பெரியபுராணம் — 12 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம்)

This entry is part [part not set] of 51 in the series 20041007_Issue

பா. சத்தியமோகன்


167.
மங்கல கீதமும் நாத வடிவான மறைகளையும் பாடும் கூட்டத்துடன்
பூமாலைகளையும் பொன்மாலைகளையும் அணிந்த ஆடவர்களும்
நெருங்கிப் செழித்து எழுந்த தாமரை அரும்பையும்
சூதாடு கருவியையும் வெற்றிகண்டு
குங்குமக் குழம்பு அணிந்த கொங்கை மங்கையருடன் கூடிப்பரந்து
எழுந்த தன்மையுடன் –
168.
அரிய திருமண எழுச்சிவேளையில் ஒலித்த வெண்சங்குகளாலும்
ஒளியுடைய மணிகளாலும்
நெருங்கி ஏந்திச்சென்ற மயில்பீலி குஞ்சங்களின் நீல நிற அலைகளாலும்
அந்நாளில் அக்கணம் –
கருமையான கடலின் கிளர்ச்சிபோலிருந்ததே
169.
நெருங்கி முழங்கும் இன்னிசைகள் ஒலிக்கவும் தாமரைகள் ஓங்கவும்
பெரும்குடைகள் நெருங்கிச்செல்லவும் பல்வகைக்கொடிகள் ஆடவும்
அந்த புதிய மண எழுச்சி ஆதிசைவ அந்தணர்களுடன்
ஊரைவந்து சேர்ந்தது
புத்தூர் ?மணம் வந்த புத்தூர் ? ஆகியது
170.
நிறைகுடம், தூபம், தீபம், முளைப்பாலிகைகள் ஏந்தி
மலர், அறுகு, பொன்சுண்ணப்பொடி, பொரி பலவும்வீசி
சந்தனம் கலந்த பன்னீர் தெளித்துக்கொண்டு
அந்தணரும் மங்கையரும் எதிர்கொண்டார் மணஎழுச்சியில்
171.
?கண்கள் எண்ணிலாத வேண்டும் காளையைக் காண ? என்பார்
?பெண்களில் அதிகம் நோற்றவள் இவளே ? என்பார்
மண்ணுலகே மகிழ்ச்சி பெற நடக்கும் திருமணம் கண்டு வாழ்ந்தோம் எனப்பெருமை கொள்வார்
சிலர் பண்களில் நிறைந்த கீதம் பாடுவாரும் ஆடுவாரும் ஆயினர்
172.
ஆண்தகையானஇவரது அருள்நோக்க வெள்ளத்தில் அலைந்தோம் என்பர்
இவர் ஏறிவரும் குதிரையும் தகுதிபெற நம்மிடம் வந்ததென்பார்
அணிகலன் பூண்ட இவரே நாம் காணும் புண்ணிய மூர்த்தி என்பார்
இவ்வாரு பலப்பல மங்கையரும் பேச ஆரூரர் சென்றார்
173.
மணக்கோலத்துடன் வருகின்ற எங்கள் வள்ளலார் நம்பி ஆரூரர்
மணம் கமழும் மணப்பந்தல் முன் சென்று
பெருமழை மேகம் போல வெண்சங்குகள் முழங்க
குதிரை விட்டிறங்கி உட்புகுந்து பேணிய நிகழ்வு சொல்வேன் உய்வேன்
174.
ஒலிக்கும் மறைகளால் சூழப்பெற்ற திருக்கயிலையில் அருள் செய்த
சால்புடைய அருள் மொழியின் படியே தடுத்து அடிமை கொள்ள
மேலுற பறந்தும் கீழே தோண்டியும் மயங்கிய
நான்முகன் திருமால்வர்களுக்கு அரியவர் ஒருவர் வந்தார்.
175.
இருகண்களுக்கிடையே உள்ள நெற்றிக் கண்ணை
ஒளியுடைய வெண்மை ஆடைபோல தூய வெண்ணீறு மறைத்துச் சூழ்ந்தது
குளிர்ந்த பிறைச்சந்திரன் முதிர்ந்துகதிர் சாய்ந்த தன்மைபோல்
வெண்மையான நரைமுடிப்பு அசைய –
176.
செவியில் உருத்திராக்கத்தால் ஆன காதணிகள் தாழ
ஒளியும் அழகும் பொருந்திய மார்பின் மேல் அசையும் பூணூலோடு
தோள்மீது உத்திரியமாய் அமைந்த வெண் ஆடை அசைய
கையில் வெயிலை மறைக்கின்ற குடை விளங்க –
177.
வயிற்றினின்று சரிந்த கோவண உடை பழமை கொள்ள
அதன்மீது அணிந்த உடை பொருந்தி அழகு செய்ய
வெண்துகிலும் தருப்பைப் புல்லும்
நுனியில் முடிந்துவிட்ட மூங்கில்தண்டை
மற்றொரு கையில் தாங்கி வர
கால்கள் முதுமையால் தள்ளு நடை கொள்ள-
178.
செறிந்து செறிந்து வளர்ந்த பேரழகின் மூப்போ !
அத்தகைய மூப்பெனும் அதன் படிவமோ
உண்மை வைதீக நெறி விளைவித்த மூலப்பொருளோ
என அங்குள்ளோர் ஐயப்படுமாறு வந்தார்.
179.
மாமறை ஓதி மணம் தொடங்கும் பந்தலில்
அவையின் முன் நின்று
பழமையுடைய அளவிலா வேதங்கள் கூறிய திருவாயான் சிவபெருமான்
?யாவருமே நான் சொல்வதைக் கேளுங்கள் ? என்றார்.
180.
இங்ஙனம் சொன்ன அந்தணரை அங்கிருந்த மறையோரும்
மன்றல் வினை மங்கல நாளில் வந்திருக்கும்
உமக்கு நல்வரவு! அது நமக்கு நல்லது !இது எங்கள் தவம் எனக் கூறி
நீர் மொழிமின் நீர் மொழிவது என்ன என்றார்.
181.
தம் சடைக்கோலம் மறைந்திருக்கும் வேதியரும்
நாவலூரரை நோக்கி எனக்கும் உனக்கும் உண்டான
இசைவான உடன்படிக்கை மூலம் உள்ள பெருவழக்கை முடித்தே
அதன்பின் நீ உன் மணத்தை செய்து கொள்க என்றார்.
182.
நெற்றி விழியான் மொழிந்ததும் ஒப்பிலா நம்பியூரர் கூறினார்:
உற்றதோர் வழக்கு என்னிடம் உனக்கு உண்டேல்
அதை முடிக்காமல் நான் மணம் செய்யேன்
முழுதும் சொல்லுக என்றதும் –
183.
எல்லை முடிவில்லான் சொன்னார்:
?என் அடியவன் இந்நாவல்நகர் ஊரன்!
நான் கூறுவது இதுவே என் வழக்கு ? என்றான் இறைவன்
தேவரையும் நான்முகனையும் திருமாலையும் மிக்க பெரும் செல்வம் உடையோரையும்
தமக்கு அடிமையாகக் கொண்ட எம்மான்.
184.
என்ற இறைவன் சொல் கேட்டவரும்
எப்பக்கத்திலும் நின்றவரும்
இவர் என்ன நினைத்துச் சொன்னாரென
அவர் அருகில் சென்றார். சினமானார்!
திருநாவலூரானோ நன்றாயிருக்கிறது மறையோன் மொழி
என இகழ்ச்சியாய் நகைத்தார்.
185.
எவர்க்கும் மிக்கானாகிய இறைவர்
நகைப்பவன் முகம் நோக்கினார்.
நடுங்கித் தள்ளாடியபடி சரிந்த உத்தரீயத்தை தாங்கியபடி
?அந்நாளில் உன் தந்தையின் தந்தை எழுதிய அடிமை ஓலை இது!
இக்காரியத்தை நீ இன்று சிரித்தது ஏன் ? ஏடா ? ? என்றார்.
186.
குற்றமிலா ஆதிசைவ வேதியர் குலத்தில் வந்த நம்பி ஆருரர்
வேதியரை நோக்கி உள்ள நெகிழ்ச்சி பெற்று சிரிப்பு நீங்கி
குற்றமற்ற அந்தணர்கள் இன்னொருவருக்கு அடிமை என்ற சொல் சொல்வதை
இன்று உம்மிடமே கேட்டோம்
மறையவனே நீர் பித்தனோ என்றார்.
187.
நீ சொன்னபடி நான் பித்தனாயினும் சரி பேயன் ஆயினும் சரி
எத்தனை தீங்கு மொழி சொன்னாலும் நான் நாணமாட்டேன்
அத்தனை தூரம் என்னை நீ அறியவில்லையானால்
கேலி பேச வேண்டாம் இட்ட பணி செய்ய வேண்டும் என்றார்.
188.
காணுகின்ற வடிவால் உள்ளம் காதலால் உருகுகின்றது
சொல்லுகின்ற பித்த வார்த்தையோ கோபம் தருகின்றது
அடிமை ஓலை என்பது உண்மைதானா என அறிவதற்கு
ஓலை காட்டுக என்றார் ஆரூரர் உயிர்த்துணை வேதியரை.
189.
ஓலை காட்டென்று நம்பி உரைத்ததும்
நீ அதனை அறியத்தக்கவனோ ?! அல்ல !
பணி செய்ய மட்டுமே தகுதி உடையாய் என்றதும் சினந்தார் நாவலூரர்
நான்முகன் திருமால்களுக்கும் எட்டா இறைவனை
வலிந்து பின் தொடர்ந்தார்.
190.
நாவலூரர் ஓலையெனும் ஆவணம் பறிக்கச் சென்றார்
அந்தணரான இறைவர் மணப்பந்தலில் ஓட
கடிது பின் தொடர்ந்தார் நம்பி
மலையை வில்லாக்கி திரிபுரம் எரித்த அவரை
நம்பியாரூரர் தவிர எவர்தான் தொடர வல்லார் !
191.
மறைகள் துதிக்கும் மலர் போன்ற அடிகள் கொண்ட இறைவரைத் தொடர்ந்து
ஓலையைப் பறித்து வாங்கி
அந்தணர் பிறர்க்கு அடிமை பணி செய்தல் எங்ஙணம் என ஓலை கிழித்தார்
முடிவிலா இறைவரோ முறையிட்டார்.
192.
அரிய வேதங்கள் ஓலமிட்டுத் தேடினாலும் அறியப்படா இறைவன்
நம்பி ஆரூரரைப் பற்றிக் கொண்டு இது முறையோ என முறையிடவும்
சுற்றத்தார் விலக்கி உலகில் இது வரை இல்லா புது வழக்கைக்
கொணர்ந்த திருமறை முனிவரே நீர் எங்குளீர் செப்பும் என்றனர்.
193.
கேட்கப்பட்டதும் ஐயர் சொன்னார்:
இங்குதான் உள்ளேன் இருப்பும் அருகில்தான் !
திருவெண்ணெய் நல்லூர் என் ஊர். அது நிற்க.
அறம் தவறி என் கையினின்று வலியப் பிடுங்கி
கிழித்து இவர் அடிமை என தானே நிரப்பி விட்டான் என்றார்.
194.
குழை அணிந்த காதிலானை குற்றமிலா ஆரூரர் நோக்கி
?பழைய மன்றாடி போலும் இவன் ? என எண்ணினார்
பண்பும் நெகிழ்வும் பொங்க நீவீர் வெண்ணெய் நல்லூர்காரர் எனில்
இவ்வழக்கை ஆங்கே பேச வருக என்றார்.
195.
வேதியன் அதனைக் கேட்டார் :
வெண்ணெய்நல்லூருக்கு வந்தாலும் நல்லதே
நான்மறையோர் முன்பு ஆதியில் எழுதிய மூல ஓலை காட்டி
எனக்கு நீ அடிமை எனச் சாதிப்பேன் என
தண்டை ஊன்றி முன் நடந்தார்.
196.
வேறுபடுத்தும் காந்தத்தின் பின்னால்
இழுக்கப்படும் இரும்பு செல்வதைப் போல
செல்கின்ற அந்தணர்பின் நம்பி ஆரூரரும் கடிது சென்றார்
?இது என்ன ! ? என்று கற்றவரும் வியந்து தொடர
அடைந்தனர் திருவெண்ணெய்நல்லூர்.
197.
வேதங்களில் மிக்க அறிவுடையோர் விளங்கும் அவையில் சென்று
?பெருமைக்குரிய திருநாவலூர் ஆரூரன்
விருப்பமுடைய என் அடிமை எனக் கூறும் ஓலையைக் கிழித்துவிட்டு
பேரறிவுடைய உங்கள்முன் வந்திருக்கிறான்
இதுதான் என் முறைப்பாடு ? என்றார்.
198.
?என்ன சொல்கிறீர் ஐயா! அந்தணரும் அறிவில் மிக்காரும் ஆன ஒருவர்
அடிமை ஆதல் இந்த மாநிலத்திலேயே இல்லை ?
என அவையிலிருப்பவர் கேட்க-
வழக்கு வந்ததே ஒரு ஒப்பந்தத்தால்தானே
இவன் கிழித்த ஓலை இவனின் தந்தையின் தந்தை தந்தது என்றார்முனிவர்.
199.
இசைவுப்படி எழுதிய ஓலை காட்டினால்
இன்று விசையினால் வலிய வாங்கி கிழிப்பது உமக்கு வெற்றியோ
தசையெல்லாம் ஒடுங்கிய மூத்தவர் வழக்கினை பொருந்தச் சொன்னார்
ஆரூரரே! தங்கள் எண்ணம் என்ன என்றனர் சபையினர்.
200.
அனைத்து நூல் உணர்ந்தவரே ! என்னை ஆதிசைவன் என அறிவீர்
தன் அடிமை என என்னை இந்த அந்தணன் சாதிப்பது
மனதினால் உணருதற்கு எட்டாத மாயையாக உள்ளதே !
என் சொல்வேன்யான்!
என்னால்இதனைத் தெளிய முடியவில்லை என்றான்ஆரூரன்
எண்ணம் மிக்கான்.
n திருவருளால் தொடரும்
cdl_lavi@sancharnet.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்