பெரியபுராணம் -2

This entry is part [part not set] of 41 in the series 20040729_Issue

பா சத்தியமோகன்


1. திருமலைச் சருக்கம்

2.திருமலைச்சிறப்பு

11.

பொன்மீது வெண்மையான திருநீறு புனைந்ததுபோலே
கூறவும் அரிதான நீளமான இமயத்தில் பனி கொள்ளும்
யாவர்க்கும் தன் தன்மை காட்டாத சிவனின் மலை
அது கயிலைத் திருமாமலை . வாழ்க. வாழ்க.

12.

மூன்று உலகங்கள் நான்கு வேதங்கள்
அளவற்ற மாதவம் செய்ததினால்
அண்ணல் விரும்பி வீற்றிருக்கும் மாமலை
புண்ணியங்கள் யாவற்றின் தொகுப்பு போல்வது

13.

ஒளிவீசும் அழகான கொடியே உலகம்
அதன் உச்சியில் மலர்கின்ற வெண் பூ தான் கயிலை
நிலைத்த எண்ணிலாத் தலங்களுக்குள்
தன்னொளி வீசும் முளைத்தெழும் தலமே கயிலை

14

மேன்மை நான்கு வேதங்கள் ஒலிப்பது கேட்கும்
வித்யாதரர், வீணை பாட்டும் கேட்கும்
மேகக்கூட்டம் யானைக்கூட்டம் ஒலிகள் மோதும்
குற்றமற்ற துந்துபி ஒலிகளும் நிறைந்து கேட்கும்

15.

கயிலைமலையின் குளிர்பனி முகடெல்லாம்
கோடி வானவர் வணங்குகின்ற வரிசை
புனித கற்பகமலர்கள் பொன் இதழ் மாலை வரிசை
துறவியர் அஞ்சலி மாலை வரிசை

16.

கயிலைமலையின் பக்கங்களெல்லாம்
பெரும் பெரும் தேவர்களின் பதங்கள்
விரும்பிய வண்ணம் ஐம்பூதமும் நாட்டும்
கோடி கோடிசிவபூத கணங்கள் பாடும் ஆடும்

17.

நாயகன் கழல் சேவிக்க நான்முகன்
காலம் கிடைக்காமல் மீண்டான்
வெள்ளொளி மாமலைச்சோதியில் மூழ்கிய
தன் அன்னப்பறவை வாகனம் காணாது அயர்ந்தான்

18.

காதில் வெண்சங்குக்குழை அணிந்த சிவன் கழல் தொழ
காலம் நோக்கிக் காத்திருந்தான் திருமால்
அறியாத கருடனோ
சோதி வெண் கயிலை மலைச்சாரல் குகையில்
விநாயகன் ஊர்தியான பெருச்சாளியைக் கண்டது
பண்டை செஞ்சுடர் இன்று வெண்சுடராச்சோ என்றும்
வெண்பன்றியாய் நிற்பது தன் தலைவன் திருமால் என்றும்
அருகில் வந்து நின்றது கருடன்

19.

முழவு இசைக்கின்றது தெய்வ மங்கை அரம்பை ஆடலுக்கேற்ப.
மலையருவிகள் இசைக்கின்றன எதிரெதிர் நின்று.
வரம்பெற வேண்டுமென்ற காதல் மனதுடன்
தேன் நிறைந்த கற்பக மலர்களை இருகையிலும் ஏந்தி
நெருங்கிய விமானங்கள் கூடிய படி வழியே ஏறி
இந்திரன் முதலிய கடவுளர் போற்ற
துதிசெய்யும் பொலிவுள்ளது திருமலை.

20.

நான்முகன் திருமால் இந்திரன் உள்ளிட்ட
விண்ணவர் எண்ணிலார் மற்றும் யாவரும்
காதலால் வரம்பெறக் கூடித் தடைப்பட்டு
கதிர்மணிகோபுர வாயிலில் வீற்றிருப்பார்கள்
சிவபூதங்கள் வேதாளங்கள் முதலிய கணநாதர்கள்போற்றிடும்படி
பொதுவில் நின்றாடும் நாதனார்
ஆதிதேவனார் கோவில் நாயகன் நந்திதேவர்.

— தொடரும்.

pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்