புதுவை ஞானம்
189) உன் முதுகை மறைக்கும் பொற்கூந்தலை
சீவி முடித்து சிங்காரிக்க ஆவல் மீறுகிறது சீமாட்டியே !
பிடரியின் பின் பக்கம் விசிறி விடு செம்பொன் அருவியை
கோதி விடுவேன் அதனை மெல்ல மெல்ல-
முத்தமிடுவேன் ஒவ்வொரு மயிரிழைக்கும் !
190 )காந்தள் மலர் போன்ற மென் செவிகள் மீது
ஆடம்பரமாய் விழுகிறது அழகிய உன் கேசம்
கழுத்தின் பின் புறம் சென்று மறைகிறது
நடுவானில் மூடு திரை மறைவது போல !
191) கூந்தலை இணைத்துக் கட்டி அவிழ்க்கும் முடிச்சினைத்
தீண்டதைரியம் வேண்டும் வெகுவாக எந்தனுக்கு
பிடரியில் படர விழ வைத்து விட்டால் –
வெகு நேர்த்தியாக சிக்கெடுத்துக் கோதுவேன்
ஒவ்வொரு மயிர்க்காலாய்ப் பிரித்துப் பிரித்து !
(XLIV )
192 )வரண்டதோர் பழுப்பு நிறக் கானகத்தில்
வசிப்பிடமாய்த் தேர்ந்ததொரு குகையை வேங்கைச் சிறுத்தை
சிறுத்தையின் சின்னக் குகையை விட சிறந்ததோர் வசிப்பிடம்
எந்தன் இனிய நன்பனுக்கு இருக்கிறது !
193 )கட்டிலும் மெத்தையுமாய்ச் சாய்ந்திருக்கும் Geisha
பெண் போலக் காத்திருக்கிறாள் அவள்
நானும் காத்திருக்கிறேன் -சாய்ந்து இளைப்பாற
மெத்தையை விட மேலானவன் நண்பன் !
194 )விடியல் பிச்சைக்காரனுக்குத் தரும் நம்பிக்கை போல
காத்திருக்கிறான் கோமான் பரம்பரைப் பெருமையில்
பறவைகளுக்கென சிறகிருப்பதைப் போல
மெக்சிகோவில் எனக்கொரு நண்பன் !
195 )குடியரசுத் தலைவருக்கு பூங்காக்களோடும் நீர் ஊற்றுக்களோடும்
மாளிகையாம்- தங்கமும் தானியமும் குவியலாய் இருக்கிறதாம் அதற்குள்ளே
பீற்றிக்கொள்கிறார்கள் போகட்டும்!
எந்தனுக்கோ மேலும் அதிக வசதி !
நெருங்கியதோர் நண்பன் இருக்கிறான் அல்லவா ?
( XLV )
196 )சலவைக்கல் மாளிகைச் சொப்பனம் எனக்கு
தவழுகிறது அங்கே ஆசீர்வதிக்கப் பட்டதோர் மவுனம்
இரவு நேரத்தில் ஆன்மாவின் வெளிச்சத்தில்
ஓய்வெடுக்கினறனர் ஆங்கே முன்னணி வீரர்கள் !
இரவில் தான் நான் பேசுவேன் அவர்களுடன்
அணி வரிசையில் அவர்கள்- அணிகளின் ஊடே நான்!
முத்தமிடுகிறேன் கல்லாய் உறைந்த அவர் தம் கைகளில் -.
அசைக்கிறார்கள் அவர்தம் இறுகிய உதடுகளை-
உதறுகிறார்கள் தம் பனி படர்ந்த தாடிகளை-
உறைந்த வாளினைப் பற்றிக் கொள்கிறார்கள்-
அழுகிறார்கள் பின்னர் …….உறைக்குள் நுழைகின்றன வாட்கள் !
அமைதி கொள் ! .
முத்தமிடுகிறேன் நான் அவர் தம் கரங்களை !
197) இரவில் பேசுகிறேன் நான் அவர்களுடன்
அணி வரிசையில் அவர்கள்- அணிகளின் ஊடே நான் !
நானும் அழுதுகொண்டே தழுவுகிறேன் ஒரு சிலையை.
ஓ…..சிலையே !
உன் பிள்ளைகள் உதிரம் குடிக்கிறார்கள்
தங்களது சொந்த இரத்த நாளங்களில் இருந்து
ஆனால் எசமானரின் விஷம் தோய்ந்த கோப்பைகளில்.
பேசுகிறார்கள் முரடர்களின் அசிங்கம் பிடித்த நாவினைப் பற்றி –
உண்ணுகிறார்கள் மானக்கேடான ரொட்டித் துண்டுகளை-
இரத்தம் தோய்ந்த மேசையில் இருந்து.
மூழ்கிப் போகிறார்கள் பயனற்ற வார்த்தைகளில்-சொல்லிக் கொள்கிறார்கள்
உன் பரம்பரை அற்றுப் போய் விட்டதாக – ஓ…சிலையே……..
தமது இறுதி மூட்டத்தில்குளிர் காயும் போது !
198 )நான் மதித்துப் போற்றிய வீர நாயகன்
எட்டி உதைத்தான் எந்தன் நெஞ்சில்
இழுத்துச் சென்றான் சட்டையைப் பிடித்து
தரை மீது என் தலை உராயும் வண்ணம்
ஆதவன் போன்ற தன் கைகளை உயர்த்தி
பேசுகின்றது அந்தச் சிலை :
” இடுப்புத் தோல் வாரை எட்டுகின்றன
வெள்ளைக் கரங்கள்- பளிங்குக் கல் மனிதன்
பாய்ந்து வருகிறான் அவர்தம் காலடியில் இருந்து ! ”
(XLVI )
199 )ஒளித்திடல் வேண்டும் உந்தன் துயரங்களை
எந்த மனிதனும் அறியவொண்ணா இடத்தில்-
எனது பெருமையை நிலை நாட்டும் விதத்தில்
மற்றொரு சுமையை ஏற்றி விடாதே அவர் தலையில் !
200) நேசிக்கிறேன் நான்உண்மை நண்பனான கவிதையேஉன்னை
கனக்கிறது இதயம் மிகவும்-
துண்டு துண்டாக சிதறிக் கிடக்கையிலே
நீயோ சுமக்கிறாய் கனத்த எனது அனைத்துத் துயரங்களையும் !
201)எனக்காகத் துயர் படவும் தாங்கவும் செய்கிறாய்
பரந்த உந்தன் மடியில் – அங்கே விட்டுச் செல்கிறேன்
எந்தன் ஒவ்வொரு காயத்தையும் ஒவ்வொரு அடியினையும்
வலி மிகு ஆழ்ந்த அன்பினையும் !
202) அமைதியாய் நான் அனைவரையும் நேசிக்கையில்
இலட்சிய வெறியில் நான் நற்பணி செய்கையில்
மேலும் கீழுமாய் அலைகளை வீசிக் கழுவி விடுகிறாய்
ஆன்மாவை அழுத்தும் அனைத்து அசுத்தங்களையும் !
203 )வெறுப்பற்றும் தூய்மையாகவும் கடப்பேனாக
இந்தப் பள்ளத்தாக்கினை! எனது பக்கலில் உடன் வரும்
அருமை நண்பனே! சிரமத்தில் வெளுத்து- இழுத்து
இழுத்து வருகின்றனையே உந்தன் சரீரத்தை!
204 )இவ்வாறாகத் தொடரும் எந்தன் வாழ்க்கைப் பயணம்
தெய்வீகமானதோர் பொறுமையும் சகிப்புமாய்
சகித்துக் கொள்கிறாய் எந்தன் துயரை அத்தோடு
மேற்பார்வை இட்டு வழி நடத்தவும் செய்கிறாய் !
205 ) எனக்குத் தெரியும் நண்பனே ! என்னை உந்தன் மீது சுமத்தும்
கொடிய இந்தப் பழக்கமானது –
உண்மையில் பாதிக்கும் உனது சமநிலையை என்பதோடுகூட
சோதிக்கும் உந்தன் மென்மைமிகு ஆன்மாவை என்பதுவும்!
206 )எந்தனது துயரங்களையும் வேதனைகளையும்
உந்தன் நெஞ்சில் நான் சுமத்தியதினால்
இங்கே வெண்மையும் அங்கே செம்மையுமான
அமைதி தவழும் உனது இயல்பை உலுக்கி விட்டேனே !
207 )முழங்கியும் தாக்கியும் மரணம் வருகையில்
வெளுத்து விதிர்விதிர்த்துப் போகிறோம்
தாங்கவொண்ணாச் சுமையாய் வலியாய்த்
தலை மீது விழுந்து நொறுக்கி விடுகிறது !
208 ) மிகவும் நொந்து நொடித்துப்போன இதயத்தின் புத்திமதியை
ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்ன நான் ?
என்னை எப்போதுமே கைவிடாத உன்னை
மறக்க முடியுமா என்ன ?
209 )மரண வாயிலில் இருப்பவர்கள் மன்றாடும்
அந்த ஒரு படைப்பாளி பற்றிச் சொல்லுவாய்க் கவிதையே !
நமது விதிகள் பிணைக்கப் பட்டிப்பதனால் நாம்
சபிக்கப்படுவது இரட்சிக்கப் படுவதும் ஒரு சேர நிகழ்கிறது !
————————————————————————————-
மூலம்: ஹொசே மார்த்தி -கியூப விடுதலைப் போராளி
தமிழாக்கம் :புதுவை ஞானம்.
END OF SIMPLE VERSES _JOSE MART I8:46 AM 8/9/06
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:4, காட்சி:1)[முன்வாரத் தொடர்ச்சி]
- நியூஜெர்ஸி சிந்தனை வட்டம் நடத்திய திரைப்பட விழா
- வாழ்க்கை நெறியா இந்து மதம்
- மழைக்கால அவஸ்தைகள்
- புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (189 – 209)
- சுதந்திரத்துக்கான ஏக்கம் ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’-சல்மாவின் கவிதைத்தொகுப்பு
- பழமொழி படுத்திய பாடு
- வரிநெடும் புத்தகத்து என்னையும் எழுத வேண்டுவன் அல்லது கோயில் நான்மணிமாலை
- பாறைக்குட்டம் அனுப்பக் கவுண்டர் செப்பேடு
- கடித இலக்கியம் – 25
- ஓசைகளின் நிறமாலை -கோ.கண்ணனின் முதல் கவிதைத் தொகுப்பு வெளீயீட்டு நிகழ்வு குறித்த சில பதிவுகள்
- மெளன அலறல்
- கடிதம்
- கடிதம்
- சிறப்புச் செய்திகள்-2
- கருத்துக்கள் குறித்து சில கருத்துக்கள் – ரசூல், பாபுஜி,விஸ்வாமித்ரா,ரூமி, வெ.சா
- விலைபோகாத போலித்தனங்கள்.
- தீவீரவாதிகளுக்குப் பால் வார்க்கும் தமிழ் எழுத்தாளர்கள்
- மடியில் நெருப்பு – 6
- வந்தே மாதரம் எனும் போதினிலே !
- தாஜ் கவிதைகள்
- உறக்கம் கெடுக்கும் கனவுகள்
- கிளி சொல்ல மறந்த கதை
- பெரியபுராணம் – 106 திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- கீதாஞ்சலி (93) உத்தரவு பிறந்து விட்டது!
- அப்சல் குரு : மரண தண்டனையா, மன்னிப்பா ?
- நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு! அத்தியாயம் பத்து தொடர்ச்சி: பண்டைய தமிழர்களின் ஆலய, துறைமுக, கோ நகரங்கள்!
- பேசும் செய்தி -2
- ஏக இறைவன் கோட்பாட்டின் உள்ளார்ந்த வன்முறை
- தாய்லாந்து: அரசியலில் ராணுவம்
- தமிழ் நாட்டிற்கு தேசிய நோக்கிலான அரசு: சாத்தியமாகுமா?
- யசுகுனி ஆலயம் – பாகம் 2
- இரவில் கனவில் வானவில் (5)
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 5