This entry is part [part not set] of 48 in the series 20040311_Issue
கற்பகம்
—- காலை வணக்கத்துடன் வரும் புன்சிரிப்பு உறுத்தாத பார்வை ஊடுருவாத உரையாடல் என உணர்வைத்தொடும் பழக்கங்களுக்குப் பழக்கப்பட்டிருந்தால் இக்கனமே இறக்கிவிடு இன்மனமே. நொடிக்கொருதரம் நகருகின்ற கடிகார முள் போலல்ல நொடிக்கொருதரம் நூறுமுறை நிறம் மாறிடுமிந்த மனிதர்களின் மன ஓட்டம். அன்பான மடலோ அழகான அருஞ்சொல்லோ அக்கறையோ விசாரிப்போ என்றாவது ஒரு நாள் கிட்டாது போனால் பரிதவித்துப் பயனில்லை பழக்கமானவைகளை எதிர்ப்பாராத பழக்கம்தான் நல்லதென்றும்.
This entry is part [part not set] of 15 in the series 20010325_Issue
அசோகமித்திரன்.
‘உன்னைத் தேடிண்டு பாலு வந்தாண்டா, ‘ என்று அம்மா சொன்னாள்.
‘எந்த பாலு ? ‘ என்று கணேசன் கேட்டான்.
‘என்னடா இப்படிக் கேக்கறே ? உன் ஆபிஸிலேயே வேலை பண்ணிண்டிருந்தானே, அவன்தான். வேற யாரு பாலு இருக்கா ? ‘
‘அவனா ? இரண்டு மூணு தரம் வந்துட்டான் போலேயிருக்கே ? ஏதாவது விஷயம் உண்டா ? ‘
‘தெரியலை. வந்து பத்து நிமிஷம் பேசிண்டிருந்தான். ரொம்ப நல்ல பையன். அவன் அம்மா, மாமியார் இரண்டு பேரும் ஊரிலேந்து வந்திருக்காளாம். நாளைக்கு மறுபடியும் உன்னைப் பார்க்க வரேன்னு சொன்னான். ‘
கணேசனுக்கும் பாலுவைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. இந்த ஆறு மாதத்தில் ஒரே ஒரு முறை அவன் பாலு புதிதாக வேலை செய்யும் ஆபீசில் அவனைப்போய் பார்த்ததோடு சரி. ஆனால் பாலுவோ ஐந்தாறு முறை கணேசன் வீட்டுக்கு வந்து விட்டான். சொல்லி வைத்தாற் போல் ஒரு முறைகூட கணேசன் வீட்டில் இல்லை.
ஒருகாலத்தில் அவர்கள் இருவரையும் தனித்தனியாக நினைத்துப் பார்க்க முடியாதபடி எப்போதும் சேர்ந்தே இருப்பார்கள். ஆபீசில் அடுத்தடுத்த மேசைகள். இருவருக்கும் அநேகமாக ஒரே வயது. இருவரும் எஸ்.எஸ்.எல்.சி. முடித்து ஷார்ட் ஹாண்ட் டைப்ரைட்டிங் லோயர் பரிட்சை தேறி வேலைக்கு வந்தவர்கள். இருவருக்கும் சங்கீதம் சினிமா– முதலிய விஷயங்களில் ஒரே மாதிரியான ரசனை. இருவரும் சிறு வயதிலேயே தந்தையிழந்தவர்கள். ஒரு வித்தியாசம், பாலுவின் அம்மா பாலுவுக்கு இரு வருடங்கள் முன்னால் கல்யாணம் செய்து வைத்து விட்டாள். தங்கை கல்யாணம் முதலில் முடிய வேண்டும் என்று கணேசனால் மட்டும் ஒத்திப்போட முடிந்தது.
கணேசன் சாப்பிட்டுவிட்டுக் கையை அலம்பும் போது அம்மா சொன்னாள், ‘நீதான் ஒரு நடைப்போய்ப் பார்த்து விட்டு வாயேண்டா. ‘
‘அவனேதான் வரேன்னு சொல்லியிருக்கானே ? ‘
இப்படி ஆறு மாதத்திற்கு முன்பு சொல்லியிருக்க மாட்டான். பாலு வீட்டுக்கு வந்து போனானென்றால் நிச்சயம் கணேசன் உடனே பாலுவைப் பார்க்கப் போயிருப்பான். இப்போது ஓர் அசிரத்தை வந்துவிட்டது. பாலுவை பார்க்க வேண்டாமென்றில்லை. ஆனால் அதற்காக அவன் முயற்சி எடுத்துக் கொள்ளவில்லை.
அன்று படுத்து அரைமணியாகியும் தூக்கம் வரவில்லை. ஆபீஸிலேயே சிறுசிறு சிக்கல்கள். இப்போது பெரிய தலைவலியாயிருப்பது ஆபீஸ் பையன் மோகன் தீர்க்கமான விரோதியாக நடந்து கொள்வது. இந்த மோகனுக்காகத்தான் எவ்வளவு முறை அரை ரூபாயும் ஒரு ரூபாயுமாக விட்டுக் கொடுத்தாயிற்று ? எப்போது டிபன் காப்பி வாங்கி வரச் சொன்னாலும் உடனே கணக்கு ஒப்புவித்துப் பாக்கிச் சில்லறை தரமாட்டான்: கேட்டுக் கேட்டு வாங்க வேண்டும். அது தரும் கசப்புணர்ச்சிக்காகவே சரியாகச் சில்லறையாகத் தருவது. ஆனால் அப்போதும் மோகன்தான் வெற்றியடைவான். ‘தோசையெல்லாம் ஆயிடுத்து, ‘ என்று சொல்லிவிட்டு காபி மட்டும் மேசை மீது வைப்பான். ‘தோசை இல்லைன்னா வேறே ஏதாவது வாங்கி வருவது தானே ? ‘ என்று கேட்டால், ‘நீ சொல்லலியே, ‘ என்பான். மீதிச் சில்லறையைக் கேட்டாலொழிய தரமாட்டான்.
இயல்பாகவே வேண்டாதவனாக இருப்பவன் இப்போது தெரிந்த விரோதியாகி விட்டான். இருபது ரூபாய் கேட்டான். கணேசன், ‘நீ சொல்லாம எடுத்துண்டது ஐம்பது, நூறு ரூபாய் கூட இருக்கும், ‘ என்றான். இது என்னபதில் ? கையில் பணம் இல்லை என்று கூறியிருக்கலாம். விளைவு, மோகன் எப்படி எப்படியல்லாமோ கணேசனை வதைக்கிறான்.
பாலு மோகனிடமே கூடக் கடன் வாங்கியிருக்கிறான். கடனும் கொடுத்திருப்பான். எல்லாம் பத்து பதினைந்து; மிகவும் அதிகமாகப் போனால் இருபது ரூபாய். பாலு கணேசனிடம் கடன் வாங்காத மாதமில்லை. வாங்கிய கடனில் பாதி அவர்கள் இருவரும் சேர்ந்து போகும் சினிமாவுக்குச் செலவழிந்துவிடும். பாலுவுடன் சினிமா பார்ப்பதே ஒரு தனி அனுபவம். குப்பை என்றும் பிரமாதம் என்றும் பரவாயில்லை என்றும் எவ்வளவு பேர் சொல்லியிருக்கிறார்கள் ? ஆனால் பாலு ஒரு சினிமாப்படம் பற்றி அப்படிச் சொல்வது பல புரியாத விஷயங்களைத் தெளிவாக்குவது போல இருக்கும். அவனுக்குக் கல்யாணம் ஆனபிறகு கூட நண்பர்களுடன் சினிமா போக அவன் நேரம் ஒதுக்கிக் கொள்வான். இப்போது வேலைக்குப் போன புதிய இடத்தில் அவனுக்கு யார் சினிமா தோழர்கள் ?
பத்து ரூபாய் வாங்கிக் கொள்வதைக் கடன் என்று சொல்லலாமா ? கைமாற்று எனலாம். தீர்க்க திருஷ்டியுடன் தான் இப்படிச் சொல்கிறார்கள்.
இந்தப் பத்து அல்லது இருபது ரூபாய்கள் கைமாறினால் மாறியதுதான். கணேசனிடம் பாலு வாங்கியது கைமாற்று தான். தவறாமல் மாதத்தில் மூன்றாவது வாரத்தில், ‘ஏம்பா, இருபது ரூபா வேணுமே. இருக்கா சம்பளம் வாங்கினவுடனே கொடுத்துடறேன், ‘ என்பான்.
கணேசனிடம் இருபது ரூபாய் இருக்கக் காரணம் அவன் சீட்டாட மாட்டான். அவனிடம் இருக்கும் என்று பாலுவுக்கு நன்றாகத் தெரியும். கணேசன் உடனே இருபது ரூபாய் எடுத்துக் கொடுத்துவிடுவான். அன்று மாலைக்குள் அதிலிருந்து நான்கைந்து ரூபாயைக் கணேசனுக்காகவே பாலு செலவழித்திருப்பான். சம்பளம் வாங்கியவுடன் அவனுக்குப் பத்து, இவனுக்கு இருபது, இன்னொருவனுக்கு இருபத்தைந்து என்று பிரித்துக் கொடுத்துவிடுவான். சனி, ஞாயிறு தவறாமல் சீட்டாடம் இருக்கும். வியாழன் அல்லது வெள்ளி அன்று ஒரு சினிமா இருக்கும்.
கணேசன் எழுந்து விளக்கைப் போட்டுப் படுக்கையை மீண்டும் ஒரு முறை உதறிப் போட்டுக் கொண்டான். தூக்கம் வராமல் சிரமப்படுவதற்குக் காரணம் எறும்பு, வண்டு ஏதாவது இருக்கக்கூடும். தங்கை தம்பி ஆகிய இருவரும் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். அம்மாதான் அவன் விளக்கைப் போட்ட சமயத்தில் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டாள். அம்மாவுக்கு இந்த கைம்மாற்று விஷயங்கள் அதிகம் தெரியாது. அவளுடைய உலகிலும் ஒரு கரண்டி சர்க்கரை, ஒரு தம்ளர் எண்ணெய் என்ற கைமாற்றுகள் உண்டு. ஆனால் யாராவது மாதம் தவறாமல் பணம் கைமாற்று கேட்டால் அவளுக்கு அந்த நபர் மீது ஏதேதோ சந்தேகங்கள் வந்துவிடும். பாலுவின் கைமாற்றம் பழக்கம் பற்றி அவளுக்குத் தெரியாது. தெரிந்து விட்டால் அவனால் கணேசனின் வீடு தேடி வர முடியாது. அவளுடைய சந்தேகங்கள் முதலில் பாமரத்தனமாகத்தான் இருக்கும். ஆனால் நாலைந்து கேள்விகள் கேட்டுச் சீக்கு இருக்கிற இடத்தைக் கண்டுவிடுவாள். நல்ல வேளை, பாலு அதிக நேரம் இன்று அம்மாவோடு பேசிக் கொண்டிருக்கவில்லை.
டைப்பிஸ்ட் குமாஸ்தாக்களுக்கு மிகச் சில பெரிய கம்பெனிகளில்தான் தாராளமாகச் சம்பளம் தருகிறார்கள். பாலு, இப்போது வேலை போயிருக்கும் கம்பெனி பெரியது இல்லை என்றாலும் கொஞ்சம் தாராளம் என்று பெயர். மாதம் எழுபத்தைந்து ரூபாய் கூடும் என்றுதான் பாலு கணேசனை விட்டுப் பிரிந்து போனான். போய்ச் சேர்ந்த ஒரு வாரத்துக்குள் அங்கு இன்னொரு டைபிஸ்ட் தேவைப்படுகிறது என்றும் கணேசனை அந்த இடத்திற்கு வந்து விடலாம் என்றும் சொன்னான். கணேசன்தான் முயற்சி எடுத்துக் கொள்ளவில்லை. பாலு விட்டுப் போனவுடன் பாலு பயன்படுத்திக் கொண்டிருந்த புதிய டைப்ரைட்டர் இவனுக்குக் கிடைத்தது. அதுதான் காரணம் என்றில்லை. ஏனோ புதிய வேலைக்குப் போகப் போதிய உற்சாசம் ஏற்படவில்லை, மாதம் எழுபத்தைந்து ரூபாய் அதிகப்படியாகக் கிடைக்கும் என்று தெரிந்தும் கூட. ஆனால் அப்போது அந்த முயற்சி எடுத்துக் கொள்ளாதது தவறோ என்று மனம் ஏங்குகிறது. இந்த மோகன் போன்ற மனிதர்களோடு காலம் தள்ள வேண்டாமல்லவா ?
காலையில் குளித்துவிட்டு வெளியே கிளம்ப ஜிப்பாவை மாட்டிக் கொண்டிருக்கையில் தெருவில் குரல் கேட்டது. பாலுவே வந்து விட்டான் ‘
‘உன்னைத்தான் பாக்கக் கிளம்பிண்டிருந்தேம்பா, நீயே வந்துட்டே, ‘ என்று கணேசன் கூறினான். ‘
‘வரவன் இவ்வளவு நாள் வரக்கூடாது ? ஒரேயடியா மறந்துட்டியேப்பா. ‘
‘அப்படியெல்லாம் இல்லை, பாலு. ஆபீஸ் விட்டா வீடு, வீடு விட்டா ஆபீஸ். அவ்வளவுதான். இப்பல்லாம் எங்கேயும் போறதில்லை. ‘
‘அதுதான் நான் ராத்திரி ஏழு மணி எட்டு மணிக்கு வந்தாக்கூட நீ வீட்டிலே இருக்கிறதில்லையாக்கும். ‘
‘அது சரி, என்ன விசேஷம் ? பாத்து எவ்வளவு நாளாறது…. ‘
‘நீ சொல்லறே இதை, உம்…மறுபடியும் ஒரு வேகன்சி இருக்கு. கையோட அப்ளிகேஷன் எழுதிக் கொடு. நான் நேரே டைரக்டர்கிட்டே கொடுக்கிறேன். இங்கே உடனே ரிலீஸ் பண்ண முடியாது, அப்படி இப்படான்னாங்கன்னா லீவு போட்டுட்டு வந்துடு. ‘
‘இதை நீ அம்மா கிட்டே சொல்லிட்டுப் போயிருக்கக் கூடாதா ? நான் ராத்திரி உக்காந்து எழுதியிருப்பேனே ? ‘
‘இப்ப முடியாதா ? ‘
‘முடியாதுனில்லே. எழுதினா சரியா வரதில்லை. நான் எழுதி நாளைக் கார்த்தாலே உன் வீட்டிலே கொண்டு வந்து கொடுக்கிறேனே. ‘
‘நாளைக்கா ? ‘
‘ஏன் ரொம்ப லேட்டா ? ‘
‘பரவாயில்லை. நான் சொல்லி வைக்கிறேன். கட்டாயம் கொண்டு வந்துடு. இப்ப சான்ஸ் விட்டா அப்புறம் அஞ்சாறு வருஷத்துக்குக் கிடையாது. ‘
‘சரி, கொண்டு வந்துடறேன். ‘
‘நீ எப்படியும் அங்கே வந்துடணும், கணேசன். நீயில்லாத ஒரு ஆபிஸிலே வேலை பண்ணறது எவ்வளவு கஷ்டமாயிருக்கு, தெரியுமா ? ‘ பாலுவின் குரல் கரகரத்தது.
‘எனக்கும் அப்படித்தான், பாலு. ‘
சற்று நேரம் இருவருக்கும் பேசத் தோன்றவில்லை. கணேசன்தான் முதலில் துவங்கினான்.
‘வாயேன், காபி சாப்பிட்டுப் போகலாம், ‘ என்றான்.
‘வேண்டாம், இன்னொருத்தனைப் பார்க்கணும். ‘
‘நிறையத்தான் வேலை வைச்சிண்டிருக்கே. உன் ஆபீஸ் எத்தனை மணிக்கு ? ஒம்போதரைத்தானே ? ‘
‘ஆமாம், ஆனாத் தேதி இருபதாச்சே ? ‘
‘ஏன், என்னாச்சு ? ‘
‘இதுக்காகவாவது நீ என் கம்பெனிக்கே வந்துடணும். ‘
‘எதுக்கு ? ‘
‘எனக்கு இப்போ இருபது ரூபா வேணும். முதல் தேதி பொறந்து சம்பளம் வந்தவுடனே கொடுத்துடறேன். ‘