பேப்பர்காரன்

This entry is part [part not set] of 44 in the series 20110403_Issue

குமரி எஸ். நீலகண்டன்



அழுத்தும் அரசியல்
அசிங்கங்கள் அத்தனையும்
அனாவசியமாய் பின்னால்
சுமந்து கொண்டு காலையில்
தெருத் தெருவாய்
சுறுசுறுப்பாய் சாலையின்
குறுக்கு நெடுக்காய்
வாகனங்களுக்கிடையே
மிதி வண்டியில் திரிகிற
பத்து பதினைந்து வயது
பையன்கள் எல்லோரும்
ஒரே சாயலில்
அண்ணன் தம்பிகள் போல்….

எரிகிற வயிற்றிற்காய்
எறிகிறார்கள் அவர்கள்
ஒவ்வொரு வீட்டு
வாசலிலும் பேப்பரை…
எல்லா அசிங்கங்களும்
எல்லோர் வீட்டு வாசலிலும்…
அந்த அசிங்கத்தை அள்ள
வாசலிலேயேக் காத்திருக்கும்
வீட்டுக்காரர்கள்

ஆனாலும் சுமைகளோடு
சுழலும் அவர்கள்
எல்லோர் முகத்தின்
மையத்தில்
ஒரு அசாதாரணப்
பேரொளி தெரிகிறது..
அவர்களில் யார்
நாளைக்கு ஜனாதிபதி…
ஆற்றல் மிகுந்த விஞ்ஞானி…
அகில உலகை ஆளுகிற
ஆன்ம குருவென்று மட்டும்
தெரியவே இல்லை.

Series Navigation

குமரி எஸ்.நீலகண்டன்..

குமரி எஸ்.நீலகண்டன்..