டாக்டர் காஞ்சனா தாமோதரன்
மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியருக்கு,
வணக்கம். உங்கள் பத்திரிகையில் வெளிவந்த ப்ரையன் வெஸ்பரியின் மொழிபெயர்ப்புக் கட்டுரைக்கான வலைச்சுட்டியை ஒரு நண்பர் ஆர்வத்துடன் மின்னஞ்சல் மூலம் பகிர்ந்து கொண்டார். பொருளாதாரக் கட்டுரைகள் தமிழ் வலைப் பத்திரிகைகளில் தலைகாட்ட ஆரம்பித்திருப்பது குறித்து மகிழ்ச்சி. கட்டுரை மொழிபெயர்ப்பாளருக்கு வாழ்த்துக்கள். வெஸ்பரியின் கட்டுரை கிளப்பி விட்ட சில எண்ணங்களைச் சுருக்கமாகப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நேரமின்மையால் முழுக்கட்டுரை வடிவில் எழுதாமல், அவசரக் கடிதத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
யு.எஸ். ஃபெடரல் ரிசர்வின் வட்டிவிகித மாற்றக் கொள்கைகள், பொருள்களின் விலைவாசியைக் கருத்தில் கொள்ளாதவை என்று வெஸ்பரி குறிப்பிடுவது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஃபெட்டின் வட்டிக் குறைப்பு/ ஏற்றம் என்பதற்குப் பின்னால் பல்துறை நிபுணர் குழுக்கள் உண்டு. மனைகட்டுதல் உட்பட ஒவ்வொரு தொழில்துறையின் போக்குகளையும், விலைவாசிகளையும் ஆழ்ந்து ஆராய்ந்து, விஞ்ஞானரீதியான ‘மாடலிங் ‘ செய்து, தம் சிபாரிசுகளை ஃபெடரல் ரிசர்வ் நிபுணர் குழுக்கள் முன்வைக்கின்றன. Consumer Price Index எனப்படும் நுகர்வோர் பொருள் விலைவாசி அளவையும் இதில் அடக்கம். அனைத்தையும் உள்வாங்கி, நிபுணர் குழுக்களைக்
கலந்தாலோசித்த பின்னரே க்ரீன்ஸ்பான் ஒரு முடிவுக்கு வர முடியும்.
இங்கு இன்னொன்றையும் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. இன்று பொருள்களின் விலைவாசி என்பது இர்விங் ஃபிஷர் தனது சித்தாந்தத்தை முன்வைத்த காலத்தைப் (1900-கள்) போன்றதா ? இன்றைய நுகர்வோர் கலாச்சார, பங்குச்சந்தைக் கலாச்சாரச் சூழலில் பொருட்களின் விலைவாசி என்பது உற்பத்தி, தேவை ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் பெளதீக அளவை அல்லவே. நுகர்வோர் நம்பிக்கை, புங்குச்சந்தை முதலீட்டாளர் நம்பிக்கை, இன்னும் எண்களில் பிடிபடாத பலவற்றால் மாறிக் கொண்டேயிருப்பது. எனவே, இன்று விலைவாசியையும் எண்களில் பிடிபடாத பிற அகல்தள நிகழ்வுகளையும் உள்ளடக்கி ஃபெட் முடிவெடுத்தாலும் அமெரிக்கப் பொருளாதாரத்தின் அலை வடிவம் மாறவில்லை, மாறாது.
க்ரீன்ஸ்பான் உள்ளுணர்வின் அடிப்படையில் மட்டுமே செயல்படுகிறார் என்று ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ‘ ஆசிரியர் பார்ட்லி சொல்வதும், அதை வெஸ்பரி மேற்கோள் காட்டியிருப்பதும் ஆச்சரியத்திற்குரியது. விஞ்ஞானரீதியான அலசல்களுடன், அனுபவம் தரும் சுயசிந்தனையையும் உள்ளுணர்வையும் கலந்துதான் பொறுப்பான மேல்மட்ட நிர்வாக முடிவுகள் செய்ய முடியும் என்பது நான் அனுபவரீதியாகக் கண்டறிந்தது. இயந்திரமயமான நிர்வாகம் மிகவும் எளிது–அதை நிர்வாகத் திறமையென்றே யாரும் யு.எஸ். மேல்மட்டத்தில் அங்கீகரிப்பதில்லை. இந்தக் கலாச்சார நுணுக்கத்தை நிச்சயம் வெஸ்பரியும் பார்ட்லியும் (என்னை விட அதிகமாகவே) அறிந்திருப்பார்கள்.
இன்றைய அமெரிக்கப் பொருளாதாரச் சரிவிற்குக் கார்ப்பொரேட் அமெரிக்காவின் பங்களிப்பு என்ன ? பொருளாதாரச் சரிவைச் சரிக்கட்ட யார், யாரால் என்னென்ன செய்ய முடியும் ? இப்படிச் சரிக்கட்டும் முயற்சியில் ஃபெடரல் ரிசர்வின் வரையறைக்குட்பட்ட பங்களிப்பு என்னவாக இருக்க முடியும் ? உலகமயமாதல் என்பது எல்லா தளங்களிலும் திணிக்கப்பட்டு வரும் இன்றைய சூழலில்,
அமெரிக்கப் பொருளாதாரச் சரிவின் விளைவுகள் என்ன ? இவை யு.எஸ்.ஸுக்கும், அதனோடு இருவழிப் பொருளாதாரச் சார்புடைய பிற நாடுகளுக்கும் முக்கியமான சில கேள்விகள். யு.எஸ்.ஸின் *தீவிர* வலதுசாரிப் பொருளாதார-வர்த்தகப் பத்திரிகைகளான ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ‘ போன்றவை இத்தகைய கேள்விகளை முழுமையாக எதிர்கொள்ளாமல், பல சமயங்களில் கேள்விகளையே சரியாக வரையறுக்காமல் சுற்றி வளைத்துப் பேசுவது போலத்தான் தோன்றுகிறது. (ஏன் ?)
பொருளாதாரம், சந்தைப்படுத்துதல் முதலியன பற்றிப் பேசச் சிறப்பு விருந்தினராகச் சமீபத்தில் ஒரு யு.எஸ். பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தேன். Economics/ business think tank என்று கருதப்படும் பல்கலைக்கழகங்களில் ஒன்று அது. என் உரைக்குப் பின், பின் மாணவ மாணவிகளோடும், பேராசிரியர்களோடும் கலந்துரையாடல். எளிமையாக்கிய சாரத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.
2000-த்தில் கார்ப்பொரேட் அமெரிக்காவின் மொத்தக் கடன் $430 பில்லியன் என்று ஃபெட் தெரிவிக்கிறது. Gross Domestic Product-இல் எண்பத்தியைந்து சதவிகிதம் இது. அப்போது முதலீட்டுச் சந்தைகள் (capital markets) தொழில்நுட்ப நிறுவனங்களுக்குக் கடனை வாரி வழங்கப் போட்டி போட்டன–தொழில்நுட்ப ஏற்றத்தின் மீது இருந்த அதீத நம்பிக்கையால். Liquidity என்பது ஆற்றொழுக்கு என்றில்லாமல், வெள்ளப்பெருக்காய்ப் புரண்டோடியது. பங்குச் சந்தையின்
டெள ஜோன்ஸ் அளவை கூரையைப் பிய்த்துக் கொண்டு மேலேறியது. பங்குச் சந்தைக்காரர்கள் காற்றில் மிதந்தார்கள். நுகர்வோர் நம்பிக்கை மிகுந்தது, நுகர்வோர் பணப்புழக்கமும் (கடன்/credit) ஆரோக்கியமாக இருந்தது. காகித அளவில், பற்பல புதிய கோடாஸ்வரர்கள் உருவானார்கள். ‘குரோர்பதி ‘, ‘கோடாஸ்வரன் ‘ நிகழ்ச்சிகளுக்கு முன்மாதிரியான ரீஜிஸ் ஃபில்மனின் ‘ஹூ
வாண்ட்ஸ் டு பி அ மில்லியனேர் ‘ தொலைக்காட்சி நிகழ்ச்சி இந்தக் காலகட்டத்தில் உருவானதில் ஆச்சரியம் ஏதுமில்லை. (இன்று இந்த நிகழ்ச்சிக்குப் பார்வையாளர் மதிப்பீடு/ ratings குறைந்து வருவதிலும் ஆச்சரியமில்லை.)
ஆனால், மேற்சொன்ன மிதப்பின் நடுவே உரத்துக் கேட்க மறந்த கேள்விகள் சிலவுண்டு: மிகச் சுருங்கிய காலவீச்சுள்ள பொருட்களின் (short product life cycles) உற்பத்தியில் நெடுங்காலத்திய கடன் மூலம் முதலீடு செய்வது பொருத்தம்தானா ? நுகர்வோர் தேவை முற்றுமாய்ப் புரியாமல் உற்பத்தி அளவை இந்த அளவுக்குப் பெருக்கினால் excess capacity, inventory தேக்கம் ஏற்படக் கூடுமே ? கேள்விகள் கேட்டு, பெரும்பான்மையினரின் நம்பிக்கை வெள்ளத்துக்கு அணை போடும் விருப்பமும் தைரியமும் அன்று பலருக்கும் இருக்கவில்லை என்பதே உண்மை. இந்த நடப்புகளை ‘irrational exuberance ‘ என்று அன்றே கண்டித்த வெகு சிலரில் கிரீன்ஸ்பானும் ஒருவர் என்பதை இன்று நினைவில் கொள்வது முக்கியம்.
இன்று பல தொழில்நுட்ப நிறுவனங்களின் கடன் அவற்றின் உண்மையான மதிப்பை விடப் பன்மடங்காகி நிற்கிறது. எனவே, காரண காரியங்கள் பற்றி உரத்த கேள்விகள் எழுப்பப்படுகின்றன. நிறுவனங்களின் திட்டச் செலவுகளுக்கும் அவற்றின் உண்மையான பணப்புழக்கத்திற்கும் 2000-இல் இருந்த இடைவெளி $250 பில்லியன். முதலீடு செய்யும்/ கடன் கொடுக்கும் நிறுவனங்கள்
அப்போது இந்த இடைவெளியை இட்டு நிரப்பின. இப்போது முதலீடும் கடனும் சிறுகியதன் விளைவாக liquidity சிறுகி, பொருளாதார மந்தநிலையை அதிகரிக்கிறது. ஃபெட்டின் வட்டிக் குறைப்பு மட்டுமே கடன் கொடுக்கும் நிறுவனங்களை மீண்டும் கடன் கொடுக்கவும், பணப்புழக்கத்தையும் liquidity-யையும் அதிகரிக்கவும் ஊக்குவிக்குமென்று எதிர்பார்க்க முடியாது.
வட்டி குறைந்து விட்டது என்ற ஒரே காரணத்தினால், ஏற்கெனவே கடனில் முங்கிய, முதலீட்டுத் தரமில்லாததாய் இப்போது கணிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு யாரும் கடன் கொடுக்கப் போவதில்லை. (These are highly leveraged, non-investment-grade companies, which will not typically qualify for additional large loans.) ஆனால், கடன் கொடுத்தால், liquidity-யும் பணப்புழக்கமும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. ஒரு வகையில் இது ஒரு catch-22 நிலையோ ? இங்கு ஃபெட் ஒரு துணைநடிகரைப் போன்றதுதான்; தனி நிறுவனங்களே நாயகி-நாயக-வில்லன்கள். ஜப்பானில் வட்டியை 0%-க்குக் குறைத்த பின்னும் பொருளாதாரம் மந்தமாகத்தான் உள்ளது என்பதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.
நம் உலகமய உலகில் நடப்பது என்ன ? டாலரும், யூரோவும், யென்னும் கொண்ட ‘தொழில்நுட்ப முன்னேற்ற ‘ நாடுகள் அனைத்தும் தம் பொருளாதாரச் சரிவு பற்றித் தலையைச் சொறிந்து கொண்டிருக்கையில், ஆஸ்திரேலியத் தேசியப் பொருளாதாரம் வளர்ச்சி காட்டுவதாய்த் தெரிய வந்துள்ளது. குறைபட்ட அந்நியச் செலாவணி, வட்டி விகிதம் குறைத்தல் ஆகிய இரண்டுமே ஆஸ்திரேலியப் பொருளாதாரத்துக்குக் கவசம் என்கிறார்கள் இங்குள்ள சில நிபுணர்கள். மனைகட்டுதல், நுகர்வோர் பணப்புழக்கம், கார்ப்பொரேட் லாபம், ஏற்றுமதி எல்லாமே அங்கே வளர்ச்சியைக் காட்டுகின்றன. 1990-களில் ஆஸ்திரேலியத் தொழில்நுட்பத் துறை மதிப்பீடு, பங்குச்
சந்தை வளர்ச்சி முதலியன யு.எஸ். போல் அதீதமாகி, ஆகாயத்துக்கும் மேலே பறக்கவில்லை. எனவே, இப்போது யு.எஸ். சரிவது போல் சரிய வேண்டிய அவசியமுமில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.
வளர்ச்சியும், வீழ்ச்சியுமாக அலை வடிவத்தில் தொடர்வது பொருளாதார அமைப்பின் இயல்பு. ஆனால், வளர்ச்சியின் உயரத்தையும், வீழ்ச்சியின் ஆழத்தையும் ஓரளவு மட்டுப்படுத்துவதே ஃபெட் மற்றும் பிற அரசாங்கக் கிளைகளின் பொறுப்பு. சென்ற சில வருடங்களில், வலிய அடித்தளமற்ற அதீத வளர்ச்சியை யு.எஸ்.பொருளாதாரம் எட்டியது. இந்தச் செயற்கை வளர்ச்சிக்கான
திருத்தத்தை இப்போது தானே செய்து கொண்டிருக்கிறது. இந்தச் சுயதிருத்தமும் பொருளாதார அமைப்பின் இயல்பான தன்மையென்பது நம் எல்லாருக்கும் தெரியும். ஃபெட்டின் ஆதிக்கத்தில் இருக்கும் ஒரே ஆயுதம் வட்டி விகிதம்தான். 21-ஆம் நூற்றாண்டு அளவைகளைப் பயன்படுத்தி ஆராய்ந்து, வட்டிவிகிதக் குறைப்பின் மூலம் இன்றைய பொருளாதாரத்திற்கு ஃபெட் உதவ முயல்கிறது. அவ்வளவே. ஃபெட்டினால் செய்யக் கூடியது இது மட்டுமே.
அரசாங்கத்தின் பிற கரங்கள் என்ன செய்யப் போகின்றனவென்று தெளிவாகத் தெரியவில்லை. பெருநிறுவனங்களும் சிறுநிறுவனங்களும் யாருக்கெல்லாம் ‘பிங்க் ஸ்லிப் ‘ கொடுக்கலாமென்று பட்டியல் போடுவதில் மும்முரமாயிருக்கின்றன. புதிய ‘காகிதக் கோடாஸ்வரர்களில் ‘ குறிப்பிட்ட சதவிகிதம் கோடிகளைத் தாம் உண்மையில் பார்க்கப் போவதில்லை என்ற கசப்பை விழுங்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது. பங்குச்சந்தையில் தாம் இழந்த மில்லியன்கள் பற்றி வார இறுதி
விருந்துகளில் பேசுவது பொருளாதார மேல்வர்க்க நாகரீகப் போக்காகியிருக்கிறது. வேலை பறிபோகக் கூடுமென்ற பயத்தில் உறைந்திருக்கும் பெரும்பான்மை மத்திய வர்க்கத்தின் நுகர்வோர்_நம்பிக்கை குறைந்திருக்கிறது. இவர்கள் செலவு குறைவுபடும்; கடன் (credit spending) குறைவுபடும்; மொத்தப் பணப்புழக்கம் குறைவுபடும்; ஏற்றுமதி/ இறக்குமதி பாதிக்கப் படலாம்; இன்னும் பல மாற்றங்கள் ஏற்படலாம். ஆனால், கீழிறங்கிய பொருளாதார அலை காலத்தில் மேலே மீண்டு வரும். அதற்காகக் காத்திருக்கும் வேளையில், தனிமனித அளவில் ஏற்படும் பாதக விளைவுகள் மிதமிஞ்சிப் போய்விடக் கூடாது–இதுவே இன்று நமது உண்மையான கவலை.
இன்றைய பொருளாதார அமைப்பு பற்றி முக்கியமான அடிப்படைக் கேள்விகள் எழுந்தபடி உள்ளன. ஒரு முழுக் கட்டுரையைப் பிற்பாடு அனுப்பி வைக்கிறேன். வணக்கம்.
காஞ்சனா தாமோதரன்
kancritic@aol.com
(டாக்டர் காஞ்சனா தாமோதரனின் தொழில்ரீதியான ஆய்வுக் கட்டுரைகள் வட அமெரிக்கப் பல்கலைக்கழக வட்டாரத்து இதழ்களான Journal of Marketing, Journal of Marketing Research, Journal of Consumer Research ஆகியவற்றிலும், Fortune வர்த்தக-பொருளாதாரப் பத்திரிகையிலும் வெளியாகியுள்ளன.)
- நான்கு கவிதைகள்
- வீண்
- மூன்று பேர்- 2 தொடர் நிலைச் செய்யுள்
- சின்ன திண்ணை அட்டவணை – செப்டம்பர் 2001
- சத்யஜித் ராய்– இன்று
- சினிசங்கம் – தமிழ் விவரணப்பட மற்றும் குறும்பட விழா
- திருவனந்தபுரம் இலக்கிய கூட்டம்
- புட்டு
- நொக்கல்
- பொருளாதாரத்தின் அலை வடிவம்: ஒரு கடிதம்
- நெடுநாட்கள் கழித்து திண்ணைக்கு எழுதிய கவிதைகள்
- அன்னையும் தந்தையும்
- சேவல் கூவிய நாட்கள் (குறுநாவல்)
- சக மனிதனுக்கு…
- டி.எஸ் எலியட்டும் உள்ளீடற்ற மனிதர்களும்…(4)
- மூன்று விகடகவிதைள்
- மூன்று கனேடியக் கவிதைகள் (கோடைப்பல்லி, பனி உறைந்த ஆற்றின் மீது நடத்தல், முதல்)
- சம்மதம்
- பொருளாதாரத்தின் அலை வடிவம்: ஒரு கடிதம்
- ‘பொியார் ? ‘- அ. மார்க்ஸ் என்ற நூல் குறித்த எனது கருத்து
- இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 1 , 2001 (மூப்பனார், டர்பனில் மாநாடு,அகதிகள்,தெஹல்கா, திருத்தங்கள்)
- நடுத்தர வர்க்கம்
- மெளனமாய் ஒரு மரணம்.