத்தின் வாசலில் யாசிக்கும் கைகளுடன்….
- ஆட்டோகிராஃப்-20 – – “பூங்கதவே தாள் திறவாய்”
- செல்லமே – ஆனந்த விகடன் சினிமா விமரிசனம் (கரெக்ட் செய்யப்பட்டது)
- சொன்னார்கள்
- கடிதம் செப்டம்பர் 30,2004 : வசூல்ராஜா NRI. அல்லது பாத்திரம் அறிந்து பிச்சையிடு.
- மக்கள்தெய்வங்களின் கதைகள் 3-தோட்டுக்காரி அம்மன் கதை
- கடிதம் செப்டம்பர் 30,2004 – பித்தனுக்குக் கடிதம்
- கடிதம் செப்டம்பர் 30,2004 – மஞ்சுளா நவநீதனுக்கு ஒரு வேண்டுகோள்!
- கடிதம் செப்டம்பர் 30,2004 – திரு.நாக.இளங்கோவன் அவர்களின் சிந்தனைக்கு சில
- கடிதம் செப்டம்பர் 30,2004
- கடிதம் செப்டம்பர் 30,2004
- மோசடி மேற்கோள்கள் மூலம் ஒரு ஜிகாத்
- கடிதம் செப்டம்பர் 30,2004 – தமிழ்ச்செம்மொழி – பார்வைகள்!
- உரத்த சிந்தனைகள்- 1
- அ.முத்துலிங்கம் பரம்பரை -2
- பிரிக்க முடியாத தனிமை
- எனக்கென்று ஒரு மனம்
- பிழை திருத்தம்
- எதிர்பார்ப்பு
- மெல்ல விழுங்கும் மாஃபியாக்கள் (சென்ற வாரத் தொடர்ச்சி)
- அறிவிப்பு: நியூயார்க் மாநகரில் உத்தமர் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்
- சென்றவாரம் பற்றி சில குறிப்புகள் (9/29/2004, பெரியாரின் பெண்ணுரிமை கருத்து, சாதி ஒழிந்தால்தான், வருமானம் 3,068 பில்லியன் டாலர்,
- சினிமா — முக்கிய அறிவிப்புகள்
- ஒரு முன்னோடியின் பின்னாடி
- ஐந்து கவிதைகள்
- பெரியபுராணம் — 11
- நீலக் கடல் -(தொடர்) – அத்தியாயம் – 39
- கூர் பச்சையங்கள்
- களை…
- இயற்கைக் கோலங்கள்
- அதிசயம்
- இந்திய அணுவியல் விஞ்ஞான மேதை டாக்டர் ராஜா ராமண்ணாவின் மறைவு (1925-2004)
- சிலந்தி வலை சிக்கல்கள்
- இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (2)
- பகவத் கீதை எனும் உண்மையான உதய சூரியன்
- காவேரி உற்பத்தியாகும் கர்நாடகம்