மதிப்புரை: ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்

This entry is part [part not set] of 44 in the series 20110109_Issue

க.அம்சப்ரியா


கவிதையின் விரல்பிடித்து பயணிக்கத் துவங்கிவிட்ட ஒருவன், அவ்வளவு எளிதாக உதறிவிட்டுச் செல்லவியலாது. தொடர்ந்து கவிதையை ரசிக்கவும், கவிதையை உணரவும் நல்ல மனநிலையும் வேண்டும். கவிதைத்தளம் விரிவடைய கவிஞன் தன் சிறகுகளை விரிக்கத் துவங்குகிறான்.

தன் வானம்! தன் சிறகுகள்! சுதந்திர வெளிக்குள் பயணிக்கத் துவங்கிவிட்ட கவிஞன் எதைப் பார்க்கிறான்? எதைப் பார்த்து திகைக்கிறான்? எதைக் கண்டு கண்ணீர் சிந்துகிறான்? எக்காட்சி அவனை திகிலூட்டுகிறது? இவைகளே அவனின் கவிதை வெளிப்பாட்டுக்குக் கை கொடுக்கின்றன.

செல்வராஜ் ஜெகதீசன் ஏற்கனவே இரண்டு கவிதைத் தொகுப்புகளை கொடுத்திருக்கக் கூடியவர். தீவிர ஈடுபாட்டுடன் கவிதையில் இயங்கி வரும் இவர் தற்சமயம் அபுதாபியில் மின் பொறியாளராக பணிபுரிந்து வரக்கூடியவர். சிற்றிதழ்களோடும், முன்னணி இதழ்களின் கவிதைப்பக்கங்களிலும் தொடர்ந்து வருகை தந்து கொண்டிருக்கக் கூடியவர்.

இவரது “ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்” தொகுப்புக்குள் அவரது அனுபவங்கள் கவிதைகளாக நம்மை வாசிக்கத் தூண்டுகின்றன. அவரது அனுபவ வெளி அன்னிய மண் சார்ந்தது. அதனால் நண்பர்களின் சந்திப்புக்களாலேயே அதிகபட்ச மகிழ்ச்சியை உணரக்கூடிய தருணங்கள் சூழ்ந்த வாழ்வியல் சூழ்நிலை. “மீட்டாத வீணை” கவிதையில் அந்த அனுபவம் மிகச்சிறந்த கவிதையாகியுள்ளது. எந்தச் சந்திப்பும், நாம் எதிர்பார்க்கிறது போலிருப்பதில்லை. அவரவர் வார்த்தைகளை கொட்டித்தீர்க்கவே ஆசைப்படுகிறோம்.

பிறரின் சொற்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் மிகக் குறைந்தபட்சம் கூட இருப்பதில்லை. இந்த புரிதலிலிருந்து துவங்குகிறது இவருடைய கவிதை.

அண்மைக்கால கவிதையுலகில் குழந்தைகள் பற்றிய கவிதைகள் முக்கிய பதிவைப் பெற்று வருகிறது. செல்வராஜ் ஜெகதீசனின் குழந்தைகள் உலகமும் அபூர்வ கணங்களை அடையாளப்படுத்துகிறது.

இன்னொரு

வண்ணத்துப்பூச்சி வேடமணிந்து
வாங்கி வந்த பரிசுக்கோப்பையை
ஏந்தியபடி
முதல் மழலைப் பேச்சில்
‘அப்பா’ என்றழைத்த
இளையவனிடம்
‘அப்பா’ இல்லடா ‘;டாடி’
என்று சொல்லிக்கொண்டிருந்த
மூத்தவனிடம்
இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்
‘பட்டர்பிளை’ என்பதற்கு
இன்னொரு பெயருண்டு
வண்ணத்துப்பூச்சியென்று.

கவிதையின் மொழி, அதன் அனுபவ எல்லையைக் கொண்டே உச்சத்தைப் பெறுகிறது. சாதாரண சொற்கள் அசாதாரண ஓசையையும் மெளனத்தையும் ஒரே சமயத்தில் கொண்டு இயங்குவது கலைப்படைப்பில் மட்டும்தான். அதுவும் கவிதையின் மையத்திற்குள் ஊடுருவிப் பாய்கின்ற ஒரு வாசகனுக்கு எப்போதும் புதுமையனுபவம் எதிர்பார்த்துக்கொண்டேதான் இருக்கிறது.

அப்படியான சில அனுபவங்களை நமக்கு இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் கொடுக்கின்றன. குறிப்பாக ‘வட்டம்’ ‘முன் முடிவுகளற்று இருப்பது’ ‘இங்கு எல்லாம்’ ‘அடையாளங்களை அழித்தல்’ ஆகிய கவிதைகளைச் சொல்லலாம்.

‘அடையாளங்களை அழித்தல்’ – நுட்பமான சொல்லாக வெளிப்பட்டிருக்கிறது. அவரவர்க்கான அடையாளங்கள் அவரவர் விருப்பம் போல் இல்லை. வேறு யாராவது ஒருவர் நமக்கான வீட்டின் வரைபடத்தினை, வாழ்வின் பாதையை என்று அடையாளங்களை அழித்துக்கொண்டிருக்கவே செய்கிறார்கள்.

குறைந்த வரிகளில்,குறைந்த சொற்களில் நிறைவான செய்தியைச் சொல்ல கவிஞர் முனைந்திருப்பதற்கான அடையாளமான கவிதைகளாக ‘ஆட்சேபனை’ ‘அனுகூலம்’ கவிதைகளைக் கூறலாம்.

‘ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்’ கவிதைத் தொகுப்பை வாசித்து முடிக்கிறபோது கவிதைத்தளத்தில் இடைவிடாமல் இயங்கவும், தன்னை கவிதைக்குள் கரைத்துக்கொள்ளவும் முனைந்திருக்கிறார் செல்வராஜ் ஜெகதீசன் என்பதையறிய முடிகிறது.

நான்காவது கவிதை தொகுப்பிற்கு தயாராகிக் கொண்டிருக்கும் கவிஞர், தனக்கான கவிதை மொழியை வேறொரு தளத்திலிருந்து கண்டுணர்வார். அப்போது இன்னும் கூடுதலான அம்சத்தோடு நமக்கு ஒரு தொகுப்பு கிடைக்கும்.

(ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் (பக்.64 ரூ.50/-) – அகநாழிகை பதிப்பக வெளியீடு)

Series Navigation

க. அம்சப்ரியா

க. அம்சப்ரியா