பூதம் பிடிப்பவர் (சீன பழங்கதை)

This entry is part [part not set] of 39 in the series 20110123_Issue

சித்ரா சிவகுமார், ஹாங்காங்



ஒரு காலத்தில் சீனாவை சுயான் சாங் என்ற பேரரசர் ஆண்டு வந்தார். வருடத்தில் பல முறை பல்வேறு இடங்களுக்குச் சென்று படை வீரர்களைச் சந்திப்பார். மக்கள் நல்ல முறையில் வாழ்கிறார்களா என்று பார்ப்பார். பூமிக்கும் சொர்க்கத்திற்கும் பல சடங்குகளைச் செய்வார்.
ஒரு நாள், நீண்ட பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய பின்னர், சுயான் சாங் நோய்வாய்ப் பட்டார். பல மாதங்களாக ஜூரம் இருந்தது. அவரது கன்னங்கள் சிவந்து போய், தலையே வெடித்து விடுவது போன்று தலைவலியும் இருந்தது.
அரசவை மருத்துவர்களும், மாந்திரிகர்களும் பல விதமாக வைத்தியம் செய்து பார்த்தனர். மூலிகை, மருந்து எதுவும் வேலை செய்யவில்லை. மந்திரம் தந்திரம் வேலை செய்யவில்லை. கடைசியில் ஒரே ஒரு வைத்தியம். பேரரசரைத் தூக்க வைப்பது. அதனால் பேரரசர் அழகிய சீனப் பட்டாலான துணி போர்த்திய மிகவும் மென்மையான படுக்கையில் தூங்கி, தன்னுடைய நேரத்தைக் கழித்தார்.
ஒரு நாள் இரவு, தன்னுடைய உணவை உண்ட பின்பு, உறங்கப் போனார். அன்று அவர் கனவுலகிற்குள் நுழைந்தார். விரைவில் ஒரு அலைபாயும் உருவத்தைக் கண்டார். அது ஒரு பூதம். அதற்குக் கால்கள் இல்லை. அதனுடைய சின்ன உடலை கிழிந்த ஆடைகள் மறைத்திருந்தன. அதன் இடையில் ஒரு விசிறி இருந்தது. சுயான் சாங் மற்றவர்களைப் போல் இந்தப் பூதம் தன்னைக் கண்டதும் வணங்கி எழாதது கண்டு ஆச்சரியப்பட்டார்.
பேரரசர் பூதத்தைத் திட்ட எத்தனித்த போது, பூதம் அவரருகே வந்து, அவரிடம் இருந்த அரிய மரகதக் குழலையும் கிரீடத்தையும் தங்கக் காசுகளையும் பிடிங்கிக் கொண்டது.
“ஹி.. ஹி.. ஹி..” என்று பூதம் சிரித்தது. பிறகு தன் தலையை ஆட்டிக் கொண்டே கதவருகேச் சென்றது.
“நில்.. நீ யார்?” என்று பேரரசர் கேட்டுக் கொண்டே எழுந்தார்.
உருவம் தந்திரமாகச் சிரித்தது. “நான் ஒரு பூதம். என்னுடைய பெயர் காலி விரயம். எனக்கு மனிதர்களின் பைகளைக் காலி செய்து, பணத்தை விரயம் செய்வது பிடிக்கும். “ஹா.. ஹா.. ஹா..” என்று சிரித்தது.
கன்னம் சிவக்க பேரரசர், “நில்.. போகாதே‚” என்று கத்தினார். பிறகு சுற்றிலும் பார்த்து விட்டு உறக்க “காவலாளிகளே.. வீரர்களே.. உதவி.. உதவி.. வந்து இந்தச் சின்ன பூதத்தைப் பிடியுங்கள்..” என்று கத்தினார்.
தன்னைக் காக்க படை வீரர்களுக்குப் பதிலாக, இன்னொரு ப+தம் வருவதைக் கண்டார். இந்தப் பூதத்தின் தலையில் கட்டு இருந்தது. ஒரு பெரிய அங்கியும், காலில் கனமான காலணியையும் அணிந்திருந்தது. பேரரசர் இதைக் கண்டு கத்தும் முன்னரே, அந்தப் பெரிய பூதம் சின்ன பூதத்தைச் சுற்றிச் சுற்றிச் துரத்தியதைக் கண்டு அதிர்ந்தார். பிறகு அது சின்ன பூதத்தைப் பிடித்து தன்னுடைய வாயில் போட்டு விழுங்கியது.
பேரரசரின் உடல் இதைக் கண்டதும் பதறியது. “நீ யார்? எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார்.
பெரிய பூதம் வணங்கி நின்றது. “பேரரசருக்கு வணக்கம். நான் கிழக்கு மலையில் வாழும் சொங் குய். நான் ஒரு காலத்தில், இந்த உலகில் மாணவனாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்தேன். ஆனால் எனக்கும் சோதனை வந்தது. அரசாங்கத் தேர்வில் நான் தோல்வியுற்றேன். மன வருத்தம் தாங்காமல் நான் பரீட்சை நடந்த இடத்திலேயே தூணில் தலையை மோதி இடித்து தற்கொலை செய்து கொண்டேன். உங்கள் பரிவுமிக்கத் தந்தை என் மேல் இரக்கம் கொண்டு, என்னை முறையாக அடக்கம் செய்ய வைத்தார். என்னுடைய ஆவி அவருக்கு என்றென்றும் கடமைபட்டு இருக்கிறது. அதனால், அன்று முதல், அந்த நாட்டில் அமைதி காக்க கெட்ட பூதங்களை ஓட்டுவதையே என்னுடையத் தொழிலாகக் கொண்டேன்” என்றது. சொங் குய் மறுபடியும் பேரரசரை வணங்கியது. “இதோ.. உங்களது அரிய பொருள்கள்..” என்ற கூறி, தன் கைகளை விரித்து அவரது மரகதக் குழலையும், கிரீடத்தையும் தங்கக் காசுகளையும் கொட்டியது.
பேரரசர் அதை வாங்க எத்தனித்த போது, அவரது தூக்கம் கலைந்தது.
சூரியனைக் கண்ட பனி மறைவது போன்று, உடன் பேரரசர் தன் நோய் பறந்து போனதை உணர்ந்தார்.
“அடடா.. இது உண்மையா? அந்த அசிங்கமான சின்ன பூதமா என் நோய்க்குக் காரணம். எப்படியோ.. என்னை சொங் குய் காப்பாற்றியது” என்று எண்ணினார்.
பேரரசர் தன் உடல்நிலை தேறியதைக் கொண்டாட, தன் கனவில் கண்ட இரண்டு பூதங்களையும் தன்னுடைய அரசவை ஓவியரான ஊவைக்; கொண்டு வரையச் செய்தார். ஊ சீனத்தின் தலை சிறந்த ஓவியர். அதனால் அவர் ஒரே நாளில் ஓவியத்தை பேரரசர் சொன்ன அடையாளங்களைக் கொண்டே வரைந்து முடித்தார்.
படம் வரைந்து முடிந்ததும், பேரரசர் தன்னுடைய அவையைக் கூட்டி, அதை அனைவரிடமும் காட்டி, “நான் கண்ட கனவை நீங்களும் கண்டதுண்டா? நான் இதைத் தான் கண்டேன்” என்று கூறினார்.
அமைச்சர் பேரரசரை வணங்கி நின்றார். இந்தக் காலி விரய பூதத்தைத் கண்டு பயந்தது நீங்கள் மட்டுமல்ல. நானும் கண்டு இருக்கிறேன். இங்குப் பலரும் கண்டு இருக்கின்றனர். தங்கள் அரிய பொருள்களை இழந்து இருக்கின்றனர். உங்களது தந்தையின் உதவியால், சொங் குய் எங்களையெல்லாம் காப்பாற்றியது” என்றார்.
பிறகு ஓவியர் ஊ மிகுந்த பணிவுடன், “பேரரசரின் கனவைக் காப்பது ஒரு பூதத்திற்கு மிகப் பெரிய வேலை. இப்போது தங்களிடம் இந்த ஓவியம் இருப்பதால், இதுவே உங்களைக் காக்கும். சொங் குய் இனியும் போராடி வேலை செய்ய வேண்டியதில்லை” என்றார்.
“அப்படியா?” என்று தன்னுடைய தாடியை வருடிக் கொண்டே “இனி மேல் நான் நன்றாகத் தூங்கி இனிய கனவைக் காண முடியுமா?” என்று கேட்டார்.
“நிச்சயமாக அரசே!” என்றார் ஊ.
அது போலவே நடந்தது.
அன்று முதல் அந்த இரண்டு பூதங்களின் படம் “பூதம் பிடிப்பவர்” படம் என்று கூறப்பட்டு சீனாவில் பிரபலமானது. கெட்ட பூதங்களை பயந்தோடச் செய்ய மக்கள் தங்கள் இல்லங்களில் இந்தப் படத்தை மாட்டி விடத் தொடங்கினர்.

Series Navigation

சித்ரா சிவகுமார் - ஹாங்காங்

சித்ரா சிவகுமார் - ஹாங்காங்