போதைப்ப‌ழ‌ங்க‌ள் உண்ணுப‌வ‌ர்க‌ளின் தீவு

This entry is part [part not set] of 45 in the series 20110227_Issue

ருத்ரா


(டென்னிஸ‌னின் இந்த‌ அற்புத‌க்க‌விதை
கிரேக்க‌ ம‌காக்க‌விஞ‌ன் “ஹோம‌ர்” எழுதிய‌
“ஓடிஸ்ஸி”என்ற‌ காவிய‌த்தின் ஒரு துளியை
அழகின் க‌ட‌லாய் கொந்த‌ளிக்க‌வைத்துள்ள‌து.
ஓடிஸிய‌ஸ் ஒரு மாவீர‌ன்.அர‌ச‌ன்.”ட்ராய்”யுத்த‌த்தில்
அவ‌ன‌து யுத்த‌ த‌ந்திர‌மே அந்த‌ ராட்ச‌ச‌ ம‌ர‌க்குதிரையை
வ‌டிவமைத்த‌து.போரில் ட்ராய் ந‌க‌ர‌மே சின்னாபின்ன‌ம்
ஆன‌து.அத‌ன் பின்ன‌ர் அவ‌ன் த‌ன் நாட்டுக்கு புற‌ப்ப‌டும்
க‌ட‌ல்வ‌ழிப்ப‌ய‌ண‌த்தின் ப‌ல‌ அற்புத‌ நிக‌ழ்வுக‌ளின் தொகுப்பே
“ஒடிஸ்ஸி”என்ற‌ காவிய‌ம்.அவ‌ன் வ‌ழியில் ஒரு மாய‌த்தீவில்
இற‌ங்குகிறான்.அங்குள்ள‌ போதையூட்டும் செங்க‌னிக‌ளை
உண்டுஅவ‌னது வீரர்கள் க‌ன‌வு உல‌கில் மூழ்கி
புற‌ உல‌க‌த்தையே ம‌ற‌ந்து போகிறார்க‌ள்.அவ‌ர்க‌ளை
க‌ட்டாய‌ப்ப‌டுத்தி தான் த‌ன் ப‌ய‌ண‌த்துக்கு இழுத்து செல்கிறான்.
அந்த‌ தீவின் அழ‌கு க‌விஞ‌ர் டென்னிஸ‌னை
இவ்வ‌ற்புத‌ வ‌ரிக‌ளை ப‌டைக்க‌ச்செய்கிற‌து.)

“போதைப்ப‌ழ‌ங்க‌ள் உண்ணுப‌வ‌ர்க‌ளின் தீவு”
===============================================ருத்ரா
(“LOTOS EATERS “BY LORD ALFRED TENNYSON)

(1)

அதோ பாருங்க‌ள்! அழ‌கிய‌ தீவு
“தைரிய‌ம் கொள்ளுங்க‌ள்”.
ஒடிஸ்ஸிய‌ஸ் கூறினான்.
“சுருட்டிய‌டிக்கும் இந்த‌ அலைக‌ள்
விரைவிலேயே
அந்த‌ க‌ரையில் கொண்டுபோய்
த‌ள்ளிவிடும்”

அப்ப‌டியே க‌ரையை அடைகையில்
பொழுது கூட
போதையில் த‌ள்ளாடி
கொஞ்ச‌ம் சாய்ந்து மாலையை நோக்கி
ம‌ய‌ங்கிய‌து.
அந்த‌ தீவே ஒரு வித‌ போதைப்ப‌ழ‌ங்க‌ளை
உண்டு வாழ்ப‌வ‌ர்க‌ளால் நிறைந்த‌து அல்ல‌வா?

எப்போதுமே அந்த‌ பிற்ப‌க‌ல் மூட்ட‌ம்
அந்த‌ தீவை ச‌ல்லாத்துணியாய் மூடியிருக்கும்.
க‌ரையைத்த‌ழுவி நினைவ‌த்துளைக்கும் காற்று
ம‌ய‌க்கும் தூவும்.
கன‌வில் திளைத்த‌வ‌னின் க‌ன‌மான‌ மூச்சுக‌ள்
மொய்த்த‌து போல்
அந்த‌ குட்டித்தீவு குமிழிக‌ள் பூக்கும்.
அந்த‌ ப‌ள்ள‌த்தாக்குக‌ளிலேயே
பாய்விரித்து ப‌டுத்துக்கொண்டிருக்கும்
மோன‌ம் நிறைந்த‌ அழ‌கு
ம‌ன‌தை கொள்ளை கொள்ளும்.
நில‌வு த‌ன் வ‌ட்ட‌ முக‌த்தைக்காட்டி அங்கு
வெளிச்ச‌க்கூடார‌ம் போட்டு நிற்கும்.

மெல்லிய‌ அருவிக‌ள்
புகை விழுதுக‌ளாய்
குத்துப்பாறைகளை குல‌வி விளையாடி
விழுந்து விழுந்து எழுந்து
கொஞ்ச‌ம் கிட‌ந்து புர‌ண்டு
அப்புற‌ம் துள்ளியெழுந்து
க‌விதை எழுதும்.

(2)

அருவிகள்! அருவிக‌ள்! அருவிக‌ள்!
கீழ் நோக்கி போகும் அதிச‌ய‌ புகைக‌ளின்
அற்புத‌ வீழ்ச்சிக‌ள்.
ச‌ரியாக‌க்கூட‌ த‌லைநீட்டாத‌ புல் ப‌ட‌ர்க்கைக‌ள்.
அத‌ற்கு ஏன் இந்த‌
வெள்ளிச்ச‌ரிகையில்
முகம் மறைக்கும மூடுதிரைகள்?

மெல்ல மெல்ல முகம் மறைக்கும்
அந்த நீர்ப்படலம்
இயற்கை மங்கையின் “க்ளுக்” சிரிப்புகளை
நாணம் கொண்டு நெய்த மௌனத்தில்
மூடி மூடி திறந்து
நம் நரம்புகளில் யாழ் இசைக்கும்.
அந்த சோலைகளின் நடுவே
அவை வெளிச்சத்தையும் நிழலையும்
ஊடுருவி “ஊசி நூல் “கோர்த்தது போல்
சிதறி சிதறி சித்திரம் தீட்டும்.
ஒளியை நிழல் உடைக்கும்.

நிழலை ஒளி நொறுக்கும்.
அடியில் உருளும்
நுரைக்கம்பளம்
ஏதோ ஒரு தூக்கத்தைத் தேடி
விழுந்தடித்து ஓடும்.

அவர்கள்
அந்த ஆற்றங்கரைக்கு வ‌ந்து விட்டார்க‌ள்.
க‌ட‌ல் நோக்கி த‌ன்
உட‌ல் ந‌னைக்க‌ ஓடும்
அந்த‌ ஆறு பாடிய‌து
“ஒரு அழ‌கின் ஆற்றுப்ப‌டை”

தீவுக்குள் தூர‌த்தில் மூன்று ம‌லைச்சிக‌ர‌ங்க‌ள்!
மூன்றும் மோன‌த்தின் முக‌டுக‌ளாய்
ப‌னியில் விறைத்து ந‌ரைத்து
கால‌ம் க‌விழ்த்திய
வெண்ச‌டைமுடி தாங்கி
சூரிய‌னின் அந்திவான‌ச்சிவ‌ப்பில்
நாணிக்கோணும் ம‌ங்கையின் க‌ன்ன‌ம் போல்
சிவ‌க்க‌ சிவ‌க்க‌ ஒளியில்
முண்டாசுக‌ட்டும்.
ப‌னிப்பொழிவின் வெள்ளித்துளிக‌ள்
உருகி உருகி ம‌லை உச்சிக‌ளில்
ஏதோ ஊமைக்க‌ன‌வுக‌ளை
பிழிந்து ஊற்றும்.

ம‌லைக‌ளின் உச்சிமோந்து உர‌சி உர‌சி
முத்த‌ம் கொடுப்ப‌து போல்
போக்கு காட்டும்
பைன் ம‌ர‌ங்க‌ளின் ஊசியிலை விளாறுக‌ள்
அந்த‌ உய‌ர‌த்தில்
அழ‌குகாட்டும் காட்சிக‌ள் எல்லாம்
ம‌லைக‌ளின் மீது விழும்
சுளீர் சுளீர் ச‌வுக்க‌டிக‌ள்.
அந்த‌ அமுத‌ ஒலிக‌ள்
அங்கு எதிரொலித்து எதிரொலித்து
இசையில் ஒரு புகைமூட்ட‌ம் எழுப்பிய‌து.
பச்சையின் மரகதக்கோடுகளாய்
அந்த‌ “பைன் இலை”க‌ள்
முர‌ட்டுப்புதர்க்கூட்ட‌ங்க‌ளையும்
வில‌க்கிக்கொண்டு
விர‌ல்க‌ள் நீட்டின.
க‌ண்ணுக்கு தெரியாத‌ ஒரு
காத‌லின் தொடுகை அந்த‌
ம‌லை உச்சியை வ‌ருடிய‌தில்
ப‌னிபிழ‌ம்பும் நெருப்புக்குழ‌ம்பு ஆன‌து!

(தொடரும்)

Series Navigation

ருத்ரா

ருத்ரா