பேரன்பு, கொடை, மற்றும் காதல் ரூமி (RUMI) கவிதைகள்

This entry is part [part not set] of 45 in the series 20030302_Issue

செந்தில்


‘உலகின் விளிம்புகள் தீப்பற்றி எரியும் வேளையில் அன்பு தழைக்குமா! அன்பு தழைக்குமா! என ஏங்குவார் எவரும் இங்கு உண்டா ? ‘, என எழுத்தாளர் கோணங்கி ஒரு முறை சொல்லக்கேட்டிருக்கிறேன். கோணங்கியை நான் சந்தித்தது ஒரு சில தடவைகள்தான், அதுவும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு. ஆனால், அவர் இந்த வாக்கியத்தை சொல்லிய (பிதற்றிய!) விதம் என் மனதில் ஆளப்பதிந்து இருக்கவேண்டும். ஏனெனில் கோணங்கியைப்பற்றியோ, கோணங்கியின் எழுத்தைப்பற்றி படிக்கவோ, நண்பர்களுடன் பேசவோ நேரும்பொழுதெல்லாம் முதலில் நினைவுக்கு வருவது இந்த வாக்கியமே. முதலில் நான் அறிவார்த்தமாகவே இதை புரிந்து கொண்டதுண்டு. அன்புக்கும் உண்டோ அரண் (அ) அடைக்கும் தாழ், அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு, போன்ற வள்ளுவனின் வாக்கியங்களை சிலர் சொல்ல கேட்கும்பொழுது உருவாகும் அறிவு பூரணமான புரிதலையே இதுவும் எனக்குள் ஆரம்பத்தில் ஏற்ப்படுத்தியிருந்தது. ஆனால் பிறிதொரு பொழுதுகளில், இந்த அன்பு சம்பந்தமான வார்த்தைகளோ, சொற்றொடர்கேளொ மிகவும் ஆழ்ந்த உணர்வு பூரணமான தாக்கத்தை எனக்கு ஏர்ப்படுத்தியதுண்டு. காதல் வயப்படுவதினாலோ, சித்தர்கள் பாடல்களை ஆழ்ந்து வாசிக்கும் வேளைகளிளோ, இயற்கை அழகுகளை ரசித்து சிலிர்க்கையிலோ, சங்க இலக்கியங்களின் காதல் பாடல்களை தேடிப்படிக்கும் பொழுதோ, புத்தர் மற்றும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் உரையாடல்களில் காணப்படும் ‘எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லா அன்பை ‘ புரிந்துகொள்ள முயண்றபோதோ, நெஞ்சொடு கிளர்ந்தெழும் பரவச நிலைதான் இலக்கியங்களும், சிந்தனையாளர்களும் வலியுருத்தும் இந்த பேரன்போ என நான் சிந்திப்பதுண்டு. ஒளவையின் காதலும், ஏசு க்ரிஸ்துவின் குருதிதோய்ந்த உடலும், திருவாசகத்தின் பக்திபரவசமும், புத்தனின் தியானமும், சூபிக்களின் பரவச நிலையும், மக்களின் விடுதலைக்காகந் தன்னுயிரையும் தரும் போராளிகளின் போர்க்குணமும் இந்த பேரன்பினால் விளைபவைகளாகவே கருதுகிறேன். சித்தர்களும், சூபிகளும், புத்தனும் இந்த பரவச நிலையைத்தான் நிரந்தரமாக்கிக் கொள்ளவாழ்நாள் முழுவதும் விழைந்திருப்பார்கள் என தோண்றுகிறது. அந்த விளைவின் வெளிப்பாடே உயிர்கொடையும், கவிதையும், பக்திவெள்ளமும் என நினைக்கத் தோன்றுகிறது. ஒரு பரந்துபட்ட பார்வையில், பெளத்தமும், சைவ சித்தாந்தமும், சூபியிசமும், ஒரே மாதிரியான அடித்தளத்தை கொண்டிருப்பதாகவே கருதத் தோண்றுகிறது. அண்மையில் கோல்மேன் பார்க்ஸ்(COLEMAN BARKS) மொழிபெயர்த்துள்ள ரூமி (RUMI) என்ற 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெர்சிய-ஆப்கானிய சூபியின் கவிதைகள் தொகுப்பு படிக்கும் பொழுது இதைப்போன்ற பரவசநிலையை இந்த கவிதைகள் வெளிப்படுத்துவதாக உணர்கிறேன். இந்த ஆங்கில நூலின் தலைப்பு ‘Rumi-the book of love; poems of ecstasy and longing ‘. ஒரு முயற்சியாக, இந்த ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து சில கவிதைகளை தமிழில் செய்திருக்கிறேன். பிடித்தால் தொடர்ந்து படிக்க…, இல்லையெனில் ஆங்கில நூலைத் தேடிப்படிக்கவும்.

எங்கிருந்து சுரக்கிறது உனது காதல்

உன்னுள்ளே தேடி கண்டுபிடி எங்கிருக்கிறது
ஒருவரது காதல் என்று, அதுதான் உண்மை.
அவர்கள் சொற்களில் இல்லை.

உருவத்திலும், நல்வழி பிழைவழி பற்றியுமே
கவனம் செலுத்துவார்கள் போலிகள்; நீ உலகளாவிய ஒளியில் வளர்ந்திடு;

அது தன்னை தானே வெளிக்காட்டிய பொழுது, கடவுள் அதற்கு
ஆயிரம் பெயர்கள் இட்டான்; மணக்கும் இந்த பெயர்களில் ஒன்று
‘யாரையும் நாடாதது – இது ‘.

****
என்னை மிகவும்தான் பாதித்திருக்கிறாய்,
உன் பிரிவுதான் என் காதலுக்கு தூபமிடுகிறது.
இது எப்படி என கேட்காதே.

நீ அருகில் வருகிறாய்.
‘வேண்டாம்…. ‘ என்கிறேன் நான்,
‘வேண்டாமா….. ‘ என்கிறாய் நீயும்.

இது ஏன் என்னை பரவசமூட்டுகிறதென்று
மட்டும் கேட்காதே.

****
உன் ஒளியில் கற்றேன் காதலிப்பது எப்படி என.
உன் அழகில், கவிதை வார்ப்பது எப்படி என.

யாரும் பார்க்காவண்ணம்தான் சதிராடுகிறாய் நெஞ்சினுள் நீ ,

ஆனாலும் சில கணங்களில் நான் காண்கிறேன் உன் நடனம்.
காதல் ஓவியமாய் விரிகிறது அக்காட்சி .

****

அதன் கொடைத்தன்மை கண்டு கடலின் மீது பொறாமையா ?
நீ ஏன் உன் காதலை யாருக்கும் இப்படி தர மறுக்கிறாய் ?
மீன்கள் இந்த புனித வெள்ளத்தை குடுவைகளில் பிடித்துவைப்பதில்லையே!
பெருங்கடலில் விருப்பபடி நீந்துகின்றன மீன்கள் .

****

ரோஜாவிடம் சொல்லப்பட்டது

ஒரு ரோஜா மலரைத் திறக்கச் செய்த மந்திரம் எதுவோ
அதுவே என் மார்பிலும் ஓதப்படுகிறது.

சைப்ரசை பலத்துடன் நிமிரச் செய்ய அதனிடம் சொல்லப்பட்டது எதுவோ,
மல்லிகை மல்லிகையாக இருக்க அதனிடம் ரகஸியமாக முணங்கப்பட்டது எதுவோ,

கரும்பை இனிக்கச் செய்தது எதுவோ, துர்க்கிஸ்தானில் உள்ள சைஃகிள் நகரவாசிகளை மிகவும்
அழகானவர்களாக பரிணமிக்க வைத்தது எதுவோ, மனித முகத்தைப் போல மாதுளம்பூவை சிவக்க வைப்பது எதுவோ, மொழியில் வசீகரத்தைக் கூட்டியது எதுவோ, அதுதான் இங்கே சொல்லப்படுகிறது.

பெருங்கிடங்கின் கதவு திறக்கிறது; நான் நன்றியுடன் நிரப்புகிறேன், இவை அனைத்துக்கும்
உரிமையானவள்(ன்) மேல் கொண்ட காதலுடன், ஒரு கரும்பை சுவைத்தபடி.

****

எதிர்பாரா முழுமை

சந்தை

இதைப் போல இன்னொரு சந்தையை நீ காண முடியுமா ?
வேறெங்கு, உன் ஒற்றை ரோஜாவைக் கொண்டு நூறு
ரோஜாத் தோட்டங்களை நீ வாங்க முடியும் ?
ஒரு விதைக்கு வேறெங்கு ஒரு காட்டையே நீ விலை பேச முடியும் ?
ஒரு மெலிந்த சுவாசத்திற்கு ஒரு பெருங்காற்றை ?

இதைக் காட்டிலுமா சிறந்த பரிசு ?

கடல் உன்னிடம் காதலி(லன்)யாக தானாகவே வருகையில்,
அதனை உடனே திருமணம் செய். நாள் கடத்தாதே!
வாழ்தலின் பரிசு இதைவிட பெரிதொன்றில்லை.

தேடிக் கிடைப்பதில்லை இது;

ஒரு முழுப்பருந்து உன் தோளில், எந்த ஒரு
காரணம் இன்றி, வந்தமர்ந்து உனதானது.

நாம் விரும்பும் முத்தம்

நம் வாழ்க்கை முழுவதும் மையும் ஏங்குகிறோம் ஒரு முத்தத்திற்க்கு,
ஒரு தூய ஸ்பரிசத்தை நாம் உணர. கடல் முத்திடம் பிச்சை கேட்கிறது அதன் ஓட்டை
உடைக்க கோரி. லில்லி மலர்தான் எப்படி ஏங்கித் தவிக்கிறது ஒரு முரட்டு துணை தேடி.

இரவில் நான் சன்னலை திறந்து நிலவினைக் கேட்கிறேன்;
‘அருகில் வந்து, அதன் முகத்தை என் முகத்துடன் அழுத்தச் சொல்லி ‘

எனக்குள் மூச்சுக்காற்றை விடு. மொழிக்கதவை மூடிவிட்டு, காதல் சன்னலை திற.
நிலா கதவின் வழி நுழைவதில்லை, சன்னல் வழி மட்டுமே.

காதலின் போதை

காதலின் போதையை நாடி ஓடாதொருவன், உயிரற்ற
வெற்றுப்பாதையில் நடக்கிறான்.

மேலே மிதக்கும் காதல் பருந்தை
பார்த்துவிட்டபிறகும் இந்த புறா காத்திருக்கிறது;
பாதுகாப்பிடத்திற்கு இதை துரத்த முடியாது.

வான் வட்டங்கள்

காதலின் பாதை ஒன்றும் நுணுக்கமான விவாதம் அல்ல.
அது பேரழிவிற்கான கதவு.
பறவைகள் சுதந்திரமாக வானில் பெரும் வட்டங்கள் இடுகின்றன.
எப்படி இதைக் கற்றனர் ?

விழுவதினாலும், விழுந்துகொண்டே இருப்பதினாலும்,
சிறகுகள் பரிசாகக்கிடைத்தன பறவைகளுக்கு.

msenthi@yahoo.com

Series Navigation

செந்தில்

செந்தில்